வியாழன், 27 ஆகஸ்ட், 2020

எது சிறந்தது ? 6எடுத்தூண் (Buffet) முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல.  பந்தியில் பரிமாற ஆகும் செலவை விட இந்த முறையில் உணவுக்கு செலவு கூட வாய்ப்புண்டு.விருந்து அளிப்போர் மற்றும் விருந்தினர்கள் ஆகியோரே அதற்கு காரணம்.


விருந்தினர்களை திருப்திப்படுத்தி  திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்று எண்ணி, விருந்து தருவோரில் பெரும்பாலோர் அதிகமான உணவு வகைகளை எடுத்தூண் முறையில் வைப்பதுண்டு. 

மேலும் தாங்கள் தரும் விருந்து மற்றவர்கள் தரும் விருந்தை விஞ்சும் வகையில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலும், சிலசமயம் சம்பந்திகளின் நிர்பந்தத்திலும், பிரமாண்டமாக ஏற்பாடு செய்வதுண்டு. இது கண்டிப்பாக பந்தியில் பரிமாற ஆகும் செலவை விட அதிகமாகவே இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.  

மேலும் உணவு ஏற்பாடு செய்பவர்கள் (Caterers)  தங்களின் வருமானத்தைப் பெருக்க, தங்களால் எல்லாவித உணவு வகைகளையும் தரமுடியும் என்று சொல்லி விருந்து தருவோரை சம்மதிக்க செய்வதும் உண்டு. இருவருக்கும் தெரியும். விருந்தினர்களால் விருந்தில் வைக்கப்படும் உணவு வகைகள் அனைத்தையும் சாப்பிடுவது இருக்கட்டும் ருசித்துக்கூட பார்க்கமுடியாது என்று! 

விருந்தினர்களும் எதை சாப்பிடுவது என்று தெரியாமல் எல்லாவற்றையும் தட்டில் எடுத்துக்கொண்டு சாப்பிடாமல் வீண் செய்வதுண்டு. இதனால் தாமாதமாக வரும் விருந்தினர்களுக்கு உணவு வகைகள் இல்லாமல் போய் அவர்களுக்காக புதிதாக உணவு தயாரிக்கும் நிலை ஏற்பட்டு செலவு அதிகரிக்க வாய்ப்புண்டு. 

இது போன்ற விருந்தில் உணவு ஏற்பாடு செய்பவர்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்யும் உணவுக்கான விலையை மொத்தமாக சொல்லாமல் ஒவ்வொரு தட்டுக்கும் எவ்வளவு ரூபாய் என்று சொல்லிவிடுவார்கள். விருந்தில் சாப்பிட்ட எடுத்துக்கொண்ட தட்டுக்களை கணக்கில் எடுத்து  அதற்கேற்றாற்போல் பணத்தை வாங்கிக்கொள்வார்கள். 

இது தெரியாமல் பலர் ஒவ்வொரு வகை உணவுக்கும் வெவ்வேறு தட்டுக்களை எடுத்து பயன்படுத்தினால், அனாவசியமாக விருந்து தந்தவர் அதிமாக செலவு செய்யவேண்டி வரும். ஆனால் இது இன்னும் பலருக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.  

ஒரு திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தபோது, அங்கு எடுத்தூண் (Buffet) விருந்தில் வைக்கப்பட்டிருக்கும் 126 உணவு வகைகளை பட்டியலிட்டு அழகிய அட்டையில் அச்சிட்டு வந்திருந்த விருந்தினர்களுக்கு தந்தார்கள். 

அவை உங்கள் பார்வைக்கு 

எத்தனை பேரால் மேலே உள்ள அத்தனை உணவு வகைகளையும்  சாப்பிடிருக்கமுடியும் என்று எண்ணிப் பாருங்கள். அனைத்தையும் சாப்பிட விரும்பினாலும் ‘இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்’ என்று ஔவை பாட்டி சொன்னதுபோல் நம் வயிறு இடம் கொடுக்காதே. 

இவ்வகை விருந்தில் பயனடைவோர் உணவு ஏற்பாடு செய்பவர்கள்தான் என்பது எனது கருத்து. 

இந்த எடுத்தூண் முறையில் சாப்பிடுவதற்கென்று ஒருமுறை உண்டு அது என்னவென்று அடுத்த பதிவில் பார்ப்போம். 

தொடரும்


11 கருத்துகள்:

 1. அழகான விளக்கமும், உண்மையையும் சொன்னீர்கள் நண்பரே...

  இந்த எடுத்தூண் விருந்தில் எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது. நிறைய நாட்டு உணவுகள் சாப்பிட்டு இருக்கிறேன்.

  நான் விருந்தில் போனவுடன் எனக்கு பிடித்த வகை உணவுகளை மட்டும் கொஞ்சம், கொஞ்சமாக பலமுறைமுறை ஒரே தட்டில்தான் எடுத்து சாப்பிடுவேன்.

  சிலர் ஆவேசமாக எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வருவார்கள் சிறிது நேரத்தில் அவர்களுக்கு முகத்தில் அடித்தது போலாகி விடும்.

  அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள் இது மிகப்பெரிய தவறு.

  உணவை எந்த வகையிலும் நாம் வீணாக்ககூடாது.

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தேவக்கோட்டை கில்லர்ஜி அவர்களே! உணவை எந்த வகையிலும் வீணாக்கக்கூடாது என்ற தங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன்.

   நீக்கு
 2. சிறப்பான தகவல்கள். ஆர்வக் கோளாறில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்துப் போட்டுக் கொண்டு அவற்றை உண்ணமுடியாமல் அப்படியே வீணாக்குபவர்களைக் கண்டாலே எனக்குக் கோபம் வரும்! தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வது எனக்கு இயல்பு. உணவை வீணாக்குவதை விரும்புவதில்லை.

  எடுத்து வைக்கும் தட்டைப் பொருத்து தான் கட்டணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை! தில்லியில் கல்யாணங்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் தட்டு கணக்கு தான் - ஒரு தட்டுக்கு 2000-2500 ரூபாய் வரை வாங்குவது உண்டு. குறைந்த பட்சம் 500 ரூபாய்க்கு மேல் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! விருந்தில் சாப்பிட்ட எடுத்துக்கொண்ட தட்டுக்களை கணக்கில் எடுத்து அதற்கான பணத்தை விருந்து ஏற்பாட்டு செய்பவர்கள் விருந்து தந்தவரிடம் வசூலிப்பார்கள் என சாப்பிடுபவர்களுக்கு தெரிந்தால் அபப்டி செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன்.

   நீக்கு
 3. இதையும் நாகரீகம் எனச் சொல்லும் அற்பர்கள் உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வழக்கமான பந்தி விருந்தை விட இந்த முறை எளிது என நினைக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

   நீக்கு
 4. ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? Buffet எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. ஒரு கையில் தட்டை வைத்த்டுக்கொண்டு இன்னொறு கையால் சாப்பிடுவதில் விருப்பம் இல்லை. தண்ணீர் குடிப்பதற்கு வேறு கஷ்டமாக இருக்கும்.ஆனால் பலர் அதனை விரும்புகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! நான் நலமுடன் இருக்கிறேன்.தாங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? தங்களின் கருத்தே என் கருத்தும். ஆனால் சில இடங்களில் நின்று கொண்டு சாப்பிட சிரமப்படுவோருக்கு ஓரிரு நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள்.

   நீக்கு
 5. உணவு ஏற்பாடு செய்வோர் உண்மையில் பயனடைவர்.
  அவைகள் உங்கள் பார்வைக்கு...இது சரியா ஐயா? நான் ஒரு முறை இவ்வாறு எழுதியபோது நண்பர் ஒருவர் அவை என்றாலே பன்மைதான் என்று கூறினார். அது முதல் அவை என்றே எழுதிவருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. அவை என்ற சொல்லே பன்மையைத்தான் குறிக்கின்றது .எனவே அவைகள் என சொல்லத் தேவையில்லை. தவறை நானும் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

   நீக்கு
 6. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க இந்த பதிவை படிக்கவும் https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-write-seo-friendly-blog-post-in-tamil.html இந்த பதிவானது Google Rank ல் முதலிடத்தில் உள்ளது. சந்தேகமிருந்தால் " how to write seo post in tamil " என்று தேடவும். முதலிடத்தில் நமது போஸ்ட் தென்படும். Tech Helper Tamil ஐ பாருங்கள்

  பதிலளிநீக்கு