வெள்ளி, 8 ஜூலை, 2016

கண்ணீர் அஞ்சலி
கல்வியாளரும், எழுத்தாளருமான என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் 04-07-2016 அன்று அதிகாலை 4 மணிக்கு விருத்தாசலத்தில் இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர், பேச்சாளர் என்று பல முகங்களைக் கொண்ட என் அண்ணன் பெண்ணாடம் பள்ளியில் படிக்கும்போதே எங்கள் ஊர் பள்ளியின் ஆசிரியர் ஐயா அவர்களைப் பற்றி ‘எங்கள் வாத்தியார்’ என்று 'ஆனந்த போதினி' இதழில் எழுதியிருக்கிறார்.

பின்னால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ’குழந்தை தெய்வம்’ என்ற சிறுகதையை ‘ஆனந்த விகடனில்’ மாணவர் திட்டத்தின் கீழ் எழுதி பரிசும் பெற்றிருக்கிறார். அவருடைய கதைகள் குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வந்திருக்கின்றன. முதலில் ‘சபா’ என்ற புனைப்பெயரிலும் பின்பு வே.சபாநாயகம் என்ற அவரது பெயரிலும் 28 க்கும் மேற்பட்ட அநேக கதைகளும், நாவல்களும், திறனாய்வு நூல்களும் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய ‘ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’ என்ற நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் பரிசையும், ’விதியை வென்றவள்’ என்ற தலைப்பில் ஹெலன் கெல்லர் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு ஏ.வி.எம் அறக்கட்டளையின் தங்கப் பதக்கத்தையும், ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற சிறுகதை தொகுப்பு 1998 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதற் பரிசையும், தேசதேசக் கதைகள் திருப்பூர் தமிழ் சங்கத்தின் முதற் பரிசையும், எழுச்சியூட்டும் கதைகள் பாரத ஸ்டேட் வங்கியின் பரிசையும் பெற்றிருக்கின்றன.

அவரது கதையான ‘மனிதனுக்கு மனிதன்’ 1978 இல் தமிழக அரசின் எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூலில் புதிய பாடத் திட்டத்தின்படி, சிறுகதை இலக்கியமும் இடம் பெற வேண்டும் என்ற விதிப்படி முதன் முறையாக எனது இந்தக் கதையும் இடம் பெற்றது என்பது அவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.

என் அண்ணன் எழுத்தாளராக இருந்ததால் அநேகமாக எல்லா இதழ்களையும் வாங்கிப் படிப்பார். .எனக்கு தெரிந்து ‘கணையாழி’ இதழ் வெளியான நாள் முதல் அது நிறுத்தப்படும் வரை வெளிவந்த அனைத்து இதழ்களையும் அவர் பாதுகாத்து வைத்திருந்தார்.

வலையுலகத்திலும் நினைவுத்தடங்கள் என்ற பெயரில் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து இந்த ஆண்டு மே மாதம் வரையில் எழுதிக்கொண்டு இருந்தார்,

என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் ஒரு சிறந்த ஓவியரும் கூட எங்களது அம்மா மற்றும் அப்பா புகைப் படங்களைப்பார்த்து Indian ink ல் வரைந்த படங்களும் இன்றைக்கும் அவரது ஓவியத்திறமையை சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. அவரது படத்தையே கூட சில ஆண்டுகளுக்கு முன் வரைந்து இருக்கிறார்.

எனது அண்ணன் ஒரு புகைப்பட கலைஞரும் கூட. எங்கள் வீட்டு திருமணங்களில் புகைப்படம் அவர்தான் எடுப்பார். வீட்டிலேயே புகைப்பட சுருள்களை கழுவி படமாக்க ‘Dark Room’ வைத்திருந்தார். வீட்டில் ‘Enlarger’ ம் வைத்திருந்தார். அவர் எடுத்த படங்களை கழுவி ‘பிரிண்ட்’ போடும்போது கூடவே இருந்து பார்த்திருக்கிறேன். எனது திருமண புகைப்படங்கள் கூட அவர்தான் எடுத்தார்.

அதே நேரத்தில் கணித ஆசிரியராக மிகவும் விருப்பத்துடனும் உள்ளார்ந்த சேவை மனப்பான்மையுடன் அந்த பணியை செய்தார் என்பதும் உண்மை. ஒரு குறிப்பிட்ட பாடம் நடத்தும் ஆசிரியர் வராவிடில் அவர் மாற்று ஆசிரியராக வரும்போது, அவரே எழுத்தாளராக இருந்ததால், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், வை.கோவிந்தன், தி.ஜானகிராமன் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைச் சுவைபட சொல்வார்.

எங்களுக்கு அந்த வயதில் அநேக பிரபல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சேரும்.அவரது கதை சொல்லும் திறனால் ஈர்க்கப்பட்டு மாணவர்களில் சிலர் கவிஞர்கள் ஆகவும் எழுத்தாளர்களாக ஆகவும் ஆனதும் உண்மை.

சிறுகதைகள் மட்டுமல்லாமல் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ போன்ற நாவல்களையும் எல்லோரும் இரசிக்கும் வண்ணம் சொல்லுவார். நாவல் என்பதால், ஒரே வகுப்பில் முழு நாவலையும் சொல்லமுடியாது என்பதால், இதழ்களில் தொடரும் எனப் போடப் படுவதைப்போல நாவல் சொல்வதையும் தொடரும் எனச்சொல்லி, எல்லோரையும் ஆவலுடன் காக்க வைத்து, அடுத்ததடவை மாற்று ஆசிரியாக வரும்போது விட்ட இடத்திலிருந்து தொடங்குவார். அதற்காகவே மாணவர்கள் திரும்பவும் எப்போது அவர் மாற்று ஆசிரியராக வருவார் எனக் காத்திருப்பார்கள்.

சில சமயம் ஒரு மாறுதலுக்காக கதை சொல்லாமல், ‘Quiz’ எனப்படும் புதிர் போட்டியையும் நடத்தியிருக்கிறார். எனவே அவர் மாற்று ஆசிரியராக வருகிறார் என்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். மாற்று ஆசிரியராக வரும்போதுதான், இப்படி என்றால் அவரது பாடமான கணிதத்தை நடத்தும்போதும், அவரது ‘பாணி’யே தனிதான்.

கணித பாடத்தில் உள்ள பயத்தைப் போக்கி எல்லோரும் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்கி அவர் பாடம் நடத்தியதால் அவரது வகுப்பில் படித்தவர்கள் யாரும் கணிதத்தேர்வில் தோல்வி அடையவில்லை.

தலைமை ஆசிரியாக பணியாற்றிய ஊர்களில் அந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்தி பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து அங்குள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அன்பை பெற்றார்.

பணி ஓய்வுக்குப்பிறகு முழுக்க முழுக்க இலக்கியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக கடைசிவரை வாழ்ந்தார்.

பெங்களூருவில் வசிக்கும் வங்கியாளர், எழுத்தாளர் கல்பனா தாசன் என்கிற திரு பார்த்தசாரதி, விருத்தாசலத்தில் மருத்துவராகப் பணியாற்றும் Dr.கிருஷ்ணன், விழுப்புரத்தில் இருக்கும் பேராசிரியர் கவிஞர் த.பழமலய், சென்னையில் இருக்கும் பொறியாளர் திரு ராஜசேகரன் ராஸ் போன்று அவரிடம் படித்த எண்ணற்ற மாணவர்கள் அனைவரும் இன்னும் அவரை தங்களது ஆசிரியராகவே நினைத்து மகிழ்கிறார்கள் என்பதே அவரது ஆசிரியப் பணிக்கு கிடைத்த மரியாதை என நினைக்கிறேன் நான்.

அவரைப்பற்றி இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். அவர் இவ்வுலகிலிருந்து மறைந்திருக்கலாம். ஆனால் அவர் ஆற்றிய சேவையின் தாக்கம் என்றும் மறையாது.
32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் இரங்கலுக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் இரங்கலுக்கு நன்றி திரு இரத்தினவேல் நடராஜன் அவர்களே!

   நீக்கு
 3. மரியாதைக்குரிய V.N.S. அய்யா அவர்களுக்கு, தங்களது அண்ணார் திரு.வே.சபாநாயகம் அவர்கள் மறைவு செய்தியறிந்து மிக்க வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்கள் அண்ணார் பற்றி நீங்கள் எழுதிய குறிப்புகளை தங்கள் வலைத்தளத்தில் படித்து இருக்கிறேன். நல்லாசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் அவர். அவரது வலைத்தளத்தில் ’நினைவுத் தடங்கள்’ என்ற தொடரை பாதிவரை படித்து இருக்கிறேன். இந்த தொடரில், ஒரு இடத்தில்

  // 1963ல் என்னிடம் கணிதம் பயின்ற ஒரு மாணவன்- தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக இருந்தும் நான் பாரபட்சமற்று உற்சாகப்படுத்தி கணிதத்தில் வெற்றி பெறச் செய்ததால்- இன்று நெய்வேலியில் எக்சிக்யூட்டிவ் எஞ்சினீயராகி ஓய்வு பெறும் நிலையில் தன் முதல் மகனுக்கு என் தலைமையில் திருமணம் நடத்த விரும்பி என்னையும் என் மனைவியையும் கார் அனுப்பி அழைத்துச் சென்றார். என் கையால் மங்கலநாணை எடுத்துத்தரச் செய்து பூட்டச் செய்ததுடன் தம்பதி சமேதராய் தானும் தன் மகனும் எங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது எனக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வேறு எந்தத் தொழிலில் இந்த மகத்தான மரியாதை கிட்டும்? இன்று நான் வசிக்கிற இந்த நகரில் இருக்கும் வி.ஐ.பி-களில் 90 விழுக்காடு என் மாணவர்கள் என்று சொல்வதில் எனக்கு மாளாத பெருமை! //

  என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 4. தமிழ் சுவைத்தவர் சாவதில்லை.
  உங்கள் அண்ணன் தமிழ் சமைத்தவர்
  நெஞ்சில் என்றும் நிலைத்திருப்பார்.
  வாழ்க .திரு வே.சபாநாயகம் புகழ்.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் அண்ணார் அவர்களின் தனித் திறமைகள் அத்தனையையும் ஒருங்கிணைத்துச் சுருக்கமாக இங்கு ஒரு தனிப்பதிவாகக் கொடுத்துள்ளது மிகவும் அழகாக உள்ளது.

  குறிப்பாக அவர் ஓவியர் என்பதையும், நல்ல சுவையான ’கதை சொல்லி’ என்பதையும், மாணவர்களில் சிலருக்குக் ’கணிதம்’ பாடத்தில் ஏற்படும் பயத்தை நீக்கியவர் என்பதையும் கண்டு, எனக்குள் மிகவும் மகிழ்ந்துகொண்டேன்.

  ஏனெனில் .... ஓவியம் வரைவது, பிறருக்கு சுவையாகக் கதை சொல்வது, கணித பாடத்தில் மட்டுமே ஓர் தனி இன்பம் காண்பது ஆகியவை எனக்கும் மிகவும் பிடித்தமான விஷயங்கள், என்பதால்.

  இத்தகைய பல்வேறு பெருமைகள் வாய்ந்த ஓர் அண்ணாரை தாங்கள் சமீபத்தில் இழந்துள்ளது ஈடுசெய்ய முடியாதோர் இழப்புதான். வருத்தமாகத்தான் உள்ளது. மனதைத் தேற்றிக் கொள்ளவும்.

  கடைசி வரிகளான //அவர் இவ்வுலகிலிருந்து மறைந்திருக்கலாம். ஆனால் அவர் ஆற்றிய சேவையின் தாக்கம் என்றும் மறையாது// என்பது மனதுக்கு ஆறுதல் தருபவைகளாக உள்ளன. அதுதான் உண்மையும்கூட.

  தங்கள் அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 6. ஒரு மாமனிதரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு அறியத்தந்தீர்கள் தங்களது சகோதரரை இழந்து வாடும் தங்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  தங்களது அண்ணனின் வலைத்தளம் இன்றுதான் அறிந்தேன் சென்று வந்தேன்

  தாங்கள் கடந்த ஒரு வாரமாக வலையுலகம் வராததால் வெளியூர் பயணம் மேற்கொண்டு இருப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால் சோக சம்பவம் நிகழ்ந்து இருப்பது அறிந்து வேதனைப்படுகின்றேன் கவலையில் இருந்து மீண்டு வர தங்களது குடும்பத்தாருக்கு இறைவன் சக்தியை கொடுக்க பிரார்த்தனைகள்- கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 7. தங்களது சகோதரர் 2003 லேயே வலைத்தளம் ஆரம்பித்து இருக்கின்றாரே.. நான் அறிந்தவரை இவர்தான் பழையவர் என்று நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது அண்ணன் வலைப்பதிவை 2007 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். அவரை விட மூத்த பதிவர்கள் உண்டு தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 8. தங்களது தமையனாரின் மறைவுக்கு அஞ்சலிகள்!
  இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது தங்களின் அண்ணன் என்று நினைக்கிறேன்.
  https://vimarisanam.wordpress.com/2016/06/13/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இணைப்பில் குறிப்பிட்டிருப்பது என் அண்ணன் பற்றிய தகவல் தான்.

   நீக்கு
 9. ஆழ்ந்த இரங்கல்கள்.தங்கள் சகோதரரின் பல்வேறு திறமைகளை அறியத் தந்தமைக்கு நன்றி. உண்மையில் எப்போதுன் நினைவு கூறத் தக்கவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 10. ஆழ்ந்த இரங்கல்கள். எதிர்பாராத செய்தி. மனசுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னன்னவோ நினைவலைகள் நெஞ்சில் மோதுகின்றன. அவரது இணைய தள எழுத்துக்கள் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதாய் இருந்தது. அவரோடு பழகியவர்களை நமக்கும் பழக்கப்படுத்தியிருக்கிறது. தமிழுக்கு தன் எழுத்தின் மூலமாக அரிய செல்வங்களை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அவரது 'நினைவுத் தடங்கள்' வலையே அவருக்கான மிகச் சரியான அடையாளம். அதில் அவர் சிந்தனைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களது படைப்பான 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' எனற படைப்பைப்பற்றி என் அண்ணனிடம் சொன்னபோது அது பற்றி ஆவலுடன் விசாரித்தார். நீங்கள். திரு வை.கோ அவர்களின் ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 12 என்ற பகுதியில் நான் எழுதிய பின்னூட்டத்திற்கு பதில் தரும்போது தங்கள் நினைவுகளில் சந்தேகம் ஏற்படும் பொழுது என் அண்ணனை 'refer' செய்து கொள்வதும் வழக்கம் என்றும் நான் அவரின் இளவல் என அறிந்து மகிழ்ச்சி கொண்டதாகவும் சொன்னபோது சந்தோஷப்பட்டார். தங்களின் நூலை நேரம் இருப்பின் வாசிப்பேன் என்றும் சொன்னார். ஆனால் அதை வாசிக்கத்தான் அவர் இன்று இல்லை என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

   நீக்கு
  2. தாங்கள் எழுதியிருப்பதைப் படிக்கப் படிக்க மனம் கனக்கிறது. பழம் தமிழ் எழுத்தாளர்களை நேசித்த ஒரு தலைமுறையின் முடிவு. அவர் அளவுக்கு சென்ற தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றி நேரடியான அனுப்வமும் செய்திகளும் தெரிந்தவர்கள் இப்பொழுது யாருமில்லை. ஓரிருவர் இருந்தாலும் இன்னொரு தமிழ் எழுத்தாளர் பற்றி நயந்து நாலு வார்த்தைகள் சொல்வதற்கு யாருக்கும் மனமும் இல்லை. தோய்ந்து வாசித்த வாசகர்களைத் தவிர பிற எழுத்தாளர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதற்கும் இல்லை. தங்களை சுற்றியே வட்டாடுவதே வாழ்க்கையாய் போய் விட்ட காலகட்டத்தில் எதையும் சொல்வதற்குமில்லை.

   தங்களுடைய தமையனாரின் இணைய தளம் இளம் வாசகர்களுக்கு ஒரு ஆவணம். வரும் கால தலைமுறைக்கு பொக்கிஷம். ஜெயகாந்தனின் 'ஞ்சானரதம்' இதழ்கள் பற்றியெல்லாம் தெரியப்படுத்துவதாற்கு இன்று யாரிருக்கிறார்கள்?.

   நீக்கு
  3. என் அண்ணன் பற்றிய தங்களின் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

   நீக்கு
 11. ஆழ்ந்த இரங்கல்கள்...

  அவரது ஆன்மா அமைதி பெற எனது பிரார்த்தனைகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 12. தங்கள் சகோதரர் இயற்கையெய்தியதை அறிந்தேன். எழுத்துப்பணியில் அவரது பங்களிப்பு அளப்பரியது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 13. மிகச் சிறந்த எழுத்தாளரும் ஆசிரியருமான தங்கள் அண்ணன் குறித்து அறியத் தந்தீர்கள்... அவரைக் குறித்து அவரின் மறைவுக்கு பின்னே அறிந்தது வேதனையாக இருக்கிறது...

  அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 14. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு பரிவை.சே.குமார் அவர்களே!

  பதிலளிநீக்கு
 15. ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா ஒரு இளவல் தன் தமையனார் பற்றிப் புகழ்ந்து பேசுவது இக்காலத்தில் அரிது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! அவர் எனக்கு அண்ணனாக மட்டுமல்ல பள்ளியில் ஆசானாகவும் இருந்தார்.

   நீக்கு
 16. Truly a multifaceted personality . His versatility amazes me. May his soul rest in peace. May the almighty give enough strength to his near and dear to bear this loss. My heartfelt condolences to you personally.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் செய்திக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் கூறியது போல் என் அண்ணன் ஒரு பன்முகத் திறமையாளர் தான். அவரைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் இன்னும் உண்டு. ஆனால் அவைகளை இங்கு தரவேண்டாம் என எண்ணியதால் தரவில்லை.

   நீக்கு