திங்கள், 27 ஜூன், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.30


இந்தி திணிப்பை ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் தான் குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பது போலவும், மற்ற மாநிலத்தினர் குறிப்பாக தென்னகத்தில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை என்பது போலவும் ஒரு மாயையை, தவறான கருத்தை மய்யத்தில் ஆள்வோரும் இங்குள்ள சிலரும் பரப்பி வந்திருக்கின்றனர். இன்னும் பரப்பி வருகின்றனர்.



ஆனால் உண்மையில் மற்ற மாநிலத்தவரும், இந்தி திணிப்பை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நாடு முழுதும் விடுதலை நாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது, அதே நாளில் பெங்களூருவில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஆர்ப்பாட்டமில்லாமல் ‪#‎StopHindiImposition என்ற முகவரி (Hashtag) உள்ள Tweeter மூலமாக தொடங்கிவிட்டது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

இந்த Tweeter ஆரம்பித்த நான்கு மணி நேரத்திற்குள்ளாக 30,000 Tweet கள் வந்ததிலிருந்து, இது எந்த அளவிற்கு இக்கால இளைஞர்களை ஈர்த்து அவர்களின் இந்தி திணிப்பை எதிர்க்கும் உணர்வை தெரியப்படுத்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

(அதே நேரத்தில் PLE Karnataka (Promote Linguistic Equality) என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட முகநூலும் (Facebook), Tweeter களையும் கவர்ந்து 69 பின்னூட்டங்களை பெற்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.)

#‎StopHindiImposition‬ என்ற இந்த Tweeter பெங்களூருவில் மய்யம் கொண்டிருந்தாலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பலருடைய கவனத்தை இழுத்து பல மறுமொழிகளைப் பெற்றிருக்கிறது.

இந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு முன்பு தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பிலிருந்து சற்றே மாறுபட்டது என்பது கவனிக்கத்தக்கது. இது முழுக்க முழுக்க பெங்களூருவில் உள்ள கன்னடர்களால் தொடங்கப்பட்டு அனைத்து தென்னிந்தியர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது என்பது புதிய தகவல்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழ் உணர்வாளர்களாலும் அரசியவாதிகளாலும் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த புதிய போராட்டமோ தெருவில் நின்று போராடாமல், சமூக வலைத்தளங்களில் இக்கால இளைஞர்களின் உணர்வுபூர்மான எதிர்ப்பை தீவிரமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

திடீரென Tweeter வழியாக ஏன் இந்த எதிர்ப்பு, அதுவும் அமைதியானவர்கள் என சொல்லப்படுகின்ற கன்னட மக்களால் தொடங்கப்பட்டுள்ளது என்று கேட்போருக்கு சொல்ல முக்கிய காரணம் ஒன்று உண்டு.

அது இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை நாளன்று, நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முழுக்க முழுக்க இந்தியில், தென்னக மக்கள் இந்தியை தங்கள் மொழியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெரிந்தும் வழக்கம்போல் உரையாற்றியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் காரணம்.

பல நாட்களாக இருந்த அவர்களிடம் நீறுபூத்த நெருப்புபோல் கனன்றுகொண்டு இருந்த இந்த தணியாத சினம், பிரதமரின் உரையை இந்தியில் கேட்டதும் கண்டனமாக உருவெடுத்ததில் வியப்பு ஏதும் இல்லை. இந்த போராட்டம் எளிதில் உணர்ச்சிவயப்படும் சென்னையில் ஆரம்பிக்கவில்லை,பெங்களூருவில் தான் ஆரம்பமாயிருக்கிறது என்று அறியும்போது பலருக்கு வியப்பையே தந்தது.

மின்பொருள் தொழில் (Software Industry) விரிவாக்கம் அடைந்து அது பெங்களூருவில் காலூன்றியதன் காரணமாக அங்குள்ள மக்கள்தொகையியலில் (Demography) பெரும் அளவில் மாற்றத்தை உண்டாக்கியது.

பெங்களூருவில் மின்பொருள் பணிக்கு வந்து சேர்ந்த வட இந்திய மக்களின் வரவு காரணமாக, 1991 ஆம் ஆண்டு வெறும் 2 விழுக்காடு இருந்த இந்தி பேசுவோர் இருந்த நிலை மாறி தற்சமயம் அங்கு தெருவில் போவோர் வருவோர் எல்லாம் இந்தி பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது

அதே சமயம் பெங்களூருவுக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து பணி நிமித்தம் வந்த கன்னடர்களின் எண்ணிக்கையும் கூடியது. கர்நாடகாவின் பிற மாவட்டங்களிலிருந்து வந்த கன்னடர்கள், பெங்களூருவில் தனிச்சார்பற்ற (Cosmopolitan) சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த கன்னடர்களை விட, தங்களின் மொழியியல் தனித்துவத்தில் (Linguistic identity) உறுதியாக இருக்கிறார்கள் என்பது பலர் அறியாத தகவல். .

