சனி, 8 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 5


திருமண விழாக்களிலும், மற்ற விழாக்களிலும் நடைபெறும் விருந்தில், விருந்தினர்கள் அமர்ந்து, பிறர் பரிமாறி சாப்பிடும் முறை மாறி, பலவித உணவு வகைகளை எல்லோருக்கும் பொதுவாக ஓரிடத்தில் வைத்து, விருந்தினர்கள் தாங்களே உணவைத் தேர்ந்தெடுத்து தட்டில் எடுத்துக்கொண்டு நின்றுகொண்டு சாப்பிடும் எடுத்தூண் (Buffet) என்ற முறை தற்போது வழக்கத்திற்கு வந்துள்ளது.
அந்த முறை எங்கிருந்து எப்போது ஆரம்பிக்கப்பட்டது இதற்கான பொருள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

Buffet என்ற இந்த ஃபிரெஞ்சு சொல்லுக்கு, எழுந்து நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் (Get up and get it yourself) என்று பொருள்.

இந்த முறையை நடைமுறைக்கு கொண்டுவந்தவர்கள் சுவீடன் நாட்டவர்களும் ஃபிரெஞ்சு நாட்டவர்களும் தான்.

இந்த பெயரை உச்சரிக்கும் முறையில் ஆங்கிலேயர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் வேறுபாடு உண்டு. ஆங்கிலேயர்கள் பூஃபே. அல்லது பெவ்ஃபே (BOO-fay or BEW-fay) என்றும் அமெரிக்கர்கள் புப்ஃபே அல்லது பப்ஃபே (Buh-FAY or Buff-FAY) என்றும் உச்சரிக்கிறார்கள்.

16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மதுபானங்கள் வைக்கும் மேசையை குறித்த Buffet என்ற இந்த சொல், 18 ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் மேசையில் உணவுகள் வைக்கப்பட்டு எடுத்து சாப்பிடும் முறையைக் குறிக்கும் சொல் ஆகி, 19 ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் எடுத்தூண் (Buffet) என்ற நவீன பாணிக்கு பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. 

உணவு வைக்கப்படும் பக்க பலகையை ("Sideboard"), குறிக்கும் சொல், நாளடைவில் உணவு பரிமாறும் முறையாக ஆகிவிட்டது.

இந்த முறையை நம்மூரில் பின்பற்றுவதற்கான காரணங்கள் பல. அவையாவன. 

1. உணவு வகைகள் சூடாக இருக்கும்.
2. வைக்கப்பட்டிருக்கும் பல் வேறு உணவு வகைகளில் நமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கொள்ளலாம் 
3. பரிமாறும் முறையில் ஒரு குறிப்பிட்ட உணவு வகையை இரண்டாம் தடவை  வேண்டுவோர் கேட்க கூச்சப்படலாம். இந்த முறையில் தயக்கமின்றி வேண்டும் அளவு எடுத்து சாப்பிடலாம்.
4. விருந்தினர்களில் அசைவ உணவு சாப்பிடுவோர் இருப்பின் அவர்களுக்கு மட்டும் அந்த உணவை, அமர்ந்து சாப்பிடும் முறையில் தனியே பரிமாற இயலாது. எடுத்தூண் முறையில் அந்த உணவு வகைகளை தனியே வைத்துவிட்டால் அவர்கள் விரும்பி எடுத்து சாப்பிட இயலும். 
5. அமர்ந்து சாப்பிடும்போது அருகில் உள்ளவர்களிடம் மட்டுமே பேசமுடியும். இந்த முறையில் நின்றுகொண்டிருக்கும் பலரிடம் குழுவாக நின்றுகொண்டு  பேசிக்கொண்டே சாப்பிடமுடியும். 
6. இந்த முறையில் பலவித வகை உணவுகளை விருந்தினர்களுக்கு தர இயலும்.  
8. விருந்தினர்கள் தாங்களே தேவையான அளவில் எடுத்து சாப்பிடுவதால் உணவு வீணாவது குறையும். 
9. வந்திருக்கும் விருந்தினர்களுக்கு அவசரமாக வெளியே செல்லவேண்டியிருப்பின் விரைவில் தேவையான உணவை எடுத்து சாப்பிட்டுவிட்டு புறப்பட ஏதுவாகும் .பந்தியில் அமர்ந்திருந்தால் இடையே புறப்பட இயலாது. 
10. பந்தியில் இடம் இல்லையென்றால் சாப்பிடுவோர் சாப்பிட்டு முடித்து அந்த இடத்தை  சுத்தம் செய்யும் வரை காத்திருக்கும் வேண்டியிருக்கும். அந்த காத்திருப்பு இந்த முறையில் இருக்காது. 
11. சிறிய இடத்தில் பலர் உண்ணலாம்.
12. விருந்தினர்கள் தாங்களே எடுத்து  சாப்பிடுவதால் உணவு பரிமாறும் ஆட்கள் தேவையில்லை. மிக குறைந்த ஆட்களே போதுமானது என்பதால் செலவு குறையும். 
13. தட்டில் உணவை எடுத்து சாப்பிடுவதால் அவைகளை மீண்டும் கழுவி சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். வாழை இலைக்கு செலவிடும் பணம் மிச்சமாகும். 

என்று இதுபோன்று பல காரணங்களைச் சொல்வதுண்டு. ஆனால் இந்த முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல. 

தொடரும்18 கருத்துகள்:

 1. எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி வந்து இறுதியில்...

  //இந்த முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல//

  என்று தொடரும் போட்டு விட்டீர்களே... விபரமறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

   நீக்கு
 2. செய்வதை செய்துவிட்டு, நம்மூரில் பின்பற்றுவதற்கான காரணங்கள் சொல்வதற்கு பஞ்சமே கிடையாது...

  இந்தக் கருத்து, அரசியல் உட்பட நீங்கள் நினைக்கும் அனைத்திற்கும் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்... தவறில்லை... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! சரியாகச் சொன்னீர்கள்.

   நீக்கு
 3. எங்கள் ஊரில் இதுவரை இந்த முறை (Buffet) யாரும் செய்ததில்லை... எனக்குத் தெரிந்து இல்லை... செய்தால் கலவரமே உண்டாக வாய்ப்புகள் அதிகம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! இந்த எடுத்தூண் முறை மெல்ல மெல்ல எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. ஆனால் மக்கள் விரும்பினாலொழிய இது திண்டுக்கல் உட்பட மற்ற இடங்களில் நடைமுறைக்கு வராது.

   நீக்கு
 4. எல்லாவற்றையும் தட்டில் நிறையப் போட்டுக்கொண டு வீணாக்குபவர்கள் இதிலும் உண்டு. பேராசை, அலட்சியம்! அதே போல ஒன்றை ருசித்து அடுத்தது எடுப்போம் என்கிற பொறுமையும் இருப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டவை உண்மையே.அது குறித்தும் எழுத இருக்கிறேன்.

   நீக்கு
 5. இதில் சேமிப்பை விட விரயம் அதிகம் என்பது எனது கவனிப்பு. பலர் தேவையோ இல்லையோ அதிகமாக, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிட முடியாமல் வீணாக்குவதைப் பார்த்திருக்கிறேன். எடுத்தூண் முறையோ, பரிமாறி அதைச் சாப்பிடுவதோ, இரண்டிலுமே வீண் செய்பவர்கள் நிறையவே உண்டு! உணவு வீண் செய்வது பிடிக்காத விஷயம் - வீண் செய்பவர்கள் அதன் பின் எத்தனை உழைப்பு இருக்கிறது என்பதை புரியாதவர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! சேமிப்பு என விருந்து தருபவர் நினைத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உணவு வீணாகுவதும் உண்டு. எடுத்தூண் முறையில் விருந்தினர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியும் எழுத இருக்கிறேன்.

   நீக்கு
 6. Buffet உணவு முறை பந்தியில் பரிமாறும் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றாலும் உணவு வீணாகமால் மீதமான உணவை தேவைப்படுவர்களுக்கு வழங்க ஏதுவாக உள்ளது என்பதே உண்மை. அழகான தமிழில் சிறப்பான கட்டுரை! பாரட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ் குமார் அவர்களே! எடுத்தூண் முறை பந்தியில் பரிமாறும் நமது பழைய முறையை விட எளிதானது ,மற்றும் சிக்கனமானது என சிலர் நினைப்பதால் இது வழக்கில் வந்துள்ளது. இந்த முறையும் காலத்திற்கேற்ப மாறவும் வாய்ப்புண்டு.

   நீக்கு
 7. பங்கு சந்தையில் நீண்ட கால அனுபவமும் நல்ல கருத்துக்களையும் கொண்டவர் தாங்கள்! பங்குச் சந்தை குறித்து சில கட்டுரைகளையும் தாங்கள் எழதலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ் குமார் அவர்களே! பங்குச் சந்தை பற்றிய கட்டுரைகளை ஏற்கனவே பலர் எழுதியுள்ளதால் எழுத யோசிக்கிறேன். இருப்பினும் முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 8. செலவு குறையும்..மிகவும் கவனிக்க வேண்டியது ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே ! செலவு குறையும் என்பது உண்மைதான். ஆனாலும் அது விருந்தில் பங்கேற்போர் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தது.

   நீக்கு
 9. அடுத்த ரவுண்டில் இது தீர்ந்துவிடும் என்றெண்ணி அளவுக்கு அதிகமாக எடுத்து தங்கள் தட்டில் வைத்துக்கொண்டு பின்னர் சாப்பிட முடியாமல் வீணாக்கப்படுவதும் உண்டு. இது என்ன எப்படி இருக்கும் என்றுகூட தெரியாமல் தங்கள் தட்டுகளை நிரப்பிக்கொண்டு பின்னர் யாருக்கும் பிரயோஜனம் இன்றி வீணாக்குவதும் இதன் அவலம்.

  பல அனுகூலங்கள் இருந்தாலும் வாழை இலையில் நாம் எதிர்பாராத உணவு வகைகள் பரிமாறப்பட்டு முழங்கையில் வழியும் ரசம் சாதத்தையும் மோர் சாததத்தையும், இளைய ஊற்றப்பட்ட பாயாசத்தையும் சாப்பிடுவதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லை எது.

  buffet க்கு எடுத்துண் எனும் தமிழ் பதத்தை அறிய தந்தமைக்கு நன்றிகள்.

  அடுத்த விருந்திற்கு ஐ அம் வெய்டிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் தொடர இருப்பதற்கும் நன்றி திரு கோயில் பிள்ளை அவர்களே ! தேவையின்றி உணவை எடுத்து வீணாக்குவோர் இந்த உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் வாடுவோர் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்ந்தால் நீங்கள் குறிப்பிட்ட அவலம் குறையும். ஆனால் அது நடக்குமா என்பது தான் கேள்வி.

   தாங்கள் குறிப்பிட்டதுபோல் பந்தியில் அமர்ந்து இலையில் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லை இல்லைதான்.

   நீக்கு