மேலாளர் நிமிர்ந்து பார்த்து ‘யெஸ்’ என்றதும், நான், ‘சார். ஒரு
முக்கியமான விஷயம். இன்று பம்ப் செட்
கடன் பெற்ற ஒருவரை சந்தித்தபோது அவர் ஒரு அதிர்ச்சியான
செய்தியை என்னிடம் சொன்னார்.
அவரிடமும், நம்மிடம் பம்ப் செட் கடன் பெற்ற மற்றவர்களிடமும் பம்ப்
செட் விற்ற ‘அந்த’ கடைக்காரர் வங்கி அலுவலர்கள் ஆய்வுக்கு சென்று வர ஆகும் ‘டாக்ஸி’ செலவுக்கு என சொல்லி கூடுதலாக ரூபாய் 100
வசூலித்துவிட்டாராம்.
நம்முடைய வங்கியின் பெயரில் அவர்
எப்படி அதை வசூலிக்கலாம் என நான் இன்று அவரது கடைக்கு சென்று நேரடியாக கேட்டதற்கு, அவர் அதை மறுத்ததோடு அதைப்பற்றி
என்னிடம் பேச விரும்பாமல் உங்கள் மேனேஜரிடம் போய் என்னைப்பற்றி விசாரித்துக்
கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
நீங்கள் இது பற்றி விசாரித்து அவர் முறைகேடாக
வசூலித்த அந்த பணத்தை திரும்பத் தர சொல்லவேண்டும் சார்.’ என்றேன்.
நான் இவ்வாறு சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை
போலும்.உடனே அவர் கோபத்தோடு,‘என்ன நீங்கள். யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு அவரிடம் போய்
விசாரித்திருக்கிறீர்கள்.அவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?அவர் இங்கே பல வருடங்களாக நாணயமாக கடை
நடத்தி வருபவர்.அவர் இப்படியெல்லாம்
செய்யக்கூடியவர் அல்லர்.
அவரிடம் பேசுமுன், நீங்கள் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கவேண்டும்.என்னைக் கேட்காமல் நீங்கள் ஏன் இப்படி அதிகப் பிரசங்கித்தனமாக நடந்துகொண்டீர்கள்? இனி இது போன்ற செயல்களை
செய்யாதீர்கள். உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் செய்யுங்கள்.போங்கள்.’ என்றார்.
‘சார். இவர் எப்படி என்று எனக்குத் தெரியாமல்
இருக்கலாம். ஆனால் அந்த பயானாளி பொய் சொல்லவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக
சொல்லமுடியும்.ஏனென்றால் நான் நடந்து செல்வதைப் பார்த்துவிட்டு ;நீங்கள். ஏன் நடந்து வருகிறீர்கள்.
நான்தான் நீங்கள் டாக்ஸியில் வர அந்த கடைக்காரரிடம் ரூபாய் 100 கொடுத்திருக்கிறேனே’ என்று தானாகவே நான் கேட்காமலேயே
சொன்னார். எனக்கென்னவோ இந்த கடைக்காரர் நமது வங்கிப் பெயரை சொல்லி பணம்
வாங்கியிருப்பதாகவே படுகிறது.எதற்கும் நீங்கள் அவரிடம் இது பற்றி விசாரியுங்கள்
சார்.’ என்றேன்.
உடனே அவரது முகம் ‘ஜிவு ஜிவு’ என சிவந்துவிட்டது. ‘என்ன நான் சொல்கிறேன் அவர் அப்படி செய்யக்கூடியவர் அல்ல
என்று. நீங்கள் திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீகள். உங்களுக்கு
அனுபவம் பத்தாது. ஆயிரம் பேர் ஆயிரம்
சொல்வார்கள்.அதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாம் அவரை சந்தேகிக்க முடியாது.’என்று கூறிவிட்டு கோப்புக்களைப்
பார்க்கத் தொடங்கிவிட்டார்.
நான் போகலாம் என்பதற்கு அது சைகை
என்பதால், மேலே எதுவும்
பேசாமல் வெளியே வந்துவிட்டேன்.
அறைக்கு வந்ததும் அதைப் பற்றி
யோசித்தேன்.கடைக்காரர்தான் நான் விசாரித்தபோது மேற்கொண்டு விவரம் கேட்காமல் மறுத்தார்
என்றால் மேலாளரும் ஏன் அதைப்பற்றி விசாரிக்கத் தயங்குகிறார் என்று.
அப்புறம் தான் கேள்விப்பட்டேன்.நான் அந்த கடையை விட்டு
வெளியே வந்து வங்கிக்கு வருவதற்குள்,கடைக்காரர் மேலாளரிடம் தொலைபேசி மூலம் நான் வந்து விசாரித்ததை
சொல்லிவிட்டாரேன்று!
எனக்கென்னவோ மேலாளர் அந்த கடைக்காரரை ஆதரிப்பதாகவே
தோன்றியது. எனவே அந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுவிட விரும்பவில்லை
வங்கியில் சேர்ந்தவுடன் பயிற்சியின் போது தலைமை
அலுவகத்தில் எங்களுக்கு பயிற்சி அளித்த திரு Haribal அவர்கள் சொன்னது அப்போது நினைவுக்கு
வந்தது.
‘நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் சேர்ந்துள்ள நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.எல்லோருக்கும்
இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. பணிக்காலத்தில் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும்
விசுவாசமாய்
இருங்கள்.தவறும் ஏதும் செய்யாதீர்கள்.வேறு
யாராவது தவறு செய்வது உங்களது கவனத்திற்கு வந்தால் உடனே கிளை மேலாளரிடம் அதை தெரியப்படுத்துங்கள்.அப்படி
அவர் எந்த நடவடிக்கையையும்
எடுக்கவில்லையென்றால் எங்களுக்கு (தலைமை அலுவலகத்திற்கு) எழுதுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.’
திரு Haribal அவர்கள் சொன்னதை வேதவாக்காக
எடுத்துக்கொண்டு
அன்று நடந்ததை அப்படியே தலைமை அலுவகத்திற்கு தெரியப்படுத்த
எண்ணினேன்.
கடைக்காரர் தவறு செய்தாரா என்று
விசாரிக்கக்கூட மேலாளர் விரும்பாத நிலையில், தலைமை அலுவகத்திற்கு தெரிவிப்பது ஒன்று தான் வழி என
நினைத்து உடனே ஒரு தாளில் அன்று நடந்ததை விரிவாக எழுதினேன்.
கடைசியில் முத்தாய்ப்பாக, இந்த விஷயத்தில் மேலாளர் ஏனோ சில பல
காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் என எழுதி அதை அடிக்கோடிட்டேன்.அந்த
கடிதத்தில் நான் எழுதிய அந்த வரிகள்
இன்னும் என் நினைவில் இருக்கிறது. ‘Our Manager is reluctant to take action
in this regard
for the reasons best known to him!’ என்பதுதான் அது.
அதை
யாருக்கு அனுப்பலாம் என நினைத்தபோது,வங்கியின் தலைவருக்கு (அப்போது அவர் Custodian என அழைக்கப்பட்டார்.) அனுப்பினால்
அவர் படிப்பாரோ இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால், அந்த விஷயம் வேளாண் நிதித்துறை சம்பந்தப்பட்டதால் அந்த
துறை தலைவருக்கே அனுப்பலாம் என்று எண்ணி அந்த
கடிதத்தை அவரது பெயருக்கு அனுப்பிவிட்டேன்.
நான் அவ்வாறு எழுதியது பற்றி
யாரிடமும் சொல்லவில்லை.இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு அசட்டுத்
துணிச்சல் இருந்தால் தகுதிகாண் பருவத்தில் (Probationary Period) இருந்த நான், ஒரு ‘சக்தி’ வாய்ந்த முது நிலை மேலாளர் பற்றி, அவரது நேர்மையை சந்தேகித்து கடிதம் எழுதி இருக்கிறேன்.
வங்கி நினைத்தால் அந்த தகுதிகாண் பருவத்தில் என்னை பணி நீக்கவும் முடியும்.ஆனால்
நான் செய்வது சரி என்பதால் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அந்த காரியத்தை செய்தேன்
என நினைக்கிறேன்.
அதற்கு பிறகு தினம் எனது கடிதத்தில் எழுதியிருந்தது
பற்றி எனக்கோ அல்லது மேலாளருக்கோ கடிதம் வரும் எண்ணி காத்திருந்தேன். ஆனால்
எதுவும் வரவில்லை. ஏன் தலைமை அலுவகத்தில் எந்த
நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஒருவேளை பயிற்சி காலத்தில் சொல்வதெல்லாம், வெறும் ‘ஏட்டுச்சுரைக்காய்’ தான் போலும் என நினைத்துக்கொண்டேன்.
அது அப்படியே இருக்க, அந்த நாளுக்குப் பிறகு மேலாளரின்
‘பார்வை’ என் மேல் அதிகம் விழத் தொடங்கியுள்ளது என்பதை பின்
நடந்த நிகழ்வு ஒன்றின் மூலம்
அறிந்து கொண்டேன்.
ஒருநாள் வங்கியில் இருக்கும்போது காலை 11 மணிக்கு The Madras Agricultural Journal என்ற இதழ் அஞ்சலில் என் பெயருக்கு வந்தது.அதைப் பிரித்து பார்த்தபோது, வேளாண் ஆராய்ச்சி நிலையம் புதிதாக கண்டுபிடித்திருந்த
மல்லிகை பற்றிய சாகுபடிக் குறிப்பு ஒன்று அதில் வெளியாகி இருந்தது. அதை படிக்க
ஆரம்பித்தேன்.
புதிய வேளாண் தொழில் நுட்பங்களை, களப் பணியார்களான என்னைப்
போன்றவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக எங்கள் வங்கியின் தலைமை
அலுவலகத்திலிருந்தே அவைகளை வெளியிடும் ‘ஆய்விதழ்’களுக்கு (Journals) எங்கள் பெயர்களிலேயே சந்தா கட்டியிருந்தார்கள்.
அப்படி சந்தா கட்டப்பட்ட ஆய்விதழில் ஒன்றுதான்
கோவை வேளாண்மைக் கல்லூரியிலிருந்து (அப்போது பல்கலைக் கழகமாக
அது ஆக்கப்படவில்லை)
வெளி வந்த வெளி வந்த The Madras Agricultural Journal.
நான் அதை படித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து, என் இடத்திற்கு மேலாளர் கோபமாக
வந்தார்.
தொடரும்