செவ்வாய், 18 ஜூலை, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 29

நாங்கள் காயல் பயணம் மேற்கொள்ள வேண்டிய தோணித்துறை (Boat Jetty). எங்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னந்தோப்பு வீட்டிலிருந்து, ஐந்து மணித்துளி நடைப்பயணத்தில் உள்ள கோரையாற்றின் கிளை வாய்க்காலான ஜம்புவானோடையில் இருந்தது. நண்பர் நாகராஜன் தலைமையில் எல்லோரும் கையில் தண்ணீர் பாட்டில்களுடன் படகில் ஏற தோணித்துறைக்கு காலை 10.30 மணிக்குப் புறப்பட்டோம்.

நாங்கள் படகில் ஏறிய தோணித்துறை கழுகுப் பார்வையில் – கூகிளாருக்கு நன்றி!


நாங்கள் அங்கு சென்றபோது நண்பர் நாகராஜன் செய்திருந்த ஏற்பாட்டின்படி எங்களுக்காக விசைப்பொறி (Motor) பொருத்தப்பட்ட படகுகள் தயாராக இருந்தன.
முத்துப்பேட்டை காயல் பகுதி முழுதும் தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களுடைய முன் அனுமதியில்லாமல் காயலைப் பார்க்க படகில் பயணிக்க இயலாது. முத்துப்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று படகுக்கு பணம் கட்டினால் தான் படகில் பயணிக்கமுடியும். அவர்களிடம் கூண்டு உள்ள படகுகள், கூண்டு இல்லாத படகுகள் என இரண்டு வித படகுகள் உள்ளன.

கூண்டு உள்ள படகுகளில் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க மேலே கூரை (Canopy) உண்டு. இந்த படகை அவர்கள் குடை உள்ள படகு என்றும் சொல்கிறார்கள். கூண்டு உள்ள படகிற்கு வாடகை 2500 ரூபாய். கூண்டில்லா படகிற்கு 1500 ரூபாய்.

தோணித்துறையிலிருந்து காயலை இணைக்கும் கால்வாயின் நீளம் அதிகமில்லை வெறும் 12 கிலோமீட்டர்கள் தான்! அதாவது இந்த கால்வாயில் சுமார் 1.30 மணி பயணம் செய்துதான் காயலை அடையமுடியும். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்ப ஆக மொத்தம் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.

நாம் பார்க்க இருக்கும் காயல் அருகே உணவகங்கள் ஏதும் இருக்காதாகையால் சாப்பிட ஒன்றும் கிடைக்காது என்பதால் கையில் தண்ணீரும், சாப்பிட பிஸ்கட் போன்றவைகளை எடுத்து செல்வது நல்லது. உச்சி வெயில் அதிகம் இருக்கும் எனவே கூண்டு உள்ள படகில் செல்வதே உசிதம்.

கால்வாயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் ஏறுவதற்கு வசதியாக கரையிலிருந்து கட்டப்பட்டிருந்த ஒரு கற்காரை (Concrete) நடைமேடையில் (Platform) இருந்து கீழே இறங்க படிக்கட்டுகள் இருந்தன. ஆனால் அவைகளில் கைப்பிடி இல்லாததால் வெகு நிதானமாக கீழே இறங்கினோம். இறங்கும்போது சற்று பயமாக இருந்தது எங்கே கீழே விழுந்துவிடுவோமோ என்று.

கீழே தயாராக இருந்த படகில் 3 பேர்கள் அமரக்கூடிய நான்கு விசிப்பலகைகள் (Benches) இருந்தன. அதில் 12 பேர் சௌகரியமாக உட்காரலாம் என்றாலும் 9 லிருந்து 10 பேர் வரை ஏறியதும் அந்த படகை ஒட்டுபவர் அதை நகர்த்தி அடுத்த படகு அங்கு வந்து மற்றவர்களை ஏற்ற வழி செய்தார். கூண்டு உள்ள படகுகள் குறைவாக இருந்ததால் சற்று பின் தங்கி வந்தவர்கள் நல்ல வெயிலில், கூண்டில்லா படகுகளிலும் பயணம் செய்யும்படி ஆகிவிட்டது.


எங்கள் குழுவினர் எல்லோரும் படகுகளில் ஏறியதும் ஒவ்வொரு படகும் சற்று இடைவெளி விட்டு நகரத் தொடங்கின.


தொடரும்

22 கருத்துகள்:

 1. படகில் நாங்களும் ஏறி உட்கார்ந்து விட்டது போன்ற உணர்வு தொடர்கிறோம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! வாருங்கள் பயணிப்போம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! படகுப் பயணத்தில் தொடர்வதற்கு நன்றி!

   நீக்கு
 3. காத்திருந்ததற்கு கண்ணாரப் பலன். காயல் ஏமாற்றவில்லை.

  ஆரம்பமே கன ஜோர். வாசிக்கையிலேயே நாமும் கூடச் சேர்ந்து படகேறும் உணர்வு ஏற்பட்டு விட்டது.

  கோரையாறு, ஜம்புவானோடை என்ற பெயர்களே வித்தியாசமான சூழ்நிலையை கற்பனையில் மெருகேற்றியது. 12 கிலோ மீட்டர், ஒன்றரை மணி நேரப் பயணம் என்பது ஆஹா.. கரையை விட்டு படகு அசைந்து நகர்ந்து விட்டாலே ஜிலுஜிலுப்பு தான்! அதுவும் கூட நண்பர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்!

  இடையே இடையே உங்கள் இயல்பான தமிழாக்கங்களையும் ரசித்தேன். மேடையில் நடை, நடை மேடையாயிற்றோ?-- என்ற யோசனையைத் தாண்டி விசிப்பலகை மொழியாக்கம் புரியாமல் முரண்டு பிடித்தது.

  காயல் அனுபவங்கள் தொடரட்டும். காத்திருத்தல் தொடர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் ஆவலோடு காத்திருந்த காயல் பயணம் அனுபவம் பற்றிய பதிவு எழுதும்போது சேர்ந்துகொண்டமைக்கு நன்றி!

   படகுப் பயணத்தை நாங்கள் இரசித்ததை தாங்கள் அகக் கண்ணால் கண்டு பாராட்டிவிட்டீர்கள். அதற்கு நன்றி!
   தமிழாக்கங்களை இரசித்தமைக்கும் நன்றி!

   நாம் மறந்துவிட்ட அல்லது மறந்துகொண்டு இருக்கிற தமிழ் சொற்களை பதிவில் எழுதுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறேன் நான். விசிப்பலகை என்பது ஆண்டாண்டு காலமாக சிற்றூர்களில் வழங்கப்படும் சொல்லாடல். நாம் தான் அதை பெஞ்ச் என்று தமிழில் பெயர் மாற்றம் செய்துவிட்டோம்.

   தொடர்வதற்கு நன்றி!

   நீக்கு
  2. அப்போ, ஊஞ்சல் என்பது?.. விசைப் பலகை என்று சொல்லலாமா?..

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ஊஞ்சல் என்பதே தமிழ்ப் பெயர் தானே. ஊஞ்சலை ஊசல் என்றும் சொல்வதுண்டு.
   விசைப்பலகை என்பது கணினியில் உள்ள Key Board ஐ குறிக்கும்.

   நீக்கு
 4. படங்களும் பகிர்வும் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டியதற்கு நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

   நீக்கு
 5. வித்தியாசமான இடங்களைப் ரசிப்பது சுகம்தான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே!

   நீக்கு
 6. உங்களுடன் பயணிக்கிறோம். ஆங்கிலச்சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்களை நீங்கள் பயன்படுத்தும் பாணி எங்களை வியக்கவைக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பயணத்தில் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் பாணியை பாராட்டியமைக்கும் நன்றி!

   நீக்கு
 7. உங்களது இந்த படகுப் பயணம் படிக்கும்போது நான் மேற்கொண்ட படகுப் பயணங்கள் நினைவுக்கு வருகிறது கொச்சியில் மோட்டார் படகு, கோடைக் கானலில் நாமே துழாவும் போட் ,ஹொகனேகல்லில் பரிசல். காசியில் கங்கையில் பயணிக்க படகொட்டி துடுப்போடும் போட் . குமரகத்தில் காயலில் சவாரி செய்ய போட் . இப்பொது உங்களுடன் பதிவில் பயணிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பதிவில் பயணிப்பதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! எனது பதிவு தங்களது படகு சவாரி மற்றும் பயணங்களை தங்களுக்கு நினைவூட்டியது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

   நீக்கு
 8. படகு பயண அனுபவம் அருமை.

  //மறந்துவிட்ட அல்லது மறந்துகொண்டு இருக்கிற தமிழ் சொற்களை பதிவில் எழுதுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறேன்//
  நல்ல செயல். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!

   நீக்கு
 9. காயல் செல்வதற்கு முன் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாகச் சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 10. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

  படங்களும் பதிவும் மிகவும் அருமை.

  யோசித்து செய்துள்ள முன்னேற்பாடுகள் வியப்பளிப்பதாக உள்ளன.

  இனி அங்கு புதிதாக செல்ல விரும்புவோருக்கு, அவை ஓர் நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும்.

  படகினில் நாங்களும் உங்களுடன் ஏறி அமர்ந்துகொண்டு அது நகர ஆரம்பித்துள்ள அனுபவ உணர்வு ஏற்படுகிறது.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

  பதிலளிநீக்கு