வியாழன், 12 மார்ச், 2020

தொடரும் சந்திப்பு 22







இரவு  நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, சந்திப்பு நடந்த அரங்கிற்கு   அடுத்து இருந்த உணவு அருந்தும் இடத்திற்கு அனைவரும் சென்றோம். அங்கே எடுத்தூண் (Buffet) முறையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அங்கு இருந்த உணவு வகைகளில் எதை விடுவது எதை எடுப்பது  என திகைக்கும்  அளவிற்கு அநேக சைவ மற்றும் அசைவ உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. படிப்பவர்களின் பொறுமையை சோதிக்க விரும்பாததால் அந்த உணவு வகைகளின் பட்டியலை இங்கு எழுதவில்லை.



   




எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்த உணவை எடுத்துக்கொண்டு நண்பர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பினோம்.  

நண்பர் செல்லப்பா தனியாக வந்திருந்ததால் எனது அறைக்கு வந்து இரவு தங்கினார். இரவு வெகு நேரம் பழைய நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டு இருந்துவிட்டு உறங்கச் சென்றோம். 

காலையில் 6 மணிக்கு  எழுந்து பல் துலக்கிவிட்டு நீச்சல் குளம் அருகே இருந்த புல்வெளியை அடைந்தபோது காஃபியும் தேநீரும் வைத்துக்கொண்டு ஓய்வகத்தின் ஊழியர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். 

ஏற்கனவே அங்கு குழுமியிருந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே காஃபியை குடித்துவிட்டு, நண்பர் மீனாட்சி சுந்தரம் நீச்சல் குளத்தில் பேரப்பிள்ளைகளுடன் நீந்திக் கொண்டு இருப்பதையும் பார்த்துவிட்டு, அந்த ஓய்வகத்தை சுற்றிப்பார்த்தேன்.

திரும்பி வரும்போது ஓய்வகத்தின் வரவேற்பு அறையில் நண்பர்கள் இருப்பதை பார்த்து அங்கு சென்று அமர்ந்தேன். அப்போது அங்கு வந்த ஓய்வாக மேலாளர் திரு செல்வம் அவர்களது ஓய்வகம் பற்றிய கருத்தை எழுத எங்களை கேட்டுக்கொண்டார். 

அங்கிருந்த நண்பர்கள் என்னை எழுதுமாறு பணித்ததால் நானும் எனது கருத்தை அவர்களது விருந்தினர் பதிவேட்டில் (Guests Book) பதிவிட்டேன். அதைப் பார்த்துவிட்டு அவர் ‘சார் தங்களின் கருத்தை பயணிர்களுக்கான ஒரு வலைப் பக்கத்தில் எழுதமுடியுமா' எனக் கேட்டார். 

நானும் ‘எழுதுகிறேன்.’ என்று சொன்னேன். அந்த பயணியர் வலைப்பக்கதின் பெயரையும், அதில் நான் எழுதிய கருத்தையும் இந்த தொடரின் முடிவில் பார்க்கலாம். 

தொடரும்


22 கருத்துகள்:

  1. வழக்கம் போல் சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்...

    தாங்கள் எழுதிய கருத்தினை அறிய ஆவலுடன் தொடர்கிறேன் நானும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! எனது கருத்தை அறிய இன்னும் மூன்று பதிவுகள் காத்திருக்கவேண்டும்.

      நீக்கு
  2. தொடர் சுவாரஸ்யமாகச் செல்கிறது. அப்புறம் என்ன ஆச்சு என்று அறியும் ஆவலுடன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர் சுவாரஸ்யமாய் செல்கிறது என கருத்திட்டமைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. எடுத்தூண் -  நல்ல புதிய வார்த்தை.  இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம்! ‘எடுத்தூண் - நல்ல புதிய வார்த்தை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.’ என்று சொல்லியிருக்கிறீர்கள். இதுகுறித்து தாங்கள் முன்பே கருத்து தெரிவித்திருந்தீர்கள். மறந்திருக்கலாம்.

      தஞ்சையில் நடந்த எங்களது சந்திப்பு பற்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 நாள் வெளியிட்ட மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6 என்ற பதிவில் இதே சொல்லை கையாண்டிருந்தேன்.

      அப்போது தாங்கள் ‘ எடுத்தூண் - புதிய சொல். எடுத்துண் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்றுதான் எனக்கும் பட்டது. சுய சேவை உண்டி!’ என பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்.

      அதற்கு நான் ;எடுத்தூண் என்ற சொல் தமிழ் வல்லுனர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. எடுத்துண் என்பது ஆணை இடுவதுபோல் தோன்றுவதால் அந்த சொல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என நினைக்கிறேன். சுயமாக சாப்பிடும் முறை என்றும் சிலர் சொல்வதுண்டு.’ என்று பதில் தந்திருந்தேன்.

      நீக்கு
    2. ஓ.... நன்றி ஸார். உங்களுக்கிருக்கும் நினைவாற்றல் எனக்கில்லாமல் போனது! நன்றி.

