ஞாயிறு, 17 மே, 2020

தொடரும் சந்திப்பு 28


நன்னன்  என்ற அந்த மன்னன், முனிவர் கொடுத்த மாம்பழத்தின் கொட்டையை நட்டு வளர்ந்த அதிசய மாமரத்தில் விளையப்போகும் கனியை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு 24 மணி நேரமும் பயங்கர காவல் போட்டது மட்டுமல்லாமல். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டிருந்தானாம். 


அந்த காலகட்டத்தில் வெளியூரிலிருந்து தாரகன் என்ற வணிகர் வாணிபம் செய்ய அவரது மகள் தாரணியுடன் ஆனைமலைக்கு வந்திருந்தாராம். ஒரு நாள் தாரணி என்ற அந்த பெண் தோழிகளுடன் அருகில் இருந்த ஆற்றில் குளிக்கப் போனாராம். அந்தப் பெண் எங்கு குளித்துக் கொண்டிருந்தாளோ அந்த ஆற்றின் அருகில் தான் அந்த மாமரம் இருந்ததாம். 

அவள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் மாமரத்தில் இருந்த கனி தானாக விழுந்து இவளை நோக்கி வந்ததாம். மன்னனின் தண்டனை விவரத்தை அறியாத அவள், அந்த கனியைக் கண்டதும் அதை எடுத்து சுவைத்து விட்டாளாம். 

அந்த தகவல் அரசனுக்கு எட்டியதும், உடனே காவலாளிகளை விட்டு தாரணியையும் அவள் தந்தையும் அழைத்துவரச் செய்திருக்கிறான். . பின்னர் தாரணியை கைது செய்து, அரசனின் ஆணையை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக மரண தண்டனையை அறிவித்திருக்கிறான். .


தாரணியோ, உடனே மன்னனிடம் . “அரசே! நாங்கள் வேறு நாட்டுக்காரர்கள். தாங்கள் முரசு அறிவித்தது, தண்டோரா போட்டது எதுவும் எங்களுக்கு தெரியாது. மேலும் ஒரு மாங்கனியை சுவைத்தமைக்கு கொலைத் தண்டனை உண்டு என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால்  இந்த தவறை செய்திருக்கமாட்டேன்.  ஆதலால் எனக்கு உயிர் பிச்சை தந்தருள வேண்டும்.’ என்று கோரிக்கை விடுத்தாளாம். 

கொலைக்குற்றம் புரிந்தோர்க்கு அந்த தண்டனையிலிருந்து விலக்கு பெற 81 யானைகள் தந்தால் போதும் என்ற பண்டைகால வழக்கப்படி, அப்பெண்ணின் தந்தை, அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக எண்பத்தோரு களிற்றையும், அந்த பெண்ணின் எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், தண்டம் இழைப்பதாகக் கூறியும், இரக்கமற்ற நன்னன் அவளது கோரிக்கையையும் அவளது தந்தை தண்டம் தருவதாகக் கூறியவைகளையும் ஏற்காமல் அவளை கொலைக்களத்திற்கு அனுப்பி கொலை செய்ய சொல்லிவிட்டானாம்.  .

அப்போது அவள் ‘அரசே! நான் இறப்பினும் மீண்டும் வந்து மிகுந்த சக்திவாய்ந்த தெய்வமாக விளங்குவேன். ஆனால் என்னைக் கொலை செய்த காரணத்தால் உன்னுடைய நாடும் மக்களும் அழிந்து போவார்கள்.’ என்று சாபமிட்டு அவள் உயிர் நீத்தாளாம். 

பின்னர் விஜயமங்கலம் அருகே நடந்த போரில் எதிரி நாட்டுப் படைகள் நன்னனை சூழ்ந்து கொன்று அவனது வம்சத்தையே பூண்டோடு அழித்தார்கள் என சொல்லப்படுகிறது.

( இந்த நிகழ்வு குறித்து எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில்  

மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல.

என 292 ஆவது பாடலில் சொல்லப்பட்டுள்ளது. 

பெண்ணைக் கொலை செய்த மன்னனின் மரபினரை பிற்காலத்தில் தமிழ்ப் புலவர்கள்  பாட மறுத்துவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது) 

ஒரு  மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் என்று சூளூரைத்து உயிர் பிரிந்த அந்த பெண்ணின் உடலை அவள் தந்தை பெற்றுக்கொண்டாராம்.

பின்னர் அந்த உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், வருத்தம் கொண்ட ஊர் மக்கள் அந்த உடலை மயானத்தில் சமாதிப்படுத்தி. அந்த பெண் படுத்த நிலையில் இருப்பதுபோல் மண்ணால்  உருவத்தை செய்துவைத்தனராம். 

சிறிய மயான அம்மனாக இருந்தபோது அந்த உருவை வழிபட்ட மக்கள் நாளடைவில் ஊரைக்காக்கும் அம்மனாக வளர்ந்து சக்தி வாய்ந்த தெய்வமாக ஆனதும், அங்கேயே கோவில் எழுப்பி வணங்கி வருகின்றனராம். 

மாங்கனிக்காக உயிர் விட்ட காரணத்தினால் மாங்கனி அம்மன் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த அம்மனின் பெயர் நாளடைவில் மாசாணியம்மன் என்று மருவியது என்று சொல்லப்படுகிறது.  

ஆனால் மயானத்தில் துயில் கொண்டதால்  ‘மயான சயனி’ அம்மன்  என்னும் பெயர் சூட்டப்பட்ட இந்த அம்மனின் பெயர் நாளடைவில் மருவி மாசாணியம்மன் என அழைக்கப்பட்டதாக சொல்வோரும் உண்டு. 

மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளதால். இந்த கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்துதற்காக வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை நாட்களில் பெண்கள் ஈர உடையுடன் கோயிலை வலம் வருகிறார்கள்..

மக்கள் தங்களின் உடமைகளில் ஏதேனும் ஒன்று திருடு போய்விட்டால் இக்கோவிலிலிருக்கும் “நீதி கல்லில்” அரைத்த மிளகாயை தடவி தங்களின் குறையை போக்குமாறு வேண்டுகின்றனர்
(படம் தந்து உதவிய கூகிளாருக்கு நன்றி)


மிளகாய் வழிபாட்டுக்காகவே பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கோயிலிற்கு வருகை தருகின்றனர். அங்குள்ள வீடுகளில் நகை, பொருள் மாயமாகி விட்டால், வீட்டுக்காரர்கள் காவல் துறையிடம் செல்வதில்லையாம். ‘பொருள் காணாமல் போய்விட்டது. மாசாணி அம்மனுக்கு மிளகாய் அரைக்க போகிறேன்‘ என்று அக்கம்பக்கத்தில், சுற்றுப்பகுதிகளில் சொல்லுகிறார்கள்.

அந்த அம்மனை வழிபட்டு நாங்கள்  பேருந்துக்கு திரும்பியபோது பெரும்பாலான நண்பர்கள் வந்து சேரவில்லை.  எல்லோரும் வந்து பேருந்தை எடுக்கும்போது மாலை மணி 4.30 ஆகிவிட்டது.

அங்கிருந்து புறப்பட்டு 21 கி. மீ தொலைவில் இருந்த  அறிவுத் திருக்கோவிலை வேடசந்தூர் வழியாக சென்று அடைய மணி 5 ஆகிவிடும் என்பதும் .மேலும் அறிவுத்திருக்கோவில் மற்றும் ஆழியாறு அணையைப் பார்த்துவிட்டு புறப்பட மணி 6 க்கு மேல் ஆகிவிடும் என்பதும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சியில் சில நண்பபர்களை விட்டுவிட்டு கோவை செல்ல மணி 8 ஆகிவிடும் என்பதால் நான் எனது  பயண திட்டத்தில் ஒரு மாற்றம் செய்தேன். 

தொடரும்


12 கருத்துகள்:

 1. மாசாணி அம்மன் வரலாறு அறிந்தேன் நண்பரே நன்றி.

  தங்களது பயணத்திட்டத்தின் மாற்றம் அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! எனது பயண திட்டம் மாற்றம் பற்றி அடுத்த பதிவில் சொல்லுவேன்.

   நீக்கு
 2. குறுந்தொகை பாடலுடன் விளக்கம் அருமை ஐயா... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. என்னதான் கோணல்கள் இருந்தாலும் குடியாட்சியின் மாண்புக்கு ஈடில்லை தான். ஆனால் குடியாட்சியில் ஆட்சிக்கு வந்தவர்கள் பண்டைய மன்னர்களின் வழிவழி வந்தவர்கள் போல தங்களை பாவித்து பெருமிதம் கொண்டதெல்லாம் நினைத்தால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன். முடியாட்சியைப்போல ஆள நினைத்து குடியாட்சி நடத்துவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதைப் போல் தான் உள்ளது.

   நீக்கு
 4. மாசாணியம்மன் கதை நன்று. மிளகாய் அரைத்து பூசுவது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பயணத்திட்டத்தில் மாறுதல் - என்ன மாறுதல் என்பதைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் - சமயத்திற்கு தகுந்த மாதிரி திட்டத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்வதும் நல்லதே. பல பயணங்களில் இதை உணர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! எனது பயண திட்ட மாறுதல் பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுவேன்.

   நீக்கு
 5. மாங்கனி அம்மன்தான் மாசாணியம்மன் ஆனது என்பது தெரிந்துவைத்திருக்க வேண்டிய நல்ல தகவல் ....நான் அறிந்த அளவில் பல கோவில்களின் தல வரலாறுகளை பார்த்தால் பெரும்பாலும் கொலையுண்ட ஒருபெண்தான் சாமியாக எழுந்தருளியுள்ளதாக வருகிறது ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.பல இடங்களில் கொலையுண்ட அல்லது துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட பெண்களே தெய்வமாக ஆகியிருக்கிறார்கள்.

   நீக்கு
 6. மாசாணியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளேன். அப்போது மக்களின் நம்பிக்கையை அறிந்து வியந்தேன். இன்று உங்கள் மூலமாக அம்மனைக் காணும் வாய்ப்பு. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! மக்களின் நம்பிக்கையைக் கண்டு வியந்ததாகக் கூறியுள்ளீர்கள், நம்பிக்கைத்தானே வாழ்க்கை!

   நீக்கு