திங்கள், 25 மே, 2020

தொடரும் சந்திப்பு 29





எனது பயண திட்டத்தில் மாற்றம் செய்ததற்கு காரணம் ஒன்று உண்டு. தஞ்சையிலிருந்து நண்பர் பாலு பொள்ளாச்சி சந்திப்பு பற்றி சுற்றறிக்கை அனுப்பியவுடன், நிகழ்ச்சி பற்றிய விரிவான  சுற்றறிக்கைக்கு காத்திராமல், சந்திப்பில் பங்கேற்க சென்னையிலிருந்து காலையில் புறப்படும் கோவை விரைவு இரயிலில் 30-08-2018 அன்றும்,திரும்பிவர கோவையிலிருந்து 01-09-2018 அன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் நீலகிரி விரைவு இரயிலிலும்,  28-05-2018 அன்றே முன் பதிவு செய்துவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. 




மாசாணி அம்மன் கோவிலில் இருந்து எங்களது பேருந்தை எடுக்கும்போதே மணி 4.30 ஆகிவிட்டதால் அறிவுத்திருக்கோவிலுக்கு 5 மணிக்கு சென்று பார்த்துவிட்டு பின்னர் ஆழியாறு அணையைப் பார்த்துவிட்டு புறப்பட கண்டிப்பாக மணி 6 க்கு மேல் ஆகிவிடும் என்பதும் உறுதியாகிவிட்டது. 

மேலும் குடும்பத்தொடும் பிள்ளைகளோடும் வந்திருப்பதால் எவ்வளவு நேரம் ஆழியாறு  அணையிலும் பூங்காவிலும் செலவிடப்போகிறோம் என்பதும் தெரியாததால் ,அங்கிருந்து புறப்பட 6 மணிக்கு மேலும் ஆகலாம் என்பதாலும், அங்கிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள பொள்ளாச்சியை அடைந்து அங்கு சில நண்பர்களை பேருந்து நிறுத்தத்திலும், இரயில் நிலையத்திலும் விட்டுவிட்டு புறப்பட  இரவு 7 மணி ஆகிவிடலாம் எனத்தெரிந்தது. 

கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையே உள்ள தொலைவு 40 கி.மீ என்றாலும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததாலும், மாலை நேர போக்குவரத்து நெரிசலாலும், கோவையை இரவு 8.30 மணிக்குள் அடையமுடியாது என்பதும், நீலகிரி விரைவு இரயிலை தவற விட்டுவிடுவேன் என்பது தெரிந்ததால், அறிவுத் திருக்கோவிலையும் ஆழியாறு  அணையையும் பார்க்காமல் நேரே கோவை செல்வது என முடிவெடுத்தேன். 

உடனே எனது கோவையில் உள்ள நண்பரை தொடர்புகொண்டு அறிவுத் திருக்கோவிலுக்கு ஒரு வாகனத்தை அனுப்பி என்னை கோவை இரயில் நிலையத்தில் விட  ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டேன். 

பொள்ளாச்சியில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தபோது பலமுறையும், கோவையில் 1998-2000 ஆகிய ஆண்டுகளில் பணிபுரிந்தபோதும் ஆழியாறு அணைக்கு சென்றிருந்ததால் அதைப் பார்ப்பதை தவிர்ப்பதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் அறிவுத் திருக்கோவிலை பார்க்காமல் செல்கிறோமே என வருத்தப்பட்டாலும் பிற்கு வந்து பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து மனதைத் தேற்றிக்கொண்டேன். 

நான் நினைத்தது போலவே மாலை 5 மணி சுமாருக்கு அறிவுத் திருக்கோவிலை அடைந்தோம்.



படம் உதவி: கூகிளார்



நண்பர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பேருந்திலிருந்து இறங்கி கோவிலுக்கு செல்ல, அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, கைப்பேசி மூலம் எனக்கு வாகனம் கொண்டு வந்திருந்த நண்பர் எங்கு காத்திருக்கிறார் என அறிய தொடர்பு கொண்டேன்

தொடர்புக்கு வெளியே இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருக்கும்போது, அவரும் அவரது ஓட்டுனரும் என்னைத் தேடி வந்துவிட்டனர். 

அவர்கள் முன்பே வந்துவிட்டனர் என்றும், என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு தொடர்பு கிடைக்காததால் என்னைத் தேடி கோவிலுக்குள் சென்று தேடிவிட்டு, நான் அங்கு இல்லை என்பதால் வெளியே வந்ததும் என்னை பார்த்ததாகக் கூறினார்கள். உடனே அவர்களுடன் கோவைக்கு புறப்பட்டேன்.

நான் பார்க்க இருந்த அறிவுத் திருக்கோவிலை பார்க்க என்னால்  இயலவில்லை, ஆனால் அதை பார்க்க திட்டமிடாத நண்பர்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணியபோது ‘நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஓன்று நினைக்கும்’ என்ற பழமொழி அப்போது நினைவுக்கு வந்தது.


தொடரும்



14 கருத்துகள்:

  1. தங்களது பயணச்சீட்டின் பதிவுதான் தங்களை இப்படி சூழலுக்குள் தள்ளி விட்டது. முடிவில் தாங்கள் சொன்னதே நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  2. சில சமயங்களில் இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு. சரியானபடியே திட்டமிட்டு இருந்தாலும், கடைசி நேரத்தில் சில மாறுதல்களை, தேவைக்கேற்ப செய்து கொள்வது நல்லது தான். இரயிலை விட்டிருந்தால் பண விரயத்துடன், மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான செலவும் சேர்ந்துவிடும், கூடவே மன உளைச்சலும்.

    மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! ‘நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று’ என்று சொல்வதுபோல், அறிவுத்திருக்கோவில் பார்க்க விரும்பியும் பார்க்கமுடியாமல் போனது. அறிவுத்திருக்கோவிலை பார்க்க நேரத்தை ஒதுக்கியிருந்தால், நீங்கள் சொன்னதுபோல் கோவையில் ரயிலை தவறவிட்டு திண்டாடியிருப்பேன். எனினும் அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என இருக்கிறேன்.

      நீக்கு
  3. அறிவுத் திருக்கோவிலும் நன்றாக இருக்கும் ஐயா... இன்னொருமுறை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! எனக்கும் அறிவுத் திருக்கோவிலை பார்க்கமுடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. நிச்சயம் அதை பார்க்க இருக்கிறேன்.

      நீக்கு
  4. அறிவுத் திருக்கோயிலுக்குப் போகாமல் திரும்பி விடுவீர்களோ என்ற பதட்டத்துடனேயே வாசித்து வந்தேன்.

    'நான் நினைத்தது போலவே மாலை 5 மணி சுமாருக்கு அறிவுத் திருக்கோவிலை அடைந்தோம்' என்ற வரியைப் படித்தும், திருக்கோயிலின் முகப்பை படத்தில் பார்த்தும், 'அப்பாடி.. வந்து சேர்ந்து விட்டாரே' என்ற திருப்தியில் மேற்கொண்டு வாசிக்க அரம்பித்தால், நீங்கள் கோவைக்குத் திரும்பி விட்டது தெரிந்தது.

    நீலகிரி விரைவு வண்டியைப் பிடிக்க வேண்டுமானால் வேறு வழியில்லை என்பதும் புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! எனது 26 ஆவது தொடர் பகுதியில், ‘அறிவுத் திருக்கோயிலுக்காகக் காத்திருக்கிறேன்.’என்று தங்களின் பின்னூட்டத்திற்கு, ‘அறிவுத் திருக்கொவில் பகுதி வரும்போது ஒரு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது.’ என்று பதில் தந்தது நினைவிருக்கலாம். வேறு வழியில்லாமல் அறிவுத் திருக்கொவில் செல்வதை தவிர்க்கும்படி ஆகிவிட்டது. கண்டிப்பாக ஒரு நாள் அங்கு சென்று வந்து பதிவிடுவேன்.

      நீக்கு
  5. அறிவுத்திருக்கோவிலை அறிந்ததில் மகிழ்ச்சி ... இக்கோவிலில் மூலவராக இருக்கும் கடவுள் யார் என்று அறிந்துகொள்ள ஆசை ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! அறிவுத் திருக்கோவில் என்ற பெயரே சொல்லும் இது அறிவுக்கான கோவில் என்று. இதை 1984 ஆம் ஆண்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவினார்கள்.

      அறிவுத் திருக்கோவிலினுள் வேதாத்திரி மகரிஷியின் நினைவு மண்டபம், அவர் பயன்படுத்திய பொருட்களின் அருங்காட்சியகம், மகரிஷி பயன்படுத்திய மகிழுந்து, அவர் எழுதிய புத்தகங்கள் விற்பனை கூடம் ஆகியவை அமைந்துள்ளன. மகரிஷி யின் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய வசதியுள்ளது. இங்கு பல மனவளக்கலை மன்றத்திலிருந்து தியான பயிற்சிக்கு மாணவர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகள் உள்ளன.

      நீக்கு
    2. நல்லதொரு தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி ஐயா !!!

      நீக்கு
    3. மீள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே!

      நீக்கு
  6. 2018ல் நடந்த நிகழ்வுகளை எதோ நேற்று நடந்தமாதிரிஎழுதுவது சுலபமில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! இந்த வலைத்தளத்தை ஆரம்பித்த 2009 ஆம் ஆண்டே எனது ஆரம்பப் பள்ளி பருவம் முதல் 1960 ஆண்டு S,S,L,C வரை நடந்தவைகளை 'நினைவோட்டம்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். 45 ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளை நினைத்துப்பார்த்து எழுதும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளை எழுதுவது எளிதான ஒன்றுதான்.

      நீக்கு