      நீக்கு
    3. பாராட்டுக்கும் நன்றி திரு ஸ்ரீராம்! நினைவாற்றல் என்பது நாம் வளர்த்துக் கொள்வதுதான். ஒன்றை மற்றொன்றோடு தொடர்படுத்தி நினைவில் வைத்துக்கொண்டால், எப்போதும் அவை பசுமரத்தாணி போல் மனதில் பதிந்திருக்கும். வங்கியில் 35 ஆண்டுகள் பணியில் இருந்ததால் ஏற்கனவே இருந்த நினைவாற்றலை மேலும் வளர்த்துக் கொண்டேன். அவ்வளவே.

      நீக்கு
  4. எடுத்தூண் -- நமக்கு நாமே என்ற பெயரில் இறக்குமதி பழக்கம்.
    சர்வ சாதாரணமாக இடது கை உபயோகத்திற்கு ஏதுவாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! ‘எடுத்தூண்’ என்ற சொல்லாடல் பற்றி, ஏற்கனவே தஞ்சையில் நடந்த எங்களது சந்திப்பு பற்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 நாள் வெளியிட்ட மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6 என்ற பதிவில் இதே சொல்லை கையாண்டிருந்தபொது தாங்கள் ஐயம் தெரிவித்திருந்தீர்கள் அதற்கு தாங்கள் எழுப்பியிருந்த ஐயத்தையும் எனது பதிலையும் திரும்பவும் தருகிறேன்.

      ‘எடுத்தூண் (Buffet) எடுத்துண் தட்டச்சு செய்கையில் நெடில் சேர்ந்து தூண் ஆகிவிட்டதோ என்ற ஐயம் உண்டு’ என்ற தங்களின் ஐயத்திற்கு
      ‘Buffet என்பதை தமிழில் எடுத்தூண் அல்லது மகிழ்ந்தூண் அல்லது கூட்டூண் என்று சொல்லலாம் என்றாலும் நாமே எடுத்து உண்பதால் எடுத்தூண் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டேன். தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்படவில்லை. எடுத்தூண் என்பது சரிதான்.’என்று சொல்லியிருந்தேன்.

      அதற்கு பதிலாக ‘எனக்கு இதில் சின்ன குழப்பம். எல்லா உணவுகளையும் எடுப்பதற்கு படைக்கப்பட்ட கையினால் தானே எடுத்து உண்கிறோம்? இந்த 'எடுத்தூண்' விஷயத்தில் அப்படி என்ன விசேஷம்?.. மற்றவர்கள் பரிமாறாமல் நாமே எடுத்துண்பதால் அப்படிச் சொல்கிறீர்களா?; என்ற தங்களின் கேள்விக்கு ‘நாமே எடுத்து உண்பதைத்தான் எடுத்தூண் என்று சொல்லவேண்டும். நம் வீட்டிலே கூட சிலசமயங்களில் ‘நீங்களே போட்டு சாப்பிடுங்கள் சொல்வதில்லையா?’ நீங்களே சாப்பிடுங்கள் என்று சொல்லாமல் போட்டு சாப்பிடுங்கள் என்று சொல்வது நாமே எடுத்து சாப்பிடுவதால் தான். எனவே Buffet என்பதற்கு எடுத்தூண் என்ற தமிழாக்கம் சரி என்றே கருதுகின்றேன்.’ என்று சொல்லியிருந்தேன்.

      நீக்கு
  5. கருத்துப் பதிவேடு என்றாலே உயர்வு நவிர்ச்சியாக எழுதுவது நம்மை அறிந்தே வழக்கமாகி விடுகிறது.. வேறு வழியுமில்லை.

    இந்த நேரத்தில் ஒன்று நினைவுக்கு வருகிறது. அறிவியல் மேதை
    ஜி.டி.நாயுடு அவர்களின் ஆய்வுகள் அடங்கிய அரங்கம் ஒன்று கோவையில் உண்டு. இந்த ஆய்வு வெளிப்பாடுகளைப் பற்றி காண்போர் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் முனைப்பில் அந்த அரங்கில் சில இடங்களில் நுண் ஒலிக்கருவிகளை (Micro-phone) பொருத்தி வைத்திருப்பாராம்.
    ஒய்வு கிடைக்கும் பொழுது பார்வையாளர்கள் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்பதில் ஆர்வமுண்டாம் அவருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! ‘கருத்துப் பதிவேடு என்றாலே உயர்வு நவிர்ச்சியாக எழுதுவது நம்மை அறிந்தே வழக்கமாகி விடுகிறது. வேறு வழியுமில்லை.‘என்ற தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

      திரு ஜி.டி.நாயுடு அவர்களின் ஆய்வுகள் அடங்கிய அரங்கத்தில், ஆய்வு வெளிப்பாடுகளைப் பற்றி காண்போர் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் முனைப்பில் அந்த அரங்கில் சில இடங்களில் நுண் ஒலிக்கருவிகளை (Micro-phone) பொருத்தி வைத்திருந்தார் என்ற தங்களின் தகவல் எனக்கு புதியது.

      கேரளத்தின் பிரபல நாளேடான ‘மலையாள மனோரமா’வின் தலைமை பதிப்பாசிரியாராக இருந்த திரு K. M. Mathew அவர்கள் இரயிலில் பயணம் செய்யும்போது, அப்போதிருந்த மூன்றாம் வகுப்பில் தான் பயணம் செய்வாராம். அப்போது தான் தங்களது நாளேட்டு பற்றி பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள்/ பேசுகிறார்கள் என்று கவனித்து அதன்படி தங்கள் நாளேட்டை மேம்படுத்த முயற்சி செய்வாராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. இங்கு மீண்டும் எடுத்தூண் பற்ரி வாசிப்பு வந்தவுடன் எனக்கும் முன்பே உங்களின் இந்த சொல் ஆளுகை நினைவுக்கு வந்து விட்டது.

    இப்பொழுது குறிப்பிட்டது, வலது கை தட்டை ஏந்தி இடது கையால் பதார்த்ததை எடுத்து -- என்பதைச் சொல்வதற்காகச் சொன்னேன்.

    Buffet என்பது உணவகங்களில் உணவு பரிமாறுகிறவர்களை இல்லாமல் செய்வதற்கான சூது என்கிற எண்ணமும் எனக்குண்டு. அந்த சூதை ஒரு நாகரிக மாற்றம் போல பழக்கப்படுத்தி விட்டார்கள். பிசைந்து சாப்பிடும் நம் பாரம்பரிய வழக்கம் மறைந்து தயாரித்த (Ready made) உணவை 'அப்படியே' எடுத்து உண்ணும் வழக்கம். பெரும்பாலும் உட்கார்ந்து சாப்பிடாமல் நின்று கொண்டே, விழாக்களில் நண்பர்களுடன் பேசியபடி கொறிப்பது என்றாகி விட்டது.

    வாழை இலை போட்டு பரிமாறி... இப்படியே போனால் இந்த 'பரிமாறி' என்ற சொல்லும் வழக்கொழிந்ததாகப் போய் விடும் போலிருக்கிறது, ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும்,விளக்கத்திற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!தங்களின் கருத்தை தவறாக புரிந்துகொண்டதன் விளைவாக அவ்வாறு பதில் தந்திருந்தேன்.

      வலது கை பழக்கம் உள்ளவர்கள் தட்டை இடது கையில் ஏந்தி வலது கையில் தான் சாப்பிடுவார்கள். எனவே இடது கை உபயோகத்திற்கு ஏதுவாக வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.

      எடுத்தூண் முறை அறிமுகப்படுத்தியதற்கு, உணவகங்களில் உணவு பரிமாறுகிறவர்களை இல்லாமல் செய்வதற்கான சூது என்கிற தங்களின் எண்ணம் சரியென்றாலும். அதிலும் சில நன்மைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது இலையில் பரிமாறும்போது எல்லாவற்றையும் பரிமாறுவதால் உணவு வீணாக வாய்ப்புண்டு என்றும் எடுத்தூண் முறையில் தேவையானவற்றை மட்டும் உண்பவர் எடுத்துக்கொள்வதால் உணவு வீணாவது தடுக்கப்படுகிறது என்றும், திருமணம் போன்ற நிகழ்வுகளில் உணவளிப்பு ஒப்பந்தக்காரர்கள் (Catering Contractors) ஒரு தட்டுக்கு இவ்வளவு என்று விலை நிர்ணயிப்பதால் விருந்தினர்கள் சாப்பிட்ட பிறகு அதை எண்ணி கணக்கிடல் எளிதாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

      இந்த எந்திரமயமான உலகில் அமர்ந்து இலையில் சாப்பிடுவது என்பது மெல்ல மெல்ல மறைந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் வேதனை.

      நீக்கு
  8. கோவையில் அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு அவர்களின் அந்த ஆராய்ச்சி அரங்கத்திற்கு நான் சென்றிருந்த பொழுது அந்த நுண் ஒலிக் கருவிகளையும் காட்சிப் பொருளாக வைத்திருந்தார்கள். அது பற்றி விசாரித்த பொழுது தான் இந்தச் செய்தியும் எனக்குத் தெரிய வந்தது. அந்தக் காட்சி அரங்கத்திற்குள் நுழையும் பொழுதே நுழைபவர்களை பூதாகரமாகக் காட்டும் ஆடி அமைப்பும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும், கோவை அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு அவர்களின் ஆராய்ச்சி அரங்கம் பற்றிய தகவலுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  9. //நாளேட்டு பற்றி பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள்/ பேசுகிறார்கள் என்று.. //

    இதே மாதிரி குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி-யும் இதே நோக்கத்திற்காக சென்னை நகர பஸ்களில் பயணம் செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும், குமுதம் ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி அவர்கள் பற்றிய தகவலுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  10. சிறப்பான தகவல்கள். எடுத்தூண் - நல்ல வார்த்தை. பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது தான் வழக்கமாக இருக்கிறது. இணையான தமிழ்ச் சொல் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

    சந்திப்புகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு