வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 12

நண்பர் கோவிந்தசாமி நண்பர் சரவணனுக்கு பொன்னாடை போர்த்திய பிறகு நண்பர் சரவணன் பணிபுரியும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் தான் எழுதிய கவிதையை வாசித்தார்.

அண்ணாமலை அக்ரி 66’ என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த கவிதை முழுதும் முகவரி கையேட்டில் வெளியாகியிருந்தது என்று முன்னரே சொல்லியிருந்தேன். 40 வரிகள் கொண்ட அந்த கவிதை முழுவதையும் இங்கு வெளியிட விருப்பம் இருந்தாலும் பதிவு நீண்டுவிடும் என்பதால் சில வரிகளை இங்கு தரலாமென எண்ணுகிறேன்.

உலகின்கண் உயர்ந்ததுவாம் உழவுத்தொழில்
உற்றமுறை கற்றிடவே உவப்புடனே ஒன்றிணைந்தோம்
உயருள்ளம் அண்ணாமலை அரசர் அருட்கொடையால்
உன்னதமாய் உயர்ந்து நிற்கும் பல்கலைக்கழகத்தில்

என்று ஆரம்பித்த அவர்

பூச்சிபிடிக்க நெட்டுடன் சயனைடு பாட்டிலுடன்
பூந்தோட்டம் சுற்றிவந்தோம் பட்டாம்பூச்சி பிடித்திடவே!
பார்த்த நல்செடிகளை பறித்துவந்து பாடம்செய்து
பாங்குடனே பராமரித்தோம் பதிவு ஏட்டில்


என்ற பகுதியை வாசிக்கும்போது பட்டாம்பூச்சி பிடித்திடவே என்ற சொற்களை படிக்கும்போது அழுத்தம் கொடுத்து படித்தபோது நண்பர்களின் கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது அவர் வேடிக்கையாய் எதை சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டதால்!

(வேளாண் அறிவியல் இரண்டாம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள் பூச்சிகளை அதற்காக தரப்பட்ட வலைகொண்டு பிடித்து சயனைட் உள்ள புட்டியில் போட்டு அவை இறந்ததும், அவைகளைப் பதப்படுத்தி வாய்மொழித்தேர்வின் (Viva voce Test ) போது காண்பிக்கவேண்டும்.

மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பயிர்களை அழிக்கும் புழுக்களை அவைகள் இருக்கும் இலைகளோடு கொண்டு வந்து அறையில் ஒரு ஈகநார்ப்பையில் (Polythene Bag) வைத்து அவைகள் கூட்டுபுழுவாக மாறி பின்னர் பட்டாம்பூச்சியாக மாறிய பிறகு அவைகளை சயனைட் மூலம் கொன்று பதப்படுத்தி அதற்காக கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் வைத்து வாய்மொழித்தேர்வின் போது காண்பித்து தேர்வாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் . இன்றைக்கும் மூன்றாம் ஆண்டு வேளாண் அறிவியல் படிக்கும் மாணவர்களின் அறைக்கு சென்றால் பல பைகளில் புழுக்களும் கூட்டுபுழுக்களும் இருப்பதை பார்க்கலாம்.)

அப்படி பூச்சிபிடிக்க கையில் வலையுடன் செல்லும் நண்பர்களில் சிலர் மகளிர் விடுதி அருகே உள்ள பூச்செடிகளில் பூச்சிபிடிக்க ‘தற்செயலாக’ செல்வதுண்டு. அதனால்தான் பட்டாம்பூச்சி பிடித்திடவே என்று அழுத்தம் கொடுத்து அவர் வாசித்தபோது அனைவரும் வாய்விட்டு சிரித்தோம்.

உடனே அவர் எங்களின் துணைவியர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்து ‘யாரும் தவறாக எண்ணவேண்டாம். எங்கள் வகுப்புத் தோழர்கள் அனைவரும் அப்பழுக்கற்றவர்கள்.’ என்று உறுதியளித்து மீண்டும் சிரிப்பலைகளை உண்டாக்கினார்.

பணியிலே அமர்ந்திட்டோம் பாங்குடனே பணிசெய்தோம்
பாரெல்லாம் போற்றும் வண்ணம் பெயர் பெற்றோம்
அண்ணாமலை அக்ரி அறுபத்தாறு என்றாலே
அத்தனையும் வைரம் வைடூரியமென பெயரெடுத்தோம்

என்ற பகுதியைப் படிக்கும்போது மீண்டும் கைத்தட்டல்கள் தான்.

‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது போல் நண்பர் சரவணன் எங்களையெல்லாம் வைரம் என்றும் வைடூரியமென்றும் சொல்லியிருக்கிறார் என்பது போல் சிலருக்கு தோன்றலாம்.

நண்பர் சரவணன் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பதை கொடுக்கப்பட்டிருந்த முகவரி கையேட்டில் சரி பார்த்தபோது நான் தெரிந்துகொண்டவை.

எங்கள் வகுப்புத்தோழர்களில், வேளாண்மைக்கல்வி கற்பிக்க சென்றவர்களில் ஒருவர் வேளாண்மைக் கல்லூரியின் முதல்வராகவும் (Dean), இருவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகவும், நால்வர் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஆகவும், ஒருவர் அதே பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும், ஒருவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவாக்கத்துறை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் புலத்தில் (Faculty of Agriculture) இருவர் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்களாகவும், இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Indian Agricultural Research Institute) ஒருவர் பேராசிரியராகவும், அமெரிக்கா மற்றும் கனடாவில் நகர காடுகள் மற்றும் பூங்காக்கள் (Urban forestry and Parks) துறையில் ஒருவர் இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

வேளாண்மைத்துறைக்கு பணியாற்ற சென்றவர்களில், புதுவை வேளாண்மைத் துறையில் கூடுதல் இயக்குனராக (Additional Director) ஒருவரும், தமிழக வேளாண்மைத் துறையில் இணை இயக்குனர்களாக (Joint Directors) 8 பேரும், துணை இயக்குனர்களாக (Deputy Directors) 4 பேரும், உதவி இயக்குனராக (Assistant Director) ஒருவரும், தமிழக தோட்டக்கலைத் துறையில் துணை இயக்குனராக (Deputy Director) ஒருவரும் திறம்படப் பணியாற்றியிருக்கிறார்கள்.

வேளாண்மைத் துறையில் பணியாற்றிய ஒருவர் பணியை ஆரம்பத்திலேயே துறந்து தான் படித்தபோது கற்றுக்கொண்ட தொழில் நுட்ப உத்திகளைக் கையாண்டு தனது சொந்த ஊரில் வேளாண்மையை வெற்றிகரமாக இன்றும் செய்து வருகிறார். இன்னொருவர் தனியாக காளான் தயாரிப்பு தொழிலை மேற்கொண்டிருந்திருக்கிறார்.

கரும்பு ஆலைப் பணிக்கு சென்றவர்களில் ஒருவர் தலைமை கரும்பு அலுவலராகவும், இன்னொருவர் கரும்பு அலுவலராகவும், Spic உர நிறுவனத்தில் ஒருவர் வட்டார மேலாளராகவும் இன்னொருவர் முதுநிலை மேலாளராகவும், எண்ணைப் பனை (Oil Palm) நிறுவனத்தில் தலைமைப் பொது மேலாளராக ஒருவரும் வும், மய்ய அரசின் உணவுத் துறையில் வட்டார இயக்குனராக ஒருவரும், தோட்டபயிர்கள் நிறுவனத்தில் (Plantation Company) மேலாளராக ஒருவரும் பணிபுரிந்திருக்கிறார்கள்.

ஒருவர் தன்னியல் ஆலோசகராகவும் ( Independent Consultant), ஒருவர் வேளாண்மைப் பள்ளியில் பயிற்றுநர் (Instructor) ஆகவும் இருந்திருக்கிறார்கள்.

ஒரு மிகப் பெரிய மய்ய அரசு நிறுவனமான தேசிய நூற்பாலைக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக (Chairman & Managing Director) ஒருவரும் , இந்திய அரசின் ஒலிபரப்பு சேவையில் (Indian Broadcasting Service) சேர்ந்து அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குனராக (Station Director AIR) இன்னொருவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

வங்கிப்பணிக்கு சென்றவர்களில், ஸ்டேட் பாங்க் கில் துணை மேலாளர்களாக நான்கு பேரும், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதுநிலை மேலாளர்களாக இருவரும், முதன்மை மேலாளராக ஒருவரும், துணைப் பொது மேலாளராக ஒருவரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

எங்களது வகுப்புத்தோழர்கள் படித்து முடித்து பணியில் சேர்ந்தபிறகு பல துறைகளில் உயர் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை அந்த முகவரி கையேடு தெரிவித்தபோது நண்பர் சரவணன் சொன்னதில் சிறிதளவு உண்மை உள்ளது எனது கருத்து.

அந்த கையேடு தெரிவித்த மற்றுமொரு தகவல்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மையில் இளம் அறிவியல் (BSc.(Agri)) பட்டப்படிப்பை முடித்து வெளியே வந்தபின், எங்களில் 13 பேர் முனைவர் (PhD) பட்டத்தையும், ஒருவர் இரண்டு முனைவர் பட்டங்களையும், 9 பேர் வேளாண்மையில் முதுநிலை அறிவியல் (MSc.(Agri)) பட்டத்தையும், முதுகலை மேலாண்மை பட்டத்தை (MBA) ஒருவரும், பட்டமேற்படிப்பு பட்டயத்தை (PGD) மூவரும், இளம் அறிவியல் (கல்வி) பட்டத்தை (B.Ed) ஒருவரும், இந்திய வங்கிகளின் நிறுவனத்தின் சான்றிதழை (C.A.I.I.B) இருவரும் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் அது.


கவிதை வாசித்த நண்பர் சரவணன் இறுதியாக

காவிரித்தாய் பாயும் கழனிநிறை தஞ்சையிலே
கரிகால் பெருவளத்தான் கால் பதித்த பூமியிலே
காலிரண்டு நூற்றாண்டு பொன்விழா நாளினிலே
கன்னித்தமிழால் கொண்டு வாழ்த்துகிறேன் நூறாண்டு
வாழ்கவேன்று!


என்று முடித்தபோது எழுந்த கரவொலி அடங்க பல மணித்துளிகள் ஆயின.

தொடரும்17 கருத்துகள்:

 1. நண்பர் சரவணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நண்பர் சரவணனை பாராட்டியதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. எதையுமே விட்டுவிடாமல் ஒவ்வொன்றையும் மிக அழகாகத் தங்களின் பாணியில் விவரித்துச்சொல்லியுள்ளது படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

  அடிக்கடி கரவொலி எழுப்பக்கூடிய நகைச்சுவை கலந்த அவரின் ஆக்கமும், பேச்சும், அதனை எங்களுக்குப்புரியும்படியாக எடுத்துச் சொல்லியுள்ள தங்களின் எழுத்தாற்றலும் மிகவும் அருமை.

  தங்களின் Batch இல் படித்துள்ளவர்களில் பலரும், பல மிகப்பெரிய பணியில் அமர்ந்து, சாதனை புரிந்துள்ளார்கள் என்பதனைக் கேட்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  இது மேலும் தொடரட்டும் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 3. சரவணன் ஐயாவின் கவிதையிலிருந்து சில மேற்கோள்களும் பொன்விழா சந்திப்பு கையேட்டிலிருந்து நட்பு வட்டம் மேலான பணிகள் புரிந்த சான்றுகளுடன் அவரவர் திறமைகளை எடுத்துக்காட்டி இயம்பியதும் வாசிக்க விறுவிறுவென்று கடந்தன.

  பட்ட மேற்படிப்பு கல்வி வரை கூட நம் நாட்டு பாடத்திட்டம் என்பது மாறவே மாறாது போலிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் வேளான் அறிவியல் மாணவர்கள் பூச்சி பிடித்து பதப்படுத்தி நடைமுறைக் கல்வி பெறும் பத்தாம் பசலிப் பாடத் திட்டத்தையே கட்டி அழுகிறார்கள் என்றால் எப்படி ஐயா?

  எட்டாம் வகுப்பிலிருந்து பட்ட மேற்படிப்பு வரை இப்படியே தான் இந்த கணினி யுகத்திலும் நம் பாடத்திட்டம் நொண்டி அடித்துக் கொண்டிருக்க வேண்டுமா?..

  மாணவர்களின் கல்வி பாடத்திட்டத்தில் ஒரு யுகப்புரட்சி ஏற்பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! வேளாண் அறிவியல் என்பது வெறும் பூச்சிபிடிப்பது மட்டும் என நினைக்கிறீர்கள் போலும். வேளாண் அறிவியல் பட்டப்படிப்பில் பூச்சியியல் (Entimology) பதிப்பு இரண்டு ஆண்டுகள் மட்டுமே. எப்படி மருத்துவப்படிப்பில் உடல் உட்கூறு அமைப்பியல் .(Anatomy) படிக்காமல் மருத்துவம் பார்க்கமுடியாதோ அதுபோல பூச்சியியல் படிக்காமல் பயிர்களை அழிக்கும் பூச்சிகளின் வாழ்க்கைப் பருவம் (Lifecycle) அறியாமல் அவைகளை ஒழிக்கமுடியாது.
   மாணவர்கள், பயிர்களை சாப்பிடும் புழுக்களைப் பிடித்து வந்து அவைகள் எப்போது கூட்டுப்புழுவாக மாறுகின்றன, எப்போது பட்டாம்பூச்சிகளாக வெளியே வருகின்றன என்கிற உருமாற்றத்தை (Metamorphosis) தினம் கவனித்து குறித்துவைப்பதன் மூலம் அவைகளை எந்த பருவத்தில் மருந்து தெளித்து அழிக்கலாம் என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்த செய்முறைப் பயிற்சி. மற்றபடி நீங்கள் சொல்வதுபோல் இது பத்தாம்பசலி பாடத்திட்டம் அல்ல.
   மேலும் வேளாண் அறிவியல் படிக்கும் மாணவர்கள், இயற்பியல் (Physics ) வேதியியல் (Chemistry) தாவரவியல் (Botany) விலங்கியல் (Zoology) ,உழவியல் (Agronomy), வேளாண் விலங்கியல் (Agricultural Zoology), வேளாண் வேதியியல் (Agricultural Chemistry), கால்நடை சுகாதாரம் (Animal Hygiene) வேளாண் பொறியியல்(Agricultural Engineering-Civil), நுண்ணுயிரியல் (Microbiology), வேளாண் பூச்சியியல் (Agricultural Entomology), கால்நடை பாராமரிப்பு (Animal Husbandry) , வேளாண் பொறியியல்(Agricultural Engineering-Mechanical), புள்ளியியல் (Statistics), பண்ணை மேலாண்மை மற்றும் வேளாண்மை விரிவாக்கம் (Farm Management and Agricultural Extension), வேளாண்மைப் பொருளாதாரம் மற்றும் ஊரக சமூகவியல் (Agricultural Economics and Rural Sociology), தோட்டக்கலை (Horticulture), மரபியல் மற்றும் தாவரப் பெருக்கம் (Genetics and plant Breeding), பயிர் நோய்க்கூற்றியல் (Plant Pathology), புவியியல் (Geology), கூட்டுறவு (Cooperation) போன்ற பாடங்களை படிப்போதடல்லாமல், தாங்களே நெல் மற்றும் தானியங்களை சாகுபடி செய்தும், நான்காம் (இறுதி) ஆண்டில் தினம் அருகில் உள்ள சிற்றூர்களுக்கு சென்று வேளாண் பெருமக்களுக்கு விளைபயன் செயல்முறை விளக்கம் (Result Demonstration) செய்து காட்டியும் பயிற்சி பெற்று படிப்பை முடிக்கிறார்கள்.
   தற்போது மேற்கண்ட படங்களோடு புதிதாக திசு வளர்ப்பு (Tissue Culture).கணிப்பொறி (Computer) பற்றிய பாடங்களும் உள்ளனவாம்.

   வேளாண்மை அறிவியல் படிப்பு எனப்து வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ அல்ல எனப்தை விளக்கவே இந்த நீண்ட பதில்.தவறாக எண்ணவேண்டாம்

   நீக்கு
  2. Entomology என்பது தவறுதலாக Entimology என தட்டச்சாகிவிட்டது

   நீக்கு
  3. நிச்சயம் தவறாக எண்ணவில்லை ஐயா. தங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி.

   நான் கேட்க நினைத்தது வேறே. உயர்நிலை வகுப்புகள், கல்லூரி பாடத்திட்டம் இதிலெல்லாம் இந்த மாதிரி நடைமுறை (Practical) பயிற்சித் திட்டங்களில் ஓரளவு மாணவர்கள் அது பற்றித் தெரிந்து கொண்டூ விடுகிறார்கள். அப்படி ஏற்கனவே தெரிந்தூ கொண்டதலிருந்து பட்ட மேற்படிப்பில் மேற்கொண்டுத் தொடரலாமே என்பது தான். திருப்பியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து கலவியாண்டை வீண்டிப்பானே என்பதற்காகத் தான்.

   தாங்கள் குறிப்பிட்டிருந்த திசு வளர்ப்பு, கணிப்பொறி என்ற தேவ்வையான பாடதிட்டங்களைப் பற்றித் தக்வல் அறிந்ததில் என் அடிப்படைக் கேள்விக்கு பதில் கிடைத்த திருப்தியும் கிடைத்தது.

   நீண்ட விளக்கத்திற்கு மீண்டும் நன்றி, ஐயா

   நீக்கு
  4. மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் கேட்டது சரிதான். நான் படித்தபோது பள்ளிகளில் செய்முறைப் பயிற்சிகள் கிடையாது. எனவே ஒவ்வொரு பாடத்தையும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இப்போது 12 ஆம் வகுப்பு முடிப்பதற்குள்ளேயே அறிவியல் பாடங்களில் செய்முறைப் பயிற்சிகள் இருப்பதால் கல்லூரிகள் படிக்கும்போது அதற்கேற்றாற்போல் தான் பாடங்கள் இருக்கும்.

   நீக்கு
 4. உங்களை என்னென்பது வைரமா வைடூரியமா நினைவலைகளில் நீந்தி மகிழ்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 5. பணிச்சுமை காரணமாக சில நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்று தான் இப்பகுதியை வாசித்தேன். பழைய பகுதிகளை இனி தான் வாசிக்க வேண்டும். நண்பர் சரவணன் பூந்தோட்டம் சுற்றிப் பட்டாம்பூச்சி பிடித்த கதை நல்ல நகைச்சுவை தான். உங்கள் தோழர்கள் அனைவரும் நல்ல பணிகளில் அமர்ந்து வைரங்களாக மின்னியிருக்கிறார்கள் என்றறிந்து மகிழ்ச்சி. சுவாரசியமான பதிவு. என் தம்பி கோவையில் வேளாண்மை படித்த போது நான் சென்றிருக்கிறேன். வயலில் தானே நிலக்கடலை பயிரிட்டிருந்தான். அவன் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறேன். பூச்சி பிடித்த கதையைப் படித்த போது அந்த ஞாபகம் வந்தது. நேரங்கிடைக்கும் போது அவசியம் பழைய பதிவுகளை வாசிப்பேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி கலையரசி அவர்களே! தங்களது சகோதரர் வேளாண்மை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்கிறார் என அறிந்து மிக்க மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும்போது இதற்கு முந்தைய பதிவுகளையும் படித்து கருத்திட வேண்டுகிறேன்.

   நீக்கு
 6. சரவணப் பொய்கையில் கவிதை நீராடி மகிழ்ந்தேன்.நண்பர்கள் கூடும் விழாவை, எப்படி தொடங்க வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உங்களது பொன்விழா சந்திப்பு பற்றிய தொடர்பதிவு ஒரு வழித்துணை எனலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,நண்பர் சரவணனின் கவிதையை இரசித்தமைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 7. தெளிவான விவரிப்பு அருமை நண்பரே
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு