வியாழன், 18 மே, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 22


தஞ்சை கோவிலுக்கு சென்று வந்தது மகிழ்ச்சியைத் தந்தாலும் இரண்டு முக்கியமான இடங்களைப் பார்க்காமல் செல்லுகிறோமே என்ற வருத்தம் ஏற்பட்டது உண்மை என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.




அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், வேளாண்மை அறிவியல் படித்துக்கொண்டு இருக்கும்போது, இரண்டாம் ஆண்டில் (1963-64) ஆண்டுத்தேர்வு முடிந்ததும் விடுமுறையின் போது மே திங்களில் தஞ்சைக்கு சென்றிருந்தேன். அப்போது என் அண்ணன் டாக்டர் ஞானப்பிரகாசம் தஞ்சையில் கால்நடை மருத்துவராக பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

அவரோடு ஒரு நாள் மாலை பெரிய கோவிலுக்கு சென்றோம். அப்போது என் அண்ணனுடைய நண்பரும் வந்திருந்தார். சுவாமி தரிசனம் முடிந்தபின், ‘வாருங்கள். இந்த கோவிலில் எல்லோரும் எளிதாக பார்க்க இயலாத இரண்டு இடங்களை பார்க்கலாம்.’ என்று அழைத்தார்.
அவைகளைப் பார்க்க சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சிறப்பு அனுமதி தேவை பெற்றிருப்பதாக கூறி, முதலில் கருவறைக்கு பக்கவாட்டில் பூட்டப்பட்டிருந்த அறைபோல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அந்த அறையை திறந்துகாட்ட ஒரு ஊழியரும் வந்தார். அறைபோல் உள்ளதை திறந்ததும் சுமார் 6 அடி அகலமுள்ள இருட்டான பாதை தெரிந்தது. அங்குள்ள மின்விசை இயக்கியை (Switch) போட்டதும் பளீரென ஏற்பட்ட வெளிச்சத்தில் கருவறையைச் சுற்றி ஒரு சுவர் இருப்பதும் அதில் ஓவியங்கள் இருப்பதும் தெரிந்தது.

அதுபற்றி அந்த ஊழியர் விளக்கும்போது அந்த ஓவியங்கள் முதலில் யாருக்கும் தெரியாது என்றும்.அவைகள் அங்கு இருப்பதை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியாராக இருந்த திரு S.K.கோவிந்தசாமி என்பவர் தான் 30 களில் கண்டுபிடித்தார் என்றும் சொன்னார்.

அவைகள் சோழ மன்னர்கள் காலத்து ஓவியங்களாக இருக்குமோ என்று அந்த ஆராய்ச்சியாளர் ஆராய்ந்தபோது, அவைகள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகள் என்றும் நாயக்கர்கள் காலத்து ஓவியங்கள் என்றும் தெரிய வந்ததாம்.

சோழர்கள் காலத்து ஓவியங்கள் ஏதும் இல்லையே என்ற ஏமாற்றத்துடன் அவர் சுற்றிவரும்போது மேற்குப்பக்க சுவரில் சில ஓவியங்கள் பாளம் பாளமாய் வெடித்து இருந்ததைப் பார்த்து தொட்டபோது அவை உரிந்து விழுந்ததும், அதற்கு பின்னால் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் (Fresco) இருந்தனவாம்.

எதற்காக சோழர்கள் காலத்து ஓவியங்களின் மேல் நாயக்கர்கள் படம் வரைந்தார்கள் என்பது யாருக்கும் புரியவில்லையாம். ஒருவேளை அவர்களின் நோக்கம் சோழர்களின் ஓவியங்களை மறைப்பதற்காகவா அல்லது அந்த ஓவியங்கள் சேதமடைந்திருந்ததால் அதை மறைக்க செய்தார்களா எனத் தெரியவில்லையாம்.

ஆனால் நாயக்கர்கள் காலத்து ஓவியங்கள் சோழர்களின் ஓவியங்கள் போல் இல்லாமல் செப்பமற்ற (Crude) முறையில் இருந்தன என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு காரணம் அவைகளை எழுத பயன்படுத்தப்பட்ட கரைசல் (Solution) தானாம். அந்த கரைசல் பூவின் இதழ்கள், வண்ண இலைகள், மஞ்சள், உப்பு, களிமண் மற்றும் மூலிகைசெடிகளை கலந்து தயாரிக்கப்பட்டதாம்.

நாங்கள் பார்த்தபோது சில இடங்களில் மேலே உள்ள நாயக்கர்கள் காலத்து படங்களும், சில இடங்களில் சோழர்கள் காலத்து படங்களும் தெரிந்தன. தொல்பொருளியல் துறையினர் (The Archaeological Survey of India ) நாயக்கர் காலத்து படங்களுக்கு சேதமில்லாமல் பிரித்து எடுத்து சோழர்கள் காலத்து படங்களையும் பாதுகாக்கும் முயற்சியில் எடுபாட்டிருப்பதாக அந்த ஊழியர் சொன்னார்.

(பின்னர் தொல்பொருளியல் துறையினர் (ASI) இத்தாலிய முறையான Distacco வை பயன்படுத்தி நாயக்கர்கள் காலத்து ஓவியங்களை பிரித்தெடுத்ததன் மூலம் சோழர்கள் கால ஓவியங்களையும் காப்பாற்றிவிட்டார்கள் என்றும், நாயக்கர்கள் காலத்து ஓவியங்களை கண்ணாடியிழை (Fibre Glass) அட்டைகளில் ஒட்டி தனியே வருகையாளர்களின் பார்வைக்காக வைத்துவிட்டதாக நாளிதழில் படித்திருக்கிறேன்.)

இணையத்திலிருந்து எடுத்த படங்கள் கீழே.


சோழர்கள் காலத்தில் வரைந்த நடராஜர் படம்


கண்ணாடியிழை அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நாயக்கர்கள் காலத்து திரிபுராந்தகர் படம்.

அடுத்த முறை இங்கு வரும்போது பிரித்தெடுக்கப்பட்ட படங்களைக் காண இயலும் என்று அந்த ஊழியர் சொன்னார். வியப்போடு அவைகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.

வெளியே வந்ததும் என் அண்ணனின் நண்பர் ‘வாருங்கள் கோவிலின் மேலே உள்ள முதல் தளத்திற்கு செல்வோம்.’ என்று சொல்லி கூட்டி சென்றார்.

கோவிலின் முதல் தளத்தில் கருவறைக்கு மேலே அழகான சிற்பங்கள் பல வரிசையாய் செதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். நெருங்கிப் பார்த்தபோது சிவபெருமான் பரத நாட்டியம் ஆடுவதுபோன்று செதுக்கப்பட்டிருந்தன

எதற்கு இத்தனை சிலைகள் எனக் கேட்டதற்கு அந்த நண்பர் ‘பரதநாட்டியத்தில் 108 அடவுகள் உள்ளன. வடமொழியில் அதற்கு கர்ணங்கள் எனப் பெயர். அந்த 108 அடவுகளில், 81 அடவுகளை விளக்கும் சிலைகள் மட்டும் இங்கு வடிக்கப்பட்டிருக்கின்றன.அதுவும் சிவபெருமானே நடனமாடி நான்கு கைகளில் அந்த அடவுகளை காண்பிப்பது போன்று இந்த சிற்பங்களை செதுக்கியிருப்பதுதான் சிறப்பு.’ என்று சொன்னார்.

(உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று சொல்லப்படுகிறது)

மேலும் ‘மீதி உள்ள ‘அடவு’களுக்காக கற்கள் பதிக்கப்பட்டிருந்தும் அவைகளில் சிலைகள் வடிக்கப்படவில்லை. ஏன் அவைகளில் சிலைகள் செதுக்காமல் வெறுமனே உள்ளன என்பதை யாராலும் சொல்ல இயலவில்லை. ஒருவேளை இராஜராஜ சோழன் அப்போது போருக்கு புறப்பட்டதால் சிற்பப் பணி நிறுத்தப்பட்டதா அல்லது வேறு காரணத்தாலா என்று தெரியவில்லை.’ என்றும் சொன்னார் அவர்.

இணையத்திலிருந்து எடுத்த படம் கீழே


நடனமாடும் சிவன் சிலகள் (அடவுகளைக் காண்க)

உண்மையில் இந்த அடவுகள் உள்ள சிவபெருமானின் சிலைகள் இருப்பது 1956 ஆம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம். தொல்பொருளியல் துறையைச் சேர்ந்த திரு பாலகிருஷ்ணா என்ற ஊழியர் கோவில் விமானத்தில் முளைத்திருந்த செடிகொடிகளை அகற்றும்போது முதல் தளத்திற்குப்போகும் ஒரு வழி இருப்பதைப் பார்த்து அவரது மேலதிகாரிகளிடம் சொன்னாராம்.

பின்பு அந்த வழியை சரிப்படுத்திப் பார்த்தபோது உள்ளே அறை இருப்பது தெரிந்ததாம். அதில் வௌவால்கள் இட்ட புழுக்கைகள் மலைபோல் பல அடி உயரத்திற்கு இருந்தனவாம். அவைகள் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கெட்டிப்பட்டு இருந்ததால் வெட்டி எடுக்கப்பட்டதாம். பிறகு அந்தக் இடத்தை சுத்தம் செய்தபோதுதான் இந்த அற்புதச் சிலைகள் இருப்பது தெரிந்ததாம்.

பாரத நாட்டியக் கலைஞர்களுக்கு இது ஒரு தகவல் தேட்டம் (Reference) போல பயன்படும் என்றார் அவர். நடனக்கலை பற்றி ஏதும் தெரியாததால் அந்த சிற்பங்களை மிகுந்த ஆச்சரியத்தோடு இரசித்துவிட்டு திரும்பினோம்.

