திங்கள், 27 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 14

எங்களுடைய முந்தைய சந்திப்புகள் பற்றி பேச வந்த நண்பர் பாலு, அதுபற்றி பேச மிகவும் தகுதியானவர் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் ஏனெனில் எங்களுடைய சந்திப்பு முதன்முதல் நடக்க காரணமானவர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.




பிரிந்தவர் கூடினால் ....???????? 1என்ற தலைப்பில் எங்களது முதல் சந்திப்பு பற்றிய பதிவில் குறிப்பிட்டுள்ளதைப்போல, வகுப்புத் தோழர்களாகிய நாங்கள் சந்திக்க நண்பர் பாலுவும் மற்ற நண்பர்களும் முயற்சி எடுத்திருந்தாலும், எவ்வாறு தீவிர ஈடுபாட்டுடன் பல இடங்களில் உள்ள நண்பர்களை நண்பர் பாலு சிரமப்பட்டு அப்போது தொடர்புகொண்டார் என்பதை நான் அறிவேன்,

அவருடைய முயற்சியால்தான் எங்கள் வகுப்புத்தோழர்கள் பற்றிய முழுத் தகவல் தளம் (Data Base) உருவாக்கப்பட்டது. அந்த முயற்சியில் அவருக்கு நண்பர் செல்லப்பாவும் நானும் உதவினோம்.

மற்ற சந்திப்புகள் நடக்கவும் உதவியாக இருந்தவரும் இவர்தான். அதனால் நண்பர் பாலு தஞ்சை பொன்விழா சந்திப்புக்கு முன்னர் நடந்த சந்திப்புகள் பற்றி விரிவாக சொல்ல மேடைக்கு வந்தபொது அவரை பலமாக கைதட்டி வரவேற்றோம்.


நண்பர் பாலு பேசுகிறார்

அவர் பேசும்போது, நாங்கள் படித்து முடித்து 41 ஆண்டுகளுக்கு பிறகு, 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 22, 23 ஆகிய நாட்களில் முதன் முதல் புதுவையில் சந்தித்ததையும், தானும் நண்பர்கள் முருகானந்தம், முருகையன், மற்றும் கலியபெருமாள் ஆகியோரும் சேர்ந்து எவ்வாறு சிரமப்பட்டு நண்பர்களின் முகவரி மற்றும் தொலை பேசி ஆகிவற்றை சேகரித்து தொடர்பு கொண்டு அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததையும் நினைவு கூர்ந்தார். அந்த சந்திப்பில் கலந்துகொண்ட 65 பேர்களில் 29 பேர் வகுப்புத் தோழர்கள் என்றும் மற்றவர்கள் உறவினர்கள் என்றும் தெரிவித்தார்.

இரண்டாவது சந்திப்பை கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 9,10,11 ஆகிய மூன்று நாட்களில் தன்னுடன் சேர்ந்து நடத்த பெரிதும் உதவிய கோடைக்கானலில் உள்ள வகுப்புத்தோழர் K.G.ஸ்ரீதரனுக்கு நன்றியைத் தெரிவித்தார். அந்த சந்திப்புக்கு வந்த 18 பேரில் 11 பேர் மட்டுமே வகுப்புத்தோழர்கள் என்று தெரிவித்தார். ஓராண்டுக்குள் திரும்பவும் சந்திக்க ஏற்பாடு செய்ததால் என்னவோ நண்பர்களின் பங்களிப்பு முழுமையாக இல்லை என நினைப்பதாகவும் சொன்னார்.

மூன்றாவது சந்திப்பை அண்ணாமலை நகரில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12,13 ஆகிய இரண்டு நாட்களில் நடத்த நண்பர்கள்
Rm.நாச்சியப்பன்,R.கோவிந்தசாமி மற்றும் K.கோவிந்தராஜன் ஆகியோர் நாங்கள் படித்த பல்கலைக்கழக வேளாண் புல வளாகத்திலேயே சிறப்பாக நடத்தியதையும், அங்கு எங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களுக்கு நாங்கள் மரியாதை செய்ததையும் நினைவுகூர்ந்தார். அந்த சந்திப்பு வந்தவர்கள் மொத்தம் 55 பேர் என்றும் அதில் வகுப்புத்தோழர்கள் மட்டும் 36 பேர் என்ற தகவலையும் தெரிவித்தார்.

நான்காவது சந்திப்பை சேலத்தில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 10,11 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்புடன் நடத்தியவர்கள் நண்பர்கள் R.பழனியப்பன் மற்றும் A.K.வெங்கடரமணன் என்றும் அப்போது ஏற்காடு மற்றும் ஒகனக்கல் ஆகிய இடங்களுக்கு சென்றுவர அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்ததையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அந்த சந்திப்புக்கு வந்த 51 பேர்களில் 33 பேர் வகுப்புத்தோழர்கள் என்றும் தெரிவித்தார்.

(ஆனால் அந்த சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற தானும் உதவியது பற்றி தன்னடக்கம் காரணமாக குறிப்பிட நண்பர் பாலு மறந்துவிட்டார் போலும். அந்த சந்திப்பில் ஏற்காட்டில் காபி போர்டின் செயல்முறை விளக்க பண்ணையில் கூட்டம் நடத்தவும், மதிய மற்றும் இரவு உணவை அருந்தவும் தேவையான அனுமதியைப் பெற நண்பர் பாலு தஞ்சையிலிருந்து சேலத்திற்கும் ஏற்காட்டிற்கும் பலமுறை
வந்து உதவியது பற்றி மீண்டும் சந்தித்தோம் 9 என்ற பதிவில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.)

பொன் விழா சந்திப்பு பற்றி சொல்லும்போது கடந்த ஓராண்டு காலமாக தஞ்சையில் உள்ள நண்பர்கள் அடிக்கடி சந்தித்து இந்த விழாவை எவ்வாறு சிறப்பாக நடத்தலாம் என தீவிரமாக சிந்தித்தது பற்றியும், மூன்று முறை இதற்காக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியதையும், அந்த கூட்டங்களுக்கு வரமுடியாத மற்ற நண்பர்களிடம் மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசி மூலமும் கலந்தாலோசித்து அனைவரின் கருத்தை அறிந்து முடிவெடுத்ததையும், கனடாவில் உள்ள நண்பர் அய்யம்பெருமாள் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நண்பர் முகமது உஸ்மான் ஆகியோர் இந்த பொன்விழா சந்திப்பில் கலந்துகொள்ள ஏதுவாக செப்டம்பர் திங்களில் விழாவை ஏற்பாடு செய்தது. பற்றியும் விரிவாக சொன்னார்.

எல்லோருடைய ஒத்துழைப்பாலும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் இந்த சந்திப்பில் 44 வகுப்புத்தோழர்கள் வருவதாக உறுதி தந்து, பணம் அனுப்பியிருந்தும், சில காரணங்களால் 4 பேர் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும், வகுப்புத் தோழர்களோடு அவர்களின் துணைவியார் மற்றும் உறவினர்களையும் சேர்த்து மொத்தம் 90 பேர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று அவர் சொன்னபோது, நாங்களும் கைத்தட்டி எங்களது மகிழ்ச்சியை தெரிவித்தோம்.

மேலும் விழா சிறப்பாக நடைபெற நண்பர்கள் தங்களது பங்களிப்புத் தொகையோடு விழாக் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பல நண்பர்கள் மேலதிகத்தொகையும் அனுப்பியதையும், விழாவிற்காக சேர்ந்த மொத்த தொகை ரூபாய் 4,42,050 என்றும் வழக்கம்போல் வரவு செலவுக் கணக்குகள் விழாமுடிந்ததும் அனைவருக்கும் அனுப்பப்படும் என்றும் சொல்லி தனது பேச்சை பலத்த கைத்தட்டலுக்கிடையே முடித்தார்.

பின்னர் நண்பர்கள் மட்டும் தனியாகவும் பின்னர் துணைவியாருடனும் புகைப்படம் எடுக்க விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்ததால் அவ்வாறே நாங்களெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.


தஞ்சை பொன்விழா சங்கமத்தில் கலந்துகொண்ட நண்பர்களின் புகைப்படம்


நண்பர்கள் துணைவியார்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

புகைப்படம் எடுத்து முடிந்ததும் நண்பர் பாலு நன்றியுரை கூற விழா தேசிய கீதத்துடன் மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது,

மதிய உணவு அடுத்த அறையில் தயாராக இருப்பதாகவும் அனைவரும் உணவருந்திவிட்டு அறைக்கு சென்றுவிட்டு சரியாக மதியம் 3 மணிக்கு ஓட்டலின் வெளியே கூடவேண்டும் என்றும் அப்போதுதான் தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகம் பெரிய கோவில் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்பவும் இதே அரங்கில் 7 மணிக்கு நடைபெற இருக்கும் நண்பர்களுக்கிடையேயான போட்டிகளில் கலந்துகொள்ள நேரம் சரியாக இருக்கும் என்றும் நண்பர் பாலு சொன்னார். மேலும் நண்பர்கள் அரங்கிற்கு திரும்ப வரும்போது நண்பர்களின் துணைவியர் தங்களுடன் ஒரு புடவையை எடுத்து வரவேண்டும் என்றும் சொன்னார்.

எதற்காக புடவையை எடுத்து வரச் சொல்கிறார்கள் என யோசித்துக்கொண்டே மதிய உணவு பரிமாறப்படும் கூடத்திற்கு சென்றோம்.


தொடரும்

14 கருத்துகள்:

  1. படங்களுடன் நிகழ்ச்சித் தொகுப்புக்களை அருமையாக எழுதி, ஒருவித சஸ்பென்ஸ் உடன் முடித்து, தொடரும் போட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  2. முந்தைய சந்திப்புக்களைப் பற்றிய ஒரு தொகுப்பாகவும் இப்பகுதி துலங்குகிறது.

    சரியான சஸ்பென்ஸ். அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நண்பர் பாலுவின் பேச்சு எங்களது முந்தைய சந்திப்புகள் பற்றிய தொகுப்பு என்பது சரிதான். அந்த ‘மர்மத்தின்’ முடிச்சு இன்னும் இரண்டொரு பதிவுகளில் அவிழும்!

      நீக்கு
  3. தொடர்ந்து ஒவ்வொரு பதிவிலும் ஆர்வம் மேம்படுகிறது. தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், பதிவைத் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  4. அடுத்த பகிர்வை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவைத் தொடர்வதற்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பதிவைத் தொடர்வதற்கும், நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  6. புடவைகள் ஒரு வேளை தங்கள் கணவன் மார்கள் கட்டவோ என்னவோ

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! பொறுத்திருங்கள். புடவை கொண்டுவர சொன்னது எதற்காக என்று அந்த நிகழ்வு பற்றி எழுதும்போது அறிந்துகொள்வீர்கள்!

    பதிலளிநீக்கு
  8. புடவை விபரம் அறிய ஆவல்...
    த.ம. 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! புடவை பற்றிய சஸ்பென்ஸ் என்ன என்பதை போட்டி நடந்தது பற்றி எழுதும்போது அறிந்துகொள்வீர்கள்.

      நீக்கு