வெள்ளி, 6 டிசம்பர், 2019

தொடரும் சந்திப்பு 16





புல்வெளியை அடைந்தபோது ஏற்கனவே பல நண்பர்கள் குடும்பத்தினருடன் அங்கே குழுமியிருந்தனர். 2016 ஆம் ஆண்டு  தஞ்சையில் நடந்த சந்திப்புக்கு பிறகு சந்திப்பதால், எல்லோரும் மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர்  நலம் விசாரித்துக்கொணடும். புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.  

நானும்  அவர்களுடன் சேர்ந்து கொண்டதும், எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி நான் ஏன் என மனைவியை அழைத்து வரவில்லை என்பதுதான். 






வழக்கம்போல் நண்பர் ஜெயராமன் அவருடைய குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தார். இந்த தடவை முதல்  முறையாக  நண்பர் சீத்தாராமன் கலந்து கொண்டார். அவரைப் பார்த்ததும் மனதில் பழைய நினைவுகள் வந்து போயின. 

1962 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பிற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் போது  முதன் முதல் நான் சந்தித்தது நண்பர் சீத்தாராமனைத்தான். 

எங்களது நேர்முகத்தேர்வு பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபமான ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹாலில், துணைவேந்தர் அறையில் நடந்தது. நேர்முகத்தேர்வுக்கு சென்றபோது அங்கிருந்த உதவியாளர் முதலில் தகவல் பலகையில் உள்ள அறிக்கையைப் பார்த்துவிட்டு வரும்படி எங்களிடம் சொன்னார். 

தகவல் அறிக்கையில் ‘வேளாண் அறிவியல் பட்டப் படிப்பிற்கான நேர்முகத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் திருக்குறளில் ‘உழவு’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களையும் படித்துவிட்டு வரவேண்டும் என்றும். மாணவர்களுக்கு உதவுவதற்காக பல்கலைக்கழக நூல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் நூல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. 

அதைப் படித்துவிட்டு நூல் நிலையம் எங்கிருக்கிறது என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்த மாணவர் ஒருவர், ‘நான் இங்கு தான் புகுமுக வகுப்பு படித்தேன். எனவே உங்களுக்கு நூல் நிலையத்தைக் காட்டுகிறேன். என்னோடு வாருங்கள்’ என்று கூடி அழைத்து சென்றார். அவர் வேறு யாருமல்லர். நண்பர் சீத்தாராமன் தான். 

வகுப்புத்தோழர் ஆகுமுன்னே ஏற்பட்ட அந்த நட்பு, படிக்கும்போதும் தொடர்ந்தது. புவனகிரியை சேர்ந்த அவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கவில்லை. புவனகிரி அண்ணாமலை நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருந்ததால் விடுதியில் தங்காது பயிலும் மாணவராக (Day Scholar) இருந்தார். 

முதலாம் ஆண்டு அரையாண்டுத் தேர்வை  மதியம் வைத்திருந்தார்கள். அப்போது தினம் தேர்வு அறைக்கு போகுமுன் என் அறைக்கு வந்துவிட்டு எங்களோடு சேர்ந்து தேர்வு எழுத வருவார்.

அப்படி ஒரு நாள் மதியம் வந்தபோது நான் படித்துக்கொண்டிருந்த தாவரவியல் (Botany) குறிப்புகளை (Notes) பார்த்துவிட்டு என்ன இதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இன்று இயற்பியல் (Physics) தேர்வு அல்லவா என்றார். அதற்கு நான் ‘இல்லையே. தேர்வு அட்டவணைப்படி இன்று தாவரவியல் தேர்வுதானே’ என்று நான் சொன்னதை எனது அறை நண்பர்களும் ஆமோதித்ததால், அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. 

காரணம் முதல் நாள் இரவிலும், மற்றும் அன்று காலையிலும் இயற்பியல் பாடத்தைப் படித்துவிட்டு வந்தவரிடம் தாவரவியல் தேர்வு என்று சொன்னால் எப்படி இருக்கும். ஆனால் சற்றும் கவலைப்படாமல் ‘என்னிடம் உங்களுடைய குறிப்புகளைத் தாருங்கள். நான் படித்துவிட்டு தேர்வு எழுதுகிறேன்’ என்று சொன்னார். 

அப்போது மணி மதியம் ஒரு மணி. தேர்வு ஆரம்பமாகும் நேரம் மதியம் 2 மணி. 2.30 மணி வரை தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிப்பார்கள் என்பதால் 1.30 மணி நேரத்தில் படித்துவிட்டு தேர்வு எழுத இருப்பதாக அவர் சொன்னபோது எங்களுக்கு ஆச்சரியமே ஏற்பட்டது.  

அது போலவே எனது பாடக்குறிப்புகளை வாங்கிக் கொண்டுபோய் தேர்வு அறைக்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து படித்துவிட்டு, சரியாக 2.25 மணிக்கு தேர்வு அறைக்கு உள்ளே வந்து கேள்வித்தாளை வாங்கி தேர்வு எழுதினார். தேர்வுகள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தார். 

அரையாண்டுத் தேர்வில் தேறியிருப்பது அப்படி என்ன முக்கியம் என நினைக்கலாம். அப்போதெல்லாம் பள்ளி இறுதியாண்டு, புகுமுக வகுப்புகளில் அரையாண்டு தேர்வை தெரிவு (Selection) தேர்வு என்பார்கள்.அந்த தேர்வில் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதித் தேர்வை எழுதலாம்.

இல்லாவிடில் திரும்பவும் அந்த ஆண்டு பாடத்தை அடுத்த ஆண்டில் படித்து தெரிவு தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும். இதே நடைமுறை எங்களது வேளாண் அறிவியல் பட்டப் படிப்பி‌ல், நான்கு ஆண்டுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே அன்று நண்பர் சீத்தாராமன் அந்த ஒரு பாடத்திற்கான தேர்வில் வெற்றி பெற்றிருக்காவிடில் ஒரு ஆண்டு படிப்பு வீணாகியிருக்கும். 

அந்த இக்கட்டான நிலையிலும் கவலைப்படாமால், பதற்றமில்லாமல் 1.30 மணி நேரத்திற்குள் முன்பு படித்தவைகளை மனதில் வாங்கி  தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றவரை  எப்படி என்னால் மறக்கமுடியும்? உண்மையில் அவர் ஒரு முன் மாதிரி (Role Model) மாணவர் தான்.  

அவரைப் பார்த்து பேசி அவருடனும் மற்ற சில நண்பர்களுடனும்  புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 



புகைப்படத்தில் இருப்போர்; இடமிருந்து வலமாக.நான், சங்கரன், நடராஜன்,நாச்சியப்பன்,சீத்தாராமன்,செல்லப்பா மற்றும் T.N.பாலசுப்ரமணியன் 

இது போன்ற சந்திப்புகள் நம்முடைய பழைய நினைவுகளை மீட்டெடுப்பதால் நமக்குள் ஒரு புதிய உற்சாகத்தைத் தந்து நம்மை மனதளவில் இளமையாக்குகின்றன என்பது எனது கருத்து. 



தொடரும்


20 கருத்துகள்:

  1. பழைய நண்பர்களை சந்திக்கவும் நட்பினை புதுப்பிக்கவும் உதவும் இம்மாதிரி நிகழ்வுகள் உதவுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இம்மாதிரி சந்திப்புகள்/நிகழ்வுகள் பழைய நண்பர்களை சந்திக்கவும், நட்பினை புதுப்பிக்கவும் உதவுகின்றன என்பது சரியே

      நீக்கு
  2. இது போன்ற சந்திப்புகள் நம்முடைய பழைய நினைவுகளை மீட்டெடுப்பதால் நமக்குள் ஒரு புதிய உற்சாகத்தைத் தந்து நம்மை மனதளவில் இளமையாக்குகின்றன என்பது எனது கருத்து. //

    உண்மை தான் சார். எனக்கும் இது போன்ற பல சந்திபுபுகளும் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சமயங்களில் பெரும்பாலும் நம் அலுவல் பற்றிய விஷயங்களே பேசப்படும் என்பதால் என் மனைவியும் என்னுடன் வருவதை விரும்பமாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! எங்களுடைய சந்திப்பில் அலுவல் விஷயம் பற்றி பேசமுடியாது. காரணம். எங்கள் வகுப்புத் தோழர்கள் அனைவரும் வெவ்வேறு துறையைத் தேர்ந்தெடுத்ததால் தங்களது பணி பற்றி பேசாமல், போட்டிகள் போன்றவைகளை நடத்தி சந்திப்பை கலகலப்பாக்குவோம். அதனால் கூடியவரை அனைவரும் தங்கள் துணைவியாருடன்தான் வருவார்கள். சிலர் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடனும் வருவதுண்டு. இந்த சந்திப்புக்கு என் மனைவி உடல் நிலை காரணமாக கலந்துகொள்ளவில்லை.

      நீக்கு
  3. ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்து பரீட்சை எழுதிய உங்களது நண்பர் திரு. சீத்தாராமன் வியப்பான மனிதர்.

