ஞாயிறு, 21 ஜூன், 2020

எது சிறந்தது ? 1





தஞ்சையில் எங்களது வகுப்புத் தோழர்களின் மறக்கமுடியாத பொன் விழா சந்திப்பு  நடந்த போது உணவு சாப்பிட்ட முறை பற்றி எழுதும் போது எடுத்தூண் என்று Buffet முறையை குறிப்பிட்டிருந்தேன்.




நண்பர் திரு ஜீவி அவர்கள் அந்த பதிவின் பின்னூட்டத்தில் “1) எடுத்தூண் (Buffet) எடுத்துண் தட்டச்சு செய்கையில் நெடில் சேர்ந்து தூண் ஆகிவிட்டதோ என்ற ஐயம் உண்டு. 2) பஃபேக்கான மூலச் சொல் எதுவென்று தெரியவில்லை. அதிலிருந்து அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு (Self service என்கிற மாதிரி) தமிழ்ச் சொல் புழக்கத்தில் வந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்ற நினைப்பும் வந்தது.” என்று குறிப்பிட்டிருந்தார். 

அவருக்கு பதில் சொல்லும்போது “Buffet என்பதை தமிழில் எடுத்தூண் அல்லது மகிழ்ந்தூண் அல்லது கூட்டூண் என்று சொல்லலாம் என்றாலும் நாமே எடுத்து உண்பதால் எடுத்தூண் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டேன். தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்படவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தேன். 

அதற்கு ஜீவி அவர்கள் “எனக்கு இதில் சின்ன குழப்பம். எல்லா உணவுகளையும் எடுப்பதற்கு படைக்கப்பட்ட கையினால் தானே எடுத்து உண்கிறோம்? இந்த 'எடுத்தூண்' விஷயத்தில் அப்படி என்ன விசேஷம்?.. மற்றவர்கள் பரிமாறாமல் நாமே எடுத்துண்பதால் அப்படிச் சொல்கிறீர்களா?.

ஆக, வழக்கமாக நாம் கையால் எடுத்து உண்பதற்கும், இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், 'பரிமாறல்' இல்லை என்பது தான்.

அப்படியென்றால் பரிமாறல் இல்லை என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக நாம் அமைக்கும் வார்த்தை அமைய வேண்டும் அல்லவா?.” என்று திரும்பவும் கேட்டிருந்தார். 

அதற்கு இவ்வாறு பதில் தந்திருந்தேன். “உண்மைதான். பரிமாறப்பட்ட உணவை கையினாலோ அல்லது (முள்) கரண்டியாலோ எடுத்து சாப்பிட்டாலும் அந்த செயலை எடுத்து உண்பதாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அங்கு பிறர் பரிமாறிய உணவைத்தான் உண்கிறோம்.

நாமே எடுத்து உண்பதைத்தான் எடுத்தூண் என்று சொல்லவேண்டும். நம் வீட்டிலே கூட சிலசமயங்களில் ‘நீங்களே போட்டு சாப்பிடுங்கள் சொல்வதில்லையா?’ நீங்களே சாப்பிடுங்கள் என்று சொல்லாமல் போட்டு சாப்பிடுங்கள் என்று சொல்வது நாமே எடுத்து சாப்பிடுவதால் தான். எனவே Buffet என்பதற்கு எடுத்தூண் என்ற தமிழாக்கம் சரி என்றே கருதுகின்றேன்.”

அதே பதிவில் திரு ஸ்ரீராம் அவர்கள் ‘எடுத்துண் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்றுதான் எனக்கும் பட்டது. சுய சேவை உண்டி!’ என்று பின்னூட்டம் தந்திருந்தார். 

அவருக்கு “எடுத்தூண் என்ற சொல் தமிழ் வல்லுனர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. எடுத்துண் என்பது ஆணை இடுவதுபோல் தோன்றுவதால் அந்த சொல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என நினைக்கிறேன். சுயமாக சாப்பிடும் முறை என்றும் சிலர் சொல்வதுண்டு என்று பதில் தந்திருந்தேன்.

மறுபடியும் எங்களது பொள்ளாச்சி சந்திப்பை தொடரும் சந்திப்பு என்று எழுதியபோது மறுபடியும் எடுத்தூண் என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தேன்.

அதற்கு நண்பர் ஜீவி அவர்கள் பின்னூட்டத்தில் “எடுத்தூண் -- நமக்கு நாமே என்ற பெயரில் இறக்குமதி பழக்கம்.சர்வ சாதாரணமாக இடது கை உபயோகத்திற்கு ஏதுவாகிறது.

Buffet என்பது உணவகங்களில் உணவு பரிமாறுகிறவர்களை இல்லாமல் செய்வதற்கான சூது என்கிற எண்ணமும் எனக்குண்டு. அந்த சூதை ஒரு நாகரிக மாற்றம் போல பழக்கப்படுத்தி விட்டார்கள். பிசைந்து சாப்பிடும் நம் பாரம்பரிய வழக்கம் மறைந்து தயாரித்த (Readymade) உணவை 'அப்படியே' எடுத்து உண்ணும் வழக்கம். பெரும்பாலும் உட்கார்ந்து சாப்பிடாமல் நின்று கொண்டே, விழாக்களில் நண்பர்களுடன் பேசியபடி கொறிப்பது என்றாகி விட்டது.

வாழை இலை போட்டு பரிமாறி... இப்படியே போனால் இந்த 'பரிமாறி' என்ற சொல்லும் வழக்கொழிந்ததாகப் போய் விடும் போலிருக்கிறது,” என்று குறிப்பிட்டிருந்தார். 

அவருக்கு தந்த பதிலில் “வலது கை பழக்கம் உள்ளவர்கள் தட்டை இடது கையில் ஏந்தி வலது கையில் தான் சாப்பிடுவார்கள். எனவே இடது கை உபயோகத்திற்கு ஏதுவாக வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.

எடுத்தூண் முறை அறிமுகப்படுத்தியதற்கு, உணவகங்களில் உணவு பரிமாறுகிறவர்களை இல்லாமல் செய்வதற்கான சூது என்கிற தங்களின் எண்ணம் சரியென்றாலும். அதிலும் சில நன்மைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது இலையில் பரிமாறும்போது எல்லாவற்றையும் பரிமாறுவதால் உணவு வீணாக வாய்ப்புண்டு என்றும் எடுத்தூண் முறையில் தேவையானவற்றை மட்டும் உண்பவர் எடுத்துக்கொள்வதால் உணவு வீணாவது தடுக்கப்படுகிறது என்றும், திருமணம் போன்ற நிகழ்வுகளில் உணவளிப்பு ஒப்பந்தக்காரர்கள் (Catering Contractors) ஒரு தட்டுக்கு இவ்வளவு என்று விலை நிர்ணயிப்பதால் விருந்தினர்கள் சாப்பிட்ட பிறகு அதை எண்ணி கணக்கிடல் எளிதாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இந்த எந்திரமயமான உலகில் அமர்ந்து இலையில் சாப்பிடுவது என்பது மெல்ல மெல்ல மறைந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் வேதனை.”  என்று சொல்லியிருந்தேன். 

பிறர் பரிமாற அமர்ந்து உண்ணும் முறைக்கும், நாமே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடும் எடுத்தூண் முறைக்கும் உள்ள வேறுபாடுகளையும் அவைகளில் உள்ள பயன்களையும் எழுத முந்தைய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் என்னைத் தூண்டியதால் அவைகளை இங்கே வெளியிட்டு பதிவை தொடர்கிறேன்.  

தொடரும்




18 கருத்துகள்:

  1. எடுத்தூண் பற்றிய விரிவான விளக்கம் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. விளக்கங்கள் அருமை நண்பரே...
    எடுத்தூண் - எடுத்துண் அழகான விளக்கம் நன்றி தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜிஅவர்களே

      நீக்கு
  3. ஒரு சொல்லுக்கான பொருள் தேடல் அருமை. 1) ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பின்போது பொதுவாக அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நான் எழுத முயற்சிக்கிறேன். 2) சில சமயங்களில் ஆங்கிலச்சொற்கள் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தவும் செய்கிறேன். உதாரணமாக டேப்ளாய்ட் இதழ்கள்.
    3)தமிழில் இல்லாதவற்றை தமிழில் மொழிபெயர்த்து வாசகர்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளேன். அப்போது வேர்ச்சொல், ஆரம்பம், தொடர்பு என்பதைப் பார்ப்பதில்லை. (சிலவற்றில் பார்க்கவும் தெரியாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது மக்களுக்கு புரியும் வகையில் இருக்கவேண்டும் என்ற உங்கள் கருத்து ஏற்புடையதே. ஆனால் கூடியவரை தமிழ் சொற்களை பயன்படுத்த முயற்சிக்கவேண்டும் என்பது என் கருத்து. சில ஆங்கில சொற்களுக்கு இணையானதமிழ் இல்லையே என எண்ணி ஆங்கில சொற்களை பயன்படுத்தவதை தவிர்க்கவேண்டும். Tabloid என்பதற்கு சுருக்கச் செய்தித்திரட்டு என்கிறது அகரமுதலி. அதை பயன்படுத்தலாம். புதிய சொற்களை அறிமுகப்படுத்தி அடிக்கடி அவைகளை பயன்படுத்தினால் அவைகள் பழக்கத்திற்கு வந்துவிடும். எடுத்துக்காட்டாக கணினி, பேருந்து போன்ற சொற்களை குறிப்பிடலாம்.

      நீக்கு
    2. Tabloid என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பல இடங்களில் இதழின் வடிவம், அமைப்பு, செய்திகளைத் தரும் முறை உள்ளிட்ட பல பொருள்களைக் (shape. paper size breadth and width, giving info with limited column width, insertion of photographs) காணமுடிந்தது. சுருக்கச் செய்தித்திரட்டு என்ற தமிழ்ச்சொல்லில் இவையனைத்தும் அடங்குமா என்பது தெரியவில்லை. எனினும் நீங்கள் சொன்ன கருத்தான, பயன்டுத்தினால் புழக்கத்திற்கு வந்துவிடும் என்பதை முழுமையாக ஏற்கிறேன். அதனைக் கடைபிடிப்பேன். நன்றி ஐயா.

      நீக்கு
    3. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! புதிதாய் அறிமுகமாகும் ஒன்றுக்கு உள்ள ஆங்கில பெயருக்கு இணையாக தமிழில் பெயர் சூட்டும்போது துவக்கத்தில் சிறிது கடினமாகத்தோன்றினும் நாளடைவில் அது பழகிவிடும். எனவே கூடிவரை தமிழ் சொற்களை பயன்படுத்துவோம். அதுவும் நீங்கள் விக்கிபீடியாவில் எழுதுவதால் இந்த புதிய சொற்களை பயன்படுத்தினால் அவை விரைவில் மக்களை அடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

      நீக்கு
    4. நன்றி. அவ்வாறே செய்வேன். நான் எழுதவுள்ள அடுத்த கட்டுரையின் தலைப்பான ஆக்ஸ்போடு கமா (Oxford comma) என்பதை ஆக்ஸ்போர்டு காற்புள்ளி என மாற்றி, தொடர்ந்து எழுதவுள்ளேன். உங்களின் ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
    5. நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! தங்களின் பணி தொடர வாழ்த்துகள்!

      நீக்கு
  4. 'எடுத்தூண்'
    -கருத்துரைகள் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு அ.முகம்மது நிஜாமுத்தீன் அவர்களே!

      நீக்கு
  5. திரு ஜீவி அவர் நினைப்பதை உங்களை எழுத வைப்பார்பின்னூட்டங்களே அதற்கு வழிகோல வேண்டுமென்றும் நினைப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M,பாலசுப்பிரமணியம் அவர்கள! திரு ஜீவி அவர்களின் பின்னூட்டம் நம்மை மேலும் எழுதவைக்கும் என்று தாங்கள் கூறுவது சரியே.

      நீக்கு
  6. எடுத்தூண் - இந்த வார்த்தைக்கான விளக்கங்கள் நன்று. நானும் எனது பதிவொன்றில் இந்த வார்த்தையை பயன்படுத்தினேன் - உங்கள் பதிவினை வாசித்தபிறகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!தங்களின் பதிவில் அந்த சொல்லை பயன்படுத்தியிருந்ததை நானும் படித்தேன்.மிக்க நன்றி!

      நீக்கு
  7. பழைய பின்னூட்டங்களை நினைவில் கொண்டு இங்கு எழுதியமைக்கு நன்றி, ஐயா.

    அப்பப்போ இந்த 'எடுத்தூண்' குறித்து நீங்கள் குறிப்பிட்டு விளக்கங்களை எடுத்துச் சொல்லும் போதெல்லாம் அரைகுறை திருப்தியோடு முடித்துக் கொள்கிறேனே தவிர, இந்த விஷயத்தில் என் முழுமன சம்மதம் இன்னும் ஏற்படவில்லை, ஐயா.

    மன மறுதலிப்பு எங்கு ஏற்படுகிறது என்றால் அந்த 'தூண்' பதப் பிரயோகத்தில் தான். எடுத்து+உண், எடுத்துண் ஆகுமே தவிர எடுத்தூண் ஆகாதில்லையா?... எடுத்து உண்ணுகிற உணவு = எடுத்துண். இதை குறிப்பிட்ட ஒரு சாப்பிடும் முறையாகக் கொண்டால், அதில் அதிகார தோரணை எதுவும் இல்லையே, ஐயா!
    அதனால் எடுத்தூண் என்பதை விட எடுத்துண் பொருத்தமாகவே எனக்குத் தோன்றுகிறது.

    எடுத்தூண் என்பதனை எடுத்தூன் என்று தவறி எழுதிவிட்டாலோ அல்லது உச்சரித்தாலோ வேறு பொருள் கொடுக்கும் ஆபத்து வேறே இருக்கிறது.

    யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன், ஐயா.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தாங்கள் கூறுவதுபோல் எடுத்து + உண் என்பது எடுத்துண் ஆகத்தான் இருக்கவேண்டும். ஆனால் இங்கே எடுத்து + ஊண் என்பதால் எடுத்தூண் என சொல்லப்படுகிறது. இது குறித்து பதிவில் விரிவாக எழுத இருக்கிறேன்.

      நீக்கு