வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ஆசையில் ஒரு கடிதம்? 6


கடிதம் எழுதும்போது  நாம் செய்யும் சிறிய தவறுகள் பற்றி நான் கேட்டறிந்தவைகளை முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன்.
பள்ளியில் மற்றும் கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றுத்தருகிறார்களே ஒழிய அந்த மொழியை நம்முடைய 
தினசரி வாழ்க்கையில் எந்தெந்த இடத்தில் எவ்வாறு உபயோகிக்கவேண்டும் என யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.

அரசுப் பள்ளிகளில் கடிதம் எழுதுதல் (Letter Writing)  பற்றி பாடம் நடத்தினாலும் அப்போது ஓரிரு மாதிரிக் கடிதங்களை மட்டும் 
கொடுத்து எழுத சொல்லுவார்களே தவிர மாணவர்களுக்கு 
தாங்களாகவே கடிதம் எழுத பயிற்சி தருவதில்லை. அதை 
ஊக்குவிப்பதும் இல்லை.

தனியார் பள்ளிகளில் எவ்வாறு சொல்லித்தருகிறார்கள் எனத்
தெரியவில்லை. அதனாலேயே படித்து முடித்து பணியில் 
சேரும்போது பலர் பணியேற்பு அறிக்கை (Joining Report) மற்றும் 
விடுப்புக் கடிதங்கள் (Leave Letters)கூட எழுதக்கூடத் 
தடுமாறுகிறார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை அறிவியல் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, எங்களது 
வேளாண்மை விரிவாக்கப் பேராசிரியர் திரு பாண்டுரங்கன் அவர்கள்,படித்து முடித்து பணியில் சேரும்போது எவ்வாறு 
பணியேற்பு அறிக்கை எழுதுவது என சொல்லிக்கொடுத்தார்.

என்ன இது! பாடத்தை நடத்துவதை விட்டுவிட்டு, இவர் நம்மை 
பள்ளி மாணவர்கள் போல் நினைத்து இதையெல்லாம் சொல்லித்தருகிறாரே?’என நாங்கள் நினைத்ததுண்டு. அப்போது வேடிக்கையாகத் தெரிந்த அந்த கடிதம் எழுதும் பயிற்சியின் 
உபயோகம் பணியில் சேரும்போதுதான் தெரிந்தது.

நான் அக்டோபர் 5,1966 ல் அப்போதைய தஞ்சை மாவட்டம்  
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க
அலுவலராக பணியில் சேர சென்றபோது, அங்கிருந்த அலுவலக
மேலாளர், நான் பணியில் சேர வந்திருக்கிறேன் எனத் தெரிந்ததும்
ஒரு வெள்ளைத் தாளை என்னிடம் கொடுத்து பணியேற்பு 
அறிக்கைஎழுதிக் கொடுங்கள். என சொல்லிவிட்டு என்னையே 
பார்த்துக்கொண்டு இருந்தார்.

நான் கடிதம் எழுதத் தடுமாறுவேன் என்றும், அவரது உதவியை
நாடுவேன் என்று எதிர்பார்த்து இருந்தார் போலும். எங்களுக்கு
ஏற்கனவே எங்கள் பேராசிரியர் பணியேற்பு அறிக்கை எழுத  
சொல்லிக் கொடுத்திருந்ததால், நான் சரசர வென அதை எழுதிக்
கொடுத்ததும், நீங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
படித்தவரா?’ என்றார்.

ஆமாம்.ஏன் கேட்கிறீர்கள்?’ என்றதும் ஏற்கனவே இங்கு ஒருவர்
உங்கள் பல்கலைக் கழகத்தில் படித்தவர் பணிபுரிகிறார். அவரும்
உங்களைப் போலவே வந்தவுடன் உடனே பணியேற்பு 
அறிக்கையை எழுதிக்கொடுத்தார்.அதனால் கேட்டேன். என்றார்.

அந்த நேரத்தில் எங்களது பேராசிரியர் திரு பாண்டுரங்கனுக்கு
மனதிற்குள் நன்றி சொன்னேன்.ஆனால் அதே நேரத்தில்
வேறொன்றையும் நினைத்துப் பார்த்தேன்.  

பள்ளியில் 11 ஆண்டுகள் படித்தும், பின் கல்லூரியில்  
5 ஆண்டுகள்படித்தும் பணியில் சேரும்போது தரவேண்டிய 
பணியேற்பு அறிக்கையைக்  கூட நம்மால் இன்னும் சுயமாக 
எழுதத்தெரியவில்லையே என்று.

பள்ளி மற்றும் கல்லூரிகளில்தான் கடிதம் எழுதுவது  பற்றி
சொல்லித் தருவதில்லை என்றால், சில அலுவலகத்தில்
விடுப்புக் கடிதங்களைக்கூட Cylcostyle செய்து  வைத்திருப்பதால்
சொந்தமாக கடிதம் எழுதும் திறமை வளர வாய்ப்பு இல்லை
என்பதுதான் உண்மை.

இதுபோன்ற வார்ப்புரு (Template) கடிதங்களின் உள்ள சொற்களை
எங்கு உபயோகப்படுத்தவேண்டும் எனத் தெரியாமல் உபயோகித்து
சில சமயம் சிக்கலில் மாட்டிக்கொள்வோரும் உண்டு.

எனது நண்பர் ஒருவரது அலுவலகத்தில் ஊழியர்கள் கடிதம்
எழுதும்போது, ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால்
We would be pleased to know என்று ஆரம்பித்து, பண்பட்ட முறையில்
கடிதம்  எழுதவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அலுவலகத்தில் ஊழியர் துறையில் புதிதாய் சேர்ந்த ஒரு
இளம் அலுவலர்,முன்னாள் ஊழியர் ஒருவர் குடும்பத்திற்கு ஒரு
விவரம் கேட்டு எழுதியபோது, மேலே சொன்ன  சொற்றொடரை உபயோகித்து கடிதம் எழுதிவிட்டார்.அது எந்த அளவிற்கு அந்த
குடும்பத்திற்கு மன வேதனையை உண்டு பண்ணியது என்பது
வேறு கதை. 

அப்படி அவர் என்ன எழுதியிருந்தார் என்றால்
We would be pleased to know the date of death of your husband என்று!
அவர் அவ்வாறு எழுதியதன் காரணம் அவரை சொந்தமாக
சிந்திக்கவிடாதது தான் என்பது என் கருத்து.

வங்கியில் பணிபுரியும்போது, Salutation எனப்படும் கடிதத் 
தலைப்பில் எழுதப்படும் Dear Sir போன்றவைகளை 
உயர் பதவியில் இருப்பவர்களுக்கு உபயோகிக்கக் கூடாது 
என்ற நடைமுறையை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு
புது தில்லியில் பணிபுரியும்போது எனக்குக் கிடைத்தது. 

எங்கள் வங்கியில் பொன் விழா கொண்டாட்டதிற்கான 
அழைப்பிதழை மரியாதை நிமித்தம் இந்தியக் 
குடியரசுத்தலைவர் அவர்களுக்குத் தரும்படி எங்களது 
தலைமையகம் எங்களது புது தில்லி வட்டார அலுவலகத்தை பணித்திருந்தது.

அந்த பொன்விழா அழைப்பிதழுடன் அனுப்பவேண்டிய 
கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என எங்கள் அலுவலகத்தில் 
இருந்த யாருக்கும் தெரியவில்லை. Dear Sir என 
ஆரம்பிக்கக்கூடாது என சிலர் சொல்ல. ஏன் இந்த சந்தேகம்?’ 
குடியரசுத் தலைவர் அலுவலகத்தையே கேட்டுவிடலாமென்று 
எண்ணி, அங்கிருந்த தலைமை மரபு சீர் முறை அலுவலர் 
(Chief Protocol Officer) அவர்களிடம் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது அவர் சொன்னார்   
'May it please your Excellency என்று ஆரம்பிக்கவேண்டும்' என்று.

(ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னும் அவர்களது வழக்கத்தைப் பின் பற்ற வேண்டுமா என்பதுதான் என் கேள்வி)

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மின்னஞ்சல்கள் மூலமாகவும்  குறுந்தகவல் சேவை மூலமாகவும் தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்த பின் கடிதம் எழுதுவது குறைந்து
வருகிறது என்றாலும் அது முழுதும் மறைந்து விடாது
என்பதுதான் உண்மை.

தொலைக்காட்சி வந்தபோது நம்மில் பலர் இனி வானொலி இருக்காது
என நினைத்ததுண்டு. ஆனால் வானொலி இன்னும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் எத்தனை தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டாலும் கடிதங்கள் எழுதுவது நடைமுறையில் இருக்கும் என்றே நினைக்கிறேன். எனவே நாமும் நன்முறையில் கடிதம் எழுத பழகுவோம்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஆசையில் ஒரு கடிதம்? 5


நான் எழுந்து சார். அரசு அலுவலகங்களில் படிகளை 
அனுப்பும்போது Copy to என எழுதாமல் Copy submitted, Copy transmitted, 
மற்றும் Copy forwarded என வெவ்வேறு விதமாக எழுதுவதுண்டு. உண்மையில் அது சரியான முறையா?’ என்று கேட்டதற்கு,
பேராசிரியர் மாத்யூ ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்?’ என்றார்.

அதற்கு சார், நான் அரசுப்பணியில் இருந்தபோது, Boss களுக்கு
அனுப்பும் Copy ல், Copy submitted என்றும், சம பணிநிலையில்
(Equal Cadre) உள்ளவர்களுக்கு அனுப்பும் Copy ல், Copy transmitted
என்றும்,கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அனுப்பும் Copy ல்,
Copy forwarded என்றும் பதவிக்குத் தக்கவாறு எழுதவேண்டும்
என சொல்வார்கள். அது சரியா எனத் தெரிந்துகொள்ளத்தான்
கேட்டேன். என்றேன்.

அதற்கு அவர் நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?’ என்று
கேட்டபோது நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன். என்றேன்.

உடனே அவர் சிரித்துக்கொண்டே ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டுப்
போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உங்கள் மாநிலத்தில்
இன்னும் பழைய பிரிட்டிஷ் கால முறைகளையே தொடர்கிறீர்கள்
என நினைக்கிறேன்.

Submitted என எழுதுவதால், நீங்கள் என்ன உங்கள் Boss ன் காலில்
விழுந்து சமர்ப்பிப்பதாக எண்ணமா? அல்லது Forwarded என
எழுதுவதால் உங்கள் கீழ் உள்ள ஊழியர்களுக்கு அந்த கடிதத்தை
தூக்கி எறிகிறீர்கள் என்று பொருளா? எல்லோருக்கும் அந்த கடிதத்தின் படியை அனுப்புகிறோம். அவ்வளவே. யாருக்கு கடிதத்தின் Copy யை
அனுப்பினாலும் Copy to என்று எழுதினால் மட்டு போதும்.

ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது யாரோ சிலர் ஏற்படுத்திய இந்த அடிமைத்தனமான செயலை நாம் இன்னும் தொடரவேண்டியதில்லை
என நினைக்கிறேன். என்றார். .  

மேலும் அவர் பேசுகையில், வேலைப் பளு காரணமாக, நாம்
Planned mood of writing ல் இல்லாததன் காரணமே நாம் செய்யும்
சிறுசிறு தவறுகள். அவற்றைத் திருத்திக்கொண்டுவிட்டால்
Business Writing’ என்பது ஒரு குழந்தை விளையாட்டுப்போல
(Child’s Play).’ என்றார்.

மேற்கொண்டு அவர் பேச நினைத்தாலும், அவருக்கு 
கொடுக்கப்பட்டிருந்த ஒன்றரை மணி நேரம் முடிந்துவிட்டபடியால் அத்தோடு நிறுத்திக்கொண்டு விடை பெற்றார். 

அவரது எங்களுக்காக அவர் செலவிட்ட நேரம் ஒன்றரை மணி 
நேரம்தான். ஆனாலும் அந்த நேரத்திற்குள் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம்.

அவரிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ளமாட்டோமா என்று 
எங்களுக்கு ஆவல் இருந்தாலும், நேரமின்மை காரணமாக அது முடியவில்லை. 

அந்த பயிற்சி முடிந்து கோவைக்கு வந்ததும்,முதல் வேலையாக, 
எனது வட்டார அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் அனைவரையும் கூட்டி நான் கற்று வந்த, சரியான முறையில் (வணிக) கடிதம் 
எழுதும் முறை பற்றி விரிவாக  விளக்கினேன். அனைவரும் அந்த முறையையே பின்பற்றுவோம் என்றும் சொன்னேன். ஆனால் 
எவ்வளவு பேரால் அதை செய்யமுடிந்தது எனக்குத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும்.ஆங்கிலம் 
நமது தாய் மொழி அல்ல என்பதால் அந்த மொழியை 
கையாளும்போது கவனமாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் 
அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேசிய விதைக் 
கழகத்தில் பணியாற்றியபோது எனது Boss திரு மோகன்  
சொல்லுவார்.

அவர் தான் சரியான ஆங்கிலச் சொல்லை கையாளாததால் 
தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் சொன்னதும்தான் தெரிந்தது
கடிதம் எழுதும்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டுமென்று.

அவர் படித்து முடித்ததும் அஸ்ஸாமில் இருந்த, ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்ட ஒரு தேயிலை நிறுவனத்திற்கு  நேர்முகத்தேர்வுக்கு
சென்று திரும்பியிருக்கிறார். அவரை தேர்ந்தெடுத்ததாக சொல்லி 
அந்த நிறுவனம் பணி நியமன ஆணையை அனுப்பி அவரது 
ஒப்புதலை தெரிவிக்க சொல்லி கேட்டு இருக்கிறது. 

அதற்கு நன்றி தெரிவித்து தான் எப்போது சேரவேண்டும் எனக்கேட்டு பதில் அனுப்பியிருக்கிறார். ஒரு மாதம் ஆகியும் பதில் வரவில்லை என்றதும் அந்த நிறுவனத்திற்கே நேரில் போய் கேட்டதும் அவர்கள் சொன்னார்களாம்  சரியான ஆங்கிலம் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை இல்லை. என்று.

அவருக்கு என்ன தவறு செய்தோம் எனத்தெரியாததால் அங்கிருந்த உதவியாளரிடம் கேட்டதற்கு அவர் சொன்னாராம் ‘’நீங்கள் அனுப்பிய ஒப்புதல் கடிதத்தின்  அடியில் Yours truly என்பதற்குப் பதில்   
Yours truely என எழுதிவிட்டீர்கள். அதுதான் நீங்கள் வேலை 
இழக்கக் காரணம். என்று.  

தொடரும்