திங்கள், 14 ஜனவரி, 2013

நித்தநித்தம் பொங்கல்!


 அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்! 










(மேலே உள்ளவை இன்று எனது வீட்டின் முன்பு எனது மனைவி 
போட்ட கோலங்களின் புகைப்படங்கள்) 

பொங்கல் என்றாலே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 
வாழ்த்து அட்டை அனுப்புவது நம்முடைய வழக்கம். 
நான் சொல்லுவது இந்த கைப்பேசியும் மின்னஞ்சலும் 
இல்லாத காலங்களில். இப்போது இது மெல்ல மறைந்து 
வருவதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஆங்கிலப் 
புத்தாண்டு வாழ்த்து அட்டைகளுக்கு இருந்த கிராக்கி 
பொங்கல் வாழ்த்து அட்டைகளுக்கு இல்லை என்கிறது 
பத்திரிக்கை செய்தி.

நானும் 1961 முதல் 2004 வரை 44 ஆண்டுகள் 
அனுப்பிக்கொண்டு இருந்தேன் என்பதை  
இருந்தேன்.

புது தில்லியில் கரோல்பாக்கில்  திரு இராமநாத ஐயர் 
மெஸ்ஸில் 1968 ல் தங்கியிருந்த போது எனக்கு  
அறைத் தோழனாக இருந்தவரும், எனக்கு 
எல்லா விதத்திலும் உதவியாக இருந்தவரும்,  
எனது சுக துக்கங்களில் பங்கேற்றவரும் என்னால்  
வாழ்நாள் முழுதும் மறக்க இயலாதவருமான 
நண்பர் திரு S.சிவக்குமார் அவர்களுக்கு,
1974 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழக்கம்போல் 
வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தேன்.

அப்போது புது தில்லியில் சிண்டிகேட் வங்கியில் 
பணி புரிந்துகொண்டு இருந்தேன். எனக்கு திருமணம் 
ஆகி மூன்று மாதங்கள் தான் ஆகி இருந்தன.

எனது வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 
திரு சிவக்குமார் அவர்கள் அப்போது 9 மாத 
கைக்குழந்தையாயிருந்த அவரது மகனின் 
புகைப்படத்திற்குப் பின்னால் தனது நன்றியை 
கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். அவரது 
கவிதை நடையும், அதன் ஊடே அவர் எங்களை 
வாழ்த்திய விதமும் என்னைக் கவர்ந்ததால் 
அதை 39 ஆண்டுகள் ஆனாலும் பாதுகாத்து 
வைத்திருக்கிறேன்.

அதை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.






அவரது மகனின் புகைப்படம் (இப்போது 39 அகவை உள்ள  இளைஞர்)





“வாழ்த்துக்கு நன்றி நண்ப!
ஆயினும்-

பொங்கலன்று பொங்கலன்று
      இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
தங்கச்சிரிப்பால்,தேனான மழலையினால்
       இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
செங்கரும்பாம் செவ்வாய் பெருக்கால்
      இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
குங்குமச்சிமிழ் உதட்டால், பதிமுத்தத்தால்
      இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
மங்கா மகிழ்வளிக்கும் மகனின் குறும்பால்
       இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
இங்ஙனமே,மனையறத்தின் மலர் வரவால்
       பொங்கல் தினமுமக்கும் பொங்குக!

                         என வாழ்த்தும் 
                         குமார் & ராதா”  








சனி, 12 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 24



அந்த வாடிக்கையாளரின் வேண்டுகோளை, 
உச்ச நீதிமன்றம் அந்த சமயத்தில் தந்த ஒரு தீர்ப்பு 
காரணமாக என் அளவில் நிறைவேற்ற இயலாத 
நிலை அப்போது.

உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பைத் தர காரணம், 
ஒரிஸ்ஸாவில் இருந்த ஒரு 
நாட்டுட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் கிளை 
மேலாளர் ஒருவரின் செயல்பாட்டை அவரது 
வங்கி அங்கீகரிக்காததால் ஏற்பட்ட சிக்கல்தான். 
  
அந்த வங்கியின் கிளையில், அதன் மேலாளர் 
ஒரு வாடிக்கையாளருக்கு கொடுத்திருந்த 
தற்காலிக மிகைப்பற்று (Temporary Overdraft), 
அந்த வாடிக்கையாளர் குறித்த நேரத்தில் 
திருப்பி செலுத்தாததால் வாராக்கடனாக 
(Non Performing Asset) ஆகிவிட்டது. 

அவர் கொடுத்த பணத்தை வசூலிக்காத 
காரணத்தால், அந்த கிளை மேலாளர் மேல் 
அந்த வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 
அவரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டது. 

அவர் உயர் நீதி மன்றத்தில் முறையீடு 
செய்தபோது அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, 
அவரை திரும்பவும் பணியில் அமர்த்த நீதிமன்றம் 
உத்தரவிட்டது. 

ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து அந்த வங்கி 
உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 
வங்கியின் முறையீட்டை ஏற்று, உயர்நீதி மன்ற 
தீர்ப்பை இரத்து செய்தது உச்ச நீதி மன்றம். 
மேலும் வங்கி மேலாளர், ஒப்பளிக்கத் தகுதிபெற்ற 
அலுவலரிடம்  (Sanctioning Authority) அனுமதி 
பெறாமல் அந்த வசதியை தந்ததால், அவர் 
ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்றும், 
அதனால் முறைப்படி நடத்தப்பட்ட 
விசாரணையின் அடிப்படையில் அவரது தகுதி நீக்கம் 
செய்தது சரியே என தீர்ப்பைத்  தந்தது.

இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்லவேண்டியது 
அவசியம் என நினைக்கிறேன். வங்கிகளில் கிளை 
மேலாளர் முதல் வங்கியின் இயக்குனர்குழு 
(Board of Directors) வரை, கடன் மற்றும் மிகைப்பற்று 
வசதிகளை ஒப்பளிப்பு (Sanction) செய்ய, ஒவ்வொரு 
நிலையிலும்  ஒரு குறிப்பிட்ட வரம்பு உண்டு.

எனவே கிளைகளில் உள்ள எல்லா கடன் மற்றும் 
மிகைப்பற்று வசதிகளையும் கிளை மேலாளரே 
ஒப்பளிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் சில 
நேரங்களில் கிளை மேலாளர் ஒப்பளிப்பு செய்யாத 
கணக்குகளில் நான் முன்பு சொன்னதுபோல 
காசோலை பரிமாற்ற அலுவலகம் (Clearing House)  
மூலம் வரும் காசோலைகளை வாடிக்கையாளர் 
கேட்டுக்கொள்வதின் காரணமாக  Pass 
செய்யவேண்டி இருந்தால், அந்த கணக்கில் 
அனுமதிக்கப்பட்ட வரம்பை சில நேரங்களில் 
மீற நேரிடலாம். 

ஆனால் அந்த கணக்கை குறிப்பிட்ட 
காலத்துக்குள் (அதாவது 7 நாட்களுக்குள் - இது 
வங்கிக்கு வங்கி மாறுபடலாம்) நேர் செய்ததும், 
அந்த வசதியை ஒப்பளிப்பு செய்த அலுவலரின் 
ஏற்புக்கு (Approval) எழுதி,  அதைப் 
பெறுவது நடைமுறை.

ஆனால் ஒரிஸ்ஸா நிகழ்வில் என்ன நடந்தது 
என்று தெரியவில்லை. என்ன காரணத்தாலோ 
அந்த மேலாளரின் செயல் ஆமோதிக்கப்படவில்லை. 
அதனால்தான் அவர் மேல் நடவடிக்கை 
எடுக்கப்பட்டது. ஆனால் உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் 
பிறகு வங்கிக் கிளைகளில் யாருமே அது போன்ற   
தற்காலிக வசதியை வாடிக்கையாளருக்குத் 
தரத் தயங்கினார்கள். 

உங்களில் சிலர் நினைக்கலாம். ஏன் 
மேலதிகாரிகளுக்கு எழுதி ஒப்புதல் பெற்று 
தரலாமே என்று. காசோலை பரிமாற்றம் மூலம் 
மதியம் 12 அல்லது 1 மணிக்கு வரும் 
காசோலைகளை அதே நாளில் மதியம் 2 அல்லது 
3 மணிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் 
இல்லாவிடில் திருப்பி அனுப்பிவிடவேண்டும். 
இல்லாவிடில் அவைகள் Pass செய்ததாக 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

வாடிக்கையாளர்கள் கணக்கில் தேவையான பணம் 
இல்லாவிடில் மேல் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட 
வரம்பை மீற, அவர்களது அனுமதியை அந்த 
இரண்டு மணி நேரத்திற்குள் பெற்றால்தான் 
அதை செய்யமுடியும்.

அப்போதிருந்த சூழ்நிலையில் தொலைபேசியில் 
தொடர்புகொண்டாலும், எழுத்து மூலம் 
பரிந்துரையை அனுப்பவேண்டும்.(ஏனெனில் 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு யாரும் 
எழுத்து மூலம் அனுமதிபெறாமல் அந்த வசதி
தருவதை நிறுத்திவிட்டனர்.) 

அப்படியே தொலையச்சு (Telex) மூலம் 
பரிந்துரையை அனுப்பினாலும், அந்த மேலதிகாரி 
அந்த நேரத்தில் அவர் பணி நிமித்தம் காரணமாக   
வெளியூர் செல்லாமல் ஊரில் இருக்கவேண்டும். 
அப்படியே அனுப்பினாலும், அதற்கான 
அலுவலக குறிப்பை (Office Note) கீழ்மட்டத்தில் 
உள்ள அலுவலர்கள் எழுதி அவர் முன் வைத்து 
அனுமதி பெற்று, அந்த அனுமதியை 
தருவதற்குள் Clearing House நேரம் முடிந்துவிடும்.

எனவே யாரும் அதை முயற்சி செய்வதில்லை. 
அப்படி காசோலைகள் வந்து வாடிக்கையாளர்களின் 
கணக்கில் போதிய பணம் இல்லையென்றால், 
வங்கி மேலாளர்கள் அவற்றை திருப்பி 
அனுப்பிக்கொண்டு இருந்தனர். 

இதனால் வணிகர்களுக்கும் தொழில் 
நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்கள் 
எண்ணிலடங்கா. அதை சரி செய்ய அவர்கள் தங்கள் 
சங்கங்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தை அணுகி 
ஆவன செய்ய அரசிற்கு விண்ணப்பித்துக்கொண்டு 
இருந்த காலம் அது. 

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த வாடிக்கையாளர் 
என்னை அணுகி தாங்கள் கொடுத்துள்ள காசோலை 
அன்றைய Clearing மூலம் வரும் என்றும் அந்த 
காசோலையை அவர்களது கணக்கில் பற்று (Debit) 
 வைத்தால் அவர்களது கணக்கில் உள்ள தொகை 
அனுமதிக்கப்பட்ட வரம்பை விட ரூபாய் 15,000  
அதிகமாகிவிடும் என்றும், எனவே அந்த 
காசோலையை திருப்பாமல் Pass செய்யுமாறும்  
அந்தக் தொகையை மறு நாள் கட்டிவிடுவதாகவும் 
சொன்னார்.

அப்போது மணி 11 இருக்கும். அந்த 
வாடிக்கையாளர் முன்பாகவே திருவனந்தபுரத்தில் 
இருந்த எனது துணைப் பொது மேலாளரை தொடர்பு 
கொண்டேன்.

தொலைபேசியை எடுத்த எனது Boss, விவரத்தைக் 
கேட்டுவிட்டு அந்த காசோலை Clearing ல் வந்தபிறகு, 
எழுத்து மூலம் பரிந்துரையை அனுப்புங்கள். என்று  
 சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். 
(அந்த  தீர்ப்புக்குப் பின் எல்லோருமே அதிக கவனமாக 
இருக்க தொடங்கிவிட்டனர்.) 

அந்த வாடிக்கையாளரிடம் எனது Boss சொன்னதை 
சொன்னதும் அவர் இன்னும் ஒருமணி நேரம் தானே. 
நான் இங்கேயே இருந்து நீங்கள் அனுமதி பெற்று  
Pass செய்ததும் போகிறேன். என்று என் முன்னேயே 
அமர்ந்துவிட்டார்.

எனக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. 
அந்த காசோலை வந்து பரிந்துரையை அனுப்பி, 
குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதியை பெறமுடியுமா 
என்ற கவலையில் அமர்ந்து, Clearing House சென்ற   
எங்கள் வங்கி ஊழியரின் வருகைக்குக் காத்திருந்தேன்.


தொடரும்