புதன், 23 செப்டம்பர், 2020

எது சிறந்தது ? 7


எடுத்தூண் முறையில் நாமே உணவு வகைகள்  வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று எடுத்து சாப்பிடவேண்டும் என்பதால், விருந்துக்கு வருவோர் விரைவில் சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும் என்று ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்று உணவை எடுக்க முயல்வதுண்டு. 


அதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்ப்பதற்கு, எடுத்தூண் முறையில் சாப்பிடுவோர் கீழ்கண்ட ஒரு (எழுதப்படாத) நடத்தை முறையை பின்பற்றவேண்டும் என சொல்வதுண்டு.   

இதுபோன்ற நடத்தை முறைகளை ஆங்கிலத்தில் Etiquette என்பார்கள். Etiquette என்பதை இங்கிதம் அல்லது மரபொழுங்கு சார்ந்த சமுதாய நடத்தை முறை எனலாம். 

1730 லிருந்து 1740 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வந்துள்ள  Etiquette என்ற இந்த பெயர்ச்சொல், ஒட்டுதல் அல்லது சேர்த்தல் என்ற பொருள் கொண்ட ஃபிரெஞ்சு வினைச் சொல்லான estique லிருந்து வந்ததாம். Etiquette என்பதற்கு the customary code of polite behaviour in society or among members of a particular profession or group என்பது பொருள்.

ஃபிரான்ஸ் நாட்டில் நடக்கும் விழா மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வருவோருக்கு, குறிப்பிட்ட எண் பொறிக்கப்பட்ட நுழைவுச் சீட்டு தரப்படுமாம். அதில் குறிப்பிட எண் உள்ள இருக்கையில் தான்  வருவோர் அமரவேண்டும் என்பதற்கான ஏற்பாடு அது.

அதாவது வருவோர் ஒழுங்குமுறையை கடைப்பிடித்து இடத்தில் அமர்வதற்காக தந்த அந்த சீட்டிற்கு estiquette என்று பெயர். அதிலிருந்து  ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் செயலைக் குறிக்கும் etiquette என்ற சொல் பிறந்தது என்கிறார்கள். இதை நாம் இங்கிதம் என்று சொல்லலாம்.  

எடுத்தூண் முறையில் கடைபிடிக்கவேண்டிய நடத்தை முறைக்கான   சில ஆலோசனைகள் 

1.சாப்பிட ஆரம்பிக்கு முன் வைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை ஒர் சுற்று வந்து பார்த்துவிட்டு எதை சாப்பிடலாம் என்பதை  முடிவு செய்யவும். இது விருப்பமில்லாதவற்றை சாப்பிட்டுவிட்டு பின்னர் விருப்பமான உணவுகளை சாப்பிட வயிற்றில் இடமில்லாததால் சாப்பிடமுடியாமல் போவதை தவிர்க்கலாம். 

2.முதலில் வடிசாறு (Soup), பச்சைக் காய்கறி கலவைகள் (Salads) போன்ற பசியூக்கிகளை (Appetizer) எடுத்துக்கொள்ளுங்கள். அவை உணவை விரைவில் செரிக்கவைக்க உதவும்

3.வடிசாறு சாப்பிடும்போது உறிஞ்சி சத்தமிட்டு சாப்பிடாமல் சாப்பிடவும்.

4.தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று பிடித்தமான  உணவை எடுத்துக்கொண்டு நகரவும்.

5.அத்தனை உணவு வகைளையும் ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. தேவையான உணவை பின்பு வரிசையில் நின்று எடுத்துக்கொள்ளலாம்.

 6.இரண்டாவது முறை உணவை எடுக்க வரும்போது வரிசையில் நின்று வருவதெ முறையானது. வரிசையில் நிற்போரின் குறுக்கே கை நீட்டி உணவை எடுப்பது சரியல்ல.

 7.வரிசையில் நிற்கும்போது பச்சைக் காய்கறி கலவைகள் மற்றும் இனியப்பம் (Cake) போன்றவைகளை எடுத்து சாப்பிடுவது சரியல்ல.

 8.வரிசையில் நின்றுகொண்டு சாப்பிடுவதும் தவறு. அமர நாற்காலி இருப்பின் அங்கு அமர்ந்து சாப்பிடவும். இல்லையெனில் வரிசையை விட்டு தள்ளி நின்று, மற்றவர்களுக்கு இடையூறு தராமல் சாப்பிடவும்.

9.அதுபோன்று உணவைத்தான் சாப்பிடவேண்டுமே தவிர விரல்களை அல்ல. விரல்களில் உள்ள உணவை சாப்பிடுவது மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும். 

10.எந்த உணவு வகைகளையும் கையால் எடுக்கவேண்டாம். கரண்டி (Spoon) அல்லது  இடுக்கி (Tongs) அல்லது முள்கரண்டி (Fork) கொண்டு எடுக்கவும்.

 11.விருந்தின் போது தட்டு கணக்கில் கட்டணம் வசூலிப்பதால் ஓவ்வொரு உணவுக்கும் வெவ்வேறு தட்டு எடுக்காமல் முதலில் எடுத்த தட்டிலேயே சாப்பிடவும்.

 12.குழந்தைகளையும், பெரியவர்களையும் முதலில் சாப்பிட அனுமதிக்கவேண்டும்.

13.மெதுவாக சாப்பிடவும்.

14.தேவையான உணவை அளவோடு எடுத்து உணவை வீணாக்குவதை தவிர்க்கவும்.

15.குப்பியில் (Bottle) உள்ள தண்ணீரை முழுமையாய் குடிக்கவும். 

எடுத்தூண்முறையில் அநேகமாக நின்றுகொண்டுதான் சாப்பிடவேண்டியிருக்கும். அப்படி நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடரும்



12 கருத்துகள்:

  1. அழகாக விளக்கி வருகிறீர்கள். முடிவில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகளையும் சொல்ல வருவதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    அபுதாபியில் தட்டுகளின் எண்ணிக்கை அல்ல தலைகளை எண்ணுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  2. சிறப்பான விதத்தில் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நம் நாட்டில் பலருக்கு இந்த சபை நாகரிகம் தெரிவதில்லை! சர்ரென்று சப்தத்துடன் உறிஞ்சுவது, வரிசையில் வராமல் குறுக்கே போவது என பல விஷயங்களை அனைவருமே செய்கிறார்கள் - படித்தவர்கள் உட்பட! அந்த நேரத்தில் பலரும் இப்படிச் செய்கிறார்கள் - பாரபட்சமே பார்க்காமல்!

    நின்று கொண்டு சாப்பிடுவதில் உள்ள சாதக, பாதகங்களை உங்கள் வார்த்தைகளில் படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ்அவர்களே! நின்றுகொண்டு சாப்பிடுவதில் உள்ள பாதகங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் எனக்குத் தெரிந்தைப் படிக்க காத்திருக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  3. ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றக் கூடியவை... அருமை அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. இதெல்லாம் வயிறு என்ற உறுப்பு எந்த உபாதையும் இல்லாமல் கிண்ணென்று இருப்பவர்களுக்குத் தான். காலைக் கடனை முடித்தால் அப்புறம் இரவுக் கடன் அல்லது அடுத்த நாள் காலைக் கடன் என்று இருப்பவர்களுக்குத் தான்.

    என்றைக்கு மதுப் பழக்கம் என்பது வாழ்க்கை முறைகளில் ஒன்றாகி விட்டதோ, அன்றே ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு விட்டன. மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் வாழ்க்கையின் நெருக்கடிப் போக்கு அல்சர் என்ற ரூபத்தில் வயிற்றுப்பகுதியைப் பாதித்து விட்டது. வெளி வேலைகளில் அலையும் இந்தியர்கள் பெரும்பாலும் மதியச் சாப்பாட்டை மாலை 3 மணி அளவில் சின்ன டிபன் பாக்ஸ் அளவில் கொறிக்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரிய தகவல்.

    என்னைப் போன்றவர்களுக்கும் வயதாக வயதாக ஒரு ஆர்வத்துடன் எதிர்பார்ப்புடன் சாப்பிடுவது என்பதே இரண்டாம் பட்சமாகி விட்டது. வாழ்க்கை சாப்பிடுதல் என்று பெயர் பண்ணும் நேரத்திலும் ஏதாவது வேறு யோசனை தான் மூளையை ஆக்கிரமிப்பு செய்கிறது.

    வேளாவேளைக்கு நிம்மதிஹ்யாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வைப்பது என்ன என்ற ஒரு கேள்வி இதே தளத்தில் இந்தத் தொடரின் ஒரு பகுதியாகக் கேட்டீர்கள் என்ற விதவிதமான பதில்கள் வருவதை நாமே அறியலாம்.

    இந்தப் பகுதியைத் தொடராக எழுதும் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! எப்போது சாப்பிடுவது வாழ்வதற்குத்தான் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போதே நாம் சாப்பிடுவதில் நாம் கவனமாக இருப்போம். ஆனால் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான் என்று நினைப்பவர்களுக்குத்தான் தொல்லைகள் அதிகம். வயதாவிட்டாதே என்று.சாப்பிடும் அளவைக் குறைக்கலாமே தவிர, சாப்பிடும் ஆர்வத்தைக் குறைக்கக்கூடாது. தங்களின் ஆலோசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  5. ஒரு நிகழ்வின்போது இரண்டாவது முறை செல்லும்போது நான் குறுக்கே சென்றேன். பின் தவற்றை உணர்ந்தேன். மிகவும் நுணுக்கமாக எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு