திங்கள், 5 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 24


கடைசி போட்டி என்னவாயிருக்கும் அது பற்றி நண்பர் நாச்சியப்பன் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் நாங்கள் காத்திருந்தபோது, போட்டியில் கலந்துகொண்டிருக்கும் தம்பதியர்களைப் பார்த்து ‘எல்லோரும் புடவை கொண்டுவந்திருக்கிறீர்களா?’ என்று அவர் கேட்டதும், நாங்கள் ‘ஆமாம்.’ என்று ஒரே குரலில் சொன்னோம்.
அவர் சிரித்துக்கொண்டே ‘போட்டி இதுதான். மனைவிமார்கள் அவர்களது கணவர்களுக்கு தாங்கள் கொண்டு வந்த புடவையைக் கட்டி விடவேண்டும். யார் முதலில் கட்டிவிடுகிறார்களோ அவர்களுக்கு முழு மதிப்பெண்கள் தரப்படும். எங்கே தொடங்குங்கள் பார்க்கலாம்.’ என்று சொன்னதும் ஒரே கலாட்டவும் கலகலப்புமாய் அரங்கம் களைகட்டியது.

உடனே எல்லோரும் எழுந்து நின்று துணைவியர்களிடம் புடவைக் கட்டிக்கொள்ள தயாரானோம்.

(காலையில் விழா முடியும்போது நண்பர்கள் அரங்கிற்கு திரும்பவரும்போது நண்பர்களின் துணைவியார் தங்களுடன் ஒரு புடவையை எடுத்து வரவேண்டும் என்று நண்பர் பாலு சொன்னார் என்று இந்த தொடரின் 14 ஆவது பதிவில் எழுதியிருந்தபோது ‘புடவை விவரம் பற்றி அறிய ஆவல்’ என்று நண்பர் தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்கள் பின்னூட்டத்தில் கூறியிருந்தார்.

ஆனால் மூத்த பதிவர் திரு G.M.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் ‘புடவைகள் ஒருவேளை தங்கள் கணவர்மார்கள் கட்டவோ என்னவோ’ என்று பின்னூட்டத்தில் கூறியிருந்தார். அவர் கூறியதில் பாதி சரி. புடவகள் கணவர்மார்கள் கட்ட அல்ல. அவர்களின் துணைவியர்கள் கட்டிவிட என்பது இப்போது அவருக்கு தெரிந்திருக்கும்.)

நாங்கள் அமர்ந்திருந்த இடம் அசௌகரியமாக இருந்ததால் எங்களில் சிலர் அரங்கத்துக்கு அடுத்து இருத்த (மதியம் உணவருந்திய) இடத்திற்கு சென்றார்கள். நானும் என் மனைவியும் அங்கு சென்றபோது, நண்பர் நாச்சியப்பன் ‘எல்லோரும் மேடைக்கு அருகே வந்துதான் புடைவை கட்டிக்கொள்ளவேண்டும் என்று பணித்தார்.

நாங்கள் மேடை அருகே செல்வதற்குள் சிறிது நேரம் ஆகிவிட்டது. அதற்குள் முன்பே மேடை அருகே இருந்த நண்பர்களில் சிலர் நாங்கள் மேடை அருகே செல்வதற்கு முன் புடவை கட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

முதலில் புடவையைக் கட்டிக்கொண்ட நண்பர்கள் தாங்கள் முடித்துவிட்டதாக சொன்னதும், போட்டி முடிவுக்கு வந்தது. என் துணைவியார் எனக்கு புடவையை வேகமாக கட்டிவிட்டாலும், நாங்கள் அடுத்த அறைக்கு சென்று பின்னர் மேடைக்கு வந்ததால் ஏற்பட்ட தாமதத்தால் என்னால் முதல் மூன்று இடங்களுக்குள் வர இயலவில்லை.

