வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.25


தி.மு. க. ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டக்குழுவில் இருந்த தீவிரவாத பிரிவைச் சேர்ந்தோர் போராட்டத்தை மீண்டும் துவக்கினார்கள் என்றும், 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று துவங்கிய அந்த போராட்டம் டிசம்பர் 21 ஆம் நாளன்று வன்முறை போராட்டமாக மாறியது என்றும்  முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.




அந்த போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்போதுதான், முன்பே சொன்னதுபோல் திருத்தப்பட்ட அலுவல்கள் மொழி சட்டம் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று 1968 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 8 ஆம்  நாள் நடைமுறைக்கு வந்தது.


இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது கோவையில் நடந்த நிகழ்வை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். அங்கு மாணவர்கள் ஊர்வலமாக சென்று வ.உ.சி பூங்காவில் கூடியபோது, அந்த கூட்டத்தில் பேசிய கோவை மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு குழுவின் தலைவர் ‘இந்தியை தமிழ் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒரே வழி தமிழ் நாடு தனி நாடாகுவதுதான்’ என்றார். பின்னர் ‘சுதந்திர தமிழ் நாட்டின் தேசியக்கொடியை’ ஏற்றி வணக்கம் செய்தார். மாணவர்களும் அமைதியாய் நின்று பின்னர் கலைந்து சென்றனர். சிறிது நேரம் காற்றில் பறந்த அந்த கொடியை கோவை நகர காவல்துறையினர் கீழிறக்கி கொண்டு சென்றனர்.

தீவிரமடைந்த போராட்டத்தின் நிலைமையைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றார்.அதற்கான தீர்மானம் 1968 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின்படி 1. மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாக கல்வித்திட்டதிலிருந்து விலக்கப்படும்

2.தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப்படும்.
3.தேசிய மாணவர் படையில் இந்தி ஆணைச்சொற்கள் விலக்கப்படும்.
4.அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.
5.ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ் அலுவல்மொழியாக அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
6. மய்ய அரசு இந்திக்கு அளிக்கப்படும் சிறப்பு தகுதி நிலையை (Special Status) முடிவுக்கு கொண்டுவந்து அனைத்து மொழிகளுக்கும் சமநிலை அளிக்க வற்புறுத்தப்படும்.
7. அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்திட இந்திய அரசைக் கோரப்படும்.

அரசினுடைய இந்த நேர்மறை நடவடிக்கைகள் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களுக்கு மன நிறைவு கொடுத்ததால் அவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டதால் மாநிலத்தில் பிப்ரவரி திங்களில் இயல்பு நிலை திரும்பியது.


ஆனால் மய்ய அரசு எங்கெங்கேல்லாம் இந்தியை திணிக்க முடியுமோ அங்கெல்லாம் இந்தியை வெவ்வேறு வடிவில் திணித்துக்கொண்டுதான் இருந்தது. முதலில் அகில இந்திய வானொலியை ஆகாஷ் வாணி என்று சொல்ல ஆரம்பித்தது. தமிழக அரசு அதை எதிர்த்ததால் பின்னர் All India Radio என மாற்றிக்கொண்டது.

பின்னர் தொலைக்காட்சி நிலையம் சென்னையில் தொடங்கியபோது, ஒவ்வொரு ஞாயிறன்று மாலையும் இந்தி திரைப்படங்களை ஒளிபரப்ப தொடங்கியது. திரும்பவும் தமிழக அரசின் தலையீடு காரணமாக இந்தியா முழுவதும் ஞாயிறன்று மாலையில் இந்தி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டாலும், சென்னை தொலைகாட்சி நிலையம் மட்டும் ஞாயிறன்று மாலை தமிழ்த் திரைப்படத்தை ஒளிபரப்பியது.

மய்ய அரசு அலுவலகங்களில் அலுவல்கள் மொழி (இந்தி) பிரிவு (Official language cell) தொடங்கப்பட்டு, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர்களுக்காக அலுவலக நேரத்தில் இந்தியை கற்பித்து மூன்று நிலை தேர்வுகளை நடத்த ஆரம்பித்தது.

மய்ய அரசின் அலுவலகங்கள் மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களிலும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும் அலுவல்கள் மொழி (இந்தி)ப் பிரிவு (Official language cell) தொடங்கி, அங்கும் இந்தி தெரியாதோருக்கு அலுவலக நேரங்களில் இந்தி பாடம் நடத்தி தேர்வு வைத்து அதில் வெற்றிபெருவோருக்கு ஊக்கத்தொகையும் கொடுக்கத் தொடங்கியது.

அரசின் எல்லா துறைகளிலும் இந்தி பயன்படுத்தப்படுகிறதா என அறிய அடிக்கடி மய்ய அரசின் உள்துறை அலுவர்கள் ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல் பாராளுமன்ற குழுவினரும் அந்த அலுவலகங்கள் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்த தொடங்கினார்கள்.

மய்ய அரசு அலுவலகங்கள் இந்தியை பிரபலப்படுத்த தினம் ஒரு இந்தி சொல்லை ஒரு பலகையில் எழுதவேண்டும் எனவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தி தினம் கொண்டாடவேண்டும் என்றும் அப்போது போட்டிகள் நடத்தி அதில் வெற்றிபெறுவோருக்கு பரிசளிக்கவேண்டும் வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

அதோடு அலுவலகங்களில் Official language implementation committee (OLIC) என்ற ஒன்று இருக்கவேண்டும் என்றும் அந்த குழுவில் உள்ளவர்கள் அடிக்கடிக் கூடி எப்படி இந்தியை அலுவலகங்களில் பயன்படுத்தலாம் என விவாதித்து செயல் படுத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு ஓசையின்றி இந்தி திணிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, 1986 ஆம் ஆண்டு திரும்பவும் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் தொடங்கியது



தொடரும்




23 கருத்துகள்:

 1. //சுதந்திர தமிழ் நாட்டின் தேசியக் கொடியை’ ஏற்றி வணக்கம் செய்தார்//

  புதிய விடயம் அறிந்தேன் நண்பரே தொடர்கின்றேன் மாலையே செல்லில் படித்து விட்டேன் கருத்துரை இட தாமதமாகி விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 2. //அலுவலகங்களில் Official language implementation committee (OLIC) என்ற ஒன்று இருக்கவேண்டும் என்றும் அந்த குழுவில் உள்ளவர்கள் அடிக்கடிக் கூடி எப்படி இந்தியை அலுவலகங்களில் பயன்படுத்தலாம் என விவாதித்து செயல் படுத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.//

  நான் பணியாற்றிய BHEL நிறுவனத்திலும் இது அமுலாக்கப்பட்டது. நானும் இதில் சேர்ந்து ஹிந்தி படித்துள்ளேன்.

  //1986 ஆம் ஆண்டு திரும்பவும் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் தொடங்கியது //

  தொடரட்டும். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நானும் பிரபோத் மற்றும் பிரவீன் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.

   நீக்கு
 3. வரலாற்றை அந்த நாட்களில் வாழ்ந்த ஒருவர் சொல்லும் போது அதன் வசீகரம் கூடத்தான் செய்கிறது. அது இந்த தொடர் முழுவதும் பார்க்க முடிகிறது. தொடர்கிறேன்
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், தொடர்வதற்கும், பாராட்டுக்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!

   நீக்கு
 4. அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற கழகங்களின் ஆட்சியில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது நீர்த்துப் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே! அவ்வப்போது மய்ய அரசை கண்டித்து அறிக்கை விடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

   நீக்கு
 5. //ஆனால் மய்ய அரசு எங்கெங்கேல்லாம் இந்தியை திணிக்க முடியுமோ அங்கெல்லாம் இந்தியை வெவ்வேறு வடிவில் திணித்துக்கொண்டுதான் இருந்தது.//

  இருந்தது இல்லை. இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஹிந்தியை கட்டாயப்பாடமாக அனுமதிக்காதலால், நவோதயா பள்ளிகள் இன்னும் தமிழ் நாட்டில் கிடையாது. நிச்சயம் நவோதயா பள்ளிகள் கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்கு மிகுந்த நன்மையை அளித்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நவோதயா பள்ளிகள் ஏன் தமிழ் நாட்டில் செயல்படவில்லை என்பதை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். இந்தி திணிக்கப்படுவது இன்னும் நடக்கிறது என்ற உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.

   நீக்கு
 6. அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழிகள் இருப்பதால் அயல் மாநிலத்தவர் படும் பாடு கொஞ்சமல்ல. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் நிலைபோல் எங்கும் மாநிலமொழி எதிலும் மாநிலமொழி என்றாகி விட்டது மக்கள் அவரவர் மாநிலங்களில் மட்டும் வசிப்பதில்லை. தமிழ்நாட்டைப் பின் பற்றி மொழிவெறி எல்லா மாநிலங்களிலும் தலை தூக்குகிறது
  /அங்கு மாணவர்கள் ஊர்வலமாக சென்று வ.உ.சி பூங்காவில் கூடியபோது, அந்த கூட்டத்தில் பேசிய கோவை மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு குழுவின் தலைவர் ‘இந்தியை தமிழ் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒரே வழி தமிழ் நாடு தனி நாடாகுவதுதான்’ என்றார். பின்னர் ‘சுதந்திர தமிழ் நாட்டின் தேசியக்கொடியை’ ஏற்றி வணக்கம் செய்தார். மாணவர்களும் அமைதியாய் நின்று பின்னர் கலைந்து சென்றனர். சிறிது நேரம் காற்றில் பறந்த அந்த கொடியை கோவை நகர காவல்துறையினர் கீழிறக்கி கொண்டு சென்றனர்/
  என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று அறியாமலேயே உணர்ச்சிகளைத் தூண்டும் செயல் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! ஏனோ தெரியவில்லை மொழிப் பற்றில் (வெறியில்) தமிழ் நாடுதான் வழிகாட்டுகிறது என தங்களைப்போன்ற பலர் எண்ணுகின்றனர்.

   கர்நாடகாவிலும் கேரளாவில் அந்தந்த மாநில மொழிகளை இரண்டாம் பாடமாக படிக்காமல் பள்ளித் தேர்வுகளை எழுதமுடியாது. ஆனால் சமீபகாலம் வரை தமிழ்நாட்டில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழையே படிக்காமல், வடமொழியையோ ஆங்கிலம் அல்லாத வேறு மொழியை மட்டும் படித்து ஒருவர் பட்டம் பெறமுடிந்தது என்றால் அது எதைக் காட்டுகிறது? சமீபத்தில் இரண்டாம் பாடமாக தமிழ் படிக்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தபோது அதை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விசித்திரம் இங்கு மட்டுமே நடக்கிறது. எனவே தமிழ் நாடு மொழிவெறிக்கு வழிகாட்டி என சொல்லாதீர்கள். தங்களைப்போன்றோர் சொல்லும்போது ‘பாவம் ஓரிடம் பழி ஓரிடம்’ என்ற பழமொழி ஏனோ நினைவுக்கு வருகிறது.

   அந்த கொடி ஏற்றிய நிகழ்வு நீங்கள் சொன்னதுபோல் அது உணர்ச்சி வசப்பட்டதால் ஏற்பட்டதே. அதுவும் நடந்தது எனத் தெரியவேண்டும் என்பதற்காக குறிப்பிட்டேன்.

   நீக்கு
  2. ஒரு மொழியைப் பேசுவது புரிந்து கொள்வது என்பது வேறு எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது வேறு அந்தந்த மாநிலமொழியை முதல் பாடமாகவே கற்பிக்க வேண்டும் எனும் எண்ணம் உடையவன் அறுபதுக்சளில் கர்நாடகத்தில் இந்த அளவு மொழி வெறி இருந்ததில்லை. ஆனால் இப்போது வேற்று மாநிலத்தவரை அயல் நாட்டான் போல் எண்ணுகின்றனர் இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டம் தமிழ் வெறிப் போராட்டமாகவே மாறியது என்று நான் எண்ணுகிறேன் கருத்து வேறுபாடு இருக்கலாம்

   நீக்கு
  3. கருத்துக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியை கற்பிக்கவேண்டும் என்ற உங்களின் கருத்துக்கு உடன்படுகின்றேன்.

   ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தான் தமிழ் வெறிப் போராட்டமாக மாறியது என்ற உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். நீங்கள் சொல்வது உண்மையென்றால் எப்படி இதுவரை தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமாலேயே பள்ளியிலும் கல்லூரியிலும் படித்து மாணவர்கள் பட்டம் பெற்றார்கள்?.இன்னும் சொல்லப்போனால் தமிழன் செய்யாத ஒன்றுக்கு பழிக்கப்படுகிறான் என்பதே என் கருத்து.

   எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இரண்டு தமிழரல்லாதார் சந்தித்தால் அவர்களது தாய்மொழியில் தான் பேசிக்கொள்வார்கள். ஆனால் தமிழர்களோ. ஆங்கிலத்தில் தான் அளவளாவுவார்கள். எங்கே அந்த தமிழ் வெறி?

   நான் கோட்டயத்தில் பணிபுரிந்தபோது வங்கியாளர்கள் மன்றத்தில் (Bankers Club) வேற்று மொழிக்காரர்கள் இருக்கிறார்களே என்று கூட கவலைப்படாமல் மலையாளத்தில் தான் பேசினார்கள். ஆனால் தமிழகத்தில் கடலூரில் நான் பணிபுரிந்தபோது வங்கியாளர்கள் மன்றத்தில் ஆங்கிலம் தான் உபயோகிக்கப்பட்டது. காரணம் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் மேலாளர்களாக இருப்பார்களே என்ற காரணத்தால்.உண்மையில் நீங்கள் சொல்லும் ‘தமிழ் வெறி’ இருந்திருந்தால் தமிழில் அல்லவா பேசியிருபார்கள்.

   திரும்பவும் சொல்கிறேன். தமிழனை குற்றம் சொல்வது காலம் காலமாய் நடந்துவருகிறது. .அது தமிழனின் தலைவிதி போலும்! பரவாயில்லை. நீங்கள் என்ன சொன்னாலும் உண்மையை மறைக்கமுடியாது.

   நீக்கு
 7. மன்னிக்கவும். இப்பொழுது தான் பார்த்தேன். இது பற்றி எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. அந்த காலத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் இந்த தலைப்பு பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கின்றன. தொடர்ந்து வருகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீ.விஅவர்களே!

   நீக்கு
 8. இந்தக் கட்டுரைக்கு ஒரு பிற்காலப் பார்வையும் அவ்வப்போது தேவையோ என்று நினைக்கிறேன். திணிக்கப் படாமலே இந்தி இப்பொழுது வெகுதிரள் மக்களால் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இது தான் காலத்தின் விசித்திரம். பண்டமாற்றுக்கு வியாபார வளர்ச்சிக்கு மைய அரசுடனான உறவுக்கு அது தேவை என்பதினாலா? சில வட மாநில அரசுகளின் இந்தி விளம்பரங்களை அன்று இந்தியை அரக்கியாகச் சித்தரித்த தமிழ்ப் பத்திரிகைகளிலேயே பார்க்கிறேன். அந்தக் கால கல்வி வளர்ப்பில் வளர்ந்த நான், இன்றும் அறவே இந்தி மொழி அறியாத நான், சில தடவைகள் வட மாநிலங்களுக்கு சுற்றுலாவாகப் போய் வந்த பொழுது மொழியறியாமல் பட்ட பாடெல்லாம் கசப்பான அனுபவங்கள். இன்றைய இளைஞ்ர்கள் நாலைந்து மொழிகள் தெரிந்தவராய் இருக்கின்றார்கள். ஆங்கிலத்தை விட்டுத் தள்ளுங்கள். அன்றே பிரதமரிடம் உறுதி மொழி வாங்கிய அன்றே அதற்கு இங்கு கால்கோள் விழா நடந்து விட்டது. பிரெஞ்சுமொழியைக் கற்றவர்கள் மிகப்பலர் இருப்பது ஆச்சரியம், தமிழ் மாநிலத்தில் வாழும் மற்ற மாநிலத்தவர் வெகு நேர்த்தியாக தமிழ் பேசுகிறார்கள். அவர்களுக்கு தங்கள் தாய்மொழியைத் தவிர தெரிந்த மொழிகளில் தமிழும் ஒன்றாய் இருக்கிறது. இந்தி தெரிந்த இன்றைய இளைய தலைமுறையைப் பார்க்கும் பொழுது, அன்றைய இளைஞன் ஏமாற்றப்பட்டு விட்டானோ என்று எண்ணிக் கொள்வதுமுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீ.விஅவர்களே! நீங்கள் சொல்வதுபோல் இந்த கட்டுரைக்கு ஒரு பிற்காலப் பார்வை தேவைதான்.அதை தாங்கள் தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

   மூன்று ஆண்டுகள் மய்ய அரசின் பொதுத்துறை நிறுவனத்திலும், 34 ஆண்டுகள் பொதுத்துறை வங்கியிலும் பணி செய்தபோது, கேரளம், கர்நாடகம் ,உத்திர பிரதேசம்,ஆகிய மாநிலங்களிலும் புது தில்லியிலும் பணி ஆற்றியிருக்கிறேன். நான் பள்ளியில் இந்தி படிக்காதது, இந்தி பேசும் இடங்களில் எனக்கு அது ஒரு தடையாக இருந்ததில்லை.

   முதன் முதல் தார்வார் (வட கர்நாடகம் ) என்ற ஊருக்கு சென்றபோது எனக்கு கன்னடமும் தெரியாது. இந்தியும் தெரியாது. ஆனால் மூன்றே மாதங்களில் கன்னடத்தை கற்றுக்கொண்டு சரளமாக பேசத் தொடங்கிவிட்டேன். அதுபோல வட இந்தியா சென்றபோதும் இந்தியை புரிந்துகொண்டு. பேச ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் சுற்றுலாப் பயணியாக சென்றதால் கஷ்டப்பட்டிருக்கலாம். ஒருவேளை அங்கு ஓரிரு மாதங்கள் தங்கும் நிலை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் நீங்களும் இந்தியை சுலபமாக கற்றுக்கொண்டு இருந்திருப்பீர்கள்.

   அதுபோல கேரளாவிற்கு பணியாற்ற சென்றபோது 50 வயதினில் என்னால் மலையாளம் எழுதப் படிக்க பேச கற்றுக்கொள்ள முடிந்ததென்றால் அது சுய விருப்பத்தாலன்றி கட்டாயப்படுத்தியதால் அல்ல.

   வட இந்தியாவுக்கு செல்லும் இந்தி தெரியாத தமிழர்கள் இரண்டு மூன்று மாதங்களில் இந்தியில் உரையாடும் அளவுக்கு கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இப்போதும் புதுதில்லி கரோல் பாக் மற்றும் ஜனக்பூரி போன்ற பகுதிகளுக்கு சென்றால் அங்குள்ள மாமிகளும் பாட்டிகளும் காய்கறி விற்பவரிடம் இந்தியில் சரளமாக பேசி பேரம் பேசி வாங்குவதைக் காணலாம். அவர்களெல்லாம் முறையாக இந்தி படித்தவர்கள் அல்லர்.

   நான் பொள்ளாச்சியில் பணியாற்றியபோது அங்கு நிலக்கடலை வாங்க வரும் மகாராஷ்டிர வணிகர்கள் வெகு எளிதாக தமிழ் பேசுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். பண்டமாற்று அல்லது வணிக செயல்களுக்கு மொழி தெரிந்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் அது கற்காமலேயே தேவை ஏற்படும்போது பழக்கத்தில் வந்துவிடுகிறது என்பது உண்மை.

   இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும். நாம் இந்தி படிக்காததால் தான் நமது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற சிலரின் வாதமும் இந்த மென்பொருள் நிறுவனங்கள் ஆரம்பித்ததும் அடிபட்டு போய்விட்டது. இந்தி படித்தவர்களே ஆங்கிலம் படித்துவிட்டு இந்தியா முழுதும் பணியாற்றுவதை இப்போது நாம் பார்க்க முடிகிறது.

   எனவே இந்தி மொழியை கட்டாயமாக திணிக்க முற்பட்டிருக்காவிட்டால் இந்நேரம் நாமும் இந்தியை கற்றுக் கொண்டிருந்திருப்போம். எனவே எந்த மொழியையும் யார் மீதும் திணிக்காமல் இருந்தால், தேவைப்படுவோர் அவைகளைக் கற்றுக்கொள்வார்கள் என்பது என் கருத்து.

   நீக்கு
 9. உங்கள் பதிலுக்கு நன்றி. இதை விட ஆழமான பார்வை தேவையோ என்று எண்ணுகிறேன்.

  //நீங்கள் சொல்வதுபோல் இந்த கட்டுரைக்கு ஒரு பிற்காலப் பார்வை தேவைதான்.அதை தாங்கள் தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.//

  என்னுடைய 'அழகிய தமிழ் மொழி இது' என்கிற தொடர் பதிவுக்கு உங்களை அழைக்கிறேன். அந்தத் தொடரின் போக்கு நீங்கள் கேட்டுக் கொண்ட வழியில் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி திரு ஜீ.வி அவர்களே! தங்களது ‘அழகிய தமிழ் மொழி இது’ என்ற தொடரில் முதலில் 6 பகுதிகளையும் படித்துவிட்டு பின்னர் பகுதி 7 ஐயும் படித்து பின்னூட்டம் இடுவேன்.

   நீக்கு
 10. இந்தி படித்தால்...இந்தி மட்டுமே தெரிந்தால் போதும். இந்தியா முழுவதும் ஏன் தமிழ்நாட்டில் கூட எல்லா வேலையும் கிடைக்கும். முக்கால்வாசி கடைகள் ஓட்டல்களில் சென்னையில் வேலை செய்பவர்களுக்கு ஹிந்தியை தவிர ஒரு மண்ணும் தெரியாது! இதை தான் ஹிந்தி மட்டும் தெரிந்தால் போதும் என்கிறார்களோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நம்பள்கி அவர்களே! சரியாய் சொன்னீர்கள்! இந்தி படித்தால் வேலை சுலபமாய் கிடைக்கும் என்பது உண்மையல்ல என்பது
   அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும்

   நீக்கு