கர்நாடகாவின் இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் ஊரில் இந்தி பொதுமொழி (lingua franca) போல் ஆனதையும், புதியாய் குடிபயர்ந்தோரின் ஆணவப்போக்கையும், தங்களது கலாச்சாரத்தின் மேல் வட இந்தியர்களின் கலாச்சாரம் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும். குறிப்பாக விளம்பரப் பலகையில் கூட இந்தி இடம் பிடிப்பதையும் பொறுத்துக்கொள்ளாமல் எதிர்க்கக் தொடங்கிவிட்டனர்.

பொதுத்துறை நிறுவனங்களிலும் இரயில் நிலையங்களிலும் மய்ய அரசின் இந்தி சார்பு நிலைப்பாடு அவர்களது எதிர்ப்புக்கு, எரிகின்ற தீயில் எண்ணைய் ஊற்றுவது போல் ஆகிவிட்டது.

கன்னட இளைஞர்கள் துவக்கிய இந்த எதிர்ப்பிற்கு தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆதரவு கிடைக்க ஆரம்பித்துவிட்டது என்பது ‘10 கோடி தெலுங்கு மக்கள் இந்தி இல்லாமல் வாழமுடியும்’ என்று ஆந்திராவிலிருந்து ஒரு பெண்மணி குறிப்பிட்டிருப்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இந்த எதிர்ப்பின் காரணமாக பெங்களூருவில் உள்ள மெட்ரோ இரயிலில் கூட இந்தியில் அறிவிப்பு வெளியிடுவதை குறைத்துக்கொண்டு ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.


Tweeter இல் வெளிவந்த கன்னட இளைஞர்களின் எதிர்ப்புகளில் மாதிரிக்கு சில இதோ.







இதைப் பார்க்கும்போது இன்னொரு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிவிட்டது என்றே தெரிகிறது. இந்த நேரத்தில் எனக்கு நாமக்கல் கவிஞர் திரு வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய புகழ்பெற்ற பாடலான “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” ஏனோ நினைவுக்கு வருகிறது.



தொடரும்



16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. மிகவும் ஆச்சர்யமான தகவல்களாக அளித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், நன்றி திரு ஸ்ரீமலையப்பன் B ஸ்ரீராம் அவர்களே! ‘மறுபடியுமா?’ என்று கேட்டிருக்கிறீர்கள். இந்தி திணிப்பு போராட்டம் முடியவில்லை இடையில் நின்றிருந்தது. நாம் நிறுத்தியிருந்ததை கன்னடர்கள் தொடங்கியிருக்கிறார்கள். அவ்வளவே. இந்த போராட்டம் நிற்பது ஆட்சியாளர்கள் கையில் உள்ளது

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், தொட்ர்வதற்கு நன்றி திரு வெங்கட்.நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  5. வணக்கம் நண்பரே கன்னடர்கள் இந்தியை எதிர்கின்றனர் என்பது புதிய தகவலாக இருக்கின்றது பதிவு விறுவிறுப்பு கூடிவருகின்றது வாழ்த்துகள் தொடர்கிறேன்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  6. நேராக மோதுவதில் பலனில்லை என்றே ட்விட்டர் மூலம் எதிர்க்கிறார்களோ. நம் எண்ணம் மட்டும் குறிப்பிட்டவருக்குப் போய்ச் சேர்ந்தால் சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நேரில் மோதுவதை விட சமூக வலைத்தளங்களின் மூலம் பிரச்சினையை எடுத்துச் சென்றால் அது எல்லாருக்கும் மிக வேகமாக சென்றடையும். மேலும் ஆதரவும் பெருகும் என்பதால் அவர்கள் Twitter மூலம் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

      நீக்கு
  7. உணர்வுபூர்வமான கட்டுரை. மற்ற மொழிக்காரர்கள் இந்தித் திணிப்பை எதிர்க்கிறார்கள் என்ற செய்தியை நமது தமிழ் ஊடகங்களே வெளியிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நமது தமிழ் ஊடகவியலார்களுக்கு, திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றிய பரபரப்பான செய்திகள் தரவே நேரம் போதவில்லை. அவர்கள் எங்கே இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்கள்?

      நீக்கு
  8. பல தடவைகள் வாசித்து விட்டேன். தங்கள் தகவலுக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை பலமுறை வாசித்தமைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு