வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.6


இந்தி மொழியை திணிப்பதற்கு பெருகி வரும் எதிர்ப்பை கண்ட பிரதமர் திரு ஜவஹர் லால் நேரு அவர்கள் இந்தி மொழி பேசாதவர்களின் கவலையை போக்க உறுதிமொழி ஒன்றை கொடுத்தார் .பாராளுமன்ற உறுப்பினர் திரு Frank Antony அவர்கள், எட்டாம் அட்டவணையில் ஆங்கிலத்தை சேர்க்கும் சட்ட முன் வரைவை (Bill) பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது, 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள், திரு ஜவஹர் லால் நேரு அவர்கள் பேசும்போது,

“நான் இரண்டு விஷயங்களை நம்புகிறேன். முதலாவதாக முன்பே சொன்னபடி இந்தி திணிப்பு கட்டாயமாக இருக்காது. இரண்டாவதாக, காலவரையற்ற நாள் வரை, எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியவில்லை ஆங்கிலம் இணை (Associate) மற்றும் கூடுதல் (Additional) மொழியாக நமக்கு இருக்கும் அல்லது இருக்கவேண்டும்.

இது ஆங்கிலத்தில் உள்ள வசதிக்காக அல்ல. இந்தி பேசாத மக்கள் அரசோடு இந்தியில் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தும்போது தங்களது முன்னேற்றத்திற்கான வாயில்கள் அடைக்கப்பட்டுவிட்டன என அவர்கள் எண்ணக்கூடாது என்பதால் தான்.

இந்தி பேசாத மக்கள் அரசோடு ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தை கூடுதல் மொழியாக வைத்திருப்பேன். எவ்வளவு காலம் ஆங்கிலம் இருக்கவேண்டும் என்ற முடிவை இந்தி பேசும் மக்களிடம் அல்ல இந்தி பேசாத மக்களிடமே விட்டுவிடுகிறேன். ‘’

என்று இந்தி பேசாத மக்களின் கவலையை போக்க உறுதி மொழி அளித்தார்.

இந்த உறுதி மொழி தென்னிந்தியர்களின் அச்சத்தை குறைத்தாலும், இந்தி ஆதரவாளர்களுக்கு எந்த அளவுக்கு கிலியூட்டுவதாக இருந்தது என்பதை, Kher அலுவலக மொழி ஆணையத்தின் அறிக்கையை சீராய்வு (Review) செய்து, இந்தியை முதல் நிலை மொழியாக பரிந்துரை செய்த பாராளுமன்ற குழுவின் தலைவராக இருந்த திரு கோவிந்த வல்லப பந்த் அவர்கள் “இரண்டு ஆண்டுகளில் நாங்கள் முயன்று அடைந்ததை பிரதம அமைச்சர் இரண்டே மணித்துளிகளில் தகர்த்துவிட்டார்.” என்று சொன்னதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

அரசியலமைப்பின் பகுதி XVII இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியை முதன்மை அலுவலக மொழியாக மாற்றும் நாள் (1965 ஜனவரி திங்கள் 26 ஆம் நாள்) நெருங்கிக்கொண்டிருந்ததால், 1960 ஆம் ஆண்டு மய்ய அரசு இந்தியை அலுவலக மொழியாக்கும் செயலை தீவிரப்படுத்தியது. இந்தியில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன.

அதே ஆண்டு இந்திய குடியரசுத்தலைவர் திரு இராஜேந்திர பிரசாத் அவர்கள் திரு கோவிந்த வல்லப பந்த் குழுவின் பரிந்துரையை ஏற்று, இந்தியில் அருஞ்சொல் அகராதி (Glossary), சட்ட ஆவணங்களை இந்தியில் மொழிபெயர்த்தல், மய்ய அரசு அலுவலக ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி அளித்தல், மற்றும் இந்தியை பரப்புவதற்கான வழிமுறைகள் பற்றி ஒரு ஆணை வெளியிட்டார்.

மய்ய அரசு பிரதம அமைச்சர் உறுதி மொழி கொடுத்தும், இந்தியை பரப்ப முயற்சி எடுப்பதை எதிர்க்கும் முகமாக தி.மு.க, 1960 ஆம் ஆண்டு சொல்லின் செல்வர் திரு E.V.K சம்பத் அவர்கள் ( இன்றைய தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் திரு E.V.K.S இளங்கோவன் அவர்களின் தந்தையார்) தலைமையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட குழுவை ஏற்படுத்தியது, அந்த ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் தி.மு.க சென்னை கோடம்பாக்கத்தில் வெற்றிகரமாக நடத்திய பிரமாண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு வலுப்பதை பார்த்து, பிரதமர் திரு நேரு அவர்கள் போராட்டக்குழு தலைவரான திரு E.V.K சம்பத் அவர்களுக்கு எழுதிய அஞ்சலில் ‘இந்தி தமிழ் நாட்டில் திணிக்கப்படமாட்டாது. மேலும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அலுவலக மொழியாக இருக்கும்.'  என உறுதி அளித்தார். ஆனால் அவர் அவ்வாறு உறுதி அளித்தும். இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்தது. இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மை.

(சமீபத்தில் மய்ய அரசின் உள்துறை அமைச்சார் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் புது தில்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மய்ய அரசு ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று பேசியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். இது குறித்து திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் “இது இந்தி பேசாத மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிப்பதற்கு பாஜக அரசு முயற்சித்து வருகிறது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும்.’ என்றும் சென்னையில் சென்ற வாரம் கூறியுள்ளார்) .

பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு அவர்கள் அலுவலக மொழி பற்றி கொடுத்த வாக்குறுதிக்கு, சட்டத்தகுதி நிலை (Legal Status) கொடுப்பதற்காக 1963 ஆம் ஆண்டு அலுவலக மொழிகள் சட்டம் (Offical Languages Act) இயற்றப்பட்டது.

அதனுடைய சட்ட முன் வரைவை 1963 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள் அறிமுகப்படுத்தும்போது, ‘இந்த சட்ட முன்வரைவு, அரசியலமைப்பில் ஆங்கிலத்தை 1965 ஆண்டுக்குப் பிறகு உபயோகப்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கடந்த கால நிகழ்வுகளின் தொடர்ச்சியே. எனவே இது அந்த கட்டுப்பாடுகளை நீக்கும்.’ என்று திரு நேரு அவர்கள் சொன்னார்.

அப்போது தி.மு.க உறுப்பினர்கள் அந்த சட்ட முன்வரைவில் பிரிவு மூன்றில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் (may continue) என்றுள்ளதை ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் (shall continue) என மாற்ற வேண்டும் என்றனர். காரணம் தொடரலாம் என இருந்தால் வருங்கால அரசு அதை தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உண்டுஎன்றும் மேலும் சிறுபான்மையினரின் கருத்தை ஒத்துக்கொள்ளாமல் போகவும் இந்தி பேசாதோரின் கொள்கைகளை அலட்சியம் செய்யவும் வாய்ப்புண்டு என வாதிட்டனர்.

ஆனால் திரு நேரு அவர்கள் ஏப்ரல் 22 ஆம் நாள் அந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும்போது, ஆங்கில சொற்களான may மற்றும் shall இரண்டும் அந்த இடத்தில் ஒன்றே என்று வாதிட்டார். அதற்கு தி.மு.க உறுப்பினர்கள்  இரண்டும் ஒன்று என்றால் ஏன் shall என குறிப்பிடவில்லை என குரல் எழுப்பினார்கள்.

மாநிலங்கவையில் அப்போது உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களும் ஆங்கிலமே அலுவலக மொழியாக காலவரையின்றி தொடரவேண்டும் என்றும் அப்படி தொடர்ந்தால் தான் இந்தி பேசுவோருக்கும் இந்தி பேசாதோருக்கும் இடையே சாதக பாதகங்கள் சமநிலைப்படும் என வாதிட்டு பேசினார்.

ஆனாலும் சட்ட முன்வரைவில் குறிப்பிட்டிருந்த அந்த சொல் (may) திருத்தப்படாமல் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் நாள் அலுவலக மொழிகள்  சட்டம் (Offical Languages Act) இயற்றப்பட்டது.

அண்ணா அவர்கள் தான் முன்பே எச்சரித்திருந்தபடி மாநில முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார்.


தொடரும்


25 கருத்துகள்:

 1. பலர் அறியாத (நானும்தான்!) வரலாற்றை விவரமாகத் தொகுத்து அளித்து வருகிறீர்கள்.நன்றிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 2. //இந்தி பேசாத மக்கள் அரசோடு ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தை கூடுதல் மொழியாக வைத்திருப்பேன். எவ்வளவு காலம் ஆங்கிலம் இருக்கவேண்டும் என்ற முடிவை இந்தி பேசும் மக்களிடம் அல்ல இந்தி பேசாத மக்களிடமே விட்டுவிடுகிறேன்//

  என்னவொரு உயர்ந்த சிந்தனை மக்களின் மொழி உணர்வுகளுக்கு அவர் கொடுத்த விதம் அருமை வேறு வழியில்லையே....

  தமிழ் மணம் 1
  தொடர்கிறேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! திரு நேரு அவர்கள் உறுதிமொழி கொடுத்தும் அது காற்றோடு போய்விட்டதே. என் செய்ய!

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  அற்புதமான தகவல் அறியாதாது.. அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.. தொடருகிறேன்.
  த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும், பாராட்டுக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. மொழியின் வரலாற்றை, தமிழகத்தில் உண்டாக்கிய தாக்கத்தை மிக அருமையாகப் பகிர்ந்து வருகிறீர்கள். தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டிற்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 6. https://www.facebook.com/hashtag/stophindiimperialism?source=feed_text&story_id=10204200625490454

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தந்த இணைப்புகளுக்கும் நன்றி திரு பூபதி பெருமாள் அவர்களே!

   நீக்கு
 7. இந்தி பேசாத மக்கள் என்றால் தமிழர்கள் மட்டும்தானா. இந்தி எதிர்ப்பு வேறு மாநிலங்களில் இல்லையா. தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற இந்தி பேசா மாநிலங்களும் இந்தி திணிப்பை ஆரம்பத்தில் எதிர்த்தன. பின்னர் ஏனோ அதை விட்டுவிட்டனர். Field Marshal கரியப்பா, அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை போன்றவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்திருக்கிறார்கள். வங்கத்தில் கூட 1940-50 களில் இந்தி திணிப்பை எதிர்த்திருக்கிறார்கள்.

   நீக்கு

 8. ஓர் இனம்
  ஓர் நாடு
  ஓர் மொழி

  இதில் ஓர் மொழி என்பது ஒன்றுபட்ட பாரதத்தில் சாத்தியமாகது அய்யா!
  தங்களது தொடரை விக்கிபீடியாவில் பதிவேற்றலாம் அய்யா! அற்புதமான தொடர்!
  த ம 7
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. சொந்த நாட்டில், தாய்மொழியில் அரசாங்கத்துடன் பேசமுடியாவிட்டால், அந்த மொழியைத் தாய்மொழி என்று கூறமுடியாது என்று நினைக்கிறேன். எங்களைப்போன்று அயல் நாட்டில் உள்ளவர்களின் சந்ததியினர் தமிழைத் தக்கவைத்துக்கொள்வது என்பது, பேசுவதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியம் மிகவும் குறைவு. மெல்ல வளர்ந்தாலும், தமிழ் தொடர்ந்து வளர்ந்தால் நல்லது. அல்லது அது உலகுக்கே இழப்பாகிவிடும்.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நாட்டை முன்னேற்றி கொண்டுபோகவேண்டும் என்ற நினைப்பு ஆள்வோருக்கு இல்லாத நிலையும், மொழி வெறியர்கள் இங்கே இருப்பதாலும் தான் இத்தனை குழப்பங்களும். தங்களைப் போன்ற அயல் மண்ணில் வாழும் தமிழர்களுக்கு இது போன்ற மொழித்திணிப்பு இல்லையென்றாலும் தாங்கள் சொல்வதுபோல் தமிழை நடைமுறையில் உபயோகிக்க வழிமுறைகள் குறைவு என்பது சரியே. இருப்பினும் அயல் நாட்டில் தான் தமிழ் செழிப்போடு இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

  பதிலளிநீக்கு
 12. இந்த தொடர் முழுவதும் நூலாகவோ அல்லது மின்நூலாகவோ வெளிவர வேண்டும் என்பது எனது விருப்பம்.

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. பிரமிப்பு.
  காலத்தின் ஆவணம் உறைந்த பனி உருகி நதியாவதுபோல் உங்கள் எழுத்தில் வழியக் கண்டு...

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

  பதிலளிநீக்கு