சனி, 21 மார்ச், 2009

யாக்கை நிலையாமை

'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
என்றார் கண்ணதாசன்.

அவருக்கு வேண்டுமானால் 'மரணமில்லாமல்' இருக்கலாம்.
ஆனால் நம்மைப்போன்றோர்க்கு ?

பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டும் என்பது இயற்கை.
இதையேதான் கவியரசர் இன்னொரு பாடலில் சொல்லுவார்.

'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது' என்று

நம்மில் பலர் தாங்கள் நிரந்தரமானவர்கள் என எண்ணிக்கொண்டு அடிக்கின்ற லூட்டிக்கு அளவே இல்லை. இவர்களை சுற்றி இருக்கின்ற துதிபாடிகள் அள்ளி வீசும் புகழ்ச்சியிலேயே மிதந்துகொண்டு இருக்கும் இவர்கள் ஒரு நாள் இவ்வுலைகைவிட்டு மறைய நேரிடும் என்பதும் அப்புறம் இவர்களை யார் நினைத்து பார்ப்பார்கள் என்பதையும் அறிந்தால் இவர்கள் நிச்சயம் அடக்கியே வாசிப்பார்கள்.

மனிதன் உயிரோடு இருக்கும் வரை தான் மதிப்பு. இறந்த மறு வினாடியே அவன் பிணம் தான். பேச்சு வழக்கில் கூட 'பிணத்தை எப்போது எடுக்கிறார்கள்? என்பார்களே தவிர அவனது பெயரைச்சொல்லி எப்போது எடுப்பார்கள் எனக்கேட்கமாட்டார்கள். எல்லா 'காரியத்தையும்' முடித்துவிட்டு அவனை ஒரேயடியாக மறப்பது தான் உலக வழக்கு.(சில விதி விலக்கு இருக்கலாம்)

இதைப்பற்றி திருமூலர் திருமந்திரந்திலே சொல்லுவார்.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.

மனிதன் இறந்தபிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டு, பின்பு அவனுக்கு பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றி மறந்துபோகிறார்களாம்.

இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!

வியாழன், 19 மார்ச், 2009

நினைவோட்டம் 7

ஐயா பிள்ளைகளுக்கு சிம்மசொப்பனம் போல் தோன்றினாலும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். யார் யார் வீட்டில் குழந்தைகள் இருந்தனவோ அவர்கள் வீட்டிற்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்வார்.

பெண்களுக்கு கல்வி,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என பேசப்படுவதற்கு முன்பே அதாவது ஐம்பதுகளில் அதை தன்னால் முடிந்த அளவு செய்தார் என்பதை இப்போது நினைத்தாலும் அவருடைய சமுதாய நோக்கு எனக்கு சற்று ஆச்சரியத்தையே கொடுக்கிறது.

பள்ளியில் படிக்க மாதம் கட்டணம் எட்டணா (ஐம்பது பைசா) தான் வசூலித்தார். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண் குழந்தைகளுக்கும் தாழ்த்தபட்டோரின் குழந்தைகளுக்கும் கட்டணம் வாங்காமலே பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பது பெருமைப்படவேண்டிய செய்தி.

தினந்தோறும் அரசர்கள் நகர் வலம் வருவதுபோல இரவில் தெரு வலம் வருவார். யார் வீட்டில் பிள்ளைகள் படிக்கும் சத்தம் கேட்கவில்லையோ உடனே அந்த வீட்டுக்குள் நுழைந்துவிடுவார். பாடம் படிக்காத மாணவர்களை அவர்கள் பெற்றோர் முன்பே நன்றாக 'கவனித்து' விடுவார். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்குத்தானே செய்கிறார் என்பதால் அவர் அடிப்பதை தடுக்க மாட்டார்கள்.எனவே அவருக்கு பயந்துகொண்டு நாங்கள் சத்தம் போட்டு சிம்னி விளக்கு முன்னால் படித்துக்கொண்டு இருப்போம்.(அப்போது மின் இணைப்பு வராத காலம்)

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை ஆசிரியர்கள் தற்போது இவ்வாறு பள்ளி நேரம் முடிந்த பின்னும் மாணவர்கள் பற்றி அக்கறை எடுத்துகொள்கிறார்கள்? (பள்ளி நேரத்திலேயே அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தாலே அதிகம்!)

ஒரு தடவை ஐயா விருத்தாசலம் சென்றிருந்த நேரம். இரவு நாங்கள் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த போது எங்களது எதிர் வீட்டில் இருந்த கிளிமங்கலத்து மாமா என அழைக்கப்பட்டவர், 'டேய் பசங்களா! சாமிநாத வாத்தியார் விருத்தாச்சலத்திலிருந்து வரும்போது ஆற்றுக்கிட்டே அரணை கடிச்சு செத்துட்டார் டோய்" என்றார். உடனே நாங்கள் எல்லோரும் சந்தோஷத்தில் 'ஒ' என்றதும் பக்கத்தில் யாரோ கனைக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தால் ஐயா நின்றிருந்தார். அவ்வளவுதான். எங்களது சந்தோஷம் மறைந்து சப்த நாடியும் ஒடுங்கி வீட்டுக்குள் மறைந்துவிட்டோம். ஐயா வருவது தெரிந்தே அந்த மாமா அவ்வாறு செய்தார் என்பது பின்னால் தெரிந்தது.

எதற்கு சொல்கிறேன் என்றால் ஐயா நமக்கு நல்லதிற்குத்தானே செய்கிறார் என அறியாத காலம் அது. அவர் இறந்துவிட்டார் எனக்கேள்விப்பட்டதும் விடுதலை கிடைத்ததாக நினைத்து சந்தோஷப்பட்டோம்.

ஆனால் பின்னாளில் ஐந்தாவது முடித்து அரியலூரில் ஆறாவது (முதல் பாரம்) படித்துக்கொண்டிருந்தபோது உண்மையிலே ஐயா இறந்ததை கேள்விப்பட்டதும் என்னை அறியாமலே கண்ணில் நீர் வந்தது என்பதும் சொந்த உறவினர் மறைந்ததுபோல் எண்ணி அழுதேன் என்பதும் நிஜம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

ஞாயிறு, 15 மார்ச், 2009

கம்பசித்திரம்

சிலசமயம் ஒரு கஷ்டமான வேலையைப்பற்றி பேசும்போது, அது என்ன கம்பசித்திரமா என சொல்வது வழக்கம்.

ஆனால் கவிச்சக்ரவர்த்தி கம்பன் ஒரு கவிஞன் என்பது தான் தெரியும். அவன் கவிதை எழுதியதோடு சித்திரமும் வரைந்தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லாதபோது ஏன் கம்ப சித்திரம் என சொல்கிறோம் என்பது நம்மில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம்.

இரவிவர்மா போன்ற கைதேர்ந்த ஓவியர்கள் வரைந்த சித்திரங்களில் அவர்கள் உருவாக்கிய காட்சிகளை அல்லது உருவங்களை பார்க்கும்போது நாமே நேரில் அவைகளை/அவர்களை பார்ப்பது போல் உணரமுடியும். அதுபோல கம்பனோ தூரிகை உபயோகிக்காமலேயே கவிதையில் சித்திரம் தீட்டியுள்ளான் என்பதை அவன் கவிதையை படித்தமாத்திரத்திலேயே அறியமுடியும்.

கம்ப ராமாயணத்தை படிக்கும்போது கம்பனுடைய கற்பனைத்திறனும் சொற் திறனும் அவன் குறிப்பிடுகின்ற காட்சியை நம்முன் நேரில் கொண்டுவந்து நிறுத்தும் என்பது அனுபவிக்கவேண்டிய உண்மை. அனுமான் இலங்கைக்கு செல்ல கடலைத்தாண்டுகிறான். அதைப்பற்றி சுந்தர காண்டத்தில், கடல் தாவும் படலத்தில்


வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை

தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்

கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்

மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன்.


என்கிறான் கம்பன்.

அதாவது அனுமான் தன் வாலை உயரே தூக்கி, வலிமையான கால்களை மடக்கி, மார்பைக் குறுக்கி, பெருமை மிகு தோள்கள் பூரித்துப் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி,காற்றின் விரைவைக் கொண்ட கைகளை முன்னே நீட்டி, தலை பிரம்மலோகத்தை அளாவ, மற்றவர் கண் காணமுடியாதவாறு மிகுந்த உயரத்தில் வேகத்தோடு தாவினானாம்.

இந்த பாடலை படிக்கும்போது, நம் கண் முன்னே விரிந்து படர்ந்த கடலும், அதன் மேலே அனுமான் கால் மடக்கி கைநீட்டி பறப்பதும் முப்பரிமாண காட்சியாக தெரிவதை நிச்சயம் நம்மால் உணரமுடியும்.

உண்மையில் சித்திரம் வரைவதே கடினம். அப்படி வரைந்தாலும், நம்மில் சிலர் வரைந்த சித்திரங்களின் கீழே அவை என்ன,என்று எழுதினால்தான் நமக்கு தெரியும். இல்லாவிட்டால் அவை தெனாலிராமன் சுவற்றில் குதிரை வரைந்த கதையாகிவிடும். கவிதையின் மூலம், நாமே நேரில் பார்ப்பது போன்ற காட்சிகளை உருவாக்குவது என்பது கடினமான காரியம். அதை கம்பன் செய்திருப்பதால்தான் அதை கம்பசித்திரம் என்கிறோம்!

புதன், 11 மார்ச், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 3

மரங்கள்!
மரங்களைப்பார்க்கையில் நமக்கு அவைகள் நிழல் தருவதும் மழை பெற உதவுவதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் மரங்களைப்பற்றி இயற்கை ஆர்வலர்களிடம் கேட்டால் அவை எவ்வாறு காற்றில் மாசு படா வண்ணம் எவ்வாறு நம்மை காப்பாற்றுகிறது என்று விபரமாக சொல்வார்கள்.
ஒரு தாவர இயல் நிபுணரிடம் கேட்டால் அவை எந்தெந்த குடும்பத்தைச்செர்ந்தவை என்றும் அவைகளின் தாவர இயல் சிறப்பு பற்றியும் விளக்குவார்கள்.
ஒரு விவசாய விஞ்ஞானியிடமோ அல்லது ஒரு வன இயல் நிபுணரிடமோ கேட்டால் அவைகளை எவ்வாறு வளர்ப்பது என்றும் நல்ல மரங்களை எவ்வாறு கண்டறிவது என்றும் சொல்வார்கள்.
ஒரு மனித வள மேம்பாட்டு நிபுணரிடம் கேட்டால் மரங்கள் மூலம் தலைமைப்பண்பு பற்றி விளக்குவார்கள்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பார்வையில் மரங்களைப்பற்றி பேசக்கூடும்.
ஆனால் நம் ஔவை பாட்டிக்கோ நல்ல மரங்கள் என்றால் என்ன தெரியுமா? கொப்பும் கிளையுமாய் காட்டிலே வளர்ந்து நிற்பவை நல்ல மரங்கள் அல்லவாம். படித்தவர்கள் நிறைந்த சபையில் படிக்க தெரியாமல் நிற்கிறவனே நல்ல மரம் என்று படிக்காதவர்களை,


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன்மரம்


என சாடுகிறாள்.பாட்டியின் பாடலில் கிண்டலை விட ஆதங்கமே உள்ளது என்பதுதான் உண்மை.

பாட்டியின் சாடலை அங்கதம் எனவும் சொல்லலாம்.

சனி, 28 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 6

தமிழில் புரோ நோட் எனப்படும் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது உள்ள தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு இல்லை.இதை ஆங்கிலத்தில் Demand Promissory Note என சொல்வார்கள். எங்களுக்கு ஐயா சொல்லிக்கொடுத்த பிராமிசரி நோட் இதோ.

தென்னாற்காடு ஜில்லா, விருத்தாசலம் தாலுக்கா, தெற்கு வடக்கு புத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் நடனசபாபதி ஆகிய நான், மேற்படி ஊரைச்சேர்ந்த குப்புசாமி மகன் இராமசாமிக்கு எழுதிக்கொடுத்த பிராமிசரி நோட்டு.
ஐயா, நான் எனக்காகவும்,எனது குடும்ப செலவுக்காகவும் தங்களிடம் வாங்கிய அசல் ரூபாய் 2000 த்தை (இரண்டாயிரத்தை), 6 சதவிகித வருஷ வட்டியோடு தாங்கள் விரும்புகிறபோது தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன்.

கையொப்பம்

தேதி (ரெவின்யு ஸ்டாம்ப்பில்)

நெட்டெழுத்து உட்பட

கையொப்பம்


சாட்சிகள்

1.
2.

கிராமத்தில் அந்த காலத்தில் எழுத படிக்கத்தெரியாதவர்கள் இருந்ததால் பிராமிசரி நோட்டை எழுதத்தெரிந்தவர்கள் எழுதிக்கொடுப்பது வழக்கம். அப்படி எழுதிக்கொடுப்பவர்கள் நெட்டெழுத்து உட்பட என எழுதி கையொப்பம் இடவேண்டும். கடன் வாங்குபவர் கையெழுத்து இடுவது வழக்கம். கடன் வாங்குபவர் கையெழுத்து போடத்தெரியாவிட்டால் கைரேகை இடுவது வழக்கம். பிராமிசரி நோட்டுகள் மூன்று ஆண்டுகளுக்குப்பின் காலாவதி ஆகிவிடும் என்பதால் மூன்று ஆண்டுகளுக்குள் முழு பணத்தையும் தரமுடியாவிட்டால் ஒரு பகுதி பணத்தையாவது கொடுத்து பிராமிசரி நோட்டின் பின்புறம் வரவு வைக்கவேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்கியவர் மீது வழக்கு தொடரமுடியாது.

இதை ஐயா சொல்லிக்கொடுத்தபோது இது எப்படி எனக்கு உபயோகமாக இருக்கும் என நினைத்தது உண்டு. ஆனால் வங்கியில் சேர்ந்த பிறகு இந்த பிராமிசரி நோட்டில் எழுதப்படவேண்டிய வாசகங்கள் வேறு வகையில் கைகொடுத்தது என்பது ஆச்சரியமான உண்மை.

1970- ல் அதாவது வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதிற்கு பிறகு வங்கிகளில் உள்ள விண்ணப்பங்கள், கடன் பத்திரங்கள் போன்றவைகள் அந்தந்த மாநில மொழியில் இருக்கவேண்டும் என அரசு அறிவித்தபோது எங்கள் வங்கியும் அவற்றை தமிழில் அச்சடிக்க விரும்பி அந்த பணியை ஒரு தமிழ் நாட்டில் உள்ள ஒரு அச்சகத்திற்கு வழங்கியது.

அப்படி அச்சடிக்கப்பட்டவைகள் எங்கள் கிளைக்கு வந்தபோது நான் தற்செயலாக Demand Promissory Note- ஐ பார்த்தபோது அதில் ஒரு முக்கியமான சொல் விடுபட்டிருந்ததை பார்த்தேன்.அந்த படிவத்தில் Order என்ற வார்த்தைக்கான தமிழாக்கம் இல்லை. ஒரு Demand Promissory Note -ல் On Demand, Promise, Order என்ற மூன்று சொற்களும் கட்டாயம் இருக்கவேண்டும். அதாவது தாங்கள் விரும்புகிறபோது , தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது, திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றவை இருக்கவேண்டும். வங்கிக்கு வந்த படிவத்தில் 'தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது' என்ற வார்த்தை இல்லாததால் அது Demand Promissory Note ஆக கருதமுடியாது. தவறுதலாக அந்த படிவத்தில் கடனாளியிடம் கையெழுத்து வாங்கி கடன் கொடுத்தால் பின்னால் கோர்ட்டுக்கு போக நேர்ந்தால் வங்கிக்குத்தான் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனே எங்கள் கிளை மேலாளரிடம் காண்பித்தேன்.

அவருடைய தாய் மொழி மலையாளமாக இருந்தாலும் நான் காண்பித்த குறையை ஒத்துக்கொண்டு உடனே அந்த படிவங்களை மேற்கொண்டு உபயோகத்தில் விடாதிருக்க ஆவன செய்தார்.

அந்த நேரத்தில் எங்கள் ஐயா சொல்லிக்கொடுத்தது எப்படி உதவியாக இருந்தது என்பதை இப்போது நினைத்தாலும் என்னால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 5

கணக்கில் ஐயா கொடுத்த பயிற்சிதான் பின்னால் வங்கியில் சேர்ந்தபோது 'கால்குலேடேர் ' உதவி இல்லாமல் கூட்டல் கழித்தல் போன்றவைகளை செய்யமுடிந்தது.

ஐயா மாலை 4 மணிக்கு மற்ற ஆசிரியர் போனதும் கணக்கு மற்றும் பொது அறிவு வகுப்புகள் நடத்துவார். நாங்கள் எல்லோரும் சிலேட்டுடன் தயாராக நிற்கவேண்டும். அவர் கணக்கை போட்டு முடித்து ஒன்று,இரண்டு, மூன்று என சொல்லிமுடிப்பதற்குள் விடையை எழுதி சிலேட்டை கீழே வைத்துவிடவேண்டும். இல்லாவிடில் அடிதான். பிறகு ஒவ்வொருவரிடமும் வந்து விடையைப்பார்ப்பார். தப்பாக போட்டவர்களுக்கு. கிள்ளோ அல்லது குட்டோ நிச்சயம்.

சிலசமயம் கணக்கை பாட்டாகவே பாடி போடுவார். அப்படி அவர் பாடி போட்ட ஒரு கணக்கு 55 வருஷங்களானாலும் இன்னும் நினைவில் இருக்கிறது.


கட்டியால் எட்டுக்கட்டி,

கால், அரை, முக்கால் மாற்று,

செட்டியார் சென்று போனார்,

சிறுபிள்ளை மூன்று பேரு,

கட்டியும் உடைக்கொணாது,

கணக்கையும் போடவேண்டும்.


இறந்துபோன செட்டியார் ஒருவர்க்கு மூன்று பிள்ளைகள். அவர் விட்டுச்சென்ற எட்டு தங்க கட்டிகளை சமமாக பிரிக்கவேண்டும். அதுதான் கணக்கு.

இப்போது வேண்டுமானால் இந்த கணக்கு மிக எளிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்போது அது கஷ்டமாகத்தான் இருந்தது. இது போன்று பல கணக்குகள். கணக்கோடு பொது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையானவைகளையும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசி வரை வராது என்பார்கள்.

ஆனால் ஐயாவின் பாடங்கள் அந்த பழ மொழியை பொய்யாக்கி ஊரில் உள்ள அனைவருக்கும் கடைசிவரை கை கொடுத்தது என்பது உண்மை. அந்த கால கட்டத்தில் வங்கிகளின் கிளைகள் இன்று போல் எல்லா இடங்களிலும் இல்லை. அதோடு எல்லோரும் சுலபமாக கடனும் வாங்கிவிட முடியாது. எனவே ஊரில் வசதி படைத்தவர்கள் தேவைப்பட்டவர்களுக்கு பிராமிசரி நோட் எழுதி வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் பிராமிசரி நோட்டை பற்றி தெரியவேண்டும் என்பதற்காக ஐயா எங்களுக்கு எப்படி பிராமிசரி நோட் எழுதுவது என்பதை கற்றுக்கொடுத்தார். அதோடு முக்கிய தொழில் விவசாயமாக இருந்ததால் குத்தகை சீட்டு எப்படி எழுதுவது என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

என் கூட படித்தவர்கள் ஐந்தாவதுக்கு மேல் படிக்காததால் அவர்கள் ஊரிலேயே தங்கி பாரம்பரிய தொழிலான விவசாயத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அனேகமாக எல்லோருக்கும் ஐயா சொல்லிக்கொடுத்தது வாழ்க்கைக்கு உபயோகமாக இருந்தது என்பது உண்மை. இந்த பிராமிசரி நோட் எழுதுவதை கற்றுக்கொண்டது பதினேழு வருஷங்களுக்குப்பின்னால் வங்கியில் பணி புரியும்போது எனக்கு எப்படி உதவியது என்பதை பிறகு சொல்கிறேன்.

தமிழில் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது அநேகம் பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்காக அதை தருகிறேன்.

நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

சனி, 14 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 4

எங்கள் ஐயாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அப்போது (ஐம்பதுகளில்) ஐந்தாவது வரை மொழிப்பாடமாக ஆங்கிலம் கிடையாது என்பதால் அவர் பாடம் எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாடங்கள் எடுப்பதற்கு வேறு ஆசிரியர்கள் இருந்தார்கள்.

காலையில் பத்து மணிக்கு முன்பும் மாலை ஐந்து மணிக்கு பின்பும் அவரது ராஜ்ஜியம் தான். காலையில் எல்லோரும் நேரத்துக்கு வரவேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்டிப்பானவர். அனைவரும் திருநீறு பூசி வரவேண்டும். எங்கள் ஊரில் வைணவ சமயத்தினரோ அல்லது மற்ற மதத்தினரோ இல்லாததால் இந்த கட்டளைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. முதலில் வரும் மாணவன் அல்லது மாணவி 'வேர்த்து' எனப்படும் வருகைப்பதிவேட்டை சிலேட்டில் எழுதவேண்டும். எழுதுபவர் தன்பெயருக்கு நேராக 0 இலக்கமிட்டு ஆரம்பிக்கவேண்டும். பின்பு வருபவர்களுக்கு 1,2,3 என இலக்கம் தரப்படும். ஐயா வந்ததும் சாவடியின் எரவாணத்தில் செருகியிருக்கும் நீண்ட பிரம்பை எடுத்துக்கொண்டு வந்து நிற்பார். முதலில் வந்தவர் 'வேர்த்தை' படிக்க ஆரம்பித்ததும் அப்பெயருக்கு உரியவர்கள் வந்து அவர் முன்னால் கையை நீட்டவேண்டும். அவரவர் எண்ணுக்கு தகுந்தாற்போல் கையில் அடி விழும். யாராவது கையை பின்னுக்கு இழுத்தால் கூட ஒரு அடி கிடைக்கும். இந்த அடிக்கு பயந்து கொண்டு அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு சீக்கிரம் செல்வோம்.

பிறகு கடவுள் வாழ்த்து உண்டு. அனைவரும் மனப்பாடம் செய்து வரவேண்டும். யாரைவேண்டுமானாலும் பாடச்சொல்லுவார். பாடாவிட்டாலோ அல்லது தவறாக பாடினாலோ அருகில் கூப்பிட்டு தொடை சிவக்கும் வண்ணம் கிள்ளுவார். பெண்பிள்ளைகளாக இருந்தால் தலையில் வலிக்கும் வண்ணம் குட்டு விழும். காலையில் கணக்கு பாடத்தில் வாய்ப்பாடு எனப்படும் ஒன்று முதல் பதினாறு வரை உள்ள எண்களின் பெருக்கல் தொகைகளை பார்க்காமல் சொல்லவேண்டும். அதோடு இல்லாமல் அளவை வாய்ப்பாடும் சொல்லவேண்டும்.

எனக்கு இன்னும் கூட அவைகள் நினைவுக்கு வருகின்றன.

4 பார்த்திங் 1 பென்னி

12 பென்ஸ் 1 ஷில்லிங்

20 ஷில்லிங் 1 பவுண்ட்

(சுதந்திரம் அடைந்து சில வருடங்களே ஆகிருந்த படியால் ஆங்கில நாணய வாய்ப்பாடும் இருந்தது)

1 ரூபாய் எடை 1 தோலா

3 தோலா 1 பலம்

8 பலம் 1 சேர்

5 சேர் 1 வீசை

8 வீசை 1 மணங்கு

20 மணங்கு 1 பாரம்.

(அப்போது ஒரு ரூபாய் வெள்ளியில் இருக்கும்)

சரியாக சொல்லாதவர்களை குனியவைத்து முதுகில் செங்கல் வைத்து படிக்க சொல்வார். சரியாக சொல்லும் வரை கல்லை எடுக்கமாட்டார். மாலையில் தான் கணக்கு போடச்சொல்வார். இது போன்று பல வாய்ப்பாடுகளை ஒப்பிக்கவேண்டும்.
தமிழைப்பொறுத்தவரை ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் ஆத்திச்சூடி,உலக நீதி, வெற்றி வேற்கை, கொன்றை வேந்தன், விவேக சிந்தாமணி, நன்னெறி, நல்வழி, அறப்பளீஸ்வரர் சதகம்,குமரேச சதகம் முதலியவைகளை படித்து மனப்பாடம் செய்து விட வேண்டும். எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து சொல்லும் வரை விடமாட்டார். முன்பே சொன்னது போல் மனப்பாடம் செய்யாவிட்டால், அடியோ, குட்டோ, கிள்ளலோ நிச்சயம்.

அவர் அடிப்பதைப்பற்றி வீட்டில் சொல்லமுடியாது. ஏனெனில் பிள்ளைகள் படிக்காவிட்டால் ஆசிரியர் அடிப்பது தவறில்லை என நினைத்த காலம் அது!. ஐயா அடிக்கும்போது எப்போது இவரிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என எண்ணியதும் உண்டு. ஆனால் அப்படி மனனம் செய்ததால் தான் இன்னும் நான் படித்த பாடல்கள், வாய்ப்பாடுகள் எனக்கு நினைவில் இருக்கின்றன.

அந்த பயிற்சி பின்னால் பணியில் இருந்தபோது எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருந்தது.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி.