ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.71963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் அண்ணா அவர்கள், தான் முன்பே எச்சரித்திருந்தபடி நடத்திய போராட்டத்தின் போது, ‘இந்தியாவின் ஒரு பகுதியில் தாய்மொழியாக உள்ள இந்தியை நாடு முழுவதற்கும் அலுவலக மொழியாக ஆக்குவது கொடுங்கோன்மை செயல் ஆகும் (Tyranny) என்றும் அந்த செயல் இந்தி பேசும் பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னுரிமையும், மேம்பட்ட நிலையையும் கொடுக்கும் என்றும், இந்தி அலுவலக மொழியாக ஆகுமானால் நம்மை இந்தி மொழி பேசுவோர் ஆளவும், நாம் கீழ்நிலை குடிமகன்களாகவும் (Third rated citizens) நடத்தப்படுவோம். ‘என்று முழங்கினார்.பெரும்பான்மையோர் பேசுகின்ற காரணத்தால் இந்தி மொழி இந்தியாவின் அலுவலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று சொல்லப்பட்டபோது, அண்ணா சொன்னார். ‘எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு என்றால், இந்தியாவின் தேசியப்பறவை காகமாக இருக்கவேண்டுமேயன்றி மயில் அல்ல.’ என்று!

அதே ஆண்டில் மாணவர்களும் இந்தி திணிப்பை எதிர்க்க ஒன்று சேர்ந்தார்கள். அந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் நாள் திருச்சியில் மாணவர்கள் கூடி இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தினார்கள். இதுவே மாணவர்கள் நடத்திய முதல் பெரிய இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு ஆகும். அவர்களுக்கு அப்போது தெரியாது இன்னும் 16 திங்களுக்குள் தாங்களும் இந்த போராட்டதில் ஒரு பெரிய பங்கு வகிக்க போகிறோம் என்று!

அதே திங்கள் 16 ஆம் நாள் தி.மு.க சென்னையில் நடத்திய அண்ணா அவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில், இந்தி அலுவலக மொழி என உள்ள இந்திய அரசியலமைப்பின் 17 ஆம் பகுதியை எரிக்குமாறு தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நவம்பர் திங்கள் நடந்த போராட்டத்தில் இந்திய அரசியலமைப்பின் 17 ஆம் பகுதியை எரித்ததற்காக அண்ணா அவர்களும் அவரோடு 500 தொண்டர்களும் கைது செய்யப்பட்டு ஆறு திங்கள் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1964 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முதன் முதல் ஒருவர் செய்த உயிர் தியாகம் இந்தி திணிப்பு போராட்டம் மேலும் தீவிரமடையக் காரணமாக அமைந்தது. அந்த ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள், அன்றைய திருச்சி மாவட்டத்தை (தற்போது அரியலூர் மாவட்டம்) சேர்ந்த கீழப்பழுவூர் என்ற ஊரைச் சேர்ந்த 27 வயதே ஆன என்ற சின்னசாமி என்ற தி.மு.க உறுப்பினர் திருச்சியில் தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு (தீக்குளித்து) ‘தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டுக்கொண்டே உயிர் நீத்தார்.

திரு சின்னசாமி தான் ‘மொழிப்போராட்டத்தின்’ முதல் தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. . அவருக்குப்பிறகு 6 பேருக்கு மேல் மொழிப்போராட்டதில் உயிர் துறந்திருக்கிறார்கள் என்பது வேதனையான தகவல். திரு சின்னசாமி தீக்குளிக்கு முன் அவரது மைத்துனருக்கு எழுதிய கடிதத்தில் ‘தனது குறிக்கோள் ஒரு நாள் நிறைவேறும்.’ என எழுதியிருந்தார். ஆனால் அது இதுவரை நிறைவேறவில்லை என்பதே உண்மை நிலை.

அதே 1964 ஆம் ஆண்டு நடந்த இன்னொரு துக்க நிகழ்வு நாட்டிற்கு மிகப் பேரிழப்பேன்றாலும், குறிப்பாக இந்தி பேசாதோருக்கும் ஒரு மாபெரும் இழப்பாக கருதப்பட்டது.

அந்த ஆண்டு மே திங்கள் 27 ஆம் நாள் அப்போதைய பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் மாரடைப்பின் காரணமாக காலமானார்கள். அதோடு இந்தி பேசாத மக்களுக்கு அவர் தந்த வாக்குறுதியும் காற்றோடு மறைந்துவிட்டது.

நேரு அவர்களின் மறைவுக்குப்பின் திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதமரானார். அவரும் அவரோடு அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்களான திரு மொரார்ஜி தேசாயும் திரு குல்ஜாரிலால் நந்தாவும் இந்திதான் அலுவலக மொழியாக இருக்கவேண்டும் என்பதில் தீவிர ஆதரவாளர்களாக இருந்தார்கள்.

அதனால் திரு சாஸ்திரி அவர்கள், 1959 ஆண்டும் 1963 ஆம் ஆண்டும் திரு நேரு அவர்கள் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என உறுதி யளித்தும் இந்தி பேசாத மக்களுக்கு ஐயமும் அச்ச உணர்வும் குறையவில்லை.

மய்ய அரசுப்பணிகளிலும் இந்திக்கு முன்னுரிமை தரப்படும், குடிமுறை அரசுப்பணி (Civil Service) தேர்வுகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்படும் மற்றும் பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கிலத்திற்கு பதில் இந்தி கட்டாயமாக இருக்கக்கூடும் என்பதால் ஏற்பட்ட அச்சமும் கவலையும் தான் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வைத்தது என்பது உண்மை.

அதே ஆண்டு (1964) தமிழ் நாட்டிலும் மார்ச் திங்கள் 7 ஆம் நாள் அப்போதிருந்த சென்னை மாநில முதலமைச்சர் திரு பக்தவத்சலம் அவர்கள் சட்டசபையில் மும்மொழித் திட்டத்தை (ஆங்கிலம்-இந்தி-தமிழ்) பரிந்துரை செய்தது, இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு மாணவர்களின் ஆதரவு மேலும் பெருக காரணமாக என்றே சொல்லலாம்.

1963 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிரதமர் திரு நேரு அவர்களிடம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அமைச்சர் பதவிகளை துறந்து கட்சிப்பணியை ஆற்றவேண்டும் என்று யோசனை தெரிவித்தார். இந்த திட்டம் காமராஜர் திட்டம் என அழைக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி திருவாளர்கள் லால் பகதூர் சாஸ்திரி,ஜகஜீவன் ராம்,மொரார்ஜி தேசாய், பிஜு பட்நாயக், S.K.பாட்டீல் போன்ற மய்ய அமைச்சர்களும், திரு காமராஜர் உட்பட 6 மாநில முதலமைச்சர்களும் பதவி விலகினார்கள்.

திரு காமராஜர் அவர்கள் முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் திரு பக்தவத்சலம் அவர்கள் 02-10-1963 அன்று சென்னை மாநிலத்தின் முதல்வரானார், திரு காமராஜர் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 09-10-1963 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த இடத்தில் ஒன்றை கவனிக்கவேண்டும். திரு நேரு அவர்களின் மறைவும், திரு பக்தவசலம் அவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை குறைவாய் மதிப்பிட்டதும் தான் 1965 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மிகத் தீவிரமாக்கி மாணவர்களை பெருமளவில் பங்குகொள்ள வைத்தது என்பதும், பின்னர் அதுவே 1967 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் அரசியலை புரட்டிப்போட்டது என்பதும் வரலாற்று உண்மைகள்!


தொடரும்
26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 2. தெளிவாக விளக்கி வருவது சிறப்பு! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 3. நல்ல விளக்கவுரை நண்பரே புதிய விடயங்கள் எனக்கு தொடர்கிறேன்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 4. பழைய செய்திகளை சுவாரஸ்நமாக தொகுத்து எழுதி வருகிறீர்கள். அறுபத்தி ஆறுக்குப் பின் பிறந்தவன் என்பதால் அதற்கு முந்தைய காலகட்டத்தின் அரசியலை சரிவர தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தித்திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவான போராட்டங்களை தங்களின் பதிவின் மூலம் அறிய முடிகிறது. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி வேலூர் திரு கவிப்ரியன் அவர்களே! தங்களைப் போன்றவர்கள் இந்த போராட்டத்தின் பின்னணியை அறியவேண்டும் என்பதற்காகவே புள்ளி விவரங்களோடு இந்த தொடரை எழுதிவருகிறேன்.

   நீக்கு
 5. தகவல்கள் பல தரும் கட்டுரை. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 6. வரலாற்று நினைவூட்டலை தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழானவன் அவர்களே!

   நீக்கு
 7. பின்னோக்கிப் பார்க்கும் போது சாதக பாதகங்களை விளங்கிக் கொள்ள முடிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 8. //திரு காமராஜர் அவர்கள் இந்தியே தேசிய காங்கிரஸின் //
  இந்தி, இந்தி என்று காமராஜர் அவர்களை இந்தி தேசியக் காங்கிரசுக்கும் தலைவராக்கிவிட்டீர்கள்.

  இந்தியர்கள் கணினித்துறையில் ஓரளவுக்காவது பெயர் சொல்லுமளவுக்கு இருப்பதற்கு இந்தி எதிர்ப்பும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் சைனா அதிலும் நம்மை பின்னே தள்ளியிருக்கும்.

  தமிழ்நாடு இனி இந்தியை எதிர்க்க வேண்டாம். ஆங்கிலத்தை மொத்தமாக ஹிந்தி மானிலங்களில் தூக்கிவிட்டு அடுத்தது இங்கே ஆங்கிலத்துக்குp பதிலாக ஹிந்தியை கொண்டுவரச் சொல்லி போராட்டம் செய்தால் நன்றாக இருக்கும். அப்பொழுதுதான் ஹிந்திக்காரர்களுக்குப் புரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தேசியம், தேசியம் என்று சொல்லி மாநில மொழிகளை பின் தள்ளி இந்தியை மக்களின் வரிப்பணத்தில் சந்தைப்படுத்திவிட்டார்கள். இந்தி திணிப்பு போராட்டம் நடத்தப்படாமல் இருந்திருந்தால் நம்மை என்றோ சீனர்கள் கணினி மென்துறையில் முந்தியிருப்பார்கள்.

   இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் கூட கணினித்துறையில் உள்ள வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு. இப்போது ஆங்கிலத்தை படிக்கத் தொடங்கிவிட்டது தான் காலம் செய்த கோலம்!

   நீக்கு
 9. நண்பரே! மலரும் நினைவுகளாக தங்கள் பதிவு கடந்ந கால வரலாற்றை என்னுள் வரச் செய்கிறது! கோர்வையாக தெகுத்து எழுதும் உங்கள் ஆற்றலை மிகவும் பாராட்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 10. முடிவாக நீங்கள் சொல்லியிருப்பதுதான் இந்தப்பிரச்சினையின் உயிர்க்கூறு!
  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னைபித்தன் அவர்களே!

   நீக்கு
 11. ஐயா வணக்கம்.

  சேமித்துக் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுத் தொடர்.

  சுவாரசியமாகக் கொண்டு போகிறீர்கள்.

  முந்தைய பகுதிகளையும் படித்து வருகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும், பாராட்டுக்கும் முந்தைய பதிவுகளை படித்து வருவதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு நடந்த நிகழ்வுகளை முதலில் எழுத நினைத்திருந்தேன். அதற்கு முன்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றி தவறாக எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதனுடைய பின்னணியை சொன்னால் உண்மையை அறிவார்கள் என்பதால் இந்த தொடரில் அந்த பழைய வரலாற்று உண்மைகளை பதிந்து வருகிறேன். தொடர்வதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. அருந்தகவல் தொகுப்பு
  படிப்பவர் கொள்வோர் விருப்பு!
  அருமை! தொடர்கிறேன் அய்யா!
  நன்றி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

  பதிலளிநீக்கு
 15. இந்த பதிவை இப்போதுதான் படித்தேன். அன்றைய கால கட்டத்தில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நான் ஐந்தாம் வகுப்பு (1964 – 65) படித்துக் கொண்டிருந்தேன். இந்த தொடரை தொடர்ந்து படிக்கும் போது, எனது நினைவில் போராட்டக்காரர்களை அடக்க மலபார் போலீஸ் திருச்சிக்கு வந்தது நினைவுக்கு வருகின்றது..

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் 5 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான்கு ஆண்டு படிப்பான வேளாண் அறிவியல் பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு