செவ்வாய், 21 ஜூலை, 2020

எது சிறந்தது ? 4


சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக்  கொண்டிருந்த நாம், மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை கற்றுக்கொண்டதல்லாமல், தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு நின்றபடியே சாப்பிடும் முறையையும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.


இந்த முறையில் நமக்கு பிறர் பரிமாறாமல் நாம் விரும்பும் உணவை, விரும்பும் அளவு எடுத்து உண்ணுவது. இந்த முறைக்கு எடுத்தூண் (Buffet) என்று பெயர். தற்சமயம்  திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும், மற்ற நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் இந்த முறையில் தான் விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

Buffet என்று அழைக்கப்படும் சொல்லுக்கு இணையாக தமிழ் வல்லுனர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட எடுத்தூண் என்ற சொல்லை நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டபோது, நண்பர் திரு ஜீவி அவர்கள் எடுத்துண் (Buffet) தட்டச்சு செய்கையில் நெடில் சேர்ந்து தூண் ஆகிவிட்டதோ என்ற ஐயம் உண்டு என்று கூறியிருந்தார் என்றும் அதற்கு நான் “Buffet என்பதை தமிழில் எடுத்தூண் அல்லது மகிழ்ந்தூண் அல்லது கூட்டூண் என்று சொல்லலாம் என்றாலும் நாமே எடுத்து உண்பதால் எடுத்தூண் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டேன் என்றும், தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்படவில்லை,” என்று குறிப்பிட்டிருந்ததை சொல்லியிருந்தேன். 

ஆனாலும் திரு ஜீவி அவர்கள் “அப்பப்போ இந்த 'எடுத்தூண்' குறித்து நீங்கள் குறிப்பிட்டு விளக்கங்களை எடுத்துச் சொல்லும் போதெல்லாம் அரைகுறை திருப்தியோடு முடித்துக் கொள்கிறேனே தவிர, இந்த விஷயத்தில் என் முழுமன சம்மதம் இன்னும் ஏற்படவில்லை, ஐயா.

மன மறுதலிப்பு எங்கு ஏற்படுகிறது என்றால் அந்த 'தூண்' பதப் பிரயோகத்தில் தான். எடுத்து+உண், எடுத்துண் ஆகுமே தவிர எடுத்தூண் ஆகாதில்லையா?... எடுத்து உண்ணுகிற உணவு = எடுத்துண். இதை குறிப்பிட்ட ஒரு சாப்பிடும் முறையாகக் கொண்டால், அதில் அதிகார தோரணை எதுவும் இல்லையே, ஐயா!

அதனால் எடுத்தூண் என்பதை விட எடுத்துண் பொருத்தமாகவே எனக்குத் தோன்றுகிறது.

எடுத்தூண் என்பதனை எடுத்தூன் என்று தவறி எழுதிவிட்டாலோ அல்லது உச்சரித்தாலோ வேறு பொருள் கொடுக்கும் ஆபத்து வேறே இருக்கிறது.’ என்று இந்த தொடரின் முதல் பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Buffet என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழாக்கச் சொல்லாக  எதைச் சொல்லலாம் என தினமணி நாளிதழ் கூட  ‘சொல் தேடல்’ என்ற பகுதியில் அதன் வாசகர்களின் கருத்தை கேட்டபோது, தான் எடுத்து உண்ணல், தன் விருந்து எடுத்தல், தானே எடுத்துண்ணும் தொகுப்பு, தன்பரிமாற்றம்,தானே கொள் உண்டி, தன் தேர் உண்டி, தேர்ந்துணல், விருப்புணா, மகிழ்ந்தூண்,கூட்டூண், எடுத்தூண் என பலர்  குறிப்பிட்டிருந்தார்கள். 

எடுத்து உண்பதினினும் தேர்ந்து உண்பதே முதன்மையானது, எடுத்தூண், தானே கொள் உண்டி, தன் தேர் உண்டி, தேர்ந்துணல் இவை எடுத்து உண்பதைக் குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். உணவை எடுப்பதற்கும் கொள்வதற்கும், தேர்வதற்கும் அடியாய் அமைவது விருப்பம், அதனால் விருப்புணா எனலாம் என சொல்லிவிட்டு இறுதியில் Buffet க்கு  விருப்புணா அல்லது எடுத்தூண் என்றே தினமணி நாளிதழும் குறிப்பிட்டது. 

எடுத்து விரும்பிய உணவை (ஊண்) உண்பதால் இந்த முறையை  எடுத்தூண் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். இதில் விரும்பிய என்ற சொல் தொக்கி நிற்பதால் எடுத்து + ஊண் எடுத்தூண் ஆகிறது. 

நண்பர் ஜீவி அவர்களின் கருத்துக்கு எனது பதில் ஏற்றதாக இருக்கும் என நம்புகிறேன். 

இந்த எடுத்தூண் (Buffet) முறை எங்கிருந்து எப்போது ஆரம்பிக்கப்பட்டது இதற்கான பொருள் என்ன என்பது அடுத்த பதிவில் 


தொடரும்


16 கருத்துகள்:

 1. விவாதத்தினை ஆவலோடு தொடர்கிறேன். இவ்விவாதம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபோது (பெரும்பாலும் ஆங்கில அடிப்படையில் கடிதப்போக்குவரத்தினை பிற தனியார் நிறுவனங்களில் மேற்கொண்ட சூழல்) Confidential என்ற சொல்லுக்கு ரகசியம், கமுக்கம், மந்தணம் என்றவாறான சொற்களைப் பற்றிப் பேசினர். கமுக்கம் மற்றும் மந்தணம் என்ற சொற்கள் எனக்கு அப்போது புதியனவாக தோன்றின. அலுவலகத்தில் கூறியபடி மந்தணம் என்ற சொல்லையே தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! ஆங்கில மற்றும் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை பயன்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். இந்த தொடரில், சாப்பிடும் முறையில் எது சிறந்தது என்பது பற்றியே எழுதத் தொடங்கினேன். திரு ஜீவி அவர்கள் ஒரு வினாவை எழுப்பியதால் விளக்கம் தரும்படி ஆகிவிட்டது. தமிழ் மொழியாக்கம் பற்றி வேறொரு பதிவில் விரிவாக பேசுவோம்.

   நீக்கு
 2. நல்ல சுவாரஸ்யமான தொடர் நண்பரே...

  மலையாளத்தில்கூட உணவை ஊண் (ഊൺ) என்பார்கள் தொடர்கிறேன்.

  எனக்கு இந்த சொற்றொடரில் "தேர்ந்துணல்" என்பது பொருத்தமானதாக தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! ஊண் என்பது தூய தமிழ்தான்.
   பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
   தீப்பிணி தீண்டல் அரிது
   என்று ஈகை அதிகாரம் குறள் 227 இல் அய்யன் வள்ளுவன் ஊண் என்றே குறிப்பிடுகிறார்.

   தேர்ந்துணல் பொருத்தமாக இருந்தாலும் பரிமாறும் முறை பற்றி சொல்வதால் எடுத்தூண் என்பதே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

   நீக்கு
 3. பகுத்துண்டு, உயிர்ப்புடன் இருக்கும் "எடுத்துண்" என்பதை ஏற்றுக் கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! பரிமாறும் முறை பற்றி சொல்வதால் எடுத்தூண் என்பதே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு கஸ்தூரி ரங்கன் அவர்களே!

   நீக்கு
 5. நன்றி ஐயா. இந்த மாதிரி மற்ற மொழிச் சொற்களை வலிந்து தமிழ் படுத்துவதை என் மனம் என்னவோ ஏற்க மாட்டேனெங்கிறது. மன்னியுங்கள்.

  அதற்கு பதில் பிற மொழிச் சொல்லை அப்படியே தமிழில் எழுதி விடுவது ஏற்புடையதாகத் தெரிகிறது.

  Tiffin என்ற ஆங்கில வார்த்தையை சிற்றுண்டி என்று மொழியாக்கம் செய்வதில் இருக்கும் இயல்புத்தன்மை இதில் இல்லை பாருங்கள். அப்படி இயல்பாய் இருப்பது கூட எடுபடாமல் வழக்கத்தில் 'டிபன் ரெடி' என்ற சொல்லே உணவகங்களில் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம். அதே நேரத்தில் சிற்றுண்டி சாலை என்ற வார்த்தை புழக்கத்தில் வந்திருக்கிறது.

  இந்த மாதிரி தான் பஸ், பஸ் ஸ்டாண்டு, குட் மார்னிங், சினிமா,
  எலெக்டிரிகல், எலக்ட்ரானிக்ஸ், பேண்ட், என்று பல வார்த்தைகள்.
  கார்பன்-டை-ஆக்ஸைட் என்று தான் என் கால வகுப்புகளில் எழுதினோம். அந்த வார்த்தையே என்னன்ன பொருள்களின் கலப்பு அது என்று தெரியப்படுத்தும். பிற்காலத்தில் கரியமில வாயு என்பது பழக்கமாயிற்று என்றாலும் கார்பன்-டை-ஆக்ஸைடில் இருந்த தெளிவு இதில் இல்லை என்பது புலனாகும். கரியமில வாயு இப்பொழுது என்ன ஆயிருக்கிறது என்று தெரியவில்லை.

  இதற்கிடையில் காலத்தின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் வேறே.

  ரயில் என்ற வார்த்தையை புகைவண்டி என்று எழுதிக் கொண்டிருந்தோம். இப்பொழுதோ, புகையே கக்காத வண்டிகள்.
  சமீபத்தில் ஒரு கதையில் புகைவண்டி என்ற வார்த்தையை உபயோகிக்க முடியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

  நீராவி வண்டியா? அப்பொழுது கூட நீராவி என்ஜின் என்றால் தான் ஓரளவாவது புரியும்.

  இப்பொழுது மெட்ரோ ரயில் -- இதை எப்படி மொழியாக்கம் செய்வது?.. இப்படி புதுப்புது வார்த்தைகளின் வரவுகள்.

  அப்படியே அந்தந்த மொழியில் எழுதுவதில் இருக்கும் செளகரியம்
  (வசதி?) என்னவென்றால் மெட்ரோ ரயில் என்று சொல்லும் பொழுது தேசம் பூராவும் அது எல்லோருக்கும் புரிகிற சொல்லாக இருப்பது தான்.

  இந்தக் கருத்துக்களையும் கணக்கில் கொண்டீர்கள் என்றால் இந்தத்
  தொடருக்கான சிறப்பை அது இன்னும் கூட்டும். நன்றி, ஐயா.
  தொடருங்கள். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எது சிறந்தது என்பது பற்றியே எழுதத் தொடங்கியபோது தாங்கள் எழுப்பிய ஒரு வினாவிற்கு விளக்கத்தைத்தான் இங்கு தந்துள்ளேன். தாங்கள் கூறியதுபோல் மற்ற மொழிச் வருகைக்கும்,விரிவான கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! இந்த தொடரில், சாப்பிடும் முறையில் சொற்களை வலிந்து தமிழ் படுத்துவதில்லை. தமிழ் மொழியாக்கம் பற்றி விரிவாக பதிவிட இருக்கிறேன். அப்போது அது குறித்து பேசுவோம்.

   நீக்கு
  2. தங்கள் பதிலுக்கு நன்றி. பழந்தமிழ்ச் சொற்களை எப்படிப் புழக்கத்துக்குக் கொண்டு வரலாம் என்ற யோசனையும் எனக்கிருக்கிறது.

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே!பழந்தமிழ்ச் சொற்களை எப்படிப் புழக்கத்துக்குக் கொண்டு வரலாம் என்ற யோசனையும் இருப்பதாக சொல்லியிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி.விரைவில் அதுபற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 7. பிற மொழிச்சொற்களை தமிழில் எழுதுவது குறித்த விவாதங்கள் இருந்துகொண்டுதானிருக்கிறது. ஆனாலும் பேச்சு வழக்கில் பயன்படுத்திய பிறகு வலிந்து திணிக்கும்போது சிறிது நாட்களுக்கு கடினமாகத்தான் இருக்கும். நம்மில் பலரும் பேசும்போது பஸ் எத்தனை மணிக்கு என்றும் எழுதும்போது பேருந்து என்றும்தான் குறிப்பிடுகிறோம். இன்று கூட ஒரு கருத்துரையில் புகைப்படம் அருமை எழுதிவிட்டேன். கைப்பேசியில் எடுக்கப்படுவது புகைப்படமா என்று யோசித்து உடனே மாற்றி விட்டேன். எந்த சொற்களானாலும் புழக்கத்தில் வரும்போது நிலைபெற்று விடும். அதற்கு அந்த சொற்களை எழுதும்போதாகிலும் பயன்படுத்தத் தொடங்கவேண்டும். சில வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்க வேண்டும் என்பதையும் ஆமோதிக்கிறேன்.

  நனடசபாபதி ஐயா எப்படி இருக்கிறீர்கள். நான் மறக்க முடியாத நினைவுகள் கவிப்ரியன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு கவிப்பிரியன் ஞானசேகரன் அவர்களே! விசாரிப்புக்கு நன்றி! நலமுடன் உள்ளேன்.

   நீங்கள் சொல்லுவது சரியே. எந்த ஒரு புது சொல்லும் பழக்கத்திற்கு வர சிறிது காலம் பிடிக்கும். பின்பு தொடர்ந்து பயன்படுத்தும்போது அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக கணினி, இணையம், கைபேசி போன்றவைகளை சொல்லலாம். எதையும் வலிந்து திணிக்கவேண்டியதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தமிழில் வேற்று மொழி சொற்களுக்கு இணையாக தமிழில் சொற்களை உண்டாக்கமுடியும் என்றால் அதைச்செய்யலாம். இதுவே என் கருத்து.

   நீக்கு