வெள்ளி, 25 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 5

இப்போதுதான் அறைக்குள் நுழைகிறோம் அதற்குள் கைப்பேசியில் கூப்பிடுவது யாரென்று பார்த்தால் நண்பர் பாலு அவர்கள் தான் இணைப்பில் இருந்தார். நாங்கள் வந்துவிட்டதை அறிந்து எங்களை வரவேற்றுவிட்டு வேறு யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என விசாரித்தார்.




நண்பர்கள் சேதுராமனும், ஹரிராமனும் வந்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்டபோது, தான் ஹோட்டலின் வரவேற்பறையில் இருப்பதாகவும், தன்னுடன் நண்பர்கள் முருகானந்தம் நாச்சியப்பன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர்களும் இருப்பதாகவும் சொன்னார்.

பின்னர் எங்களுக்கு காஃபி வந்து கொண்டிருப்பதாகவும், குளித்து முடித்து தயாரானதும் சரியாக 7.30 மணிக்கு மூன்றாவது தளத்திற்கு வரும்படியும், அங்கு தான் கூட்டம் நடக்கும் அரங்கு உள்ளதாகவும், அங்கேயே சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்.

காலை 6 மணிக்கே வரவேற்பறைக்கு வந்து முன் பதிவு செய்துள்ள நண்பர்கள் வந்துவிட்டார்களா என விசாரித்து, காஃபி வருகிறது என்று சொன்னதை பார்த்தபோது கல்யாணத்திற்கு வந்திறங்கிய மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் போல் கவனிப்பது போல் இருந்தது நண்பர் பாலுவின் உபசரிப்பு.

இது போல் வந்திருக்கும் வகுப்புத் தோழர்களுக்கு தேவையான வசதிகள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்கள் தஞ்சை நண்பர்கள். அதைப்பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம்.

அவர் உரையாடலை முடித்த உடனே கைப்பேசியில் இன்னொரு அழைப்பு! என்னுடன் இரண்டு ஆண்டுகள் அறைத் தோழராக இருந்த நண்பர் முத்துக்கிருஷ்ணன், நான் தஞ்சைக்கு வந்துவிட்டேனா என்று விசாரித்துவிட்டு, தானும் தனது துணைவியாரோடு  திருநெல்வேலியிலிருந்து அன்று காலை தான் வந்ததாகவும், அரங்கத்தில் சந்திப்பதாகவும் சொன்னார்.

காஃபிக்காக காத்திருந்த நேரத்தில் அடுக்து நண்பர் கோவிந்தசாமி கைப்பேசியில் கூப்பிட்டார். தானும் நண்பர் நாச்சியப்பனும் தஞ்சை நண்பர்களுக்கு விழா ஏற்பாடுகளில் உதவுவதற்காக முதல் நாள் மாலையே சிதம்பரத்திலிருந்து வந்துவிட்டதாக சொன்னார்.

நண்பர் கோவிந்தசாமி முதலாம் ஆண்டு படிக்கையில் பல்கலைக்கழக விடுதியில் திருவள்ளுவர் மனையில் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர். நண்பர் நாச்சியப்பன் முதலாம் ஆண்டு அடுத்த அறையிலும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு அறைத்தோழராகவும், நான்காம் ஆண்டு அடுத்த அறையிலும் இருந்தவர். இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். அவரிடம் பேசிவிட்டு நண்பர் நாச்சியப்பனிடமும் பேசினேன்.

பேச்சுவாக்கில் காஃபி வந்துவிட்டதா எனக் கேட்டார். வந்துகொண்டு இருப்பதாக பாலு சொல்லியிருக்கிறார். என்றதும் உடனே அனுப்ப ஏற்பாடு செய்வதாக சொல்லிவிட்டு பின்னர் சந்திப்பதாக சொன்னார். நானும் என் துணைவியாரும் காஃபிக்காக காத்திருந்தோம். அவர்கள் சொல்லி அரை மணி நேரம் ஆகியும் காஃபி வரவில்லை.

என் துணைவியாரும் நேரம் ஆகிறதென்று சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டார். நானும் அடிக்கடி வெளியே சென்று காஃபி வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். விடுதிப் பையன் ஒருவன் காஃபி ‘பிளாஸ்க்’குடன் படியேறி வருவதைப் பார்த்துவிட்டு, அப்பாடா! ஒரு வழியாக காஃபி வந்துவிட்டது என நினைத்து அறைக்குள் நுழைந்து அமர்ந்தேன்.

ஆனால் நான் நினைத்தபடி எங்கள் அறைக்கு காஃபி வரவில்லை. வெளியே சென்று பார்த்தால் அந்த பையன் வேறொரு அறைக்கு சென்று கொடுத்துவிட்டு திரும்பிவிட்டான். காஃபி வரவில்லை என்றதும் நான். பொறுமை இழந்தேன். திரும்பவும் நண்பர் நாச்சியப்பனைக் கூப்பிட்டு விஷயத்தை சொல்லி உடனே காஃபி அனுப்ப உதவுமாறு கேட்டுக்கொண்டேன். .

காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு நடைப்பயிற்சி முடிந்து வந்ததும் காஃபி சாப்பிடுவது என் வழக்கம். அப்படி சாப்பிடாவிட்டால் எதையோ பறிகொடுத்ததுபோல் இருக்கும். காலை எழுந்தவுடன் காஃபி சாப்பிடும் வழக்கம் சிறு வயதிலிருந்தே தொடங்கிவிட்டது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும்போது காலையில் உணவு விடுதியில் காஃபி சாப்பிட்டுவிட்டு பண்ணை பயிற்சி வகுப்புக்கு செல்வதுண்டு.

ஆனால் பின்னர் வேலைக்கு சேர்ந்தபோது பல இடங்களில் காலையில் காஃபி கிடைக்காதபோது அந்த பழக்கத்தை விட்டோழித்தேன். ஆனால் திருமணம் ஆனதும் அந்த பழக்கம் திரும்பவும் தொற்றிக்கொண்டது.

திருமணம் ஆன புதிதில் காஃபி கொட்டைகளை வாங்கி வந்து வறுத்து அரைத்து பொடி செய்து காஃபி தயாரிப்பார் என் துணைவியார். அப்போதெல்லாம் கடையில் காஃபி பொடி வாங்குவதில்லை. காரணம் அவை முன்பே அரைத்து வைத்திருப்பதால் அதில் மணம் குறைந்திருக்கும் என்பதால்.

அதனால் தினம் காலையில் ஒரு கைப்பிடி அளவு ரோபஸ்டா காபி கொட்டைகளை (Coffea robusta) வறுத்து, காப்பிக்கொட்டைகளை அரைக்கும் இயந்திரத்தில் அரைத்து பொடியாக்கி, வடிசாறு (Decoction) எடுத்து பாலில் கலந்து காஃபி தயாரிப்பார் என் துணைவியார். அன்றாடம் காப்பிக்கொட்டைகளை வறுத்து அரைத்து வடிசாறு எடுத்து தயாரிக்கும் காஃபியின் ருசிக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பேன் நான்.

காஃபிக் கொட்டையை பொன்னிறத்தில் வறுத்து, பதமான சூட்டில் அரைத்துத் தூளாக்கி, அதிலிருந்து கிடைக்கும் வடிந்த சாற்றில் சரி விகிதம் நன்கு காய்ச்சிய பசும்பாலைக் கலந்து, கசப்பு குறையும் மட்டும் சர்க்கரை கலந்து, அது கரையும் முன்னே குடிப்பதுதான் டிகிரி காஃபி என்பார்கள் தஞ்சை பகுதியினர்.

(சென்னை - திண்டிவனம் சாலையில் ‘கும்பகோணம் டிகிரி காப்பி’ என்று ஒருவர் காஃபி கடை ஆரம்பிக்க, அந்த பெயரைக் காப்பியடித்து வழி நெடுக அதே சாலையில் புற்றீசல் போல் நிறைய ‘கும்பகோணம் டிகிரி காப்பி’ கடைகளை இன்றைக்கும் பார்க்கலாம்)

அப்படி புகழ் பெற்ற டிகிரி காஃபிக்கு பெயர் போன தஞ்சையில் காத்திருந்து காத்திருந்து கடைசியில் ஒருவழியாய் காஃபி வந்து சேர்ந்தது. குடித்துவிட்டு, குளித்து உடை மாற்றிக்கொண்டு மறக்காமல் காமிராவையும் எடுத்துக்கொண்டு, என் துணைவியாரோடு சந்திப்பு நடக்க இருக்கும் அரங்கம் இருக்கும் மூன்றாம் தளத்திற்கு சென்றேன். .

அந்த அரங்கத்திற்குள் நுழைந்தபோது நுழை வாயிலில் திருமண விழாவில்
வரவேற்பளிப்பதுபோல் வருகின்றவர்களுக்கு வகுப்புத்தோழர்களின் துணைவியார்களான திருமதி சாந்தாபாலு அவர்கள் சந்தனமும் கல்கண்டும் தந்துகொண்டு இருக்க, திருமதி சாந்தகுமாரி ஜனார்த்தனம் அவர்கள் மகளிர்க்கு சூடிக்கொள்ள பூ கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.



என் துணைவியார் பூ பெற்றுக்கொண்டு இருக்கும்போது நான் அரங்கினுள் நுழைந்தேன்.

22 கருத்துகள்:

  1. //நானும் அடிக்கடி வெளியே சென்று காஃபி வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். விடுதிப் பையன் ஒருவன் காஃபி ‘பிளாஸ்க்’குடன் படியேறி வருவதைப் பார்த்துவிட்டு, அப்பாடா! ஒரு வழியாக காஃபி வந்துவிட்டது என நினைத்து அறைக்குள் நுழைந்து அமர்ந்தேன்.//

    இங்குதான் தப்பு செய்துவிட்டீர்கள். நானாக இருந்தால் ஓடிப்போய் அவனிடமுள்ள ‘பிளாஸ்க்’கை அப்படியே பிடுங்கிக்கொண்டு, அவனையும் அனுப்பி விட்டு, என் ரூமுக்குள் கொண்டு வந்திருப்பேன். அரை மணிக்கு மேல் காஃபிக்காக காத்திருந்து விட்டதால் நானும் 2-3 கப்புகள் குடித்துவிட்டு, பாத்ரூமில் உள்ள மனைவியையும் குடிக்க வைத்து, அதன்பின் காலி ப்ளாஸ்க்கை மட்டுமே அவனிடம் திரும்பித் தந்திருப்பேன். :)

    காலை நேரத்தில் பெட்ரோல் போடாமல் நமக்கு வண்டி ஓடாதே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!. ஆனால் அந்த பையன் எங்களுக்குத்தான் காஃபியை கொண்டு வருகிறான் என்று நினைத்ததால் அறைக்கு வந்துவிட்டேன். இல்லையென்றால் அங்கேயே நின்று அந்த பையனிடம் கேட்டு வாங்கி வந்திருப்பேன்.

      நீக்கு
    2. //ஆனால் அந்த பையன் எங்களுக்குத்தான் காஃபியை கொண்டு வருகிறான் என்று நினைத்ததால் அறைக்கு வந்துவிட்டேன். இல்லையென்றால் அங்கேயே நின்று அந்த பையனிடம் கேட்டு வாங்கி வந்திருப்பேன். //

      எனக்கு இது மிகவும் நன்றாகவே புரிகிறது ஸார். :)

      அதைத்தான் ’இங்குதான் தப்பு செய்துவிட்டீர்கள்’ என நானும் வேடிக்கையாகச் சொல்லியுள்ளேன்.

      அந்த ப்ளாஸ்க் கொண்டு வந்த பையனை நீங்கள் பார்த்ததுமே, அறைக்குள் போய் விட்டதை அவனும் ஒருவேளை பார்த்திருந்து, இந்த ஸாருக்கு நம் காஃபியில் அவ்வளவாக இஷ்டம் இல்லை போலிருக்குது எனவும் அவன் நினைத்திருக்கலாமோ என்னவோ எனவும் நினைத்துக்கொண்டேன். :)

      எனக்கும் என் வாழ்க்கையில், சில இடங்களில் இதுபோன்ற சில அனுபவங்கள் ஏற்பட்ட பிறகே, சாப்பாடு + தீனி + காஃபி போன்றவற்றில் சங்கோஜப்படுவதை நான் சுத்தமாக நிறுத்திக்கொண்டு விட்டேன். :)

      நீக்கு
    3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். சாப்பிடுவதற்கு கூச்சப்படக்கூடாது என்பார்கள். கூச்சப்பட்டால் பட்டினியாக இருக்கவேண்டியதுதான். இருந்தாலும் நம்மை அறியாமலேயே அந்த சுய கௌரவம் வந்துவிடுகிறதே.என் செய்ய!

      நீக்கு
  2. ஒவ்வொன்றையும் பற்றிய தங்களின் நுணுக்கமான விவரிப்புகள் யாவும் மிகவும் அருமை. பாராட்டுகள். சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிகள். மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!.

      நீக்கு
  3. காலையில் எழுந்ததும் பல் விளக்கி காப்பிக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ முள்ளின் மேல் நிற்பது போலத் தான் இருக்கும்... இதில் தினமும் காப்பிப்பொடி அரைப்பதென்றால் அதற்கான நேரமும், ஆகும் சிரமமும் கூடுமே!

    டிக்ரி காப்பிக்கு இதோ ஒரு எளிய வழி:

    சென்னையில் தான் கண்முன்னால் காப்பிக்கொட்டையை அரைத்து காப்பிப்பொடி தருகிறார்களே! பீபரி+பிளாண்டேஷன் ஏ
    டிகாஷனைத் திக்காக்கும். வெறும் பீபரி என்றால் காப்பி நீர்க்க இருக்கும். அதனால் நம்ம தேர்வு அந்த + சமாச்சாரம் தான்.

    கண்டிப்பாக சிக்ரி கலப்பு இல்லை.
    கால் கிலோ பொடி வாங்கினால், அதை எவர்சில்வர் டப்பாவில் போட்டு பிரிட்ஜ்ஜில் வைத்து விட்டீர்களெண்றால் அவ்வப்போது அரைத்த தூள் மாதிரி இருக்கும்.

    இரண்டு பெருக்கு இரண்டரை டேபிள் ஸ்பூன் பொடி. அதை பில்ட்டரில் போட்டு சுட்ச்சுட ஆவி பறக்கும் நீரை ஊற்றி மூடிவிட்டால் 7 நிமிஷத்தில் முதல் டிகாஷன் ரெடி.

    அது ரெடியானதும் பாக்கெட் பாலைக் காய்ச்சிக் கொள்ளலாம்.

    மறுபடியும் பில்ட்டரின் அரைப் பங்குக்கு கொதிநீரை ஊற்றி
    இரண்டாவது டிகாஷனும் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்.

    பால் கொதிநிலைக்கு வரும் பொழுது ஒரு ஸ்பூன் எடுத்து மேலே படிந்திருக்கும் ஆடையை லேசாகக் கலைத்து விடுங்கள். பால் இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். இப்படிக் கொதிப்பது பாலின் சுவையைக் கூட்டும்.

    பால் பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விட்டு, கால் டம்ளர் பால்+ முக்கால் பங்கு டிகாஷன் என்று சேர்த்துக் கொண்டு தேவையான சர்க்கரை போட்டுக் கலந்து அந்தச் சூட்டோடையே டம்பளரில் உதடைப் பதித்தால்---

    அடடாவோ!.. சோமபானம் தான்!

    மற்ற சுவாரஸ்யங்களுக்குத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவிஅவர்களே! சுவையான காஃபி தயாரிப்பது பற்றி தாங்கள் தந்துள்ள Tips க்கு நன்றி!

      நீக்கு
  4. ஸ்வாரஸ்யம். தில்லி வந்த பிறகு காபி குடிக்கும் பழக்கமே கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை!

    தொடர்ந்து வருகிறேன். சந்திப்பு பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்து கொள்ளும் ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  5. காஃபி புராணம் படு ஜோர். இங்கு நானும் அப்படித்தான். காஃபி இல்லாவிட்டால் ஒன்றும் ஓடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! என்னவோ தெரியவில்லை காலையில் காஃபி சாப்பிடாவிட்டால் எனன்வோ போல் இருக்கிறது. ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்ற பாரதியாரின் பாடலின் வரியை காலை எழுந்தவுடன் காஃபி என மாற்றிவிடலாம் போலிருக்கிறது.

      நீக்கு
  6. இங்கு கேரளத்தில் எல்லாமே சாயா தான். காபி சில இடங்களில் கிடைக்கும் என்றாலும் காபியாக இருக்காது.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! நான் 4 ஆண்டுகள் கோட்டயத்திலும் 3 ஆண்டுகள் கண்ணூரிலும் இருந்தபோது நெஸ்காஃபி சாப்பிட்டே சமாளித்துவிட்டேன்.

      நீக்கு
  7. எங்கள் கல்லூரியில் வெள்ளிவிழாவின் துவக்க மீட்டிங் பொழுது பொன்விழாவுக்கு வந்தவர்கள் இருந்தார்கள். பொன்விழாவுக்கு வந்தவர்களில் ஒருவர் வெள்ளிவிழாவுக்கு வந்தவர்களில் ஒருவரிடம், “மன்னிக்கவும் ,உங்கள் பெயர் மறந்துவிட்டது. நீங்கள் யார்?” என்று கேட்டாராம்!
    அனைவரின் பெயர்களையும் தாங்கள் நினைவுகூர்ந்து எழுதுவது ஒரு திறமைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் முன்பே எழுதியிருந்தபடி எங்கள் வகுப்பில் இருந்த அனைவரிடமும் பழகியவன் நான் தான். அதனால் அவர்களுடைய பெயர்களை நினைவில் இருத்திக்கொள்ள முடிக்கிறது.

      நீக்கு
  8. கூடப்படித்தவர்களை நினைவில் கொண்டு சந்திப்பு பற்றி எழுதி இருக்கிறீர்கள் 1957-59 வாக்கில் கூடப்பயிற்சி எடுத்தவர்களில் பலரது பெயர்களே நினைவுக்கு வரவில்லை என் மகன் அவன் வகுப்புத் தோழர்களுடனான சந்திப்புக்குத் தயாராய்க் கொண்டிருக்கிறான் திருச்சியில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! வகுப்பு நண்பர்களை நினைவில் வைக்க அவர்களோடு பழகியபோது ஏற்பட்ட நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக்கொண்டால் எல்லோருடைய பெயரும் நினைவில் நிற்கும், தங்களது மகனின் வகுப்புத் தோழர்களின் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  10. // காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு நடைப்பயிற்சி முடிந்து வந்ததும் காஃபி சாப்பிடுவது என் வழக்கம். அப்படி சாப்பிடாவிட்டால் எதையோ பறிகொடுத்ததுபோல் இருக்கும்.//

    எனக்கும் அப்படித்தான் அய்யா. இன்றும் இந்த காலை காபிக்கான தவம் தொடர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! காலையில் காஃபி சாப்பிடுவதென்பது ஒரு தினசரி கடமை போல் ஆகிவிட்டது என்பது உண்மை. இதை தவிர்க்க இயலவில்லை.

      நீக்கு