ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 4
எனக்குத் தெரிந்து ஒரு வங்கியில் வட்டார அலுவலகத்தில் பணி புரிந்த இருவர், பணி நிறைவுக்குப் பின் அருகில் இருந்த அவர்கள் பணியாற்றிய வங்கியின் கிளைக்கு வரைவு காசோலை எடுக்க எடுக்க சென்றபோது அதைத் தர வங்கியில் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டார்களாம்.விரைவில் தரக்கூடாதா என கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் உடனே வட்டார அலுவலகத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் கிளைக்கு வந்து பணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாக புகார் செய்தார்களாம். இத்தனைக்கும் அந்த முன்னாள் அலுவலர்கள், அங்கு இருந்த ஊழியர்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள்.

அதைப் பார்த்த மனம் வெதும்பிய அந்த முன்னாள் அலுவலர்கள் இனி இந்த கிளைக்கே வரக்கூடாது என எண்ணி திரும்பிவிட்டார்களாம். இது தான் உண்மை நிலை.

பதவி ஒய்வு பெற்ற நீதியரசர்  சந்துரு அவர்கள்  ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில்அவர் ஓய்வு பெரும் நாளில் நீதிமன்றத்தில் இருந்த 47 நீதிபதிகளில் 7 நீதிபதிகள் மட்டுமே அவரை சந்தித்து வாழ்த்து சொன்னதாக சொல்லியிருந்தார்கள்.

ஒரு நேர்மையான நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகனுக்கு மட்டும் தனி மரியாதை கிட்டுமா என்ன?

எனவே பணியில் இருப்பதால் மரியாதை கிடைக்கிறது என எண்ணவேண்டாம். வேடிக்கையாக சொல்வார்கள். ஒரு  மாவட்ட ஆட்சித்தலைவரின் செல்ல நாய்க்குட்டி இறந்தபோது அந்த ஊரே திரண்டுவந்ததாம் அஞ்சலி செலுத்த!

ஆனால் அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இறந்தபோது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இந்த யதார்த்த நிலையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல அது உங்கள் பதவிக்குத்தான் என்பதை.

எனவே பணி நிறைவுக்கு உங்கள் மன நிலையைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாள் நெருங்க நெருங்க இயல்பாக இருங்கள். கடைசி நாளன்று உணர்ச்சி வசப்படாதீர்கள். 

பணி நிறைவுக்குப்பின் என்ன செய்யவேண்டும்?


1.   உடல் நலமே உண்மையான சொத்து. Health is wealth. என்பதை உணருங்கள். தலை இருந்தால் எத்தனை குல்லாக்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பார்கள்.

இதுவரை புறக்கணித்த உடல் நலத்தை இனி பேணுங்கள்.தினம் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள். சிலர் நடைப்பயிற்சி என்ற பெயரில் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள். அது தவறு அல்ல. ஆனால் Walking  தான் முக்கியமே தவிர Talking  அல்ல.


2.     நடைப்பயிற்சி செய்யமுடியாதவர்கள் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வருவதைக்கூட செய்யலாம்.

3.     தோட்டம் உள்ளவர்கள் புதிய பூச்செடிகள் நடுவதிலும், காய்கறிகளை பயிரிடுவதிலும் அவைகளைப் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடலாம். பசுமையான செடிகள் வளர்வதையும், வண்ணப் பூக்களையும், நாம் பயிரிட்ட காய்கறிகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
 
4.     அளவோடு, நேரத்தோடு சாப்பிடுங்கள். அதுவும் இரவில் 7.30 மணிக்கே சாப்பிட்டுவிடுவது நல்லது.

5.     குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள்.

6.     பல் மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாது சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். குறிப்பாக கண் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் , போன்றவைகளை கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ளவும்.

7.     அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் அருகில் உள்ள நல்வாழ்வு மன்றங்களோடு (Welfare Club) இணைத்துக்கொண்டு சமூக சேவைகள் செய்யலாம்.

8.     முடிந்தால் வசதியற்றவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.

9.     உறவினர்களையும் நண்பர்களையும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழலாம்.

10.    தற்பெருமையையும் ஆணவத்தையும் (Ego) விட்டோழியுங்கள்.

11.    நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
.
12.    யாருக்கும் தேவையில்லாமல் ஆலோசனையைவழங்காதீர்கள். ஏனெனில் கோரப்படாத ஆலோசனையை (Unsolicited adviceயாரும் விரும்புவதில்லை.

13.    பண விஷயத்தில் முனைப்போடு இருங்கள். பணத்தை கண்டபடி செலவு செய்துவிட்டு பின் திண்டாடாதீர்கள்.


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.’

என்ற ஔவைப் பாட்டியின் மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.

பணி நிறைவில் கிடைக்கும் பணத்தை வங்கிகள் அல்லது அஞ்சலக மாத வருவாய் வரும் திட்டங்களில் முதலீடு செய்து நிம்மதியாய் வாழுங்கள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அதிக வட்டி வட்டி தருவதாக சொல்லும் தனியார் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். அதுபோல பங்கு வணிகத்தில் தீவிரமாக இறங்கி சேமித்த பணத்தை இழக்காதீர்கள்.

பாசம் கண்ணை மறைக்க, கையில் உள்ள பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு கண்ணீரோடு அல்லல் படவேண்டாம். நம் பிள்ளைகள் தான். அவர்களுக்கு கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறோம். ஆனால் அவைகளை நம் காலத்திற்குப் பிறகு கிடைக்க வழி செய்வோம்.

பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே’, பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனெனில் தங்களுடைய பணிக்கால கொடைகளை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு பின்னால் கஷ்டப்பட்டவர்கள் பலர் உண்டு.

14.    முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க அறிவாற்றல் சார்ந்த செயல்களான (Intellectual activities), புத்தகங்கள் படிப்பது குறுக்கெழுத்து புதிர்களில் கலந்துகொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது, தவறாமல் சமூகத்தொடர்பு (Social connections) கொண்டிருப்பது போன்றவைகளை செய்யலாம்.

ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவும்.

15.    ‘பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது, மூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்டப்படுவதால் (Activate) அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும், அதனால்முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது என்றும் அறிவியலார்கள் சொல்கிறார்கள்.

எனவே தினம் படுக்கப் போகுமுன் அன்று  நடந்த நிகழ்வுகளை ஒரு முறை மனதில் நினைத்துப் பாருங்கள். இதுவும் ஒருவகையில் மனதில் நாட்குறிப்பு (Diary} எழுதுவது போலத்தான்.

16.    கடைசியாக பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

Dead yesterday and unborn tomorrow
Why fret about them if today be sweet

எனவே வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்!20 கருத்துகள்:

 1. நல்ல வேளையாக எனக்கு சர்வீசில் கிடைத்த மரியாதை இப்போதும் கிடைக்கிது. ஒருவேளை அது சிறிய வங்கி என்பதால் இருக்கலாம். நானும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதால் எப்போதாவது வங்கி சேவையில் தாமதமானால் பொறுமையுடன் காத்திருப்பேன். இப்போதுதான் மொபைல் பேங்கிங் இருக்கிறதே. பணம் தேவையென்றால் ATM போவேன். வருடத்திற்கு அதிகம் போனால் நான்கைந்து முறை செல்ல வேண்டி வரும். So it's not a big issue.

  மற்றபடி பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை. துவக்கத்தில் எனக்கும் நம்மை யாரும் பொருட்படுத்துவதில்லையே என்ற எண்ணம் வருவதுண்டு காலப்போக்கில் அதுவே பழகிப்போனது.

  நீங்கள் கூறியுள்ள அனைத்து அறுவுரைகளையும் பின்பற்றி வருகிறேன்.

  உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்துமே அருமையானவை. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! பணி நிறைவு அடைந்த பின்னும் தங்களுக்கு அதே மரியாதை கிடைக்கிறதென்றால் அதற்கு காரணம் தாங்கள் பணியாற்றும்போது நடந்துகொண்ட முறைதான். அரியலூரில் வழக்கறிஞராக இருந்த என் மாமா வீட்டிலிருந்து நான் 6 மற்றும் 7 வகுப்புகள் வரை படித்தேன். அப்போது அவரது அலுவலக அறையில் அவரது இருக்கைக்கு பின் இருந்த கீழ்கண்ட இயேசுபெருமானின் வாக்கு வரிகள் என்னை அந்த வயதிலேயே ஈர்த்தன.
   ‘பிறர் உனக்கு எதைச் செய்யவேண்டுமென்று நினைக்கிறாயோ அதையே நீ பிறருக்கு செய் ‘
   அதையே நானும் பின்பற்றியதால் தங்களைப் போலவே நானும் அதே மரியாதையுடன் இருக்கிறேன்

   நீக்கு
 2. //நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல! அது உங்கள் பதவிக்குத்தான்//

  நிதர்சனமான உண்மை.
  நாய்க்குட்டி உவமை அருமை.

  செல்வந்தனுக்கு கிடைத்த மரியாதை அவன் ஓட்டாண்டியான பிறகே எதற்கென புரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

   நீக்கு
 3. நல்லதொரு தொடர். இப்போது அரசு அலுவலகங்களில் ஓய்வு பெற்றவர்களையே Consultant என்ற பெயரில் மறுபடியும் வேலைக்கு அமர்த்துகிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் - தனிப் பதிவாக எழுதலாம் - விரைவில் எழுதுகிறேன் - என் பக்கத்தில்.

  ஓய்வு பெறப் போகும் அனைவருக்க்கும் இந்தத் தொடர் நல்லதொரு வழிகாட்டி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் , வாழ்த்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பணி நிறைவு பெற்றபின் அதே அலுவலகத்தில் பணிபுரியும்போது பல சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அது பற்றிய பதிவை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
 4. ஒவ்வொரு ஆலோசனைகளும் அருமையான பாடங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 5. This is an excellent one which brings out the ground realities. Well written. Some senior bankers take up employment in private firms after their retirement. The treatment in private firms is totally different from the treatment while in public sector banks. During re employment, they mentally suffer and ultimately leave the private job. Please share your views on this aspect in future posts. T

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு L.N.கோவிந்தாராஜன் அவர்களே! பணி நிறைவு பெற்றபின் அதே நிறுவனத்தில் மற்றும் மற்ற நிறுவனங்களில் பணி புரிந்து சங்கடங்கள்/அவமானங்கள் அடைந்தவர்கள் அநேகம் பேர் உண்டு. அது பற்றி திரு வெங்கட நாகராஜ் எழுத இருக்கிறார். நானும் பின்னர் எழுதுவேன்.

   நீக்கு
 6. உண்மை. பதவி இல்லையேல் மதிப்பு குறைகிறது.
   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி புதிய மாதவி அவர்களே! பணி நிறைவுக்குப் பின் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் கொடைஊதியம் தான் என்பதில் ஐயமில்லை.

   நீக்கு
 8. தொடர் அருமையாகச் செல்கிறது. பாராட்டுகள்.

  பணி ஓய்வு பெறுபவர்கள், பணி ஓய்வுக்கு முன்பும், பின்பும், அடிக்கடி அவசியமாகப் பார்க்க வேண்டியதொரு மிக அருமையான திரைப்படம்

  ‘வரவு நல்ல உறவு’
  https://www.youtube.com/watch?v=sFsaxsQf5Jo

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தி,ரு விசு இயக்கிய ‘வரவு நல்ல உறவு’ என்ற திரைப்படத்தை அது வெளிவந்த ஆண்டே (1990) பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவரும் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் தான்.

   நீக்கு
 9. பொதுவான உங்கள் அலோசனைகள் அருமை. வங்கியில் பணமும்
  அவசரத் தேவைகளுக்கு ஒரு டெபிட் கார்டும் இருந்தால் ஆரோக்கியம் தன்னாலே தன்னைப் பார்த்துக் கொள்ளும். மாத ஆரம்பத்தில் கைச்செலவுக்கு கரன்ஸியாக கொஞ்சம் வங்கியிலிருந்து எடுத்து கைவசம் வைத்திருந்தால் கேட்கவே வேண்டாம்.

  சேமிப்பு என்ற பெயரில் செலவில் சிக்கனம் வேண்டாம். சென்னை போன்ற இடாங்களில் பஸ் பயணத்தை பெரும்பாலும் தவிர்க்கலாம்.
  ஓலா, ஊபர் போன்ற வாகனங்களில் சென்று எங்கு போக வேண்டுமோ அந்த இடத்தில் இறங்கலாம். திரும்புவது அதே மாதிரி. எக் காரணத்தைக் கொண்டும் சாலையை குறுக்கேக் கடப்பதை தவிர்க்க வேண்டுவதற்காக இந்த ஏற்பாடு.

  பேரக் குழந்தைகளுக்கு தாத்தா--பாட்டியின் பரிசு என்று அவர்களின் பிறந்த நாள் போன்ற விசேஷ தினங்களில் அளித்தால் அந்த குழந்தைகள் அது குறித்து பெருமை கொள்ளும் பொழுது மனம் மகிழும்.

  வயதான தம்பதிகளாய் தனியாக வாழும் பொழுது அண்டை அசலாரில் நமது மனத்திற்கு நெருக்கமானவர்களுடன் தொடர்ப்பில் இருப்பது அவசியம். அவசர ஆபத்துக் காலத்துக்கு துணைக்கு வருவது இவர்கள் தான். குடியிருப்பு கூட்டங்கள், சின்ன சின்ன விழா ஏற்பாடுகள் இவற்றில் கலந்து கொண்டு நம்மால் முடிந்த அளவுக்கு உதவியாக இருந்து நெருக்கமாகலாம்.

  சமூகத்தோடு நல்லுறவு கொள்வது என்பது மன்மதக் கலை மாதிரி.
  சொல்லித் தெரிவதில்லை.

  கண்ணதாசனின் 'கண் போன போக்கிலே கால் போகலாமா?' பாடல் வரிகள் வயதான பிறகும் கூட வாழ்க்கையிலே நினைத்துப் பார்க்கத் தக்கது. அதுவும், 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற வரிகள் அட்சர லட்சம் பெறும்.

  நலலதொரு தொடர். நறுக்கென்று அருமையான முத்தாய்ப்போடு முடித்திருக்கிறீர்கள், நண்பரே! வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கவியரசரின் வைர வரிகளில் சொன்னால்
   ‘வாழ நினைத்தால் வாழலாம்.//

   வழியா இல்லை பூமியில்?.. என்ற அடுத்த வரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

   நீக்கு
  2. வருகைக்கும், விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே ! தாங்கள் சொல்லியுள்ள ஆலோசனைகளும் பயனுள்ளவைகள்தான். மொத்ததில் பணி நிறைவுக்குப் பின் வாழும் வாழ்க்கை ஒன்றும் கடினமானது அல்ல. கவியரசரின் வைர வரிகளில் சொன்னால் ‘வாழ நினைத்தால் வாழலாம்.வழியா இல்லை பூமியில்?’

   நீக்கு
  3. கருத்துக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ‘வழியா இல்லை பூமியில் ?’என்ற வரிகளை சேர்த்துவிட்டேன்

   நீக்கு