புதன், 25 மே, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.27


1986 ஆம் ஆண்டு மய்ய அரசு நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவ முயற்சி செய்தபோது அந்த பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என அறிந்ததும் திமுக அதை எதிர்த்தது என்றும் தமிழகம் முழுதும் நவம்பர் 17 ஆம் நாள் அந்த கட்சியின் உறுப்பினர்கள் மய்ய அரசின் கல்விக் கொள்கைக்கெதிராக, அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைக் தீயிலிட்டு போராட்டம் நடத்தியபோது திரு கருணாநிதி உட்பட 20,000 க்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள் கைதாயினர் மற்றும் அந்த போராட்டத்தின் போது 21 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர் என்றும் சொல்லியிருந்தேன்.



இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியின் நகலொன்றை தீயிட்டு கொளுத்திய திரு அன்பழகன் உட்பட பத்து திமுக பேரவை உறுப்பினர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியின் நகலொன்றை பொது இடத்தில் தீயிட்டு கொளுத்தியதன் காரணத்தால் தமிழ்நாடு சட்ட சபை, பேரவையின் உறுப்பினராக இருக்க அவர்கள் தகுதி அற்றவர்கள் என கருதி அவர்களை அவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் (Expulsion) செய்தது என்றும், இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியின் நகலொன்றை எரித்ததற்காக தமிழகம் முழுதும் கைது செய்யப்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் சில நீதி மன்றங்களில் தண்டிக்கப்பட்டாலும், ஒரு மாவட்ட நீதி மன்றத்தில் அந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கிடைத்த தீர்ப்பு வேறு விதமாக இருந்தது என்றும் சொல்லியிருந்தேன்.

அந்த மாவட்ட நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட திமுக உறுப்பினர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டி காவல் துறையினர் அவர்களை அங்கு முன்னிலைப்படுத்தினர். விசாரணையின் போது அந்த மாவட்ட நீதியரசர் காவல் துறையினரைப் பார்த்து, ’இவர்கள் அரசியல் சட்ட நகலை எரிப்பதை பார்த்தீர்களா?’ என வினவினார்.’ ஆமாம்.’ என்று பதில் தந்ததும் அவர் ‘அப்படியென்றால் நீங்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஏனெனில் அவர்கள் இந்திய அரசியல் சட்ட நகலை எரிக்கப்போகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் அந்த குற்றத்தை தடுக்காமல், அவர்கள் இந்திய அரசியல் சட்ட நகலை எரிக்கும் வரை காத்திருந்து கைது செய்திருக்கிறீர்கள்.

எனவே அவர்கள் குற்றம் செய்வதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததால், அதற்கு நீங்களும் உடந்தை என்றே பொருள்கொள்ளவேண்டியிருக்கும்’ என்றார். உடனே அவர்கள் ‘ஐயா! அவர்கள் ஏதோ காகிதங்களை எரித்துக் கொண்டிருந்ததைத்தான் பார்த்தோம். அவர்கள் எரித்தது இந்திய அரசியல் சட்ட நகலா எனத் தெரியாது.’ என்று தாங்கள் தப்பித்துக்கொள்ள சாமர்த்தியமாக பதில் அளித்தனர்.

உடனே நீதியரசர், அவர்கள் எரித்தது இந்திய அரசியல் சட்ட நகல் தான் எனத் தெரியாதபோது எப்படி அவர்கள் பேரில் தேசிய நன்மதிப்பை அவமதிக்கும் வழக்கு தொடர்ந்தீர்கள்? பொது இடத்தில் கூடி காகிதம் எரித்ததற்காக அவர்கள் பேரில் சாதாரண வழக்கு தொடந்திருக்கலாமே? என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து அவர்களை விடுதலை செய்துவிட்டார்.

அதற்குப் பிறகு வேறு சில நீதிமன்றகளிலும் காவல் துறையினர் திமுக உறுப்பினர்கள் எரித்தது அரசியல் சட்ட நகல் தான் என உறுதி செய்யாததால் இந்த தீர்ப்பையொட்டி அரசு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள எதிர்ப்பை கண்ட திரு ராஜீவ் காந்தி அவர்கள், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்படமாட்டாது என்று வாக்குறுதி கொடுத்தார்.

அதன் காரணமாக தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது, நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமேயாகும் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியா முழுதும் தற்போது 595 நவோதயா பள்ளிகள் உள்ளன.

அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த திரு எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மய்ய அரசின் தலைமை அமைச்சராக இருந்த திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கும் இணக்கமான புரிதல் இருந்ததால், மய்ய அரசை வற்புறுத்தி தமிழகத்தில் இந்தியை கட்டாய பாடமாக்காமல் விருப்ப பாடமாக ஆக்கி நவோதயா பள்ளிகளை திறக்கச் செய்திருக்கலாம். அப்படி முடியவில்லை என்றால் தமிழக அரசே நவோதயா பள்ளிகள் போன்று தமிழ் நாட்டிலும் திறந்திருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை எனத் தெரியவில்லை.

அதற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு வரை இந்தி மொழியை மய்ய அரசின் அலுவகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பயன்படுத்துவது பற்றி வெளிப்படையாக வற்புறுத்தப்படாவிட்டாலும் சுற்றறிக்கைகள் மூலமும் ஆய்வுகள் நடத்தியும் இந்தியை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

(பொதுத்துறை வங்கியில் 34 ஆண்டுகள் பணியாற்றியதால் இந்தியை எவ்வாறு அங்கு நுழைத்தார்கள் என்பது எனக்குத் தெரியும்)

2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா கட்சி மீண்டும் இந்தியை திணிக்கும் முயற்சியை வெளிப்படையாக மேற்கொள்ள தொடங்கியது.


தொடரும்





19 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. //விசாரணையின் போது அந்த மாவட்ட நீதியரசர் காவல் துறையினரைப் பார்த்து, ’இவர்கள் அரசியல் சட்ட நகலை எரிப்பதை பார்த்தீர்களா?’ என வினவினார்.’ ஆமாம்.’ என்று பதில் தந்ததும் அவர் ‘அப்படியென்றால் நீங்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஏனெனில் அவர்கள் இந்திய அரசியல் சட்ட நகலை எரிக்கப்போகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் அந்த குற்றத்தை தடுக்காமல், அவர்கள் இந்திய அரசியல் சட்ட நகலை எரிக்கும் வரை காத்திருந்து கைது செய்திருக்கிறீர்கள்.//

    யோசிக்க வைக்கும் அருமையான தீர்ப்பு :) பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. நீங்கள் என்னதான் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று எழுதினாலும் அதன் ஊடே இந்தி மொழிமேல் எதிர்ப்பும் தெரிகிறது சரி இந்த நவோதயா பள்ளிகளில் என்ன சிறப்பு. மத்திய அரசு நிதியில் செயல் படுகிறது என்பது தவிர கல்வியே concurrent subject ஆக இருப்பதால் வரும் வினைகளே இவை நான் பள்ளியிறுதி வரை தமிழ் வழிக்கல்விதான் கற்றேன் எனக்குத் தெரியும் மொழிகளில் ஒரு working knowledge மொழி பற்றிய ஆர்வம் எதையும் திணிப்பதால் வராது தமிழையும் சேர்த்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றுபுழக்கத்தில் இருக்கும் சொற்களுக்கு மாற்று தமிழ் சொற்களைக் கண்டுபிடிப்பது பெரிய தமாஷ் என்றே தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! ‘’நீங்கள் என்னதான் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று எழுதினாலும் அதன் ஊடே இந்தி மொழிமேல் எதிர்ப்பும் தெரிகிறது.’’ என சொல்லியிருக்கிறீர்கள். உண்மை தான். விரும்பாத ஒன்றை யார் திணித்தாலும் வெறுப்பு ஏற்படுவது இயற்கை. தங்களுக்கும் அது பொருந்தும் என எண்ணுகிறேன்.

      நானும் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவன் தான். ‘புழக்கத்தில் இருக்கும் சொற்களுக்கு மாற்று தமிழ் சொற்களைக் கண்டுபிடிப்பது பெரிய தமாஷ் என்றே தெரிகிறது’ என்று சொல்லியிருக்கிறீர்கள்.

      நீங்கள் எதை சொல்கிறீர்கள் எனத்தெரியவில்லை.
      பஸ் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்ட பேருந்து என்ற சொல்லையா?
      கம்ப்யூட்டர் என்பதை கணினி என்று சொன்னதையா?
      இண்டர்நெட் என்பதை இணையம் என்று தமிழாக்கம் செய்ததையா?
      மிஸ்டர் என்பதை திருவாளர் என்று சொன்னதையா?
      கனம்பொருந்திய என்பதை மாண்பு மிகு என மாற்றியதையா?
      கவர்னர் என்பதை ஆளுநர் என மாற்றியதையா?
      உப அத்யட்சகர் என்பதை துணை வேந்தர் என மாற்றியதையா?
      அபேட்சகர் என்பதை வேட்பாளர் என மாற்றியதையா?
      நமஸ்காரம் என்பதை வணக்கம் என்று மாற்றியதையா?
      ஜலம் என்பதை தண்ணீர் என சொல்ல வைத்ததையா?
      அட்வகேட் என்பதை வழக்கறிஞர் என சொல்வதையா?

      இவைகள் எல்லாம் தமிழ் பேசும் பாமர மக்களால் ஏற்றுக்கொள்ளபட்டு பயன்பாட்டில் உள்ளன. இதுபோல் இன்னும் பல சொற்களை என்னால் எடுத்துக்காட்டமுடியும்.


      முதலில் பழக்கத்தில் உள்ள தமிழ் அல்லாத சொற்களுக்கு மாற்றாக நல்ல தமிழ் சொற்களை நாம் கண்டுபிடிக்க முயல்வோம்.பின்னர் குறை சொல்வோம்.

      நீக்கு
  4. நீதிபதியின் சாமர்த்தியமான மடக்கு கேள்விகளை ரசித்தேன்
    பாரதீய ஜனதாவின் செயல்பாட்டை அறிய தொடர்கிறேன் நண்பரே
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், இரசித்தமைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  5. தமது வேலைக்கு ஆபத்து என்றால் போலீசார் வழக்கையே ஒன்றும் இல்லாமல் நீர்க்கச் செய்து விடுவார்கள்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

    பதிலளிநீக்கு
  7. தங்களது இப்பதிவைத் தொடர்ந்து படித்துவருகிறேன். நேற்றைய தி இந்து ஆங்கில நாளிதழில் வந்திருந்த முழுபக்க இந்தி விளம்பரத்தைப் பார்த்து வேதனையடைந்தேன். என்ன செய்வது? இதற்கு முடிவே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தொடர்வதற்கும், பகிர்ந்துகொண்ட உணர்விற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! பெரும்பான்மை பலம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியிடம் இருக்கும்போது, அதுவும் பெரும்பாலொர் இந்தி பேசுபவர்களாக இருக்கும்போது வேறு எதை அவர்களிடம். எதிர்பார்க்கமுடியும். துரதிர்ஷ்டவசமாக நம்மவர்களில் சிலர் அந்த செயலை ஆதரிக்கும்போது இதற்கு முடிவு இல்லை என்றே தோன்றுகிறது.

      நீக்கு
  8. சில அரிய தகவல்கள்:

    1. அரியானாவில், 2010 வரை தமிழ்மொழி இரண்டாவது மொழியாக இருந்திருக்கிறது.

    2. இந்தி பேசும் மாநிலங்கள் பலவற்றில் தமிழ் இரண்டாவது மொழியாகத் தேர்வு செய்யப்படுகிறது. பல நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது.

    3. பழமையான தமிழ் கையெழுத்துப் பிரதிகள் ய்னெஸ்கோ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

    4. தமிழகம்,புதுச்சேரி மட்டுமல்லாமல், அந்தமான் நிகோபர் தீவுகள், இலங்கை, சிங்கப்பூ(ர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது.

    5. அமெரிக்கா, கனடா, மொரிஷீயஸ், இந்தோனேஷியா, பிஜி, தென் ஆப்பிரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளிலும் தமிழ் மொழி பரவியுள்ளது.

    6. இந்நாடுகளில் உள்ள தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்குஇ தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆக்வே, தமிழகத்தில் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே நமது தலையாய பணியாக இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்து தொடங்கவேண்டும். தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் இரண்டாம் பாடமாக தமிழை எடுத்துப்படிக்க சொல்லவேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காக மற்ற மொழிகளை எடுத்து படிப்பதால் தொழில் கல்லூரிகளில் சேர முன்னுரிமை கிடையாது என சொல்லவேண்டும். இல்லாவிடில் தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசவும் எழுதவும் தெரியாத தமிழர்கள் பெருகக்கூடும்.

      நீக்கு
  9. //தமிழக அரசே நவோதயா பள்ளிகள் போன்று தமிழ் நாட்டிலும் திறந்திருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை எனத் தெரியவில்லை.//

    அரசின் அலட்சிய போக்கினால் நவோதயா பள்ளிகளை தமிழ் நாடு இழந்தது. இப்பொழுது ஸ்மார்ட் சிட்டி அமைப்பதிலும் தமிழநாடு திட்டத்தினை சமர்ப்பிக்காததால் பின் வாங்கியுள்ளதாக படித்தேன். மக்களைப்பற்றிய சிந்தனை இல்லாதவர்கள் அரசியலில் நுழைந்தால் நல்ல திட்டங்களை எதிர்ப்பார்க்க முடியாது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்கள் நலனையே பெரிதாக எண்ணும்போது மக்கள் நலனை எங்கே கவனிக்கப் போகிறார்கள்? மக்களாகப் பார்த்து, பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு நற்பணியாற்ற விழைவோரை தேர்ந்தெடுத்தாலோழிய இந்த நிலைதான் தொடரும் என்பது வேதனைக்குரிய உண்மை.

      நீக்கு
  10. As rightly pointed out subtle attempts have been made in the past repeatedly to introduce ( impose !) HINDI in TN. But for the stiff opposition from people of TN ( Students played no mean role in organizing and taking part in agitations) situation would have been entirely different. As has been rightly observed it should have been left to the people to voluntarily learn the language. Be that as it may, important events have been faithfully narrated with no exaggeration. I think so far agitation initiated by CNA has found no mention. The agitation was launched against the remarks ( Nonsense) made by the then PM Mr.Jawaharlal Nehru. I think that would make an interesting reading.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! இந்த போராட்டதில் அறிஞர் அண்ணா அவர்களின் பங்கு பற்றியும், அவர் தலைமை தாங்கி போராட்டம் நடத்தியது பற்றியும், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடர்கள் 2,3,6 , 7, 8 ஆகியவைகளில் எழுதியிருக்கிறேன். நேரம் இருப்பின் படித்துப் பார்க்கவும்.
      இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் இரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை தி.க மற்றும் தி.மு.க உறுப்பினர்கள் தார் பூசி அழித்ததை, சிறுபிள்ளைத்தனமான முட்டாள்தனம் (Childish Nonsense) என்று சொன்னதற்கு அண்ணா அவர்கள் 1953 ஆம் ஆண்டு நடத்திய போராட்டம் பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி!
      இந்த தொடரை முதலிலிருந்து படித்தால் யார் யார் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றார்கள் என்ற உண்மை விளங்கும்.

      நீக்கு
  11. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முத்துப்பேட்டை திரு ஆலிம் அவர்களே!

    பதிலளிநீக்கு