நான் தஞ்சை பொன்விழா சந்திப்பிற்காக வருகிறேன் என்று சொன்னதுமே தஞ்சையில் உள்ள நண்பர் திரு இக்பால், ‘சார். தங்களுக்கு நேரம் இருப்பின் எனது நண்பர் மூலம் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சில இடங்களை பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.’ என்று சொன்னார்.அவர் சொன்னது இந்த இரண்டு இடங்களைத்தான். நேரம் இல்லாததால் அவர் உதவ முன் வந்தும் அவரது உதவியை பெற்றுக்கொள்ள இயலவில்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்களும் தற்போது எப்படி இருக்கின்றன என்று பார்க்க ஆசைப்பட்டது உண்மை. ஆனால் அவைகளைப் பார்க்க முடியாமல் திரும்புகிறோமே என்ற எனது ஆதங்கத்தைத்தான் சென்ற பதிவில் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

ஓட்டலுக்கு சென்ற பேருந்து வந்ததும், அதில் ஏறி ஓட்டலை அடைந்தபோது இரவு 7.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. கையில் வைத்திருந்த தலையாட்டி பொம்மையை அறையில் வைப்பதற்காக அவசரம் அவசரமாக அறைக்கு சென்றோம்.

மாலை போட்டியில் கலந்துகொள்ள வரும்போது அவசியம் அனைவரும் ஒரு புடவையை எடுத்து வரவேண்டும் என்று சொல்லியிருந்ததால் என் துணைவியார் ஒரு புடவையை மறக்காமல் எடுத்துக்கொண்டதும் இருவரும் போட்டியில் கலந்துகொள்ள காலையில் கூடிய அரங்கிற்குள் நுழைந்தோம்

தொடரும்

19 கருத்துகள்:

  1. ஓவியங்கள் பற்றிய அபூர்வமான விடயங்கள் தந்தமைக்கு நன்றி.

    போட்டியில் புடவை எதற்கு என்பதை அறிய தொடர்கிறேன்
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும், நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
    2. புடவை எதற்கு என்பதை வரும் பதிவுகளில் தெரியும்.

      நீக்கு
  2. ஓவியங்கள் பற்றிய விளக்கம் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமான தகவல்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. வழக்கம்போல தகவல்கள் அனைத்தும், படங்களுடன் மிகவும் அருமையாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    மிகப் பழமை வாய்ந்த பொக்கிஷங்களான ஓவியங்களை இன்று வரை இதுபோலப் போற்றிப்பாதுகாத்து வருவது அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    புடவைக்கதை பற்றி அறிய ஆவலுடன் உள்ளோம். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பழைய ஓவியங்களை பாது காத்த பெருமை தொல்பொருளியல் துறையினருக்கே சேரும். புடவை எதற்காக கொண்டு வர சொன்னார்கள் என்பதை வரும் பதிவுகளில் சொல்வேன்.

      நீக்கு
  4. பலர் பார்த்தேயிராத ஓவியங்கள்,சிர்பங்களைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது.மிகச் சிறப்பானவிளக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  5. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு பல முறை சென்றிருந்தாலும் ஓவியங்களைக் கண்டதில்லை கருவூர் கிழார் ராஜராஜ சோழன்
    ஓவியங்கள்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் 108 நடன அடவுகளை சிதம்பரம் கோவில் கதவுகளில் சிற்பங்களாய்க் கண்டிருக்கிறேன் நடன அரசி டாக்டர் பத்மா சுப்பிரமனியம் அவரது ஆராய்ச்சிக்கு அதை உபயோகப்படுத்தினார் என்று கேள்வி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. பரத நாட்டிய நடன அடவுகள் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் மற்றும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலிலும் இருப்பதாக அறிகிறேன். நடன அரசி பத்மா சுப்ரமணியம் இந்த அடவுகள் பற்றி ஆய்வு செய்து தனது முனைவர் பட்டத்தை பெற்றார் என்பதை நானும் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  6. ஓவியங்களும் சிற்பங்களும் நான் அறியாத ஒன்று. அடுத்த முறை செல்லும் பொது பார்க்க இயலுமா என முயற்சிக்க வேண்டும். அரிய தகவல் கொடுத்த தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு பரமசிவம் அவர்களே! நான் தந்திருக்கும் தகவல் தங்களை அந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்க்கும் ஆவலை உண்டாக்கியிருக்கிறது என அறிந்து மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  7. மிகவும் பயனுள்ள பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  8. சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் காலத்து ஓவியங்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள், ஆய்வுக் கட்டுரை மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  9. ‘//வாருங்கள். இந்த கோவிலில் எல்லோரும் எளிதாக பார்க்க இயலாத இரண்டு இடங்களை பார்க்கலாம்.//

    நாங்கள் 1980 என்று நினைக்கிறேன் என் கணவரின் அண்ணா அரசுதுறையில் உயர் பதிவியில் இருந்தார்கள் தஞ்சையில் அவர்களின் உதவியால் உள்ளே போய்ப் பார்த்தோம்.
    நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு போய் வந்ததை பகிர்ந்து கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! நீங்களும் அந்த கலைப் பொக்கிஷங்களைப் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு