ஞாயிறு, 28 மே, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 23


நாங்கள் அரங்கிற்குள் நுழைந்தபோது நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே அங்கே குழுமியிருந்ததைக் கண்டேன். மேடையின் வலப்புறம் போட்டியில் பங்கேற்கும் வகுப்புத் தோழர்கள் தங்கள் துணைவியார்களுடன் அமர்ந்திருக்க, விழாவில் இடப்புறம் நண்பர்களோடு வந்திருந்த உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.




நாங்கள் போட்டியில் பங்கேற்பதற்காக வலப்புறத்தில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். சென்ற சந்திப்பின் போது ஏற்காட்டில் புதிர் போட்டியை சிறப்பாக நடத்தியது போல இங்கும் நண்பர் நாச்சியப்பன் போட்டியை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு உதவி செய்ய நண்பர் கோவிந்தசாமியும் மேடையில் இருந்தார்.

துணைவியர்களை அழைத்துவராத நண்பர்கள் போட்டியின் நடுவர்களாக இருக்கும்படி நண்பர் நாச்சியப்பன் போட்டியைத் துவங்குமுன் கேட்டுக்கொண்டு, அவர்களை மேடைக்கு அழைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தனியாக வந்திருந்த நண்பர்கள் மேடையில் அமர்ந்ததும் நண்பர் நாச்சியப்பன் போட்டியின் விதிகள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

அவர் போட்டிகள் பற்றி சொல்லும் போது, தான் 6 வித போட்டிகள் நடத்த இருந்ததாகவும். நேரமின்மை காரணமாக 4 போட்டிகள் மட்டும் நடத்த இருப்பதாகவும் சொன்னார். இந்த போட்டியில் வகுப்புத் தோழர்களோடு அவர்களின் துணைவியார்களும் கலந்து கொண்டு தம் தம் கணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாமென்றும் சொன்னார்.

ஒவ்வொரு போட்டியையும் முதலில் தவறின்றி முடிப்போருக்கு நடுவர்கள் மதிப்பெண்கள் அளிப்பார்கள் என்றும், 4 போட்டிகளிலும் பெற்ற மதிப்பெண்களையும் கூட்டி அதில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் மூன்று பேருக்கு பரிசு என்றும் சொன்னார்.

நாங்கள் எல்லோரும் போட்டியில் கலந்துக்கொள்ள சிறு பிள்ளைகள் போல் ஆர்வத்தோடு காத்திருக்க முதல் போட்டியை அறிவித்தார் நண்பர் நாச்சியப்பன்.

முதல் போட்டி பொது அறிவுப்போட்டி என்றும், எல்லோருக்கும் 10 கேள்விகள் கொண்ட கேள்வித்தாள் தரப்படும் என்றும் சொன்னார். தாளின் தலைப்பில் பெயரை எழுதிவிட்டு ஒவ்வொரு கேள்விக்கு நேர் எதிரே அதற்கான பதிலையும் எழுதி முடித்தபின் எழுந்து நின்றால் அவர்களது பெயரை நடுவர்கள் குறித்துக்கொள்வார்கள் என்றும். பின்னர் அவர்கள் 10 கேள்விகளுக்கும் பதில் சரியாக தந்திருந்தால் மதிப்பெண்கள் தரப்படும் என்றும் சொன்னார்.

உடனே போட்டியாளர்கள் எல்லோருக்கும் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அதிலிருந்த கேள்விகளை கீழே தந்திருக்கிறேன்.


1. அன்னை தெரசா பிறந்த ஊர் அல்லது நாடு எது ?
2. FMCG - விரிவாக்கம் செய்க
3. சிதம்பரத்தின் உண்மைப்பெயர் என்ன?
4. தமிழ் நாட்டில் High IQ உள்ள பெண் யார் ?
5. பச்சமுத்துவின் கட்சியின் பெயர் என்ன ?
6. PV சிந்து தோற்ற கரோலினா எந்த நாட்டை சேர்ந்தவர்.?
7. இரண்டு ஆங்கில எழுத்துக்கள் ஒன்றாகவே வரும். அவை யாவை ?
8. சாதாரணமாக இரயில்வே நடைதளத்தில் எத்தனை பெட்டிகள் நிறுத்தலாம்?
9. ஆமென் என்பது என்ன மொழி?
10. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியது யார்?


கேள்விகள் எளிது என்றாலும், அந்த இடத்தில் விரைவாக முடிக்கவேண்டுமே என்ற அவசரத்தில் பதில் அளிக்கும்போது எனது துணைவியார் உதவியும் கூட சில தவறுகளை செய்துவிட்டேன். அதற்குள் பல நண்பர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து முந்திக்கொண்டனர்.

அந்த நேரத்தில் ‘சற்றே இருட்டிப்போனால் பெரியோர் கூட சிறியோர் ஆகின்றார்’ . என்று வானொலியில் 70 களில் ஒரு நிகழ்ச்சியில் கேட்ட அந்த பாடல் நினைவுக்கு வந்தது.

பதில் அளிக்கப்பட்ட தாட்களை நண்பர் பாலுவின் பெயரன் நடராஜனும் மற்றவர்களும் பெற்றுக்கொண்டு போய் நடுவர்களிடம் கொடுத்துவிட்டனர்.

அடுத்த போட்டி என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டு இருக்கும்போது, ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறிய ஊசிகளையும், நூலையும் கொடுத்து ஊசிகளில் முதலில் நூலைக் கோர்த்து முடித்தவர்கள் எழுந்து நின்று சொல்லவேண்டும் என்றார் நண்பர் நாச்சியப்பன். யார் முதலில் ஊசிகளில் நூலைக் கோர்க்கிறார்களோ அவர்களுக்கே முழு மதிப்பெண் தரப்படும் என்றார் நண்பர் நாச்சியப்பன்.


ஊசிகளின் காதில் உள்ள ஓட்டை மிக சிறியதாக இருந்ததால் நூலைக் கோர்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவசரத்தில் ஒன்றில் நூலைக் கோர்த்துவிட்டு நான் எழுந்து நின்று முடித்துவிட்டதாக சொல்லிவிட்டேன். பின்னர் அவைகளை பெற்றுக்கொள்ள நண்பர்கள் வந்தபோதுதான் தவறென உணர்ந்து இன்னொரு ஊசியில் நூல் கோர்ப்பதற்குள் வேறு சில நண்பர்கள் முந்திக்கொண்டனர்.

நண்பர் நாச்சியப்பன் அறிவித்த மூன்றாவது போட்டியும் எளிதாக தெரிந்தாலும் உண்மையில் எல்லோராலும் முடிக்க முடியாத போட்டி அது. ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு ஊதப்படாத பலூன்கள் தரப்பட்டன. அவைகளை பெரிதாக ஊதியே உடைக்கவேண்டும். கையால் அடித்தோ அல்லது ஊசிக்கொண்டு குத்தியோ உடைக்கக்கூடாது என்பதுதான் முக்கிய விதி. வழக்கம்போல் முதலில் உடைப்போர் முழு மதிப்பெண்களையும் பெறுவர் என்று நண்பர் நாச்சியப்பன் சொன்னார்.


நானும் ஊதி ஊதிப் பார்த்தேன். இரண்டு செவிள்களும் வலித்ததே தவிரே பலூன் பெரியதாகி வெடிக்கவில்லை.அதற்குள் பல நண்பர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மதிப்பெண்கள் பெற்றுவிட்டனர்.

கடைசி போட்டி என்னவாயிருக்கும் அது பற்றி நண்பர் நாச்சியப்பன் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் காத்திருந்தோம்.


தொடரும்


20 கருத்துகள்:

  1. அற்புதமான போட்டி கள்! களைகட்டியிருக்குமே அரங்கம்! வேண்டியதுதான், வயதானவர்களுக்கு இத்தகைய பொழுதுபோக்கு! - இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு இராய செல்லப்பா அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் அந்த அரங்கமே ஒரே கலகலப்பாயிருந்தது. அப்போது நாங்கள் எல்லோரும் வயதை மறந்து சிறுவர்கள் போல் போட்டியில் கலந்துகொண்டது உண்மைதான்.

      நீக்கு
  2. போட்டிகள் ஒவ்வொன்றும் மிக அருமையாக யோசித்துத்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

    முதல் போட்டி பொது அறிவுக்கு விருந்தென்றால் ....

    இரண்டாம் போட்டி கண் பார்வைக்குத் தெளிவுக்கு ஓர் சோதனையாக வைத்து ....

    மூன்றாம் போட்டி இந்த முதுமையான வயதிலும் மூச்சை நன்கு தம் கட்டி இழுத்து நன்கு விட முடிகிறாதா என்ற சோதனை செய்துள்ளார்கள்.

    //கடைசி போட்டி என்னவாயிருக்கும் அது பற்றி நண்பர் நாச்சியப்பன் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் காத்திருந்தோம்.//

    தங்களைப்போலவே நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! இந்த போட்டிகள் விளையாட்டுபோல் தோன்றினாலும், நீங்கள் கூறியதுபோல் கண்களுக்கும், நுரையீரல்களுக்கும் தரப்பட்ட பயிற்சி என்றே சொல்லலாம். கடைசிப்போட்டி பற்றி அடுத்த பதிவில் சொல்வேன்.

      நீக்கு
  3. நல்ல கலகலப்பாக இருக்கின்றது போட்டி இதைக் கேட்கும் எங்களுக்கே உற்சாகமாக இருக்கும் பொழுது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! அந்த போட்டிகளில் கலந்துகொண்ட நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் என்பது சரியே.

      நீக்கு
  4. இப்படி ஒரு வாய்ப்பு எல்லாருக்குமே அமையனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தற்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  6. வித்தியாசமான சந்திப்புதான். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  7. முதல் போட்டியாவது பரவாயில்லை. அடுத்த இரண்டு போட்டிகளும், பலருக்கு முடிக்கவே முடிந்திருக்காது என்று நினைக்கிறேன். கடுமையாக இருந்தாலும் சுவாரஸ்யமான போட்டிகள்! தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் கூறியதுபோல் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியை பலரால் முடிக்க முடியவில்லை. நான்காவது போட்டி கடுமையான போட்டி அல்ல. சுவாஸ்யமான போட்டி. அது பற்றி அறிய பொறுத்திருங்கள்.

      நீக்கு
  8. வித்தியாசமான பயனுள்ள போட்டிகள். நீங்கள் பகிரும் விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  9. சுவாரஸ்யமான போட்டிகள்.அடுத்தது என்ன என்று அறியக்காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அடுத்த போட்டி பற்றி அறிய காத்திருங்கள்!

      நீக்கு
  10. போட்டிகள் இனிமையாகப் பொழுதைகழிக்க உதவி இருக்கும் ஜெனரல் நாலெட்ஜ் கேள்விகள் சுவாரசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உண்மையில் அன்றைய பொழுது இனிமையாகத்தான் கழிந்தது.

      நீக்கு