வியாழன், 24 அக்டோபர், 2019

தொடரும் சந்திப்பு 14


ரத்னா ஸ்கொயர் விடுதி நோக்கி நடக்கும்போது, 1970 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 1973 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் வரை பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது நடந்த பழைய நிகழ்வுகள் மனதில் அலைமோதின.



அப்போது முதலில் கோபால் பில்டிங்ஸ் இல் தங்கியிருந்ததும், பாலகோபாலபுரம் தெருவில் இருந்த சீத்தாராம் லாட்ஜில் என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் தங்கியிருந்ததால், பின்னர் அங்கு தங்கியதும்  இதே சாலையில் உள்ள நல்லப்பா  திரையரங்கத்திற்கு புதிய திரைப்படங்களைப் பார்க்க சனிக்கிழமையன்று வங்கி நண்பர்களுடன் வந்ததும், சில விடுமுறை நாட்களில் மாலை வேளையில்  இதே சாலையில் ஆச்சிப்பட்டி வரை  நண்பர்களுடன்  நடந்து திரும்பியதும், நினைவுக்கு வந்தன.

அந்த நினைவுகளோடு பொள்ளாச்சியில் ஏற்பட்டுள்ள  மாற்றங்களை  பார்த்துக்கொண்டே வந்தபோது, அடையாறு ஆனந்த பவனின் உணவகத்தை கண்டேன். நண்பர் மீனாட்சிசுந்தரம் ரத்னா ஸ்கொயர் விடுதி அந்த உணவகத்திற்கு எதிரில் சற்று தள்ளி இருப்பதாக சொல்லியிருந்ததால், அந்த இடத்தில் சாலையைக்கடந்து எதிரே சற்றுத் தள்ளி இருந்த அந்த விடுதியை அடைந்தபோது, அங்கே வாசலில் நண்பர்கள் மீனாட்சிசுந்தரமும், செல்லப்பாவும் எனக்காக காத்திருந்தார்கள்.

இருவரும் என்னை வரவேற்று மேலே முதல் தளத்தில் தங்கியிருந்த நண்பர்களின் அறைக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நண்பர்கள்  மாணிக்கவேலு, முத்துக்கிருஷ்ணன், நாச்சியப்பன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் தங்கள் துணைவியர்களோடு இருந்தார்கள்.  என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்ற அவர்கள், கேட்ட முதல் கேள்வி நான் ஏன் என் துணைவியை அழைத்துவரவில்லை  என்பதுதான்.

அவர்களிடம் அழைத்து வரமுடியாததன் காரணத்தை சொல்லிவிட்டு 'எப்போது Great Mount Coco Lagoon ஓய்வகத்திற்கு (Resort) செல்வது?' என கேட்டபோது , மீனாட்சிசுந்தரம். 'முதலில் நீங்கள் எதிரே உள்ள உணவகத்தில் மதிய உணவை சாப்பிட்டு வாருங்கள். அதற்கு பிறகு உங்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ள கூடுந்து (Van) வந்துவிடும். அதில் ஏறி ஓய்வகத்திற்கு செல்லலாம். 

மேலும் வேறொரு இடத்தில் தங்கியுள்ள  நண்பர்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதால், ஒரே தடவையில் அனைவரையும் அழைத்து செல்ல இயலாது. எனவே யார் முதலில் மதிய உணவை முடித்து வருகிறார்களோ அவர்கள் முதலில் செல்லலாம்.' என்றார். 

உடனே நாங்கள் அனைவரும் எதிரே இருந்த அடையாறு ஆனந்த பவன் உணவகத்திற்கு சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு திரும்பியபோது நண்பர் மீனாட்சி எங்களிடம் மற்ற நண்பர்கள் முதலில் வந்ததால் அவர்கள் ஓய்வகத்து புறப்பட்டு சென்றிருப்பதாகவும், அவர்களை விட்டுவிட்டு திரும்ப வரும் கூடுந்தில் செல்லாம் என்று சொன்னார். 

திரும்பவும் அறைக்கு வந்து காத்திருந்து, மூடுந்து வந்ததும் அதில் ஏறி 10 கி.மீ தொலைவில் இருக்கும் வலைக்கொம்பு நாகூர் என்ற இடத்தில் உள்ள Great Mount Coco Lagoon என்ற ஓய்வகத்தை (Resort)   நோக்கிப் பயணித்தோம்.

மூடுந்தில் பயணிக்கும்போது செல்லும் வழியில் இருபக்கமும் இருந்த தென்னை மரங்கள் எங்களை வரவேற்க நிற்பதுபோல் வரிசையில் இருக்க, வெயிலே தெரியாத அளவுக்கு அவைகள் நிழலைத் தந்து ஒரு மிதமான தட்ப வெட்பனிலையை ஏற்படுத்தியால் பயணத்தை துய்த்து மகிழ்ந்தோம். 

சுமார் 20 நிமிடப் பயணத்திற்குப் பின் அந்த ஓய்வகத்தை அடைந்தோம். ஓய்வகத்தின் முன் எங்களது சந்திப்பு நடப்பது பற்றிய பதாகை வைத்திருப்பதைக்  கண்டேன். 





மூடுந்து உள்ளே நுழைந்து வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தியதும் பெட்டிகளை  எடுத்துக்கொண்டு வரவேற்பு அறை நோக்கி நடக்கத் தொடங்கினோம். 




தொடரும்


16 கருத்துகள்:

  1. நானும் உங்கள் நினைவுப் பயணத்தில் தொடர்கிறேன்.

    பொள்ளாச்சி ஓர் அழகான, பசுமை நிறைந்த ஊர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,எனது நினைவுப்பயணத்தில் பங்கு கொள்வதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! பொள்ளாச்சி மிக அருமையான ஊர். எந்த நாளும் சுகமான தட்பவெட்ப நிலை இருக்கும். அமைதியாய் இருந்த ஊரை திரைப்படக்காரர்கள் படம் எடுக்க வந்து கெடுத்துவிட்டார்கள்.

      நீக்கு
  2. வாசிக்கும் எங்களுக்கும் குளுமை... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. எங்காவது யாராவது தங்கள் பதிவுகளில் இந்த 'கூடுந்து' 'மூடுந்து' வார்த்தைகளை உபயோகத்து அதைப் படிக்க நேர்ந்தால் இந்தப் பதிவு நிச்சயம் நினைவுக்கு வரும்.

    பொள்ளாச்சி மலையும் மலை சார்ந்த இடமும் இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், நன்றி திரு ஜீவி அவர்களே! பொள்ளாச்சி யில் மலை இல்லை என்றாலும் அது மலை சார்ந்த ஊர் தான். 24 கி மீ தொலைவில் ஆனைமலை மலைத்தொடர் உள்ளது.

      நீக்கு
  4. ஆனைமலைக்கு முன்னாலேயே (சஞ்சீவி பர்வதம் சுமந்த ஹனுமார் சின்னம் பொறித்த) ஆனைமலை டிரான்ஸ்போர்ட் (ABT) நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொள்ளாச்சி தொழிலதிபர் திரு மகாலிங்கம் அவர்களின் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆனைமலை என்றே இருக்கும்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும் வாசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி திரி G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே!

      நீக்கு
  6. அழகான காட்சி விவரிப்பு தொடர்ந்து நானும் வருவது போலவே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியமைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  7. பதில்கள்
    1. உடன் வந்துகொண்டிருப்பதற்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  8. குளுமையாகச் செல்கிறது இந்தத்தொடர். முன்பே வாசித்து விட்டேன்.

    திருச்சி, மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டி கிராம துயரச்செய்திகளால் நேற்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இப்போதும்கூட அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால் மனசு சரியில்லை.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

    இறையருளால் நிச்சயம் குழந்தை சுர்ஜித் காப்பாற்றப்படுவது உறுதி. நம்புவோம். நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு