இந்தி மொழித் திணிப்பு பற்றிய சச்சரவு ஓய்வதற்குள் அதே ஆண்டு (2014) செப்டம்பர் மய்ய அரசின் அலுவல் மொழித் துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பி திரும்பவும் இன்னொரு சச்சரவு உண்டாக்க வழி வகை செய்தது. அது என்ன என்று அறிவதற்கு முன் ஜூலை திங்களில் நடந்த மற்றொரு நிகழ்வைப் பார்ப்போம்.
2014 ஆம் ஆண்டு ஜூலை திங்களில் மய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாளிலிருந்து 14 ஆம் நாள் வரை வட மொழி வாரத்தை கொண்டாட வேண்டும் என்று பரிந்துரைத்ததோடல்லாமல், அந்த மொழியை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் நோக்கில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் அறிவுறுத்தியது.
இந்த சுற்றறிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்தும் அமைப்புகளும் எதிர்த்தன. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு எழுதிய கண்டன அஞ்சலில்.“தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் மிகவும் வளமான கலாச்சாரம் இருக்கிறது. வலிமை வாய்ந்த சமூக நீதி மற்றும் தமிழ் மொழியை போற்றும் பல்வேறு பேரியக்கங்கள் தமிழகத்தில் இயங்கியிருக்கின்றன, இன்னும் செயல்படுகின்றன.
எனவே, இங்கு வடமொழி வாரத்தை கடைபிடிப்பது பொருத்தமாக இருக்காது. எனவே தமிழகத்தில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களும் கொண்டாடும்படி இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும்” என தெரிவித்திருந்தார்.
மய்ய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க ‘இது ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டம் என்றும் இதனால் நாடு உடைந்து போகும் அபாயம் உள்ளது’ என்றும் கூறியது.
பா.ஜ.கவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க வின் பொதுச் செயலாளர் திரு வை.கோ ‘ஒரு குழுவினரின் மொழியை அனைவர் பேரிலும் திணிப்பது விஷமத்தனமானது மற்றும் ஆபத்தானது’ என்று சாடினார்.
பா.ஜ.கவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியான பா.ம.க வின் தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களோ ‘இது வடமொழி கலந்த கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி.’ என்று சொல்லி எதிர்ப்பை தெரிவித்தார். புதுவை மாநிலத்திலும் இந்த சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து CBSE பாட திட்டம் உள்ள பள்ளிகளுக்கிடையேயும் மாணவர்களுக்கிடையேயும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டன. கடைசியில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) தென் மண்டல அலுவலர்கள், ‘வடமொழி பாடம் நடத்தாத பள்ளிகள் இந்த சுற்றறிக்கைப்படி செயல்படவேண்டியதில்லை என அறிவித்து அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனால் மக்களின் மேல் மொழியை திணிக்கும் முயற்சியை மய்ய அரசு கைவிடவில்லை. 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் நாள் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் நடுவண் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அந்தக் துறையின் சார்பு செயலாளர் அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் ‘அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும். மேலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கை தொழிற்கல்வியை போதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கூட அனுப்பட்டது.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் மற்றும் தமிழகத்தில் உள்ள கட்சிகளும் கடுமையான எதிர்த்ததன் காரணமாக அந்த அறிக்கையை நடுவண் அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.
அது குறித்து பல்லைக்கழக மானிய குழுவின் தலைவர் திரு வேத பிரகாஷ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “ஆங்கிலத்துடன் இந்தியும் முதன்மை பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற முந்தைய சுற்றறிக்கை, கவனக்குறைவாக வெளியிடப்பட்டு விட்டது. எனவே, ‘இந்தி, கட்டாயம் அல்ல‘ என்ற புதிய சுற்றறிக்கையை வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 19 2014) வெளியிட பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்துள்ளது.
எப்படி கற்பிப்பது, யார் கற்பிப்பது, என்ன கற்பிப்பது என்பதை முடிவு செய்வது அந்தந்த பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்’ என்று கூறி தாங்களே ஏற்படுத்திய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அந்த சுற்றறிக்கை இவ்வாறு இருந்தது.
“The last circular was issued inadvertently mentioning that Hindi be taught along with English as a primary language. UGC has decided to issue a circular tomorrow saying that Hindi is not mandatory. It is the prerogative of the university concerned to decide how to teach, who to teach and what to teach."
