சனி, 8 ஜூலை, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 28

முத்துப்பேட்டை காயலை கண்டு களிக்க படகில் நாங்கள் பயணம் செய்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமுன் காயல் என்றால் என்ன என்பது பற்றி தெரியாதவர்களுக்கு அது பற்றி கொஞ்சம் சொல்லாமென நினைக்கிறேன்.
காயல் என்பதை கடல் சார்ந்த ஏரி எனவும் சொல்லலாம். இந்த காயலை கடற்காயல் அல்லது வாவி அல்லது களப்பு என்றும் சொல்வதுண்டு. இது கடலிலிருந்து மணற்குன்றுகளாலோ அல்லது பவளப் பாறைகளாலோ பிரிக்கப்பட்ட ஒரு ஆழமில்லாத உவர் நீர்ப்பரப்பு.உவர் நீர் (Brackish water) என்பது நன்னீரும் கடல் நீரும் கலந்த உவர்ப்புத்தன்மை கொண்ட நீர். இந்தப் நீர்பரப்பில் உள்ள உப்புத்தன்மை, மழை, ஆவியாதல், வெள்ளநீர்வரத்து, கடலலை ஏற்றிறக்கத்தால் அல்லது குளிர்காலங்களில் கடல்நீர் ஏற்றம் போன்றவைகளால் வேறுபடும் என்கிறார்கள் அறிவியலார்.

தமிழகத்தில் உள்ள காயல்களில், மன்னார் வளைகுடா அருகே உள்ள காயலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே உள்ள கலிவெளி காயலும், கோவளம் அருகே உள்ள முட்டுக்காடு காயலும், முத்துபேட்டை காயலும் தான் பெரிய காயல்கள்.

முத்துபேட்டைக்கு கிழக்கேயும், மேற்கேயும் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான (Tributaries) கோரையாறு மற்றும் பாமணி ஆறும், முத்துபேட்டைக்கு அருகே ஓடும் கீழைத்தாங்கியாறு, மரக்கா கோரையாறு போன்ற ஆறுகளும், வங்காள விரிகுடாவையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ‘பாக் நீரிணை’யில் (Palk Strait) சேருமுன் இணைந்து உருவாக்கியதுதான், நாங்கள் பார்க்க சென்ற முத்துபேட்டை காயல். இதை முள்ளிப்பள்ளம் காயல் என்றும் சொல்வதுண்டு.பாக் நீரிணையை (வங்காள விரிகுடாவை) ஒட்டிய காவேரியின் கடைமடையில் (படுகையில்) அமைந்துள்ள இந்த முத்துபேட்டை காயலின் பரப்பளவு 20,000 ஹெக்டர். (ஆனால் சிலர் இதன் பரப்பளவு 6803.01 ஹெக்டர் தான் என்கிறார்கள்) இதனுடைய அகலம் ஒரு கிலோமீட்டர். ஆனால் ஆழம் 4 அடிக்குள் தான்.

இந்த காயலின் கரையில் கண்டல் (Mangrove) தாவரங்கள் எனப்படும் அலையாத்தி தாவரங்கள் வளர்ந்து காயலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இவைகளை சுரபுன்னை என்றும் சொல்வதுண்டு. இந்த அலையாத்தி தாவரங்கள் உள்ள காடு மட்டும் மொத்தப்பரப்பில் 4 விழுக்காடு என புள்ளியியல் தகவல்கள் சொல்கின்றன. இந்த தாவரங்கள் பற்றி படகுப் பயணம் பற்றி சொல்லும்போது சொல்வேன்.


மய்ய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் (Minstry of Environment and Forests) நல்கையுடன் (Sponsorship), அண்ணாமலைப் பல்கலைக் கழக, கடல் வாழ் உயிரியல் (Marine Biology) துறை முத்துப்பேட்டை காயல் பற்றி ஆய்வு செய்து அளித்திருக்கும் சுற்றுச்சூழல் தகவல்படி, இந்த காயலில் 16 வகையான மிதவைத் தாவர நுண்ணுயிர்களும் (Phytoplankton), 19 வகையான மட்டி எனப்படும் சிப்பி நண்டு இன உயிரிகளும் (Shell Fish), 23 வகையான துடுப்பு (கொடுவா) மீன்களும் (Fin Fish), 160 வகையான பறவையினங்களும், 107 வகையான பூச்சிகளும், 7 வகையான பாம்பு போன்ற ஊர்வன உயிரிகளும் (Reptile), 11 வகையான குள்ளநரி, புனுகுப்பூனை போன்ற பாலூட்டிகளும் (Mammal), 6 வகையான தாவரங்களும் (Flora), 17 வகையான நீலப்பச்சை நுண்ணுயிரிகள் (Cyanobacterial species) உள்ளனவாம்.

பொதுவாக எல்லோருக்கும் இது ஒரு அழகிய சுற்றலாத் தலம் என்றாலும், வேளாண்மை, விலங்கியல், தாவரவியல்,கடல்வாழ் உயிரியல்,வனவியல்,மற்றும் சுற்றுச்சூழல் இயல் ஆகிய பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த முத்துப்பேட்டை காயல் ஒரு கல்விக்களஞ்சியம் ( Encyclopaedia ) என்பேன் நான்.

எங்களின் காயல் பயணம் பற்றி அடுத்த பதிவில் சொல்லுவேன்.

தொடரும்

24 கருத்துகள்:

 1. காயல் பற்றிய விபரம் அறிந்தேன்.
  மேலும் அறிய தொடர்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 2. காயல் பற்றி விவரம் தெரிஞ்சுக்கிட்டேன்பா. எனக்கு கடல் சார்ந்த பகுதின்னா ஒரு கிரஷ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே!

   நீக்கு
 3. காயல் பற்றிய விவரங்கள் சிறப்பு. தொடரின் சில பகுதிகள் படிக்க விடுபட்டிருக்கிறேன். படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 4. இந்தப் பகிர்வும் தகவல் களஞ்சியம்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 5. உங்களின் இப்பதிவைப் படித்ததும், அறிவியல் வகுப்பிற்குள் நுழைந்து வெளியே வந்த மாணவனின் மன நிலையை உணர்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வேளாண் அறிவியல் கற்றவர் பதிவு எழுதும்போது அவரை அறியாமல்(!) அறிவியல் தகவல்கள் வருவது இயற்கை தானே!

   நீக்கு
 6. பிச்சாவரம் காயலில் சேருமா? காயல் குறித்து அறிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பிச்சவரம் காயலில் வராது. ஏனெனில் பிச்சாவரம் அலையாத்திக்காடு வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் கழிமுகத்தில் (Estuary) தான் உள்ளது. பிச்சாவரம் அலையாத்திக்காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

   நீக்கு
 7. சில ஆண்டுகளுக்கு முன் கோட்டயம் அருகே குமரகம் சென்றிருந்தோம் அங்கிருக்கும் வேம்பநாட்டுக்காயலில் அஷ்டமுடி ஏரி என்கிறார்கள் படகில் சுமார் இரண்டு மணி நேரம் பயணித்தது நினைவுக்கு வருகிறதுபடகுப் பயண்ம் முழுவதும் வீடியோவாக எடுத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! குமரகம் கோட்டயம் மாவட்டத்திலும், அஷ்டமுடி ஏரி கொல்லம் மாவட்டத்திலும் உள்ளன. இரண்டு இடங்களுக்கும் சென்றிருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 9. எந்த அலையாத்திக்காட்டிலும் இதுவரை சென்றதில்லை ,பார்க்க வேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகிறது உங்களின் விளக்கம் !சுனாமியைத் தடுப்பதில் இந்த அலையாத்திக்காடுகளின் பங்கு மிகப் பெரியது என்று படித்த நினைவு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! அவசியம் பிச்சாவரத்திற்கோ அல்லது முத்துபேட்டை காயலுக்கோ சென்று அலையாத்தி தாவரங்களைப் பாருங்கள்.

   நீக்கு
 10. காயல் என்பது பற்றி தங்களின் இந்தப்பதிவின் மூலம் மட்டுமே விரிவாக நான் அறிந்துகொண்டேன்.

  இந்தப்பதிவே ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக உள்ளது.

  பயனுள்ள இந்தப்பதிவுக்குப் பாராட்டுகள். பதிவின் தொடர்ச்சிகள் மேலும் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 11. பயனுள்ள பகிர்வுக்கு வாக்கும் அளித்தேன் வாழ்க வாழ்கவே தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

   நீக்கு
 12. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 13. காயல் பற்றி அறிந்து கொண்டேன்.
  படங்கள் விவரங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!

   நீக்கு