நாங்கள் பயணித்த ஜம்புவனோடையின் இருபக்கங்களிலும் நெருக்கமாக இருந்த கண்டல் (Mangrove) தாவரங்கள் எனப்படும் அலையாத்தி தாவரங்கள் காற்றில் அசைந்தது, எங்களை காயலுக்கு ‘வாருங்கள்! வாருங்கள்!’ என அழைப்பது போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.
நான் இருந்த படகில் என்னுடன் என் துணைவியார், நண்பர் கோவிந்தசாமி அவரது துணைவியார், நண்பர் அழகப்பன் அவரது துணைவியார், நண்பர் திருநாவுக்கரசு அவரது துணைவியார் மற்றும் நண்பர் T.N. பாலு ஆகியோர் இருந்தனர். ஆனால் ஏனோ தெரியவில்லை யாருமே பேசாமல் அமைதியாக படகு செல்லும் ஓடையின் இரு பக்கத்தையும் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.
எங்கள் படகைக் கடந்து சென்ற மற்ற படகுகளை நான் எடுத்த படங்கள் கீழே.
கூண்டு உள்ள படகில் இடமில்லாததால், கூண்டு இல்லாத படகில் பயணித்த நண்பர்களும் அவர்களின் துணைவியர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது மகிழ்ச்சியுடன் எங்களைக் கடந்து செல்வதை எனது நிழற்படக்கருவி படம் பிடிக்கத் தவறவில்லை. அந்த படங்கள் கீழே.
முடிவே இல்லாத பயணம் போல் தோன்றிய அந்த ஒரு மணி நேரத்தில் எங்கள் கண்களுக்கு விருந்து அளித்த அந்த இடத்தை நீங்களும் கொஞ்ச நேரம் (16 நொடிகள்) பாருங்களேன்.
படகில் பயணிக்கும் போது எடுத்த காணொளிக்காட்சி
அந்த அலையாத்தி மரங்களைப் பார்க்கும்போது ஆரவாரமின்றி அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் ஏற்பட இருந்த பாதிப்புகளைத் தடுத்து முத்துப்பேட்டையைக் அழிவிலிருந்து காப்பாற்றியது அவைகள் தான் என்பது அப்போது நினைவுக்கு வந்தது.
இந்த அலையாத்தி மரங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இராமேஸ்வரம், முத்துப்பேட்டை, சிதம்பரம் போன்ற ஊர்கள், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் தாக்குதலால் பூம்புகார், அரிக்கமேடு போன்ற ஊர்களைப்போல கடலால் விழுங்கப்பட்டிருக்கும்.
(ஆழிப்பேரலை என்று எதைக் குறிப்பிடுகிறேன் என்று சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்கு காரணம் தமிழிலேயே பெயர் இருந்தும் தமிழர்களாகிய நாம் ஏனோ வேற்றுமொழிப் பெயரைக்கொண்டு அவைகளை அறிகிறோம்.
எடுத்துக்காட்டாக உயர்திரை நெடுநீர் என்றும், பெருநீர் என்றும், வரம்பு இல் வெள்ளம் என்றும் சொல்லப்பட்ட ஆழிப்பேரலையை சுனாமி என்ற ஜப்பானிய மொழியில் சொன்னால் தான் புரிந்துகொள்கிறோம்!
நம்முடைய சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து பாடல் ஒன்றில், ஆழிப்பேரலையை வரம்பு இல் வெள்ளம் என்றும் நற்றிணைப் பாடல் ஒன்றில். ஆழிப்பேரலையை உயர்திரை நெடுநீர் என்று சொல்லப்பட்டிருக்கிறதென்று எவ்வளவு பேருக்குத்தெரியும்.
கொத்தமல்லி என்று எல்லோருக்கும் தெரிந்த அழகான பெயர் இருக்க தனியா என்று சொல்ல ஆர்வம் காட்டும் நாம், அதிகம் அறியாத ஆழிப்பேரலையை சுனாமி என்று அழைப்பதில் வியப்பென்ன இருக்கிறது! )
கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர்நீரில் (Brackish Water) வளரும் இந்த கண்டல் தாவரங்களின் (Mangrove) ஊடே வரும், அலைகள் அதிகம் உள்ள கடல் நீரானது தடுக்கப்பட்டு வேகம் குறைந்து திரும்புவதால் இந்த தாவரங்கள் அலையாத்திக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளை சுரபுன்னைக் காடுகள் என்றும் சொல்வதுண்டு.இந்த அலையாத்திக் காடுகள் தான் கடலை ஒட்டியுள்ள நிலப்பரப்புக்கு இயற்கை அரண்கள் என சொல்லலாம்.
இந்த கண்டல் தாவரங்களில் மட்டும் 110 க்கும் மேற்பட்ட வேறுபட்ட இனங்கள் (Species) உள்ளனவாம். முத்துப்பேட்டை காயலில் உள்ள கண்டல் தாவரத்தின் தாவரப்பெயர் (Botanical Name) Avicennia marina என்பதாகும். அதனுடைய படம் கீழே.
இந்த தாவரங்களைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு. அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொடரும்
அலையாத்தி மரங்களின் பயன் எவ்வளவு மதிப்பு மிக்கவை...
பதிலளிநீக்குகாணொளி அருமை ஐயா...
வருகைக்கும், கருத்துக்கும், காணொளியை பாராட்டியதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குசுனாமிக்கே டாட்டா காட்டிய அலையாத்தி காடு அருமை :)
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே!
நீக்குவணக்கம் நண்பர் முதல் நபராக வந்து கருத்துரை தந்சு ஓட்டு போட்டு போனேன் பிறகு அப்பதிவை நீக்கி விட்டீர்களோ....
பதிலளிநீக்குஆலிப்பேரலை குறித்து தங்களது சமூக கோபத்தை கண்டேன் என்ன செய்வது நமது நிலைப்பாடு இப்படித்தான்.
தாவரங்களைக் குறித்து அறிய காத்திருக்கிறேன்
நண்பருக்கு... நான் கேட்டது பதிவை நீக்கி விட்டீர்களோ... கருத்துரையை அல்ல!
நீக்குகாரணம் இம்முறை தங்களது பதிவு டேஷ்போர்டில் இரண்டு தடவை வெளியாகி இருக்கிறது.
திருத்தம் செய்யும்பொழுது ஏற்பட்ட குழப்பத்தில் எனது கருத்துரையும் மறைந்து விட்டது நன்று, நன்றி.
வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! அலையாத்தி தாவரங்கள் பற்றி அறிய காத்திருப்பதற்கு நன்றி! முதலில் பதிவிடும்போது ஏற்பட்ட ஒரு சிறிய தவறால் அந்த பதிவை நீக்கிவிட்டு திரும்பவும் பதிவிடும்படி ஆகிவிட்டது. அதனால் தாங்கள் அளித்த முதல் பின்னூட்டமும் போய்விட்டது
நீக்குநல்லதொரு பகிர்வு. கல்லூரி சமயத்தில் பிச்சாவரம் சென்று இது போன்று படகுப் பயணம் செய்தது நினைவில் இன்றும் பசுமையாய்......
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! இந்த பதிவு தங்களின் நினைவலைகளை தூண்டிவிட்டது அறிந்து மகிழ்ச்சி!
நீக்கு//ஆனால் ஏனோ தெரியவில்லை யாருமே பேசாமல் அமைதியாக படகு செல்லும் ஓடையின் இரு பக்கத்தையும் பார்த்துக்கொண்டே வந்தார்கள்//
பதிலளிநீக்குஇந்த சவாரி கிட்டத்தட்ட ஒரு தியான நிலைக்கு கொண்டு சென்றிருக்கும் என்று நினைக்கிறேன். படகில் செல்லும் வீடியோ பார்க்கவே அமைதியைத் தருகிறது. அமைதியான பின்னணி இசையை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
.வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். எல்லோரும் மந்திரத்தால் கட்டுண்டது போன்ற நிலையில் (Spellbound) இருந்தது உண்மை. வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் ஆலோசனை பெற்று பின்னணி இசையை இணைத்திருக்கலாம் தான். ஏனோ எனக்கு அந்த எண்ணம் ஏற்படவில்லை
நீக்குஉங்களது காயல் பயணம் என் நினைவுகளைக் கிளறி விட்டது அதன் பலன் படகுப் பயணம் என்னும் ஒரு பதிவு நன்றி ஐயா
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! எனது பதிவு தங்களது பழைய நினைவுகளைக் கிளறி தங்களின் படகு பயணம் பற்றி எழுத காரணமாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி!
நீக்கு//அலையாத்தி தாவரங்கள் காற்றில் அசைந்தது, எங்களை காயலுக்கு ‘வாருங்கள்! வாருங்கள்!’ என அழைப்பது போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.//
பதிலளிநீக்குகம்பராமாயணக் காட்சியை நினைவு கொண்டேன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! அலையாத்தித் தாவரங்கள் அசைந்ததைப் பற்றி நான் வேடிக்கையாக ‘எங்களை வருக.வருக என அழைப்பது போல் இருந்தது என்று எழுதியிருந்தது, தங்களுக்கு இராமபிரான் விசுவாமித்திர முனிவருடனும் தம்பி இலக்குவனோடும் மிதிலையில் நுழைந்தபோது அங்கிருந்த கொடிகள் ஆடியது இராமனை கை நீட்டி வருக என அழைத்ததை போல் இருந்தது என்று கம்பர் பால காண்டத்தில் மிதிலை காட்சிப்படலத்தில்
நீக்கு‘மை அறு மலரின் நீங்கி.
யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
அழைப்பது போன்றது அம்மா!
என்று எழுதியிருந்ததை நினைவூட்டியது என அறிந்து மகிழ்ச்சி!
காணொளிக்காட்சி அருமை. பார்க்கவேண்டிய இடம். பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குகாணொளியும், படங்களும் காயல் பயண அனுபவமும் அருமை.
பதிலளிநீக்குஆழிப்பேரலை, அலையாத்தி மரங்கள் பற்றி சொன்னது அருமை.
வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! அடுத்த பதிவில் இந்த அலையாத்தி தாவரங்கள் பற்றி பலர் அறியாத தகவல்களைத் தர இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.
நீக்குசுனாமி - ஆழிப்பேரலை விளக்கம் நன்று. தாய் மொழியான நம் தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் பற்றினை உங்களது ஒவ்வொரு பதிவிலும் காண்கிறேன்.
பதிலளிநீக்கு// ஆனால் ஏனோ தெரியவில்லை யாருமே பேசாமல் அமைதியாக படகு செல்லும் ஓடையின் இரு பக்கத்தையும் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.//
பொதுவாகவே பரிசல், படகு பயணங்களின் போது, பத்திரமாக கரை திரும்ப வேண்டுமே என்ற அச்ச உணர்வே மிகுந்து இருக்கும்.
வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தமிழ் படித்த தங்களிடமிருந்து பெற்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி!
நீக்குநீங்கள் சொல்வதுபோல் படகில் செல்லும்போது பயணம் பற்றிய அச்ச உணர்வு காரணமாக பேசாமல் இருந்திருக்கலாம்.
திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:
பதிலளிநீக்குபடங்களும் செய்திகளும் மிகவும் அருமை.
நான் முதன்முதலாக மும்பை >>>>> கோவா வுக்கு கப்பலின் மொட்டை மாடிப்பகுதியில் அமர்ந்து, பகல் வெயிலிலும், இரவு குளிரிலும் 24 மணி நேரங்கள் பயணம் செய்த அனுபவத்தை நினைத்துப் பார்த்துக்கொண்டேன்.
அதுபோல இரண்டாம் முறையாக கொச்சினில் பயங்கரமான அலை வீசிக் கொந்தளிப்புடன் இருந்த கடலினில் ஓர் பரிசலில் பயந்துகொண்டே பயணித்ததும் நினைவுக்கு வந்து என்னை அச்சுறுத்தியது. எங்கள் அனைவரையும் ஒரேயடியாக வயிற்றைக் கலக்கி புரட்டிப்போட்டுவிட்டது. அந்தப் பரிசலில் துடுப்பு போடுபவரோ, இது ஆழமே இல்லாத இடமாக்கும் எனச் சொல்லி எங்களை மேலும் வியப்பில் ஆழ்த்தினார்.
கொத்தமல்லி என்பதைச் சொல்லும்போதே அதன் வாசனை மூக்கைத்துளைக்கும் போது, ஏன்தான் தனியா என்று சொல்லுகிறார்களோ .... தங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானதுதான்.
தங்களின் இந்தப்பயணக்கட்டுரையை நானும் தொடர்ந்து வாசித்து மகிழ்கிறேன். மிக்க நன்றியுடன் VGK
வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பெரும்பாலோருக்கு படகில் பயணம் செய்யும்போது பயம் ஏற்படுவது இயற்கையே. எனக்கும் முதன் முதலில் (இங்கு அல்ல) படகில் பயணம் செய்போது பயம் இருந்தது உண்மை.
பதிலளிநீக்கு