செவ்வாய், 6 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8


அரசியல் அமைப்பின் பகுதி XVII இல் குறிப்பிட்டுள்ளபடி இந்தியை முதன்மை அலுவலக மொழியாக மாற்றும் நாள் (1965 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 26 ஆம் நாள் ) நெருங்கிக் கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி போராட்ட சூழலும் உருவாகிவிட்டது. .



1965 ஆம் ஆண்டு சனவரி திங்களில், தமிழ் நாட்டில் இருந்த அனைத்து இந்தி திணிப்பு எதிர்ப்பு மாணவர்கள் குழுக்களும் ஒருங்கிணைந்து, தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு மன்றம் (The Tamil Nadu Students Anti Hindi Agitation Council) என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.

இதில் பொறுப்பாளர்களாக (Office bearers) தமிழகத்தில் இருந்த அனைத்து கல்லூரிகளின் மாணவர் சங்களின் தலைவர்கள் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திருவாளர்கள் பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, நா. காமராசன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை முருகன், கே. ராஜா முகமது, எல்.கணேசன், பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், நாவளவன், மற்றும் எம். நடராஜன் ஆகியோர்.

(இவர்களில் பெரும்பாலோர் பின்னர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது அமைச்சர்களாகவும் சட்டமன்ற தலைவர், மற்றும் சட்டமன்ற துணைத்தலைவர் ஆகவும் பதவி வகித்தார்கள்.)

அந்த ஆண்டு அதே திங்களில் தமிழகமெங்கும் இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் பல மாநாடுகளை நடத்தினார்கள். அவைகளை நடத்த தொழிலதிபர்கள் திரு ஜி. டி. நாயுடு, திரு கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவி அளித்தனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக, இந்தியை முதன்மை அலுவலக மொழியாக மாற்றும் நாளை (அதாவது சனவரித் திங்கள் 26 ஆம் நாளை) ஒருவாரம் தள்ளிப்போடுமாறு பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பிரதமர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் சனவரி திங்கள் 16 ஆம் நாள் அறிஞர் அண்ணா அவர்கள் அந்த ஆண்டு குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

சனவரித் திங்கள் 17 ஆம் நாள் திருச்சியில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது.அதில் தமிழ் நாடு மகாராஷ்ட்ரா கேரளா, மைசூர் (தற்போதைய கர்நாடகா) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பேராளர்கள் (Delegates) பங்கேற்றனர்.

அந்த மாநாட்டில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள், தி.மு.க வை சேர்ந்த நாவலர் திரு வி. ஆர். நெடுஞ்செழியன் அவர்கள், நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு பி. டி. ராஜன் அவர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தமிழர் தந்தை திரு சி. பா. ஆதித்தனார் அவர்கள், முஸ்லிம் லீக் கைச் சேர்ந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தொழிலதிபர்கள் திரு ஜி. டி. நாயுடு அவர்கள் மற்றும் திரு கருமுத்து தியாகராஜ செட்டியார் ஆகியோர் கலந்துகொண்டார்.

(திரு பி.டி ராஜன் அவர்களது மகன் திரு பழனிவேல் ராஜன் அவர்கள் தமிழக சட்டமன்ற அவைத் தலைவராகவும், பின்னர் அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றியனர் என்பது நமக்கு தெரியும்.)

திரு கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்கள் தமிழ் மேல் உள்ள பற்றால் தமிழ் நாடு என்ற நாளிதழை தூய தமிழில் நடத்தி வந்தார். அதில் வட மொழி கலக்காமல் தமிழில் செய்திகள் வரும். அப்போது (1962-1966) மாணவர்களாக இருந்த என்னைப் போன்றோர் தூய தமிழ் சொற்களைய அறிய எங்களது பல்கலைக்கழக விடுதியில் இருந்த படிப்பகத்துக்கு வரும் ‘தமிழ் நாடு’ என்ற நாளிதழை போட்டி போட்டுக்கொண்டு படிப்போம்.

அதில் செய்திகளை தரும்போது சர்வகலாசாலை என்பதற்கு பல்கலைக் கழகம் என்றும், உப அத்யட்சகர் என்பதற்கு துணை வேந்தர் என்றும், ஆசுபத்திரி என்பதற்கு மருத்துவ மனை என்றும் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த நாளிதழ் மூலம் வடமொழி கலக்காத தமிழ் சொற்களைக் கற்றுக்கொண்டோம்.

பின்னர் 23.11.1968 இல் சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றும் சட்ட முன் வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறி, 1-12-1968 அன்று தமிழகம் முழுதும் பெயர் மாற்ற விழாகொண்டாடியதும், திரு கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்கள் தான் நடத்த வந்த தமிழ் நாடு நாளிதழை தனது நோக்கம் நிறைவேறி விட்டதென்று கூறி நிறுத்திவிட்டார்.

(நானும் எனது பதிவில் கூடியவரை தமிழில் சொற்களை தருகிறேன் என்றால் அதற்கு காரணம் ‘தமிழ் நாடு’ நாளிதழ் படித்ததால் ஏற்பட்ட தாக்கம் என்றே சொல்வேன்.)

சனவரித் திங்கள் 17 ஆம் நாள் திருச்சியில் நடந்த சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டோர் அரசியலமைப்பின் XVII பகுதியை காலவரையின்றி நிறுத்தி வைக்கவேண்டும் செயல் படுத்துவதை நிறுத்தி வைக்கவேண்டும் என்று மய்ய அரசை கேட்டுக்கொண்டார்கள்’

அந்த மாநாட்டில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள், ‘இந்தி ஆட்சி மொழி ஆகிற ஜனவரி 26-ந்தேதி தி.மு.கழகத்துக்கு எப்படி துக்க நாளோ, அதுபோல் எனக்கும் துக்க நாள். சொல்லப்போனால், தி.மு.கழகத்தினரை விட எனக்கு 2 மடங்கு துக்கம் இருக்கிறது. இந்தி திணிக்கப்படுகிற 26-ந்தேதியை மட்டும் தி.மு.கழகம் துக்க நாளாகக் கொண்டாடுகிறது. என்னைக் கேட்டால், இந்த ஆண்டு முழுவதும் துக்க நாள்தான். கறுப்புக்கொடி தேவையே இல்லை. ஜனவரி 26 ந்தேதி காங்கிரஸ்காரர்கள் ஏற்றி வைக்கும் மூவர்ணக் கொடியே துக்கக் கொடி தான்.

இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவு, இந்தியை ஆட்சி மொழி ஆக்கும்படி கூறுகிறது. அந்தச் சட்டத்தை தீயிட்டு கொளுத்துவதால், வெறும் காகிதம்தான் எரியும். எனவே அதை கடலில் எறியவேண்டும். இந்த நல்ல காரியத்தை செய்ய அரசாங்கம் முன் வராது. எனவே, அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும். விருப்பப்படி எல்லாம் சட்டத்தைத் திருத்துகிறார்கள். அப்படியிருக்க, இந்தித் திணிப்பு சட்டத்தை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? காங்கிரஸ்காரர்களுக்கு, நாட்டை ஆளத்தகுதி இல்லை. எனவே, அவர்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும்.

ஆங்கிலத்தை விரட்டி விட்டு இந்தியைத் திணிக்க நினைக்கிறார்கள். எல்லா மொழிக்காரர்களுக்கும் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை நீக்கினால் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து.’ என்று முழங்கினார்.

இதற்கிடையே திரு குல்சாரி லால் நந்தா அவர்கள் கீழ் இருந்த உள் துறையும் திருமதி இந்திரா காந்தி அவர்கள் கீழ் இருந்த தகவல் மற்றும் ஒலி பரப்புத் துறையும் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல் சனவரி 26 ஆம் ஆங்கிலத்தை அகற்றி இந்தியைக் கொண்டு வருவதற்கு தேவையான சுற்றறிக்கைகளை வெளியிட தொடங்கின.

தி.மு.க குடியரசு நாளை துக்க நாளாக கொண்டாட இருப்பதாக அறிவித்ததும் அப்போதைய சென்னை மாநில முதல்வர் திரு எம். பக்தவத்சலம் அவர்கள் ‘குடியரசு நாளை அவமதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் திமுக துக்கநாளை ஒருநாள் முன்னதாக சனவரி 25 க்கு மாற்றியது.

அந்த நாளும் வந்தது !


தொடரும்


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. 1965க்குபிறகு நடந்துள்ள வரலாறுகள் {அப்போது நான் பள்ளியில் 10வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன்} ஓரளவு என் நெஞ்சினில் நீங்காமல் நினைவலைகளில் இருப்பினும், தங்கள் எழுத்துக்களில் இப்போது மீண்டும் படிக்கும் போது, இதன் வரலாற்றினை மீண்டும் அசைபோட்டு முழுவதுமாக அறிய முடிகிறது.

    மிகவும் விரிவான தொடர் பகிர்வுகளுக்கு என் நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் பதிவைத் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. அன்றைக்கு 99%பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருந்தது,இன்று தமிழ் காவலர்கள் ஆட்சியில் பள்ளிகளில் தமிழை தேட வேண்டி இருக்கிறது,அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவு,ராஜாஜியின் தனிப்பட்ட விரோதம் காரணமாக காமராஜ் தோற்கடிக்கப்பட்டார்,துண்டு பீடிக்கு கூட வழியில்லாத தி.மு.க.தம்பி கோடீஸ்வரன் ஆனான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு விஜயன் அவர்களே! ஒருவேளை அப்போதைய காங்கிரஸ் அரசு இந்தி ஆதரவாளர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணியாமல் பண்டிதர் ஜவஹர் லால் நேரு அவர்களின் உறுதிமொழியை கடைப்பிடித்திருப்பார்களானால் வரலாறே மாறியிருக்கும்

      நீக்கு
  4. ஹிந்தியின் வரலாறு அறியத்தந்து வருகின்றீர்கள் தொடர்கின்றேன் இன்னும் அறிய நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!.

      நீக்கு
  5. ஒரு போராட்டத்தைப் பற்றி தொடக்கம் முதல் தேதி வாரியாகத் தருவது என்பது அசாதாரணமான செயல்!உங்களால் மட்டுமே முடியும்.
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.

      நீக்கு
  6. "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8 "
    தொடர் வரலாற்றை தொய்வில்லாமல், தொண்டு மனப்பாண்மை கொண்டு தந்து வருவது போற்றுதலுக்குரியது அய்யா!
    அனைவரும் தொடர வேண்டிய தொடர் பதிவு!
    பாராட்டுகள் அய்யா!

    த ம 2

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!.

      நீக்கு
  7. மிக சிலிர்ப்பான சரித்திரம் அய்யா!
    பல விவரங்களை தங்கள் தொடர் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள்.!!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே!.

      நீக்கு
  8. பள்ளிப் பாடங்களில் இணைக்கக்கூடிய தகவல்களைத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்.
    தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்வாணன், தமிழழகன், தமிழ்மணி என்று தமிழில் பெயர்கள் இருப்பதுபோல வேறு மொழிகளிலும் பெயர்கள் உள்ளனவா என்றுத் தெரியவில்லை.
    மொழிப்பற்று தமிழர்களிடம் இருப்பதற்கு இந்தியைத் திணிக்க முயன்றது உதவியே செய்திருக்கிறது. பலர் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராக இல்லாமல் இருந்தால் நல்லது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி பள்ளி பாடங்களில் வைக்கவேண்டும் என சொல்கிறீர்கள். ஆனால் 1965 இல் நடந்த போராட்டத்தை இழிவு செய்து, போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்பதுபோல் R.K.லக்ஷ்மண் 1965 ஆம் ஆண்டு வரைந்த ஒரு கேலி சித்திரத்தை National Council of Educational Research and Training (NCERT). என்ற இந்த ஆண்டு Political Science படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் வைத்திருக்கிறது. இதிலிருந்தே இந்தி ஆதரவாளர்கள் (வெறியர்கள்!) எந்த அளவுக்கு அன்று நடந்த போராட்டத்தை திரும்பவும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் என அறிந்துகொள்ளலாம்.

    இது பற்றி மேலும் அறிய இந்த இணைப்பை சொடுக்கி தெரிந்துகொள்ளலாம்.

    தமிழர்கள் தமிழை பெயரோடு இணைத்திருப்பதுபோல் மற்ற மொழிக்காரர்கள் பெயரோடு இணைத்தி. ருப்பதாக தெரியவில்லை.

    உண்மையில் பலர் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. உண்மையில் பலர் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
    இக் கூற்று நூற்றுக்கு நூறு உண்மைதான் நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. இந்த பதிவின் வாயிலாக, இந்தி திணிப்பை எதிர்த்து அறிஞர் அண்ணா அமைத்திட்ட மாணவர்களுக்கான அரசியல் களத்தினைப் பற்றியும் மற்றும் திரு ஜி. டி. நாயுடு, திரு கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோருக்கு இருந்த ஈடுபாட்டினையும் அறிந்து கொள்ள முடிந்தது.

    எங்கள் வீட்டிலும் அந்த சமயம் ”தமிழ்நாடு” பத்திரிகையை எங்கள் அப்பா வாங்கியது நினைவிற்கு வருகிறது. அப்புறம் தினத்தந்திக்கு மாறி விட்டோம்.

    அன்று தொடங்கிய உங்களது தமிழ் ஆர்வம் இன்றும் தொடர்வது மகிழ்ச்சியான, பாராட்டப்பட வேண்டிய ஒன்று ஆகும்.

    (இப்பதிவை அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். வலைப்பதிவர் சந்திப்பு , அது , இது என்று நாட்கள் ஓடி விட்டன. தாமதத்திற்கு மன்னிக்கவும். தொடர்கின்றேன்.)

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும், பாராட்டிற்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

    பதிலளிநீக்கு