வியாழன், 21 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 38




மறு நாள் காலை பேராசிரியை சொல்லியிருந்த ஊருக்கு செல்ல தயாரானேன். அப்போது எனக்கு அலுவலக உபயோகத்திற்கு ஸ்கூட்டர் தான் கொடுத்கிருந்தார்கள்.

வைப்புத்தொகை  சுமார் 10 இலட்சம் இருக்கலாம் என்று அந்த பேராசிரியை சொல்லியிருந்ததால், அதை பாதுகாப்பாக கொண்டுவர ஸ்கூட்டரில் சென்று எடுத்துவருவதை விட காரில் சென்றால் பாதுகாப்பாக கொண்டு வரலாம் என்று வாடகைக் காரை ஏற்பாடு செய்தேன்.

அவ்வளவு பெரிய தொகையை ரொக்கமாக பெற, இப்போது உள்ளது போல் அப்போது எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. மேலும் KYC (Know your Customer) விதிகளும் இல்லை.

வங்கியை விட்டு கிளம்பு முன் காசாளரை அழைத்து, நான் வர மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகலாம். நான் வரும் வரை கணைக்கை முடித்துவிடாதீர்கள். கொண்டுவரும் பணத்தை இன்றைய கணக்கில் சேர்க்கவேண்டும்.’என சொல்லிவிட்டு தேவையான வைப்புத்தொகை விண்ணப்ப படிவங்களோடு, உதவிக்கு தொழில் துறை கடன்களை கவனிக்கும் தொழில் வளர்ச்சி உதவி மேலாளரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.   

அந்த பேராசிரியை சொன்ன ஊரை அடைந்தும் கவனித்தேன் அது ஒரு மிகவும் சிறிய ஊரென்பதை. இங்கு அவ்வளவு பெரிய தொகையை காலவரை வைப்புத் தொகையாக (Fixed Deposit) வைப்பவர்கள் இருப்பார்களா?’  என கூட வந்த அலுவலர் சந்தேகப்பட்டபோது. தோற்றத்தை வைத்து எடை போடவேண்டாம். யார் கண்டது? இங்குள்ளவர்கள் எளிமையாய் வாழ்பவர்களாக இருக்கலாம். என சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு சிறிய சர்ச் அருகே சென்று அந்த பேராசிரியை பெயரை சொல்லி அவர் இருப்பிடம் எங்கிருக்கிறது என விசாரித்தேன்.

அங்கிருந்த ஒருவர், கிராமத்துக்கே உரிய பாணியில் நாங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறோம்? என்றெல்லாம் விசாரித்தார். நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என சொல்லாமல், அவரை பார்க்கவேண்டும். என்று மட்டும் சொன்னேன். அவர் எங்களை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சிறிது தொலைவில் இருந்த ஒரு சிறிய குன்று அருகே இருந்த ஒரு குடிசை வீட்டைக் காட்டி அங்கு போய் கேளுங்கள். என்றார்.

எங்களுக்கு சந்தேகம். நாம் எதற்காக வந்திருக்கிறோம் என சொல்லாததால் ஒருவேளை அவர் தவறான இடத்தைக் காண்பிக்கிறாரோ என நினைத்தோம். சரி எதற்கும் அங்கு போய் விசாரிப்போம்  என நினைத்துக்கொண்டு அவர் காண்பித்த இடத்திற்கு சென்றோம். அங்குள்ள குடிசைக்கு அருகில் சென்றதும் எங்களது காரின் சப்தத்தைக் கேட்டு குடிசையின் உள்ளிருந்து வயதான பெரியவர் வெளியே வந்தார்.

எங்களைப் பார்த்து, என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்குள் அவரது மனைவியும் வெளியே வந்தார். நான் அந்த பேராசிரியரின் பெயரை சொல்லி “அவரது வீடு எது என சொல்லமுடியுமா?’ எனக் கேட்டேன். அந்த குடிசை அவர் தங்கியிருக்கும் வீடாக இருக்கமுடியாது என்ற எண்ணத்தில்.

அதற்கு மிகவும் அமைதியாக இருவரும் ஒரே குரலில், இங்குதான் தங்கியுள்ளார். இப்போது வெளியே சென்றிருக்கிறார். எதற்காக அவரை பார்க்க விரும்புகிறீர்கள்?’ என்றனர்.

எங்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். அந்த பேராசிரியர் அவரும் அவரது கணவரும் நல்ல வேலையில் இருக்கும்போது ஏன் குடிசையில் தங்கவேண்டும் என்ற குழப்பத்தோடு, அவர்களிடம் நாங்கள் வங்கியிலிருந்து வருவதாகவும் அவர் வங்கிக்கு வைப்புத்தொகைகள் வாங்கி தருவதாகவும் சொன்னதால் வந்திருப்பதாக கூறிவிட்டு, அவர் அந்த வீட்டில் தான் இருக்கிறாரா? என சந்தேகத்தோடு கேட்டோம்.

அதற்கு அந்த பெரியவர், ஆமாம். அவர் இந்த வீட்டில் தான் வசிக்கிறார். அவர் சொன்னதை நம்பி நீங்கள் வந்துவிட்டீர்களா?’ எனக் கேட்டதும், என்ன இப்படி சொல்கிறாரே என நினைத்துக்கொண்டு, அவர் தான் இன்று காலை வந்தால் வங்கிக்கு வைப்புத்தொகைகள் வாங்கி தருவதாக சொன்னார். அதனால்தான் வந்தோம். ஏன்.வந்தது தவறுங்களா?’ என்று கேட்டேன்.

உடனே அவர் அந்த கதையை ஏன் கேட்கிறீர்கள். இது அவருடைய வீடு அல்ல. அவருக்கு மன நிலை சரி இல்லாததால் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து வெளி நாடு போய்விட்டார். அவர் வேலை பார்த்த கல்லூரியிலும் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

அவரது ஊர் எது எனத்தெரியவில்லை. ஒரு நாள் இந்த  ஊருக்கு வந்து தங்கிவிட்டார். நாங்கள் பரிதாபப்பட்டு எங்களோடு தங்க வைத்திருக்கிறோம். தினம் காலையில் வெளியே செல்வார். மாலை ஆனதும் வீட்டுக்கு வந்துவிடுவார். எங்கு போகிறார் என எங்களுக்குத் தெரியாது. ஆனால் இவரால் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை.

யாரிடமும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளமாட்டார். இவர் சாதாரணமாக நாம் பேசுவது போல் பேசுவதாலும், நடந்துகொள்வதாலும் பார்ப்பவர்களுக்கு இவர் மன நிலை சரி இல்லாதவர் எனத் தெரியாது.

ஆனால் பாவம். இவர்தான்  தன் கணவர் வந்து தன்னை அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இன்னும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். எங்களுக்கும் யாரும் இல்லாததால் இவரை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். ஏனோ தெரியவில்லை அவர் உங்களிடம் வந்து இங்கு வந்தால் வங்கியில் பணம் போட உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்.  பாவம். நீங்களும் அவர் சொன்னதை  நிஜம் என நம்பி வீணே வந்துவிட்டீர்கள். உங்களுக்குத்தான் சிரமம். என்றனர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள், ஒரு நொடி வாயடைத்து பேசாமல் நின்றோம். எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிறகு சமாளித்துக்கொண்டு,’பரவாயில்லீங்க. நாங்கள் வருகிறோம். என்று சொல்லிவிட்டு, நம் வங்கியை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?  நம்மை  ஏன் அலைக்கழித்தார்? என்ற விடை தெரியா கேள்விகளுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

அவர் நிலையை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது எங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை நினைத்து வருத்தப்படுவதா எனத் தெரியாமல், திரும்பி வரும்போது, நாமும் இப்படி தீர விசாரிக்காமல் வந்து விட்டோமே என்று எங்களை நொந்துகொண்டே வந்தோம்.

வங்கி கிளைக்கு வெறுங்கையோடு வந்த எங்களைப் பார்த்ததும், வங்கியில் இருந்த சக ஊழியர்கள் நடந்த விஷயத்தை  பற்றி தெரிந்துகொண்டு  என்னிடம் வந்து, என்ன சார். நீங்கள் விசாரித்துவிட்டு போயிருக்கவேண்டாமா?’ என்று சொல்லி நான் ஏதோ தவறு செய்துவிட்டது போல் துக்கம் விசாரித்தார்கள்.

ஒரு சிலர் சார். நீங்கள் கிளம்பு முன் அந்த கல்லூரியில் அவர் வேலை செய்கிறாரா என சரி பார்த்திருக்கலாமே. அப்படி செய்திருந்தால் இவ்வாறு வீணே சென்று ஏமாற்றத்தொடு வெறுங்கையோடு திரும்பியிருக்கவேண்டாம். என்று சொல்லி என்னை மேலும் வெறுப்பேற்றினார்கள்.  

நான்  அவர்களிடம் சொன்னேன். Trial costs nothing என்பார்கள். ஆனால் அது என் விஷயத்தில் சரியல்ல. அதற்கும் விலை உண்டு என்பதை இன்று தெரிந்துகொண்டேன். நான் செய்ததும் ஒரு முயற்சிதான். அது பலனளிக்காமல் போய்விட்டது.அவ்வளவுதான். என வேடிக்கையாக சொன்னேன்.  

வட்டார அலுவலகத்தின் அனுமதி பெறாமல் வாடகைக் கார் எடுத்து சென்றதால் நிச்சயம் அதற்கான செலவை நானே ஏற்கவேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டே அவ்வாறு சொன்னேன்.

அதற்குப் பிறகு வைப்புக்கள் என்றால் நான் வாயைப் பிளந்ததில்லை!



தொடரும்

சனி, 16 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 37



அப்போது தமிழ் நாட்டில் ஒரு மாவட்டத் தலைநகரில் இருந்த கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் காலை சுமார் 11 மணி இருக்கும் எனது அறைக்கு காலை வணக்கம்! என ஆங்கிலத்தில் கூறிக்கொண்டு ஒரு பெண்மணி வந்தார்.

வந்தவரை அமர சொல்லி என்ன வேண்டும்?’ என விசாரித்தேன். அவர் அந்த ஊரில் இருந்த ஒரு புகழ் பெற்ற மகளிர் கல்லூரியில் தான் ஒரு  ஆங்கிலப் பேராசிரியை என்றும் தனக்கு எங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு இருப்பதாகவும் அதில் உள்ள இருப்புதொகை எவ்வளவு இருக்கிறது என அறிந்து கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னார். மேலும் அவரது சேமிப்புக் கணக்கின் இருப்புக் கையேட்டை (Pass Book) தந்து, அதுவரை உள்ள பற்று வரவு பதிவுகளை பதிந்து தர சொன்னார்.

உடனே அதை சேமிப்புக் கணக்கு பிரிவுக்கு அனுப்பி. பதிவுகளை பதிந்து தர சொன்னேன். அது திரும்பி வந்தபோது அதைப் பார்த்தபோது இருப்பு வெறும் பத்து ரூபாய் எனக் காட்டியது. மேலும் கணக்கு துவங்கிய பிறகு சில மாதங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை (அவரது சம்பள பணம் போலும்) வரவு வைக்கப்பட்டு பின் அவர் அதை எடுத்திருப்பதும், அதற்கு பிறகு எந்தவித வரவும் வைக்கப்படவில்லை என்பதையும் கவனித்தேன்.

அவரிடம் இப்போது உங்கள் சம்பள பணத்தை இங்கு வைப்பதில்லையா? வேறு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஏன் எங்கள் வங்கியின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதில்லை? எங்கள் சேவையில் ஏதேனும் குறை உண்டா என நான் தெரிந்துகொள்ளலாமா?’எனக் கேட்டேன்.

அதற்கு அவர். அதெல்லாம்  ஒன்றுமில்லை. ஒரு தடவை உங்கள் வங்கியில் ஆசிரியர்கள் வாரம் கொண்டாடியபோது உங்கள் அலுவலர்கள் வந்து எங்கள் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து ஆசிரியர்களிடமும் சேமிப்புக் கணக்கு தொடங்க சொன்னார்கள்.

நானும் அப்போதுதான் இந்த கணக்கை ஆரம்பித்தேன். முதலில் சில மாதங்கள் சம்பள பணத்தை இங்குதான் எனது கணக்கில் போட்டு வந்தேன். எங்கள் கல்லூரி இங்கிருந்து சிறிது தூரத்தில் இருப்பதால் கணக்கை இயக்க எனக்கு கஷ்டமாக இருந்தது. எனவே கல்லூரிக்கு அருகில் புதிதாய் திறக்கப்பட்ட  வங்கிக் கிளை ஒன்றில் கணக்கை ஆரம்பித்துவிட்டேன். அதனால் தான் இங்குள்ள எனது கணக்கில் எந்த வித வரவும் இல்லை. மற்றபடி உங்கள் வங்கியின் சேவைபற்றி எந்தவித குறையும் இல்லை. என்றார்.

அப்படியானால்  சரி. சேமிப்பு கணக்கு அங்கேயே இருக்கட்டும். காலவரை வைப்புத் தொகையை (Fixed Deposit) இங்கு வைக்கலாமே?’ என்றேன். அதற்கு அவர் வைப்புத்தொகை வைக்கும் அளவுக்கு என்னிடம் சேமிப்பு இல்லை. ஆனால் உங்கள் வங்கி நல்ல சேவையைத் தந்ததால், என் கணவரிடம் சொல்லி உங்கள் வங்கியில் ஒரு பெருந்தொகையை நீண்டகால வைப்புத்தொகை வைக்க உதவி செய்கிறேன். என்றார்.

எனக்கு பயங்கர சந்தோஷம். நாம் வெளியில் செல்லாமலேயே ஒரு கணிசமான தொகை வைப்புத்தொகையாக வருகிறதே என்று. உடனே அவரிடம். மேடம்! சொல்லுங்கள் எப்போது வந்து உங்கள் கணவரைப் பார்க்க வேண்டுமென்று. இன்றே வரவேண்டும் என்றாலும் வருகிறேன். என்றேன்.

அதற்கு அவர், நீங்கள் அவரைப் பார்க்கவேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்குத் தான் செல்லவேண்டும். அங்குதான்  அவர் பொறியாளராக இருக்கிறார். நான் இன்று தொலைபேசியில் பேசும்போது உங்கள் வங்கியில் NRE/FCNR வைப்புத்தொகைகள் வைக்க சொல்கிறேன். நீங்களும் அவருக்கு கடிதம் எழுதுங்கள். என்றார்.

இன்றே அவருக்கு கடிதம் எழுதுகிறேன். நீங்கள் அவரது முகவரியைக் கொடுங்கள். என்றேன். அவரும் ஒரு தாளில் அவரது முகவரியை எழுதிக்கொடுத்து விட்டு அவரது கணவரிடம் பேசிவிட்டு வந்து பார்ப்பதாக சொல்லி சென்றார்.

அந்த பேராசிரியை சென்ற உடனேயே. அவர் கொடுத்த அவரின் கணவருக்கு  எங்கள் வங்கியின் சேவை பற்றியும் NRE வாடிக்கையாளருக்கு நாங்கள் தரும் வசதிகள் பற்றியும் எழுதி அவரை எங்கள் வங்கியில் ஒரு NRE கணக்கைத் தொடங்க கேட்டுக்கொண்டேன். அத்தோடு கணக்கு ஆரம்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தையும் அன்றே அனுப்பினேன்.

மறுநாள் காலை அந்த பேராசிரியை திரும்பவும் வந்தார்.என்ன கடிதம் அனுப்பிவிட்டீர்களா?’ என்று விசாரித்தார். ஆமாம் மேடம். நீங்கள் சென்ற உடனேயே விரிவான கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன். நீங்கள் உங்கள் கணவரிடம் இது பற்றி பேசினீர்களா?’ என்றேன்.

அதற்கு அவர் நேற்றிரவே இது பற்றி பேசிவிட்டேன். அவர் உங்கள் வங்கியில் வைப்புத்தொகை வைக்க சரி என சொல்லிவிட்டார். மேலும் உங்கள் கடிதம் பார்த்து கேட்பு காசோலை அனுப்புவதாக சொல்லியுள்ளார். என்றார்.

அதற்கு நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. என்றதும், அவர்,’பரவாயில்லை. உங்களுக்காக எங்கள் ஊரில் எனது உறவினர்களிடமும் சொல்லியிருக்கிறேன். அவர்களும் உங்கள் வங்கியில் பணத்தை வைக்க தயாராக இருக்கிறார்கள். நீங்கள் நாளை வந்தால் குறைந்தது ரூபாய் 10 இலட்சம் வரை வைப்புத்தொகை கிடைக்கும். என்றார்.

எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நாளையே வருகிறேன். இடத்தை சொல்லுங்கள். என்றேன். அதற்கு அவர் அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஊரின் பெயரைச் சொல்லி, அங்கு உள்ள மாதா கோவில் அருகே வந்து தன் பெயரை சொன்னால் அங்குள்ளவர்கள் தனது வீட்டைக் காண்பிப்பார்கள் என்று சொன்னார்.

நானும்  சந்தோஷத்தோடு மறு நாள் வருவதாக சொன்னேன்.



 தொடரும்