    ஊதா நிற சொக்காய் அணிந்தவர்தானே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வேளாண் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நண்பர் சீத்தாராமன் வியப்பானவர்தான். ஊதா நிற சொக்காய் அணிந்து நடுவில் நிற்பவர் சீத்தாராமன்தான்.

      நீக்கு
  4. இனிய சந்திப்பு...

    தகவல் அறிக்கை மிகவும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. சொல்லிக் கொண்டே வரும் பொழுது டக்கென்று நண்பர் சீதாராமன் தொடர்பான பழைய நினைவுகளுக்குள் புகுந்தது நல்ல உத்தி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! இது போன்ற சந்திப்புகளில் பழைய நிகழ்வுகள் அதுவும் மறக்கமுடியாதவை நினைவில் வருவது இயல்புதானே. அந்த வகையில் நான் முதன்முதல் பல்கலைக் கழகத்தில் சந்தித்தவரும், பின்னர் என்னை வியக்கவைத்தவருமான நண்பர் சீத்தாரமனைப் பார்த்தபோது ஏற்பட்ட எண்ணங்களை என்னால் விவரிக்காமல் இருக்கமுடியவில்லை.

      நீக்கு
  6. இனிமையான சந்திப்பு. உங்கள் நண்பர் சீதாராமன் பற்றி சொல்லி இருப்பது சிறப்பு. எத்தனை திறமை அவருக்குள்.

    தொடரின் சில பகுதிகளை படிக்காமல் இருக்கிறேன். விரைவில் படித்து விடுவேன் - பதிவுலகம் பக்கம் வர இயலாமல் இருந்ததால் வந்த இடைவெளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நண்பர் சீத்தராமனை பாராட்டியதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! மற்ற பதிவுகளையும் படித்து கருத்திடுங்கள். நானும் சில நாட்களாக வலையுலகம் வர இயலவில்லை. அதனால் பயனுள்ள தகவல்களை சுவையோடு தரும் தங்களது பயண கட்டுரைகளை படிக்க இயலவில்லை.

      நீக்கு
  7. //புகைப்படத்தில் இருப்போர்; வலமிருந்து இடமாக.நான், // இடமிருந்து வலமாக என்று இருக்க வேண்டுமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தவறை சுட்டிக் காண்பித்ததற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தட்டச்சும்போது தவறு ஏற்பட்டுவிட்டது.தவறைத் திருத்திவிட்டேன்.

      நீக்கு
  8. //அந்த இக்கட்டான நிலையிலும் கவலைப்படாமால், பதற்றமில்லாமல் 1.30 மணி நேரத்திற்குள் முன்பு படித்தவைகளை மனதில் வாங்கி தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றவரை எப்படி என்னால் மறக்கமுடியும்? உண்மையில் அவர் ஒரு முன் மாதிரி (Role Model) மாணவர் தான்.//

    சபாஷ் ! மனதை ஒருமுகப்படுத்தி, படிப்பதை மனதில் நன்றாக உள்வாங்கிக் கொண்டு, படிப்பவர்களுக்கு இந்த ஒன்றரை மணியே போதும் என்பது என் எண்ணம். நானும்கூட தங்கள் நண்பர் போலவேதான். விழுந்துவிழுந்து படித்து, மனப்பாடம் செய்து, மண்டையை உடைத்துக்கொள்ளும் டைப் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நண்பர் சீத்தராமனை பாராட்டியதற்கும் நன்றி வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! மனதை நேர்முகப்படுத்தி அதுவும் தேர்வுக்கு சில மணிகளே இருக்கும்போது படித்து எழுதுவது என்பது எல்லோராலும் முடியாத ஒன்று.

      நீக்கு
  9. //இது போன்ற சந்திப்புகள் நம்முடைய பழைய நினைவுகளை மீட்டெடுப்பதால் நமக்குள் ஒரு புதிய உற்சாகத்தைத் தந்து நம்மை மனதளவில் இளமையாக்குகின்றன என்பது எனது கருத்து. //

    மிகச் சரியான கருத்துதான். ஓர் எழுத்துலக, வலையுலகத் தோழி, ஐந்து ஆண்டுகளுக்குப்பின், நேற்று இரவு தன் கணவருடன், மீண்டும் என் இல்லத்திற்கு வருகைதந்து மகிழ்வித்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய எனது கருத்தை ஆமோதித்தற்கு நன்றி வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  10. இவ்வாறான சந்திப்புகள் மனதிற்கு அதிக மகிழ்ச்சியைத் தரும். படிக்கும்போது மனம் நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! இந்த பதிவு தங்களுக்கு மன நிறைவைத் தந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு