ஞாயிறு, 14 ஜூன், 2020

தொடரும் சந்திப்பு 31





பொள்ளாச்சியிலிருந்து திரும்பி வந்த அன்றே (02-09-2018)  நண்பர் முத்தையாவை தொடர்புகொண்டு சந்திப்பு பற்றி சொல்லிவிட்டு அடுத்த சந்திப்பு 2020 ஆம் ஆண்டு சென்னையில் என்று சொன்னதும், உடனே ‘கவலை வேண்டாம்.நண்பர்கள் உதவியுடன் நாம் ஜமாய்த்துவிடலாம்.’ என்று அவர் சொன்னார் என்று எழுதியிருந்தேன் அல்லவா. ஆனால் நடந்ததோ வேறு.



27-09-2018 அன்று காலை 10 மணிக்கு நண்பர் திரு இராஜேந்திரன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார். ( திரு இராஜேந்திரன் பாங்க் ஆஃப் இந்தியாவில் துணைப் பொதுமேலாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, ரெப்கோ வங்கியில் செயல் இயக்குனராக (Executive Director) பணியாற்றி ஒய்வு பெற்றவர்)

ஏதோ வழக்கமான அழைப்பு என நினைத்து தொடர்பு கொண்டபோது ஒரு அதிர்ச்சியான  தகவலை சொன்னார். நண்பர் திருமுத்தையா அன்று காலை இயற்கை எய்துவிட்டார் என்ற நம்பமுடியாத தகவல் தான் அது. 

எந்தவித நோய்நொடியும் இல்லாமல் இருந்த அவர் மறைந்துவிட்டார் என்ற தகவலை என்னால் நம்பவே முடியவில்லை. உடனே நானும் என் துணைவியாரும் அவரது வீட்டிற்கு சென்று இறுதி மரியாதையை செய்தோம்.



                                                                 திரு முத்தையா 


எங்கள் வகுப்பு நண்பர்கள் அனைவருக்கும் அவரது திடீர்  மறைவு அதிர்ச்சியைத் தந்தது. எங்களது வகுப்பு நண்பர்களிலேயே  மிகவும் அமைதியானவர். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். படிப்பில் மிகவும் சூட்டிகையானவர். 

இறுதியாண்டுத்தேர்வில் முதல்வகுப்பு பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே வேளாண் செயல் முறைப் பயிற்றாசிரியராக (Demonstrator) சேர்ந்தார். 

பின்னர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா , இந்தியன் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளிலும் அலுவலராக தேர்வு செய்யப்பட்டபோது, பாங்க் ஆஃப் இந்தியாவில் சேர்ந்து இந்தியாவின் பல இடங்களில் பணிபுரிந்து, முதன்மை மேலாளராக இருக்கும் போதே விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். பின்னர் சில ஆண்டுகள் சென்னையில் ரெப்கோ வங்கியின் பணியாளர் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். 

சென்னை சந்திப்பை நன்றாக நடத்திவிடலாம் என்ற சொன்ன அவர் சொல்லி  25 நாட்களுக்குள் இயற்கை எய்தியதை இன்னும் என்னால் நம்ப இயலவில்லை. பல நாட்கள்  அவரது  மறைவு குறித்து  வருந்தியிருக்கிறேன். 

எங்களது 7 ஆவது சந்திப்பை சென்னையில் வைத்துக்கொள்வது பற்றி 2019 ஆண்டு ஜனவரி திங்களில் பொங்கலுக்குப் பிறகு கலந்தாலோசிக்கலாம் என சென்னையில் உள்ள நண்பர்கள் முடிவு செய்தோம்.

ஆனால் 'பட்ட காலிலேயே படும்' என்பது போல் மறுபடியும் நடந்த இன்னொரு நிகழ்வு எங்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது,  எங்கள் வகுப்பு நண்பர் திரு செல்லையா அவர்களின் மகன் Dr.பார்கவா 28-02 2019 அன்று எங்களது குழுவிற்கு அனுப்பியிருந்த தகவலில், திரு செல்லையா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும்,  அவர் விரைவில் நலம் பெற அனைவரும் வேண்டுமாறும் கேட்டிருந்தார். 

நாங்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தோம். ஆனால் 05-03-2019 அன்று இரவு மணி 7.10 க்கு அவர் இயற்கை எய்திவிட்ட சோக செய்தியை எங்கள் வகுப்பு நண்பர் முருகானந்தம் அறிவித்தார். மறுநாள் காலை அவருக்கு இறுதி மரியாதை செய்ய நினைத்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில்  உள்ள அரும்பாவூர் என்ற அவரது ஊருக்கு எடுத்து சென்றுவிட்டதாக சொல்லிவிட்டதால் என்னால் நேரில் சென்று மரியாதை செலுத்த இயலவில்லை. 



                                                                திரு செல்லையா


நண்பர் செல்லையா படித்து முடித்தவுடன் கரும்பு ஆலை பணியில் சேர்ந்து தலைமை கரும்பு அலுவலராக (Chief Cane Officer) பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போதே உடற்பயிற்சி விளையாட்டுகளில் ஆர்வம் காட்டியவர். பணி ஓய்வு பெற்றபின் கூட இறக்கும் வரை நெடுந்தொலை ஓட்ட (Marathon) போட்டியில் கலந்துகொண்டிருந்தார் என்பது வியப்பளிக்கும் தகவல் . 

தஞ்சை சந்திப்பின் போது அடுத்த சந்திப்பு சென்னையில் வைத்துகொள்ள சொல்வார்களோ என்றெண்ணி தஞ்சையில் சந்திப்பை இவ்வளவு பிரமாதமாக நடத்திய பின், இதைப்போல் நம்மால் நடத்தமுடியுமா என நண்பர் செல்லையாவிடம் கேட்டபோது, அவர் உடனே ‘நடனம் .கவலை வேண்டாம்.நான் இருக்கிறேன். நண்பர்கள் முத்தய்யா, பிச்சைதுரை, சேதுராமன் போன்ற நண்பர்கள் துணையோடு ஜமாய்த்துவிடுவோம்.' என்றார். 

பின்னர் அடுத்த சந்திப்பை கோவை நண்பர்கள் நடத்த ஒப்புக்கொண்டு பொள்ளாச்சியில் நடத்திய பிறகு, சென்னையில் தான் அடுத்த சந்திப்பு என்று சொன்னபோதும் எனக்கு ஊக்கம் கொடுத்தவர் நண்பர் செல்லையாதான். 




பொள்ளாச்சி சந்திப்பில் எடுத்த புகைப்படம் . இடமிருந்து வலமாக நான்காவதாக நிற்பவர் நண்பர் செல்லையா.    

ஆனால் சந்திப்பை நடத்த துணையாய் இருப்பதாக சொன்ன அவரும் எங்களை விட்டு மறைந்துவிட்டார். சென்னையில்  இருக்கும் வகுப்புத் தோழர்களில் இருவர் அடுத்தடுத்து மறைந்தது எங்களை  சோகத்தில் ஆழ்த்திவிட்டன. அதனால்  எங்களது 7 ஆவது சந்திப்பை நடத்துவது பற்றிய கலந்தாலோசிக்கும் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. (அதுபற்றி பின்னர் எழுதுவேன்) 

எங்களது சென்னை சந்திப்பை நடத்த தங்களின் முழு ஒத்துழைப்பையும் தருவதாக சொன்ன இரு நண்பர்களையும் இழந்துவிட்டோம். அவர்கள் இருந்திருந்தால் என்னென்ன வகையில் உதவியிருப்பார்கள் என எண்ணி  கவலை கொள்கிறோம்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை’ என்ற கவியரசரின் கண்ணதாசனின் வரிகளை எண்ணி ஆறுதல் அடைகின்றோம்.


7 ஆம் சந்திப்பு பற்றிய பதிவு பின்னர் வெளியிடப்படும். 



14 கருத்துகள்:

  1. நண்பர்களின் இழப்பு மிகவும் வருத்தத்தை தருகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நண்பர்களின் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. நல்லதொரு தொகுப்பு முடிவில் இதில் கலந்து கொண்ட இரு நண்பர்களது திடீர் மறைவு வேதனையை தந்து விட்டது அவர்களது குடும்பத்தினர்களுக்கு எமது இரங்கல்களை தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நண்பர்களின் இழப்பிற்கு வருந்தி அவர்களின் குடும்பத்தார்க்கு ஆறுதல் தெரிவித்தமைக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  3. அடுத்தடுத்த இழப்புகள் கவலையளிக்கின்றன. சென்னை சந்திப்பு குறித்து அறிய ஆவல்...

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நண்பர்களின் இழப்பிற்கு கவலையடைந்தமைக்கும் நன்றி திரு சிகரம் பாரதி அவர்களே!கொரானா 19 நோய் காரணமாக சென்னை சந்திப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.அது குறித்து பின்னர் எழுதுவேன்.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    இறுதியில் வேதனையை தந்து விட்டது தொடருகிறேன் ஐயாநீங்களும் தொடருங்கள்


    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,நண்பர்களின் இழப்பிற்கு வேதனை அடைந்தமைக்கும் நன்றி கவிஞர் திரு த.ரூபன் அவர்களே!

      நீக்கு
  5. இவ்வாறான இழப்புகள் அதிக சோகத்தைத் தந்துவிடும். அதனை பகிர்ந்தது அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ளது. நீங்கள் சொல்வதுபோல நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. பதிவை வாசித்தமைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  7. நண்பர்களின் இழப்பு வேதனையான விஷயம் தான்.

    அடுத்த சந்திப்பு குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!கொரானா 19 நோய் காரணமாக சென்னை சந்திப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.அது குறித்து பின்னர் எழுதுவேன்.

      நீக்கு