புதன், 27 ஜூலை, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.31



அப்போதைய சென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, அவர் தான் முதன் முதலில் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார் என்றும், அரசு இந்தியை கட்டாய பாடமாக்க இருப்பதை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 ஆம் நாள் திரு இராஜாஜி அவர்களின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 73 பெண்கள் உட்பட 1271 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அங்கேதான் முதன் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டதிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்றும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.



1938 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாள் இந்தி பள்ளிகளில் கட்டாய பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்து அதே ஆண்டு மே திங்கள் 28 ஆம் நாள் மாநிலம் முழுதும் உள்ள தமிழ் பற்றாளர்கள் ஒன்று கூடி நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்பு இயக்கம் ஒன்றை தொடங்கினார்கள் என்றும் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்தி திணிப்பை ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் தான் குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பது போலவும், மற்ற மாநிலத்தினர் குறிப்பாக தென்னகத்தில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை என்பது போலவும் ஒரு தவறான கருத்தை சிலர் இன்னும் பரப்பி வருவதால், அது தவறு என்பதையும். இந்தி திணிப்பை தென்னக மக்களும் எதிர்க்கிறார்கள் என்பதையும், கர்நாடகாவில் தற்போது இளைஞர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பின் விவரத்தையும் இதற்கு முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன்.

நாம் இந்தி திணிப்பை இங்கே எதிர்ப்பதற்கு முன்பே அதாவது 1937 ஆம் ஆண்டுக்கு முன்பே இன்னொரு மாநிலம் இந்தி திணிப்பை எதிர்த்திருக்கிறது என்பதை அறியும்போது ஆச்சரியமாய் இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது தற்போதைய ஓடிஷா (ஒரிசா) மாநிலத்தின் சம்பல்பூர் (Sambalpur) மாவட்டம் Central Province இல் இருந்தபோது 1895 ஆம் ஆண்டு அந்த மாநிலத்தின் ஆணைக்குழு இந்தி பேசும் அலுவலர்களுக்கு ஒரியா மொழி புரிந்துகொள்ள சிரமமாக இருந்ததால் இந்தி மொழியை ஒரியா மொழி பேசும் சம்பல்பூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்த விரும்பியது.

ஒரியா மொழி பேசும் பெரும்பான்மையான மக்களின் விருப்பதிற்கு எதிராக இந்தியை ஆரம்பப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தி, அந்த மாவட்டத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இந்தி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது.

அரசின் இந்த முயற்சி சம்பல்பூர் மாவட்டத்தில் மட்டுமல்ல ஒரியா மொழி பேசும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தங்களின் எதிர்ப்பை உத்கல் சபை Viceroy Lord Elgin அவர்களுக்கு கோரிக்கை மனு மூலம் தெரியப்படுத்தியது. இருப்பினும் அவர்களது எதிர்ப்பை உதாசீனம் செய்துவிட்டு 1895 ஆம் ஆண்டு சம்பல்பூர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக இருந்த ஒரியா நீக்கப்பட்டது.

ஒரியா மொழியை திரும்பவும் கொண்டுவர 3000 பேருக்கு மேல் கையொப்பமிட்ட மனு திரும்பவும் Viceroy Lord Elgin அவர்களுக்கு அதே ஆண்டு ஜூன் மாதம் அனுப்பப்பட்டது.

ஒரியா தலைவர்களின் பெருமுயற்சி மற்றும் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 1903 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் திரும்பவும் ஒரியா மொழி பள்ளிகளில் கொண்டு வரப்பட்டது.

இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆண்டபோது இந்தி பேசுவோர் இந்தி பேசாத மக்களின் மேல் தங்கள் சௌகரியத்திற்காக இந்தியை திணித்திருக்கிறார்கள் என்றாலும் சென்னை ராஜதானியில் ஒரு தமிழரே இந்தியை திணித்தது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.

முன்பெல்லாம் இந்தி படித்தால் தான் வட இந்தியாவில் வேலை கிடைக்கும். எனவே அதனால் அவசியம் இந்தி கற்கவேண்டும் என்றார்கள். ஆனால் இப்போதோ மென்பொருள் துறையின் விரிவாக்கத்தாலும் அந்த துறையில் அதிக சம்பளத்துடன் கூடிய பணிக்கான வாய்ப்புகள் இருப்பதாலும் வட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆங்கில படிப்பிற்கு முன்னுரிமை தர ஆரம்பித்துவிட்டார்கள்.

தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் BPO போன்றவைகளில் சேர ஆங்கிலம் அவசியம் என்பதால் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் கூட ஆங்கிலம் படிக்கத் தொடங்கிவிட்டனர்.

எனவே இந்தி படித்தால்தான் வேலை வாய்ப்பு என்று சொல்பவர்களின் வாதங்கள் தற்போது செல்லாக் காசாகிவிட்டன என்பது வட இந்தியாவை சேர்ந்தவர்கள் மென்பொருள் துறையில் பணியாற்ற தமிழ் நாட்டிற்கு வருவதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

ஏன் அதிகம் படிக்காத அநேக வட மாநிலத்தவர் எந்த பணியையும் ஏற்று செய்ய தமிழ்நாட்டிற்கு படைஎடுப்பது, வட இந்தியாவில் தான் பணிகள் கொட்டிக்கிடக்கின்றன என்ற மாயையை தகர்த்துவிட்டது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி தெரியாத இளந் தலைமுறையினருக்காக எழுதி வந்த தொடரை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என எண்ணுகிறேன். இந்த தொடர் மட்டும் எனது பதிவில் முடிகிறதே தவிர இந்தி திணிப்பை எதிர்க்கும் போராட்டம் தொடர்கிறது என்பது.தான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால் அது நீறு பூத்த நெருப்பு போல் தான் இருக்கிறது என்பது எனது கருத்து. இந்த போராட்டம் ஆரம்பித்தபோது என்ன காரணம் சொல்லப்பட்டதோ அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.


இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடரும் .




26 கருத்துகள்:

  1. அருமை நண்பரே நிறைய விடயங்கள் தொகுப்பாக சொல்லி வந்தமைக்கு நன்றி
    இருப்பினும் முடிவில் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்று சொல்லியதே உண்மை
    வாழ்க தமிழ்.

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    வரலாறு மிக அருமையாக உள்ளது படிக்கும் போது. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி கவிஞர் திரு த.ரூபன் அவர்களே!

      நீக்கு
  3. மிகவும் அருமையானதோர் தொடரினை இன்றைய இளைஞர்களும் அறியவேண்டி தொடர்ச்சியாக இதுவரை வெளியிட்டு வந்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும்.

    இதுபற்றி ஏற்கனவே ஓரளவுக்கு அறிந்துள்ளவர்களுக்கும், இந்தத்தொடர் ஓர் நினைவூட்டல் போல அமைந்து விட்டது.

    //இந்த தொடர் மட்டும் எனது பதிவில் முடிகிறதே தவிர இந்தி திணிப்பை எதிர்க்கும் போராட்டம் தொடர்கிறது என்பது தான் உண்மை. இன்னும் சொல்லப்போனால் அது நீறு பூத்த நெருப்பு போல் தான் இருக்கிறது என்பது எனது கருத்து.//

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      // இதுபற்றி ஏற்கனவே ஓரளவுக்கு அறிந்துள்ளவர்களுக்கும், இந்தத்தொடர் ஓர் நினைவூட்டல் போல அமைந்து விட்டது. //

      உண்மைதான்.

      நீக்கு
  4. பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திருG.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  5. உங்கள் தொடர் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  6. அருமையான தொடர். எத்தனை பேரை சென்றடைந்திருக்குமென்று தெரியவில்லை. தமிழ் விக்கிபீடியாவில் இணைத்தால், இந்தி திணைப்பு குறித்து தெரிந்து கொள்ள விழைவோருக்கு உதவும்.

    தனக்கென்று ஒரு நாடு இல்லாத மொழிகள் நீடிப்பது கடினம். இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களும் லாப நஷ்ட கணக்கு பார்த்தே நிகழ்வதால், பணம் சேர்க்க இயலாத காரியங்கள் யாவும் நீண்ட காலம் நீடிக்காது. பழமையை பாதுகாக்கும் யுனஸ்கோ போன்ற அமைப்புகள் தலையிட்டால் தமிழ் இன்னும் சிறப்பாக வாழ வழியுள்ளது. என்னதான் இருந்தாலும் தமிழில் உள்ள நீதிநூல்களின்படி வாழாமல் பேசுவதற்கு மட்டுமே உபயோகப்பட்டு தமிழ் வாழ்வதென்பது, உடலில் கோளாறுடன் வெளியில் மேக்கப் செய்துகொள்வது போலத்தான்.

    தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டேன்.
    நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுபவர்களில் பலர் தமிழுக்காக எதுவுமே செய்யவில்லை என்பது கசப்பான உண்மை. நீங்கள் குறிப்பிட்டது போல் ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைப்பு தலையிட்டால்தான் தமிழுக்கு சிறப்பான வாழ்வு கிட்டும் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் வருமென நம்புவோம்.

      நீக்கு
  7. இந்தி எதிர்ப்பு போராட்டம் அல்ல, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பதனை மனதில் பதிய வைத்த தொடர். இந்த போராட்டம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகள் சில; தெரியாத செய்திகள் பல. அனைத்துக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. இந்த இறுதித் தொடரில், இந்தி படித்தால்தான் வேலை என்பது ஒரு மாயை என்பதை சரியான எடுத்துக்காட்டுகள் மூலம் நிறுவி இருக்கிறீர்கள்.

    இன்னொரு மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், நான் பணிபுரிந்த வங்கி நடத்திய இந்தி வகுப்புகளுக்கு சென்று இருக்கிறேன். எனது மகனும் கல்லூரிப் படிப்பின் போது, இந்தி வகுப்பில் படித்து சான்றிதழ் பெற்றவர்.

    தங்களுடைய இந்த தொடர் முழுவதும் ஒரு அச்சடித்த புத்தகமாக அல்லது மின்நூலாக வெளிவர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் ,பாராட்டுக்கும், நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! உண்மையில் இந்தி உட்பட எந்த மொழி மேலும் நமக்கு வெறுப்பு இல்லை. நம்மீது ஒரு மொழியை திணிக்கும்போது தான் நாம் அந்த முயற்சியை எதிர்க்கவேண்டியுள்ளது. அப்படித்தான் இந்தித் திணிப்பையும் நாம் எதிர்த்தோம். ஆனால் சிலர் இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் செயல்திட்டம் என எண்ணி இதை ஆதரிக்கவில்லை.

      // இன்னொரு மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், நான் பணிபுரிந்த வங்கி நடத்திய இந்தி வகுப்புகளுக்கு சென்று இருக்கிறேன். எனது மகனும் கல்லூரிப் படிப்பின் போது, இந்தி வகுப்பில் படித்து சான்றிதழ் பெற்றவர்.//

      எனக்கு என் தந்தை மூன்றாவது படிக்கும்போதே இந்தி கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது தக்ஷிண இந்தி பிரச்சார சபா நடத்திய ‘பிராத்மிக்’ தேர்வை எழுதி வெற்றியும் பெற்றிருக்கிறேன். பின்னர்வ ங்கியில் சேர்ந்த பிறகு ‘பிரபோத்’ பிரவீண்’ தேர்வுகளையும் எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன். எனவே ஒரு மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நான் முன்பே பதிவில் குறிப்பிட்டதுபோல் வங்கியில் பணி புரிந்ததால் கன்னடம், மலையாளம் இந்தி ஆகியவைகளை விரும்பிக் கற்றுக்கொண்டேன்..

      எனவே முடிந்த அளவு மொழிகளைக் கற்போம். மொழித்திணிப்பை எதிர்ப்போம்.

      நீக்கு
  8. மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் செய்திருந்த தொடர்.
    தகவல் கேகரிப்புகள் அபாரம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு ஜீவி அவர்களே! இந்த நேரத்தில் நான் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு நன்றி சொல்லியாகவேண்டும். முனைவர் அவர்கள் கொஞ்சம் வரலாறு என்ற தலைப்பில் 06-08-2015 அன்று வெளியிட்ட பதிவின் பின்னூட்டத்தில், அவர் எழுதிய தகவல் தொடர்பாக நானும் பதிவு எழுத இருப்பதாக சொன்னதும், அவரும் ‘எழுதுங்கள்’ என ஊக்கமூட்டியதால் இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். இதற்காக நான் பல தகவல்களை திரட்டவேண்டியிருந்தது. மேலும் நானே இந்த இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதால் எனது அனுபவத்தையும் சேர்த்து எழுத முடிந்தது. எனவே அவருக்கு எனது மனமார்ந்த நன்றி!

      நீக்கு
  9. [[[சென்னை ராஜதானியில் ஒரு தமிழரே இந்தியை திணித்தது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.]]]

    தமிழர் என்று நீங்கள் தான் அவரை [ராஜாஜி]சொல்லிக்கொள்ளவேண்டும்! பிறப்பால் தமிழர் என்று சொல்லுங்கள். மனதால் தமிழை வெறுப்பவர்கள். இவர் மட்டுமல்ல...சோ இப்படி பலர்! தமிழால் வாழ்ந்துகொன்டு தமிழை தூற்றுபவர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நம்பள்கி அவர்களே! அவர் தாய் மொழி தமிழ் என்பதால் தமிழர் எனக் குறிப்பிட்டேன்.

      நீக்கு
    2. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராஜாஜி அவரகளின் பங்களிப்பு ஏதேனும் உண்டா?

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் திரு ராஜாஜி அவர்களின் பங்களிப்பு ஏதேனும் உண்டா என வினவியுள்ளீர்கள். இந்தியை தென்னகத்தில் திணித்தவரே அவர் தான்.

      சென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, திரு இராஜாஜி அவர்கள் தான் முதன் முதலில் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார் என்று இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 2
      இல் விரிவாக சொல்லியிருந்தேன்.

      இந்தியை முழுமூச்சாக ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8 ஆம் நாள் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொணர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அகில இந்திய மொழி மாநாடு ஒன்றை கூட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, வங்காளம் மற்றும் அசாமி மொழி பேசும் பிரநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் ‘இந்தி ஆதரவாளர்களுக்கு ஆங்கிலம் எவ்வாறு அந்நிய மொழியோ, அதுபோல இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழி தான்’ என்று முழங்கினார் என்று இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 5 இல் சொல்லியிருந்தேன்.

      ஆக இந்தியை இங்குள்ள பள்ளிகளில் 1937 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு வழி வகுத்தவரும் திரு ராஜாஜி அவர்கள் தான். பின்பு 1957 ஆம் ஆண்டு ஜனவரி காங்கிரசிலிருந்து விலகிய பின் 1958 ஆம் ஆண்டு முழுமூச்சுடன் இந்தி திணிப்பை எதிர்த்தவரும் அவர் தான்! இதைப்பற்றி குறிப்பிடும்போது “பின்னர் திரு ராஜாஜி அவர்களே 1965 இல் இந்தி திணிப்பை எதிர்த்தது காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டாயமா எனத் தெரியவில்லை.” என சொல்லியிருந்தேன்.


      நீக்கு
  10. ஆனாலும் ராஜாஜியும் சோவும் தீர்க்கதரிசிகள் தான்: ஹிந்தி தெரிந்தால் தான் வேலை கிடைக்கும் என்று சொன்னது எவ்வளவு உண்மை! பின்னே சென்னையில் உள்ள எந்த ஹோட்டல்களுக்கும், சாதாரண டப்பா ஹோட்டல்கள் உள்பட..சென்று பாருங்கள். அங்கு டேபிள் க்ளீன் செய்வது ஹிந்தி மட்டும் தெரிந்த பசங்க தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நம்பள்கி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

      நீக்கு
  11. ஒரு காலத்தில் இந்தியைப் புகுத்திய ஒருவரே, அதே இந்தியை இன்னொரு காலத்தில் எதிர்த்தார் என்றால் அது ஒரு அதிசயத் தகவலாய் இருக்குமில்லையா?.

    இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை இது தான். இதன் முதல் வரியிலேயே ராஜாஜி இந்தியைப் புகுத்தியதைப் பற்றிச் சொல்கிறீர்கள். புகுத்தியதற்கு எதிரான அவரே இந்தியை எதிர்த்ததையும் அடுத்த வரியிலேயே சொல்லியிருந்தால் அவரைப் பற்றிய கணிப்பில் வாசிக்கும் வாசகர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும். அதற்காகத் தான் கேட்டேன். பின்னூட்டங்களையும் சேர்த்துப் படிப்போருக்கு அந்தத் தெளிவு கிடைத்திருக்கும்.

    தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! இந்தியை திணித்த இராஜாஜி அவர்களே இந்தி திணிப்பை பின்னர் எதிர்த்தது ‘’காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டாயமா எனத் தெரியவில்லை.’’ என்று தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். அதை தொடரை முடிக்கும்போதும் சொல்லியிருக்கலாம். கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  12. #இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடரும் #
    சீக்கிரம் தொடருங்கள் அய்யா !சரித்திரம் மிகவும் முக்கியம் ,தொடரக் காத்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே!

      எனது தொடரின் இறுதியில் இவ்வாறு கூறியிருக்கிறேன்.
      “இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி தெரியாத இளந் தலைமுறையினருக்காக எழுதி வந்த தொடரை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என எண்ணுகிறேன். இந்த தொடர் மட்டும் எனது பதிவில் முடிகிறதே தவிர இந்தி திணிப்பை எதிர்க்கும் போராட்டம் தொடர்கிறது என்பது.தான் உண்மை. ‘
      எனவே இந்த தொடரை தற்சமயம் முடித்திருக்கிறேன். இனி வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்தே எனது பதிவு அமையும்.

      தொடரை படித்து வந்தமைக்கு நன்றி!

      நீக்கு