நடுவர்கள் 4 போட்டிகளிலும் வாங்கிய மதிப்பெண்களைக் கூட்டி மூன்று பேர்களைத் தேர்ந்தெடுத்து நண்பர் நாச்சியப்பனிடம் கொடுத்தார்கள். வகுப்புத் தோழர்கள் முத்தையா, சக்கரவர்த்தி மற்றும் முகம்மது உஸ்மான் ஆகிய மூவரும் சம மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் இருப்பதாகவும், அவர்களில் யார் யார் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறப்போகிறார்கள் என்பதை இன்னொரு போட்டி வைத்து தீரமானிக்கப் போவதாக நண்பர் நாச்சியப்பன் சொன்னார்.

நாங்கள் எங்களுடைய இடத்தில் வந்து திரும்ப உட்கார்ந்ததும், நண்பர்கள் முத்தையா, சக்கரவர்த்தி மற்றும் முகம்மது உஸ்மான் ஆகியோருக்கான போட்டி தொடங்கியது. மூவரையும் வட்டமாக நிற்கவைத்து, ஒருவர் கையில் ஒரு பெரிய பந்தை கொடுத்து, அதை மற்றவருக்கு கை மாற்ற (Pass) சொன்னார்கள்.மூவரில் யார் பந்தைப் பிடிக்கும்போது முதலில் தவறவிடுகிறாரோ, அவர் மூன்றாம் இடத்திற்கு உரியவராவார் என்று சொன்னார் நண்பர் நாச்சியப்பன்.

மூவரும் வட்டமாக நின்று வேகமாக பந்தை மற்றவரிடம் கை மாற்றும்போது, ஒரு கட்டத்தில் நண்பர் முகம்மது உஸ்மான் பந்தை பிடிக்கத் தவறியதால், அவர் மூன்றாம் இடத்தை பிடித்ததாக அறிவித்தார் நண்பர் நாச்சியப்பன்.

நண்பர் முகம்மது உஸ்மான் அந்த இடத்திலிருந்து விலகிக்கொள்ள, நண்பர்கள் முத்தையாவும் சக்கரவர்த்தியும் ஆட்டத்தை தொடங்கினர். அவர்கள் நேர் எதிரே நின்று பந்தை தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டு இருக்கும்போது அவர்களுக்கிடையே இருந்த இடைவெளியை மெதுவாக அதிகமாக்கப்பட்டது.

இருவரையும் நாங்கள் குரல் எழுப்பி உற்சாகப்படுத்தியபோது, இருவருமே வெகு நிதானமாக ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருப்பினும் கடைசியில் நண்பர் சக்கரவர்த்தி பந்தை பிடிக்கும்போது நழுவவிட்டதால், அவர் இரண்டாம் பரிசுக்கு உரியவர் என்றும் நண்பர் முத்தையா முதல் பரிசைப் பெறுகிறார் என்று நண்பர் நாச்சியப்பன் அறிவித்தபோது அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.

பரிசுகள் பெற்ற மூவருக்கும் Hot Pack பரிசாக அளிக்கப்பட்டது. அந்த பரிசுகளைப் பெற்ற நண்பர்கள் புடவைகள் அணிந்த கோலத்தில் எடுக்கப் படங்கள் கீழே.நீலப் புடவை அணிந்திருப்பவர் முதல் பரிசு பெற்ற நண்பர் முத்தையா. அருகில் பரிசு பெறாவிட்டாலும் நண்பர் ஹரிராமன் இருக்கிறார்.இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் சக்கரவர்த்தி. அருகில் சிரித்த முகத்தோடு நிற்பவர் நண்பர் பாலுவின் மருமகன் திரு N.சிவகுமார்.அமெரிக்காவிலிருந்து வந்து கலந்துகொண்டு, மூன்றாம் பரிசைத் தட்டிச்சென்ற நண்பர் முகம்மது உஸ்மான்.

அந்த புடவைவை கட்டிக்கொள்ளும் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் சிலரின் படங்கள் கீழே.
நண்பர் செல்லையா
நண்பர் கோகுல்தாஸ்
நண்பர் பழனியப்பன்.


இந்த புடவை கட்டிகொள்ளும் போட்டியை மறுநாள் முத்துப்பேட்டைக்கு பேருந்தில் செல்லும்போது நண்பர் பழனியப்பன் அடிக்கடி சொல்லி எங்களை சிரிக்கவைத்தார்.

போட்டிகள் முடிவுக்கு வந்தபோது இரவு மணி 9 மணிக்குமேல் ஆகிவிட்டது. இரவு விருந்து, ஓட்டலில் உள்ள புல்வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அனைவரும் அங்கு செல்லலாம் என்றும், இரவு விருந்தை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பி உறங்கிவிட்டு. காலையில் எல்லோரும் சரியாக 7 மணிக்கு கீழே உள்ள உணவகத்தில் கூடுவோம் என்றும் நண்பர் பாலு சொன்னார்.

காலையில் சிற்றுண்டியை முடித்ததும் 8 மணிக்கு முத்துபேட்டை காயல் (Lagoon) பயணத்தை நண்பர் நாகராஜன் வழிநடத்தி செல்வார் என்றும் சொன்னார்.

எல்லோரும் கீழே இறங்கி புல்வெளியில் எடுத்தூண் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த. இரவு விருந்தில் கலந்துகொண்டோம்.அங்கு காரட் அல்வா, இட்லி-சாம்பார், இடியாப்பம்-தேங்காய் பால், ஊத்தப்பம்-சட்னி, சப்பாத்தி-குருமா, போண்டா, தயிற்சாதம், ஊறுகாய், மசாலா பால், பழக்கலவை (Fruit Salad), பீடா, மற்றும் அசைவப்பிரியர்களுக்காக விரால்மீன் குழம்பு மற்றும் Pepper Chicken என பல்வேறு உணவு வகைகளை வைத்து, எதை சாப்பிடுவது எதை விடுவது என்று திக்குமுக்காட வைத்துவிட்டனர் தஞ்சை நண்பர்கள்.

நண்பர்களிடம் சிரித்து பேசியபடியே, விருப்பப்பட்டதை அளவோடு சாப்பிட்டு, இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்தபோது மணி 10.30 ஐத் தாண்டிவிட்டது. காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டியிருந்ததால் உடனே உறங்கச் சென்றோம்.

தொடரும்

22 கருத்துகள்:

 1. படம் பார்க்கும்போதே மகிழ்ச்சியை விதைத்து செல்கிறது. பரிசு பெறாவிட்டாலும் ஹரிராமன் சாரோட புடவை கட்டு அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! தங்களின் பாராட்டை நண்பர் ஹரிராமனிடம் அவசியம் சொல்வேன்.

   நீக்கு
 2. நான் பதிவு 14 கில் கேட்டதற்கான விடை 24 கில் கிடைத்து இருக்கின்றது மகிழ்ச்சி

  புடவை கட்டிய புருசர்களின் மகிழ்ச்சி முகத்தில் தெரிகின்றது.
  வாழ்த்துகள் தொடர்கிறேன்....
  த.ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! ‘கேள்வி பிறந்தது அன்று. பதில் கிடைத்தது இன்று.’ என பாடத் தோன்றுகிறதா? நீங்கள் பதிவு 14 இல் மட்டுமல்ல பதிவு 22 லிலும் புடவை எதற்கு என அறிய ஆவல் என பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

   நீக்கு
 3. மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 24

  நடைபெற்றுள்ள போட்டிகளும், படங்களும், தாங்கள் விவரித்துள்ள விதமும் மிகவும் அருமையாக உள்ளன.

  புடவைக்கட்டுடன் தங்களைக் காண விரும்பினேன். ஆனால் அதை மட்டும் தாங்கள் ஏனோ காட்சிப்படுத்தவில்லை. :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! புடவைக் கட்டுடன் இருந்த என்னை படம் எடுக்கவில்லை. அதனால் தான் அதைக் காட்சிப் படுத்த இயலவில்லை. அன்று இரவு, நேரம் ஆகிவிட்டதால் எல்லோரையும் படம் எடுக்க முடியவில்லை. எடுத்த படங்கள் அனைத்தையும் வெளியிட்டுவிட்டேன்.

   நீக்கு
 4. புடவையில் ஏதோ இரகசியம் இருக்கிறது போலும். அத்துணைப் பேர் முகத்திலும் பெண்மை தவழ்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! புடவைகளில் எந்த இரகசியமும் இல்லை. நாம் தேசிய மாணவர் படையில் (N.C.C) இருக்கும்போது, பயிற்சிக்கு செல்லும்போது அந்த உடைகளை அணிந்ததும் ஒரே கம்பீரம்/மிடுக்கு தானே வரும் அல்லவா? அதுபோல், இந்த புடவையை அணிந்ததும், நளினம் தானே வந்துவிட்டது என எண்ணுகிறேன்.

   நீக்கு
 5. சாமி💐,
  எமக்கு ஒரு (ரெண்டு) உண்(ம்)ம தெரிஞ்சாகனும்.
  1) பதிவிட்ட உங்க படத்த மறைச்சது யாரு!
  2) ஏற்கனவே உடுத்தி இருக்கும் ஆடை மேல் புடவையை கட்டினா என்ன!? போர்த்தினா என்ன?!.
  ஆகவே கள்ள ஆட்டம் நடந்திருக்கு யுவரானர்😊. அதனால் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு!, ஆட்டத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க உத்தரவிடனும்... யுவரானர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், இரசிக்கும் முறையில் புதுமையாக பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி திரு அன்பே சிவம் அவர்களே!

   தங்களின் ஐயங்களுக்கான பதில் இதோ.
   1. என்னை படமே எடுக்காததால் அதை யாரோ மறைத்துவிட்டார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.
   2. நாங்கள் இருந்த அரங்கத்தில் உடைகள் மாற்ற அறைகள் இல்லாததால் போட்டிருந்த உடைகள் மேலேயே புடவையை கட்டிக்கொள்ளும்படியாகிவிட்டது. எனவே இதில் கள்ள ஆட்டம் எதுவும் நடக்கவில்லை. எனவே திரும்பவும் இந்த போட்டியை ஆரம்பிக்கவேண்டியதில்லை.

   எனவே தங்களது ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன என இந்த மன்றம் அறிவிக்கிறது!!!!!!!

   நீக்கு
 6. அனைவரின் மனதிலும் சந்தோசம் + உற்சாகம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டது சரியே. அன்று எல்லோர் மனதிலும் மகிழ்ச்சிதான்.

   நீக்கு
 7. புடவை கட்டியதும் கூடுதல் மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 8. போட்டியை சொன்னவுடனே வெற்றி நமக்கில்லையென்று.பாதி பேருக்கு தெரிந்திருக்கும். கலந்துகொண்டால்தானே வெற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உண்மையில் துணைவியர்களோடு வந்த நண்பர்கள் அனைவருக்கே போட்டியில் பங்கேற்றார்கள். பங்கேற்கும் எல்லோரும் பரிசைப்பெறமுடியாது எனத் தெரிந்திருந்தும் அனைவரும் மிக உற்சாகத்தோடு. போட்டியில் பங்கேற்றார்கள்.

   நீக்கு
 9. கணவன்மார்கள் மனைவிகளுக்குப் புடவை கட்டும் போட்டி இருந்திருந்தால் அமர்க்களமாய் இருந்திருக்கும் நல்ல ரசனை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! கணவர்களை புடவை கட்டிவிட சொல்லியிருந்தால் எல்லோரும் பங்கேற்றிருப்பார்களா என்பது ஐயமே!

   நீக்கு
 10. இந்தமாதிரி கலகல்ப்பான ஒரு சந்திப்பு எல்லோருக்கும் வாய்க்காது.அருமையான நிகழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உண்மையில் இந்த கலகலப்பான சந்திப்பு அனைவருக்கும் வாய்க்காது என்பது சரியே. அந்த வகையில் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்.

   நீக்கு
 11. தொடர் விட்டுப் போகாமல் நான் இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சியே. ஏனெனில் விதியாசமான போட்டி ‘அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க’ என்று யாரும் பாடவில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே

   நீக்கு