வியாழன், 11 மே, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 21

முதலில் பெரிய கோவிலுக்கு சென்ற பேருந்து நண்பர்களை விட்டுவிட்டு, திரும்ப எங்களை அழைத்துச் செல்ல வந்தபோது மணி 6.30 க்குமேல் ஆகிவிட்டது தஞ்சை அரண்மனையில் காத்திருந்த நாங்கள் பேருந்தில் ஏறி கோவிலுக்கு செல்லும்போது மணி 6.45 ஆகிவிட்டது.



நாங்கள் கோவிலை அடைந்தபோது அங்கு நல்ல கூட்டம் விரைவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பவேண்டும் என்பதால் எங்களுக்கு உதவ நண்பர் பாலுவின் மருமகன் திரு N.சிவகுமார் அவர்கள் எங்களோடு வந்தார்.

அவர் மட்டும் உதவிக்கு வந்திராவிடில் எங்களால் கோவிலில் விரைவாக தரிசனம் செய்துவிட்டு வருவது கடினமாக இருந்திருக்கும். அவர் வந்து வழிகாட்டியது நண்பர் பாலுவே வந்தது போல் இருந்தது. இந்த சந்திப்பில் சிறப்பான அம்சமே வகுப்புத் தோழர்களின் சொந்தங்கள் இந்த சந்திப்பை தங்கள் வீட்டு விழா போல் எண்ணி ஓடியாடி உதவி செய்ததுதான். திரு சிவக்குமார் அவர்களுக்கு எங்களது நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.


படத்தில் வலது கோடியில் இருப்பவர்தான் திரு N.சிவகுமார்

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டபெருவுடையார் கோவில் எனப்படும் தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி நான் அதிகம் சொல்லப்போவதில்லை. ஏனெனில் நம்மில் பலர் பலதடவை அங்கு சென்று வந்திருப்போம். நான் கூட இதற்கு முன்பு 4 தடவைகள் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் கோவிலுக்குள் நுழையும்போது அதனுடைய பிரமாண்டம் என்னை வியக்க வைக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் எந்த வித தொழில் நுட்ப உதவியும் இல்லாமல், தங்களுடைய மதிநுட்பத்தால், வெறும் மனித ஆற்றலைக்கொண்டு ஏழே ஆண்டுகளில் 198 அடி உயரமுள்ள 15 தளங்கள் கொண்ட இந்தக் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய கட்டிடப் பொறியியல் திறமையை என்னவென்று சொல்ல!

கருங்கற்களே காணக் கிடைக்காத மருத நிலத்தில் இவ்வளவு பெரிய கோவிலை கருங்கற்கள் கொண்டு கட்டவேண்டும் என்ற எண்ணிய முதலாம் இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மனை எப்படி பாராட்டினாலும் தகும். எப்பேர்ப்பட்ட தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் நாம் என்ற செருக்கோடு உள்ளே நுழைந்தேன்.

முதலில் ஒரே கல்லால் செய்யப்பட்ட 12 அடி உயரமுள்ள நந்தியை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திரு சிவகுமார் வழிகாட்ட நாங்கள் மூலவரை தரிசிக்க உள்ளே நுழைந்தோம்.

அப்போது எனது கைப்பேசியில் நான் எடுத்த படம்.


நந்தி மண்டபத்தை கோவில் பின்னணியில் வைத்து எடுத்த படம்



பெரிய கோவிலின் முன்பக்க தோற்றம்

உள்ளே கூட்டம் அதிகமாக இருந்ததால் நாங்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தோம். சிலர் வரிசையில் வராமல் பக்கவாட்டில் புகுந்து உள்ளே நுழைந்ததால் நாங்கள் கருவறை அருகே செல்ல கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது.

கருவறையில் உள்ள 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ள இந்த லிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கம் என்கிறார்கள்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது திரு சிவகுமார் தெற்கு பிரகாரத்தில் இருக்கும் சோழ மன்னர்களின் வெற்றி தேவதையான ஸ்ரீ வராஹி அம்மனை தரிசித்துவிட்டு செல்லலாம் என சொன்னார்.

ராஜராஜ சோழன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்து ஒரு இடமும் சரியாக அமையாமல் இருந்தபோது ஒருநாள் வேட்டைக்கு சென்ற போது, ஒரு இடத்தில் அவருக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றதாம்;

அதனை அவர் துரத்தி சென்றபோது அது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் வந்து படுத்துக் கொண்டதாம். பின்னர் அது எழுந்து நின்று காலால் பூமியை தோண்டியதாம். இதனால் வியப்படைந்த ராஜராஜசோழன் அதனை கொல்லாமல் துரத்தினாராம்.

ராஜராஜ சோழன் அரண்மனை சோதிடரை அழைத்து விவரம் கேட்டபோது கோவில் கட்ட இடத்தினை, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவெடுத்த வராஹி தேவியே தேர்ந்தெடுத்து இருப்பதாக சொன்னாராம் சோதிடர்.

உடனே அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராஹிக்கு சிறிய கோவில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கி ராஜராஜன். அன்னையின் அருளால் உலகம் போற்றும் பெரிய கோவிலை கட்டினார் என்பது வரலாறு.

அதனால் சோழ மன்னர்கள் எந்தச் செயலையும் தொடங்கும் முன்பு வராஹிக்கு சிறப்பு வழிபாடு செய்வார்களாம். .ராஜராஜ சோழன் வராஹி அம்மனை வழிபட்ட பின்னரே எதையும் செய்வாராம். குறிப்பாக போருக்கு புறப்பட்டுச் செல்லும் போது வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின்னர் தான் செல்வாராம். அதனால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றதால் வராஹி அம்மன் சோழர்களின் வெற்றி தெய்வம் ஆனாள் என்று சொல்லப்படுகிறது.

வராஹி அம்மன் சந்நிதிக்கு சென்றபோது அங்கும் நல்ல கூட்டம். அம்மனை தரிசித்துவிட்டு குருக்களிடம் அம்மன் பிரசாதம் பெற்றபோது, அநேகம் பேர் இருக்க எனக்கு மட்டும் ஸ்ரீ வராஹி அம்மனின் படத்தைத் தந்தார். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர் தந்த படம் கீழே.


ஸ்ரீ வராஹி அம்மன் படம்

பெரிய கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தபோது நான் எடுத்த படங்கள் கீழே





தஞ்சை பெரிய கோவிலின் வடக்கு பிரகாரம் வந்தபோது நிமிர்ந்து கோபுரத்தின் வடக்கு பகுதியைப் பார்த்தேன். இருட்டிவிட்டதால் நான் பார்க்க விரும்பியதை பார்க்க இயலவில்லை. அங்கு தெய்வ‌ச் சிலைகளுக்களிடையே இடையே சம்பந்தமே இல்லாத தொப்பி அணிந்த மனிதனின் முகத்தை என் அண்ணனுடன் முன்பு இங்கு வந்தபோது அவருடைய நண்பர் எங்களுக்கு காண்பித்தார்.

‘பின்னாட்களில் வெளி நாட்டார் இங்கு வரலாம் என்பதை சூசகமாக அறிவிக்கவே அந்த உருவம் செதுக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.’. என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்ததால் திரும்பவும் அதைப் பார்க்க எண்ணினேன்.

நேரமாகிவிட்டதால் விரைந்து வந்து எங்களை பேருந்து இறக்கிவிட்ட இடத்தை அடைந்தோம். அதற்குள் பேருந்து ஓட்டலுக்கு சிலரை கொண்டுவிட சென்றிருந்ததால் காத்திருக்கவேண்டியதாயிற்று.

தஞ்சை கோவிலுக்கு சென்று வந்தது மகிழ்ச்சியைத் தந்தாலும் இரண்டு முக்கியமானவைகளைப் பார்க்காமல் செல்லுகிறோமே என்ற வருத்தம் ஏற்பட்டது உண்மை.

அவை என்னென்ன என்பது அடுத்த பதிவில்.


தொடரும்

24 கருத்துகள்:

  1. #திரு சிவக்குமார் அவர்களுக்கு எங்களது நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்#
    உண்மையில் அவர் 'உயர்ந்த'மனிதர்தான் என்று போட்டோவிலும் தெரிகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,திரு சிவக்குமாரை பாராட்டியதற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே!

      நீக்கு
  2. விரிவான பல விடயங்களின் விளக்கம் அருமை நண்பரே மேலும் அறிய தொடர்கிறேன்....
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டியதற்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  3. தஞ்சை கோயிலை பற்றி தாங்கள் சொல்லியுள்ளதெல்லாம் உண்மையே. தற்காலம் போல தொழில் நுட்ப வளர்ச்சிகளே இல்லாதபோது, சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு பிரும்மாண்டமான கோயிலை, மனித ஆற்றலால் மட்டுமே கட்டி இருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்படக்கூடியதே.

    பதிவில் உள்ள வராஹி போன்ற மற்ற விஷயங்களும் அறிய முடிந்தது.

    படங்களெல்லாம் ஓரளவு நன்றாகவே வந்துள்ளன.

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வத்ற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  4. சில சிலைகள் பிற்சேர்க்கை என்று படித்த நினைவு. குறிப்பாக தொப்பி அணிந்த அந்த உருவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!அந்த சிலை பிற்காலத்தில் இணைக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.அந்த நண்பர் சொன்னதைத்தான் எழுதியிருந்தேன்.நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்.

      நீக்கு
  5. நினைவிலிருந்து எழுதுகிறீர்களா?நாட்குறிப்பிலிருந்தா?பிரமிக்க வைக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை.நிகழ்வுகள் நினைவில் இருப்பதையே எழுதுகிறேன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும்,பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு இராய செல்லப்பா அவர்களே!

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    அறியமுடியாத வரலாற்று உண்மைகள் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி கவிஞர் திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  8. இனிய சந்திப்பு - நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் இனிமை. அந்த இரண்டு விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!அந்த இரண்டு விஷயங்கள் என்ன என்பது அடுத்த பதிவில் தெரியும்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  10. கோயிலுள் நீங்கள் நுழைந்த நேரம் சரியான நேரம். அந்த பொன் மாலைப் பொழுதில் முதல் இரண்டு புகைப்படங்கள் தகதகக்கின்றன.

    அந்த தகதகப்புக்கு ஏற்ப உங்கள் வர்ணனையும். எங்களுக்கோ
    ஏகக் கொண்டாட்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  11. வருகைக்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வருத்தபட்டதன் காரணத்தை அடுத்த பதிவில் அறிவீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. கதை கதையாம் காரணமாம் என்பது போல, தஞ்சை பெரிய கோயிலில் வராஹி அம்மன் கோயில் இருப்பதன் காரணத்தையும் அதன் தொடர்பான கதையையும் இந்த பதிவின் வழியே தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு