நமது
வாழ்க்கை முறையில், பணியில் இருக்கும்போது இருப்பதற்கும் , பணி நிறைவு
பெற்று ஓய்வெடுக்கும்போது இருப்பதற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா என்றால் பதில் ஆம்
என்றும் இல்லை என்றும் சொல்லலாம்.
பணியில்
இருக்கும்போது நாம் இழந்தவைகள் ஒன்றா இரண்டா?
அவைகளைக் கணக்கிட்டால்
தலையைச் சுற்றும்.
பணியில்
இருக்கும்போது நம்மில் பலர் சூரியன் மேற்கே மறைவதையே பார்த்திருப்பார்களா என்பது
சந்தேகமே! அந்த அளவிற்கு வேலையில் இலயித்து
இருப்பதால் சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலை.
பணியில்
இருக்கும்போது நாம் குடும்பத்தோடு கூடி
இருந்த நாட்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கும். அந்த சந்தோஷத்தை நம்மால் பணி
நிறைவுக்குப் பின் திரும்பப்பெறமுடியுமா?
படுக்கையை
வாங்கலாம். தூக்கத்தை வாங்கமுடியுமா?
என்பார்கள். அலுவலகத்தில்
பணியாற்றுவதால் நல்ல வருமானத்தை ஈட்டலாம். ஆனால் குடும்பத்தோடு அதிக நேரம்
செலவிடுவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை அந்த வருமானத்தைக்கொண்டு வாங்கமுடியுமா?
பல
நேரங்களில் விடுப்பு கிடைக்காததால் நெருங்கிய உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு
நாம் செல்லாமல் துணைவியாரை அனுப்பியிருப்போம். அதனால் உறவினர்களின் அதிருப்தியை
சம்பாதித்திருப்போம்.
ஏன்
பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கும், குழந்தைகள் பங்கேற்கும்
பள்ளி ஆண்டு விழாவிற்கு கூட செல்ல முடியாமல் இருந்திருக்கும்.
எனக்குத்தெரிந்து
ஒரு சில நண்பர்கள் வேலை வேலை என இருந்த
காரணத்தால் அலுவலகத்தில் உள்ள LFC சலுகையைக்கூட கடைசிவரை
பயன்படுத்திக்கொள்ளவில்லை!
பிள்ளைகளின்
கல்வியில் அக்கறை செலுத்தக் கூட நேரம் இல்லாமல் உழைப்பதும் உண்டு. இன்னும்
சிலருக்கு பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்று கூட தெரிந்து
இருக்காது.
அலுவலகத்தில்
காலை முதல் மாலை வரை பலதரப்பட்ட பணிகளோடு
வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த செய்யும் பணியில் ஈடுபடுவதால்
வீட்டிற்கு வரும்போது மனதளவிலும்,
உடலளவிலும் ஏற்படும் சோர்வு
என பணியில் இருக்கும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை
சொல்லிக்கொண்டே போகலாம்
.
நம்மில்
பலர் மாற்றல் பெற்று வெளியூர் செல்லும்போது பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடுமே
என்று குடும்பத்தை விட்டு தான் மட்டும் செல்வதுண்டு. அப்போது அவர்களுக்கு ஏற்படும்
முதல் இழப்பு குடும்பத்தோடு வாழ முடியாத நிலை. இதுவே சிலருக்கு மன அழுத்தத்தை
தந்திருக்கிறது என்பது உண்மை.
இரண்டாவது
இழப்பு இரட்டைச்செலவு. அதனால் சேமிப்பு என்பதே இல்லாமல் போகும் வாய்ப்பு.
சிலருக்கு அதனால் பணத்தட்டுப்பாடு கூட ஏற்படலாம்.
மூன்றாவது
வெளியே உணவகங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலக் கேடு. அதனால் ஏற்படும்
மருத்துவ செலவு.
நான்காவது
ஒரு தந்தை குழந்தைகளுக்கு காட்டவேண்டிய பாசத்தை வெளியூரில் இருப்பதால் தர முடியாத
நிலை. சிலர் பிள்ளைகள் மழலையர் பள்ளியில் (LKG)
படிக்கும்போது வெளியே சென்றவர்கள் திரும்பி வரும்போது பிள்ளைகள்
கல்லூரிப் படிப்பையே முடித்திருப்பார்கள். அப்போது அவர்களுக்கு தேவைப்படாது தந்தையின் அரவணைப்பு.
பணி
புரியும் காலத்தில் உங்களுடைய நேரம் பிறரது கையில். நினைக்கும்போது விடுப்பில்
செல்லமுடியாத நிலையில், பணியில் இருப்பது என்பது ஒரு சிறையில் இருப்பது போலத்தான். கிளியை தங்கக்
கூண்டில் அடைத்து வைத்து தீனி போடுவது போலத்தான்.
எனவே
பணி நிறைவு என்பது ஒரு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வருவதுபோலத்தான். பணி
நிறைவுக்குப்பின் இருக்கும் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் உங்கள் கையில். நீங்கள்
விரும்பியதை உங்கள் விருப்பம்போல் செய்ய எந்த தடையும் இருக்காது. யாரிடமும் அனுமதி
வேண்டி நிற்கவேண்டிய நிலை இருக்காது.
ஆனால்
சில நினைக்கலாம். அலுவலகத்தில் பணியாற்றும்போது கிடைக்கின்ற மரியாதை நின்று போய்விடுமே என்று. ஒன்றை நினைவில்
கொள்ளவேண்டும். Out of sight
is out of mind என்பார்கள்.
பணி நிறைவு
பெற்றபின் நீங்கள் பணி புரிந்த இடத்திற்கு
சென்று பாருங்கள். முதலில் சில நாட்கள் உங்களை சிரித்த முகத்தோடு வரவேற்கும் உங்கள்
முன்னாள் நண்பர்களுக்கு பின்னர் நீங்கள் வேண்டா விருந்தாளியாகிவிடுவீர்கள்.
கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது
தொடரும்
அருமையாக விளக்கம் சொல்லி வருகின்றீர்கள்.
பதிலளிநீக்கு//கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது//
நிதர்சனமான உண்மை நண்பரே
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!
நீக்குதங்களின் அனுபவம் ஒரு பாடம்...
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குநானும் என் குடும்பத்தை விட்டு எட்டு ஆண்டுகளாக அயலுரில் பணியாற்றியிருக்கிறேன். தனிமையின் வலிதான் தாங்க மூடியாததாக இருந்தது.
பதிலளிநீக்குநீங்கள் கூறுவது போலவே பணி ஓய்வு என்பது ஒரு வகையில் விடூதலைதான்
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்களும் வங்கியில் பணிபுரிந்திருப்பதால், என்னைப் போல் பல ஆண்டுகள் வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் குடும்பத்தை விட்டு தனியே இருந்து கஷ்டப்பட்டிருப்பீர்கள். அதனால் பணி நிறைவு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். உண்மையில் பணி நிறைவு என்பது விடுதலைதான்.
நீக்குபணிக்கால வாழ்க்கை முறையும் - பணி ஓய்வுக்கால வாழ்க்கை முறையும் என்று அலசி ஒரு பட்டிமன்ற எடுத்து வைப்புகள் போல கருத்துக்களை அடுக்கியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபணி ஓய்வுக்கால நிம்மதிக்கு வழி வகுத்தது பணிக்காலச் சிறப்பே
என்ற அர்த்தமும் ஒவ்வொரு வரியிலும் ஊடோடி இருப்பது தெரிகிறது.
பகல் பூராவும் அலுப்பு சலிப்பின்றி உழைத்தவன் இரவில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பது போல.
அந்த உழைப்பு இல்லையென்றால் அந்தா நிம்மதியான தூக்கமும் இல்லை என்ற கருத்து போல.
சுவையான கருத்தாடல். தொடர்கிறேன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! வங்கியில் காலையிலிருந்து மாலை வரை, சில சமயம் முன்னிரவு வரை மன அழுத்தத்தில் வேலை செய்ததும், 8 ஆண்டுகள் வேறு மாநிலத்தில் தனியாக சரியான உணவு கிடைக்காமல் தனியே இருந்து பணிபுரிந்ததும், எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் எனக் காத்திருந்ததும் தான் இதுபோன்ற கருத்துக்களை வெளியிட தூண்டியிருக்கிறது என நினைக்கிறேன்.
நீக்குபாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி!
சிறப்பாகச் சொல்லி இருப்பது கண்டு மகிழ்ச்சி. ஒவ்வொன்றும் அனைவருக்கும் பாடம்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! அனுபவம் ஒரு பாடம் என்பது சரியே.
நீக்கு"கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது" ஏப்ரல் 2017இல் பணி நிறைவு பெற்று வந்த நாள் முதல் இன்று வரை (சுமார் 2 வருடங்கள் 4 மாதங்கள்) அலுவலகத்திற்குச் செல்லவில்லை. மரியாதை என்ற காரணம் அல்ல. எனக்குள் நான் வரையறுத்துக்கொண்ட, பணி நிறைவுக்குப் பின் காலத்திய சில பணிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதால் அலுவலகம் செல்ல வேண்டிய சூழலோ, நேரமோ ஏற்படவில்லை. அலுவலகப்பணியின்போது முழுக்க முழுக்க நேர்மையாக இருந்து உழைத்த நான், பணி ஓய்விற்குப் பின் மேலும் உழைத்து பிறருக்கு உதாரணமாக இருக்க முயற்சிக்கிறேன். சிலர் நம்பமாட்டார்கள், கூற விரும்புகிறேன். என் அலைபேசி எண்ணை நான் பணி ஓய்வு பெறும் நாள் வரை அலுவலகத்தில் யாருக்குமே தரவில்லை. வீட்டு தொலைபேசி எண்ணை மட்டுமே தந்திருந்தேன். பெரிய அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் கேட்டபோதுகூட முழுமையாக மறுத்துவிட்டேன். அலுவலகம் விட்டால் நேரே வீடுதான். ஏதேனும் செய்தி என்றால் வீட்டு தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள், அலுவலகப்பணி என்றால் அழைக்கும் நேரத்திற்கு உடனே வந்துவிடுவேன் என்று கூறி அதனை கடைசி வரை கடைபிடித்தேன். உங்கள் அனுபவப்பதிவு என்னையும் சில கருத்துகளைப் பகிர வைக்கிறது.
பதிலளிநீக்குவருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தங்களின் அணுகுமுறை சரியானதே. எப்போது அருகில் இருப்பதைவிட தள்ளி இருப்பது தனி மரியாதையைத் தரும். ஆனாலும் அவ்வப்போது நண்பர்களின் மற்றும் உடன் பணிபுரிந்த தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்று உறவைத் தொடரலாம்.
நீக்குகூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது. This is very practical suggestion. I adopted this after my retirement in 2001. Even for passbook printing, my neighbours who were in service helped me including cheque encashment, Even for life certificate, I utilize the Jeevan Pramaan facility in nearby e seva kendra.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! இப்போதுள்ள வங்கிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் பணிபுரிந்த வங்கிக்கு செல்லத் தேவையே இல்லை. இருப்பினும். எப்போதாவது ஒரு தடவை சென்று வரலாம். நான் ஏன் ’கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது.’ என்று கூறியதன் காரணத்தை அடுத்த பதிவில் அறிவீர்கள்.
நீக்குஅருமையான அலசல்.
பதிலளிநீக்கு//கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது.//
மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். 24.02.2009 பணி ஓய்வு பெற்று வந்தேன். அதன்பின் இன்றுவரை அங்கு எட்டிப்பார்த்தது இல்லை.
இருப்பினும் என்னுடன் பணியாற்றிய பல நண்பர்களை அவ்வப்போது பொது இடங்களிலும், திருமண மண்டபங்களிலும், மருத்துவ மனைகளிலும் அவ்வப்போது சந்தித்துப் பேசி மகிழ்வது உண்டு.
மிகச் சிலருடன் மட்டும் தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்-அப் போன்ற தொடர்புகளில் இருப்பது உண்டு. ஒருசிலர் இன்றும் என்னைத் தேடி என் இல்லத்திற்கு வந்து போவதும் உண்டு.
கட்டுரை தொடரட்டும்.
வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பணி ஓய்வு பெற்றவர்களை வேண்டாத விருந்தாளிகள் போல் சிலர் நினைப்பதால் அவர்களின் உதாசீனத்தால் மனவருத்தம் அடைய வேண்டாமே என்று தான் ‘கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது.’ என்று சொல்லியிருந்தேன். ஆனாலும் தேவைப்பட்டால் சென்று வரலாம்.
நீக்குஐந்தாண்டுகளுக்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற்றேன் எனக்காகவும் வாழ நினைத்தேன் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள் on hind sight I feel Idid the right thing..!
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்பிரமணியம் அவர்களே! நீங்கள் செய்தது சரியே. எங்கள் வங்கியில் கூட 2001 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் விருப்ப ஓய்வு கேட்ட அனைவருக்கும் அது தரப்படவில்லை.
நீக்கு