நாட்டில் எவ்வளவோ தீர்க்கமுடியாத பிரச்சினைகள் இருக்க அவைகளை விட்டுவிட்டு, ஆட்சியில் அமரும் மய்ய அரசுகள், இந்த(தி) மொழியை திணிக்கும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுப்பது எதற்காக என்று தெரியவில்லை?
தொடரும்
முடிவில் சொன்னீர்களே இதுதான் அனைவருக்கும் புரியாத புதிராக இருக்கின்றது நண்பரே தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்கு//நாட்டில் எவ்வளவோ தீர்க்கமுடியாத பிரச்சினைகள் இருக்க அவைகளை விட்டுவிட்டு, ஆட்சியில் அமரும் மய்ய அரசுகள், இந்த(தி) மொழியை திணிக்கும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுப்பது எதற்காக என்று தெரியவில்லை?//
பதிலளிநீக்குபிரச்சனைகளை திசை திருப்புவதற்காக இருக்குமோ என்னவோ?
ஒரு சிறிய கோட்டின் அருகில் ஒரு பெரிய கோட்டைப் போட்டு விட்டால், பழைய சிறிய கோட்டை மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற ‘இரு கோடுகள்’ தத்துவமாக இருக்குமோ என்னவோ.
மேலும் தொடரட்டும் சுவாரஸ்யமான இந்தத்தொடர்.
வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டிற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே! மக்களின் கவனத்தை திருப்ப தேவையில்லாமல் மொழிப் பிரச்சினையை கிளப்பிவிட்டிருக்கலாம்.
நீக்குஅண்மையில் ஒரு பதிவில் மத்திய அரசின் செயலாற்றல்களை தமிழ்த் தொலைக் காட்சிகளில் இந்தியில் ஒளிபரப்புவதை இந்தித் திணிப்பை எதிர்க்கும் தொலைக் காட்சிகள் ஏன் அனுமதிக்கின்றன என்று எழுதி இருந்தேன் காக்கை உட்காரப் பனம் ப்ழம் விழுந்ததைப் போல் சில தினங்களில் இந்த இந்தி ஒளிபரப்பு நிறுத்தப் பட்டு தமிழ் மொழியாக்கமே ஒளிபரப்பாகிறது என்பதையும் கூறிக் கொள்கிறேன்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தாங்கள் எழுதிய பிறகு தற்செயலாக நடந்திருந்தாலும் தமிழில் அரசின் விளம்பரங்கள் வருகின்றன என்பது மகிழ்ச்சியான தகவலே!
நீக்குஹிந்தியை வளர்க்க பாடுபடுகிறார்கள் அவர்கள்.....
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குதொடர்ந்து படிக்கிறேன்.நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்கு1965 இற்குப் பின்பும் இருக்கும், இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிய புள்ளி விவரங்கள், கட்டுரைக்கான தகவல் திரட்டும் உங்கள் அரும்பணியைச் சொல்லுகின்றன.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
நீக்குசில அனுபவங்கள் மறக்க முடியாதவை.
பதிலளிநீக்குஅந்தாளைய பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் மதுலிமயே நாடாளுமன்றத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து வந்தவர். அவர் இ.தி.எ. காலத்தில் தமிழகம் வந்திருந்தார். பவானியை அடுத்த குமாரபாளையத்தில் அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம்.
அந்தக் கூட்டத்தில் அவர் இந்தியில் பேச ஆரம்பிக்க லேசான சலசலப்பு. எதற்காக சலசலப்பு என்று தெரிந்து கொண்ட அவர் லேசாக சிரித்துக் கொண்டே தன் பேச்சை இந்தியிலேயே தொடர்ந்தார். அவர் இந்தியில் பேசுவதற்கான காரணம் அவரது பேச்சை மொழிபெயர்த்தவர் சொன்ன போது தான் தெரிந்தது..
மொழிபெயர்த்தவர் சொன்னது இது தான:
"என் தாய்மொழி மராத்தி. இந்தக் கூட்டத்தில் என் மராத்தி பேச்சை மொழிபெயர்ப்பவர் கிடைத்தால் மராத்தியிலேயே பேசுவேன். அது எனக்கு மிகவும் செளகரியமானது. பெருமை அளிப்பதும் கூட.
அடுத்து எனக்குத் தெரிந்த மொழி ஆங்கிலம். 150 ஆண்டுகள் நம்மை அடிமைபடுத்தி நம் தேசத்தை ஆண்ட
அந்நியரின் மொழி அது. என் தாய்நாட்டு மக்கள் கூடும்
பொதுக்கூட்டங்களில் அந்த மொழியில் பேச மாட்டேன் என்று உறுதி பூண்டிருக்கிறேன். வேறு வழியில்லாத பொழுது தனிப்பட்ட பேச்சு வார்த்தைகளில் அந்த மொழியை நான் உபயோகிக்கிறேன். ஆனால் பொதுக் கூட்டங்களில் அந்த மொழியை பேசுவதில்லை என்று உறுதி பூண்டிருப்பதால் மன்னிக்கவும் அந்த மொழியை இங்கு உபயோகப்படுத்த முடியாமைக்கு வறுந்துகிறேன். நம் நாட்டு ஒரு மொழியின் திணிப்பையே நாம் எத்ரிக்கும் பொழுது அந்நிய மொழியில் பேசுவதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்று நானும் புரிந்து கொள்கிறேன்.
அடுத்தபடியாக எனக்குத் தெரிந்த மொழி ஹிந்தி. ஹிந்தித் திணிப்பைத் தான் நாம் எதிர்க்கிறோம் என்பதினால் ஹிந்தியில் தொடர்ந்து பேச நீங்கள் என்னை அனுபதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்" என்று அவர் இஜ்தியில் பேசியது மொழி பெயர்க்கப் பட்ட பொழுது மக்கள் கைதட்டி அதை வரவேற்றனர்.
அனேகமாக இ.தி.எ.காலத்தில் இந்தி மொழியில் பேசின கூட்டங்கள் மதுலிமயே கூட்டங்களாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மதுலிமயே மாதிரி ஆங்கிலம் தெரிந்திருந்தும் ஆங்கில மொழியில் பொதுக்கூட்டங்களில் பேசாத வட இந்தியத் தலைவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் எனக்குத் தெரியவந்தது.
வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ஜீவி அவர்களே! திரு மது லிமயே அவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது, குமாரபாளயம் பொதுக்கூட்டத்தில் இந்தியில் சொற்பொழிவு ஆற்றினார் என்பது (எனக்கு) புதிய தகவல்.அவர் அதற்கு சொன்ன காரணம் ஒத்துக்கொள்ளக்கூடியதே. அது பாராட்டப்பட வேண்டியதுதான்.
நீக்குஊடகங்கள் வழியாக தெரிய வருகிற ஹிந்தித் திணிப்பைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். ஊடகங்களுக்கு அறிவிக்காமலும் மத்திய அரசாங்கம் ஹிந்தித்திணிப்பை நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கான செலவுகள் அனைத்து மக்களின் வரிப்பணத்திலிருந்துதானே செல்கிறது. ரயில்வேயில் ஹிந்தி பரிட்சையில் தேர்வு பெற்றால் அதற்காக சம்பள உயர்வு உண்டு. இதைப்போல மறைமுகமாக எங்கெங்கு திணிக்கப்படுகிறதோ யாருக்குத் தெரியும்? நல்ல வேளையாக கணினி மென்பொருள் வேலைவாய்ப்புகள் பெருகியதால் ஹிந்தி படிக்காததன் தாக்கம் அவ்வளவாகத் தெரியவில்லை. அல்லது ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் நாட்டில் வேலையில்லாத்திண்டாட்டம் என்று ஊதிப் பெருக்கியிருப்பார்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது மறு(றை)க்கமுடியாத உண்மை. மய்ய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவல் மொழித் துறை இந்தியை ‘பரப்ப’ பொதுமக்கள் பணத்தை விரயம் செய்துகொண்டுதான் இருக்கிறது.
நீக்குஒவ்வொரு மய்ய அரசின் துறையும், பொதுத்துறை வங்கிகளும், பொதுத்துறை நிறுவனங்களும் இந்திக்கென்று தனியே ஒரு துறையையே வைத்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தி தினம் கொண்டாடியும் அதற்காக போட்டிகள் நடத்தி பரிசு கொடுத்தும் இந்தியை ‘வளர்த்துக்’கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தி படிக்கமுடியாததால் வேலை வாய்ப்பு போய்விட்டது என்ற குற்றச்சாட்டு கணினி மென் துறையின் வளர்ச்சியால் அடிபட்டுப்போய்விட்டது உண்மைதான். இருப்பினும் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)
பதிலளிநீக்குபுதிய தமிழன் திரட்டி (http://www.tamiln.in)
பதிலளிநீக்கு