திங்கள், 26 அக்டோபர், 2020

எது சிறந்தது ? 8

 

எடுத்தூண்முறையில் அநேகமாக நின்றுகொண்டுதான் சாப்பிடவேண்டியிருக்கும்.அப்படி நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றி அறிவியலார்கள் சொல்லும் கருத்துக்கள் இதோ.

 

1. நின்றுகொண்டு சாப்பிடும்போது நம்மை அறியாமல் அதிகம் சாப்பிடவும், விரைவில் பசி எடுக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இதை உறுதி செய்ய சான்றுகள் இல்லை என சொல்வாரும் உண்டு. 

2. நின்றுகொண்டு சாப்பிடும்போது சாப்பிடும் உணவு அவ்வளவு ருசிக்காதாம். 

3. சில மணித்துளிகள் நிற்பது மன அழுத்தம் (Stress) தரும் என நுகர்வோர் ஆய்வு அறிக்கைக்கான இதழ்  (Journal of Consumer Research study) சொல்கிறது. மேலும் நின்று கொண்டு இருப்பது நாக்கின் சுவை மொட்டுகள் (Taste Buds) நன்றாக வேலை செய்வதை கடினமாக்குகின்றனவாம்.  

4. மேலும் நின்றுகொண்டு இருப்பதால் புவிஈர்ப்பு காரணமாக உடலின் கீழ்பகுதிக்கு இரத்தம் செலுத்தப்படுவதால்,இரத்தத்தை கீழிருந்து மேலே தலை மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு கொண்டு வர இதயம் வேகமாக துடிக்கவேண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது.  

5. நின்றுகொண்டு சாப்பிடும்போது,நிற்கும்நிலை காரணமாக  சாப்பிடும் உணவு செரிமான மண்டலத்திற்கு வேகமாக செல்வதால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுவதால் குடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து செரிமானம் ஏற்படுவதில் சிக்கலை உண்டாக்குமாம். 

6. நின்று கொண்டு சாப்பிடுவதால் உணவு செரிப்பது 30 விழுக்காடு அதிகரிப்பதால்,சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் பசி எடுக்க தொடங்கிவிடும்.

7. உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக உறிஞ்சுமுன் செரிமானம் ஆகிவிடுவதால், மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கி குடல் வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ அறிவியலார்கள் சொல்கிறார்கள்.  

8. பொறுமையாக அமர்ந்து சாப்பிடும்போது,மென்று சாப்பிடுவதால்  அப்போது வாயில் சுரக்கும் டயலின் (Ptyalin)என்ற சுரப்பு நீர் (Hormone),உணவுடன் நன்றாகக் கலந்து. நன்றாக செரிக்க உதவும்.இது நின்று கொண்டு சாப்பிடும்போது ஏற்பட வாய்ப்பு குறைவு. 

9. நின்றுகொண்டு சாப்பிடுவதால்,பெரும்பாலும் வேகவேகமாக சாப்பிடுவதால். ஊட்டச்சத்து முழுமையாகவும் முறையாகவும் அகத்துறிஞ்சல் (Absorbtion) செய்யப்படாமல்போகும்.அது உடலில் வாய்வுக்கோளாறு,நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம். 


ஆனால் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது வயிறு நிறைந்தவுடன் தானாக மூளை வயிறுக்கு சைகை (Signal) அனுப்பி,வயிறு நிறைந்து விட்ட உணர்வை ஏற்படுத்திவிடும்.அதனால் செரிமான சிக்கல்கள் இருக்காது. மேலும் அதிகமாக சாப்பிடுவது விரைவில் பசி எடுப்பது போன்ற சிக்கல்களும் வராது. 


முன்பே சொன்னதுபோல் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது கீழ் முதுகு, இடுப்பு, வயிறு என அனைத்தும் நேராக இருக்கும்.இது வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும்.இது மேலும் தசைகளை வலுவாக்குவதுடன் செரிமான மண்டலத்தை சரியாக செய்லபட வைக்கும்.தரையில் அமர்ந்து சாப்பிடுவது எடை கூடுவதை தவிர்க்கிறதாம். 


சாப்பிடும்போது கூடியவரையில் வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.வாழை இலை ஒரு நுண்மக்கொல்லி (Germicide) ஆதலால் உணவில் உள்ள  நோய்நுண்ணுயிரிகளை Germs) அழிக்கும் ஆற்றல் கொண்டதாம்.வாழையிலையில் உள்ள பச்சையம் (Chlorophyl) உணவை எளிதில் செரிக்க செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டதாம்.  


வாழையிலையில் சாப்பிட்டால் நோயின்றி நலமுடன் வாழலாம் என்றும்,தொடர்ந்து வாழை இலையில் உண்போருக்கு,மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்குவதோடு இளநரை வராது என்றும்,தோல் பளபளப்பாக இருக்கும் எனவும்  சொல்லப்படுகிறது. 


எனவே வீட்டில் தரையில் அமர்ந்து சம்மணமிட்டு சாப்பிடுவது, எடுத்தூண் முறையில் நின்று கொண்டு சாப்பிடுவதை விட சிறந்தது மற்றும் உடல் நலத்திற்கு ஊறு செய்யாது என்பதால்,கூடியவரை தரையில் சம்மணமிட்டு சாப்பிடத் தொடங்குவோம். 12 கருத்துகள்:

 1. பொதுவாக தனி நபர்கள் எந்த விஷயத்தையும் தம் சொந்த அனுபவத்தைக் கொண்டோ, அறிந்ததைக் கொண்டோ விளக்கிச் சொன்னால் அதற்கு வெகுதிரள் மக்களிடம் மதிப்பில்லாது போகிறது.
  அதையே 'இவர் சொன்னார்; அவர் சொன்னார்' என்று பிறர் (அவர்கள் பிரபலங்களாய் இருந்தால் கேட்கவே வேண்டாம்) சொன்னதைச் சொல்வது போல விவரித்தால் நாம் சொல்லும் விஷயத்தின் மதிப்பு எகிரத் தான் செய்யும்.

  மன்னிக்கவும். இந்தக் குறிப்புகளைப் பற்றியல்ல நான் சொல்ல வந்தது. நாம் அப்படியாகப் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்காகச் சொன்னேன். :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! முதற்கண் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ‘எடுத்தூண்’ என்ற சொல் பற்றி தாங்கள் எழுப்பிய ஐயங்கள் தான், என்னை உணவு உண்ணும் முறைபற்றிய இந்த பதிவை எழுதத் தூண்டியது.

   தங்களின் கருத்து (குறிப்பு) எனது பதிவு பற்றி இல்லையென்றாலும், அதற்கு பதில் சொல்லலாமென எண்ணுகிறேன். நாம் நேரடியாக அனுபவித்ததை சொல்லும்போதோ அல்லது எழுதும்போதோ ஆணித்தரமாக எடுத்துரைக்கலாம் . ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகளை அல்லது அறிஞர்கள் சொன்னதை, சொன்னார்கள் என்றோ, சொல்லப்படுகிறது என்றுதான் சொல்லமுடியும். நம்முடைய நோக்கம் நமக்குத் தெரிந்ததை சொல்லவேண்டும் என்பதுதான். மற்றபடி பிறர் பாராட்டவேண்டும் என்பதற்காக அல்ல. இருப்பினும் தங்களின் கருத்துக்கு நன்றி!

   நீக்கு
 2. நெடுநாட்களுக்குப் பிறகு இந்தத் தொடரில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி, ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பின்னூட்டத்தைப் பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான் ஐயா!

   நீக்கு
 3. கொடுத்துள்ள தகவல்கள் ஐயா வேண்டியவை... பயனுள்ளவை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 4. நின்று கொண்டு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அவசரமாகவே சாப்பிடுவார்கள் என்பது உண்மையே...

  நிறைய தகவல்கள் பட்டியலிட்டு சொல்லி இருப்பது சிறப்பு நண்பரே... தொடர்கிறேன்.

  நான் வீட்டில் தரையில்தான் அமர்ந்து சாப்பிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜிஅவர்களே! தாங்கள் வீட்டில் தரையில்தான் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் என அறிந்து மிக்க மகிழ்ச்சி!

   நீக்கு
 5. வாழை இலையில் சாப்பிடுவது நல்லது என்பதற்கு காரணம் அது ஒரு முறை பயன்படுத்தப்பட்டு குப்பைக்கு போய்விடும் ஆனால் தட்டு என்பது பலரால் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் அதுமட்டுமல்ல தட்டு ஒழுங்காக சுத்தப்படாமல் இருக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் ஹோட்டல்களில் வாழை இலை பயன்படுத்துவது மிக சிறப்பு அதனால் தொற்று நோய்கள் பரவுவது மிகவும் குறைக்கப்படுகிறது.


  ஆனால் இந்த காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவது கூட உடலுக்கு கேடுவிளைவிக்க சான்ஸ் அதிகமாக இருக்கிறது காரணம் வாழை மரம் நன்கு செழித்து வளர பூச்சி மருந்துக்கள் தெளிக்கிறார்கள் . இலைகள் சரியாக க்ழுவப்படாமல் அதில் உணவு வைத்து சாப்பிட்டால் பல நோய்க்களுக்குஅ துவே காரணமாகிவிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வாழை இலையை சரியாக கழுவாமல் அதில் உணவு பரிமாறி சாப்பிட்டால் நோய்கள் வர வாய்ப்புண்டு. ஆனாலும் தட்டுகளை விட அவைகள் மேலானவை என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.

   நீக்கு
 6. அருமையான காலத்திற்கேற்ற பதிவு். ஆனால் முதுமை வர வர தரையில் உட்கார்நது உண்ண முடியாத நிலை மிகவும் வருத்தமே🌺💐🙏

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி இரகுநாதன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஆனால் முடிந்தவரை முயற்சிக்கலாம்.

   நீக்கு