சனி, 10 ஆகஸ்ட், 2013

தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி?





 முதல் பதிவின் சந்தோசம்- தொடர் பதிவில், நான் பதிவு எழுத காரணமாக, தூண்டுகோலாக, ஏன் கிரியா ஊக்கியாக இருந்த மதிப்பிற்குரிய நண்பர்  
திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு நன்றியை தெரிவித்திருந்தேன்.
 
'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி?' என்று, அன்று கட்டுரை 
எழுதிய  அவர், மேலே குறிப்பிட்டுள்ள பதிவைப் படித்துவிட்டு 'தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது எப்படி? என்னும் தலைப்பில் ஒரு பதிவிடவேண்டும் என்று எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வலைப்பதிவை எவரும் தொடங்கிவிடலாம் ஆனால் அதை தொடர்ந்து நடத்துவது கடினம் என்பதை உணர்த்தவே அந்த தலைப்பில் எழுதச் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். எனவே அது பற்றி  பதிவிடவேண்டும் 
என்ற அவரின் வேண்டுகோளை தட்டமுடியுமா என்ன?

வலைப்பதிவை ஆரம்பிப்பது தற்போது சுலபமே. ஏனெனில் எப்படி ஆரம்பிப்பது 
என்பது பற்றிய தொடர்கள் நிறைய வலைப்பக்கங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.ஆனால் நமது வலைப்பதில் நாம் எழுதுவதை படித்து, அதை 
விமர்சிக்க வாசகர்கள் வேண்டுமல்லவா?

நமது வலைப்பதிவில் நாம் வெளியிடுகின்ற படைப்புகள் சுவாரஸ்யமாக இல்லாவிட்டால், அது படிப்பவர்களை ஈர்க்க வாய்ப்பில்லை.நமது வலைப்பதிவுக்கு வருகையாளர்கள் இல்லையென்றால், பதிவில் எழுதி நமது நேரத்தை வீணடிப்பது ஆளில்லா தேநீர் கடையில் தேநீர் ஆற்றுவதைப் போலத்தான்!
 
ஆனால் நான் பதிவை ஆரம்பித்து  எழுத விரும்பியது எனது ஆத்ம திருப்திக்கு 
என்று பொய் சொல்ல விரும்பவில்லை. பணியில் சுறுசுறுப்பாக இருந்தது போல,எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற சுய நலம் காரணமாக  
 எழுத நினைத்தேன். மற்றபடி புகழ்பெற அல்லது பாராட்டு பெற அல்ல.

மேலும் பதிவுலகில் நமது எண்ணங்களை மற்றும் அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வோமே என்ற எண்ணமும் இன்னொரு காரணம்.    

ஆனாலும் எல்லோரையும்போல எனது வலைப்பதிவிற்கும் நிறைய 
வருகையாளர்கள் வரவேண்டும் என ஆசைப்பட்டது உண்மைதான். 
அப்போதுதானே எனது கருத்துக்கள்/படைப்புக்கள் மற்றவர்களைப் 
போய் சேரமுடியும்.

நான் பதிவில் எழுத ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன என்பதையும், விளையாட்டு போல இதுவரை நான் 295 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதும், மாநில மற்றும் மைய அரசுகளின் பணியில் இருந்தபோதும் இருந்த என் நண்பர்களின் வட்டம், இந்த பதிவைத் தொடங்கியதும் இன்னும் விரிவடைந்துள்ளது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது வலைப்பதிவில், எனது பள்ளிப்பருவம் முதல் பணி மூப்பு வரை நான் பெற்ற அனுபவங்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அப்படி எழுதும்போது அது சுயபுராணத்தை சொல்வதுபோல் இருக்கக்கூடாது என்பதால்  
இடையிடையே  பணியில் ஏற்பட்ட நிகழ்வுகள், அவைகளை நான் 
எதிர்கொண்ட விதம், எனக்குப்பிடித்த கவிதைகள், நான் வரைந்த ஓவியங்கள், அறிவியல் செய்திகள் மற்றும் என்னை பாதித்த நிகழ்கால நிகழ்வுகள், 
என பல்வேறு தலைப்பில் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாத வகையில் 
எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதாவது அப்படி எழுதுவதாக 
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்!

ஒன்றை மட்டும் எழுதும்போது நினைவில் கொள்வேன். நான் எழுதுவது 
பதிவுலகில் பிறரை புண்படுத்த அல்ல என்பதுதான் அது.

நான் பதிவில் எழுதுவதை முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்கிறேன். 
நினைவில் உள்ளவைகளை சிறு சிறு குறிப்புகளாக வெவ்வேறு தலைப்புகளில் 
எனது கணினியில் சேமித்து வைக்கொள்கிறேன்.பதிவு எழுதவேண்டுமே 
என்பதற்காக நான் அவசர அவசரமாக எதையும் எழுதுவதில்லை.

உதாரணமாக வங்கி வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி 
எழுது முன் நான் பணி புரிந்த ஊர்களின் பெயர்களையும், அங்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு வரியில் எழுதி வைத்துவிடுவேன். பின்பு எழுதும்போது 
அந்த குறிப்பைப் பார்த்து விரிவாக எழுதுவது வழக்கம். 

மேலும் ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதினால் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டும் என்பதால் இடையிடையே வேறு தலைப்புகளில் எனது அனுபவங்களை 
எழுதுகிறேன். மேலும் மற்ற பதிவர்கள் பாணியில் எழுதாமல் எனது பாணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

‘வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த நான் எந்த யுக்தியையும் 
கையாள்வதில்லை.ஆனால் எனது பதிவில் எழுத ஒரு சில கட்டுப்பாடுகளை 
எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். அவைகள் கீழே.


  1. எனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு பதிவிடுவது.
  2. எனது பதிவில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் இருப்பது.
  3. எனது பதிவில் தனி நபர் துதி பாடலை தவிர்ப்பது.
  4. கருத்து சுதந்திரம் உள்ளது என்று சொல்லி, பிறரது மனதை புண்படுத்தாமல் இருப்பது.   
  5. அரசியல், நமது வாழ்வின் ஒரு அங்கம் என்றாலும், அதை கூடியவரையில் பதிவில் கலக்காமல் இருப்பது.
  6. மதத்தையோ, சாதியையோ இனத்தையோ மொழியையோ கொச்சைப் படுத்தி பதிவிடுவதில்லை.(அதை இதுவரை பின்பற்றியும் வருகிறேன்.)
  7. எனது பதிவில் தவறு இருந்து யாரேனும் சுட்டிக் காட்டினால், அந்த தவறை ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்வது.
  8. கூடியவரையில் ஆங்கிலம் கலக்காமல் பதிவிடுவது. நமது பேச்சு வழக்கில் கலந்துவிட்ட ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொற்களை உபயோகப்படுத்துவது.
  9. பதிவில் பின்னூட்டம் இடும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.
  10. எனக்கு உதவியவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல்வது.
  11. வாரம் ஒருமுறையாவது பதிவிட்டு களத்தில் இருப்பது.  

தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த, மேலே குறிப்பிட்ட வழிமுறைகளால் தான் முடியும் என நான் இங்கு சொல்ல வரவில்லை. இது 
எனக்காக நான் ஏற்படுத்திக்கொண்டு, பின்பற்றிவரும் விதிமுறைகள்.
இதனால்தான் என்னால் தொடர்ந்து வலைப்பதிவில் இருக்க முடிக்கிறது 
என எண்ணுகிறேன்.

இதுவரை எனது பதிவில் நான் எழுதிய கருத்துக்கு எதிர்மறை கருத்தை யாரும் தந்ததில்லை. அப்படியே இனி தந்தாலும், அது சரியாக இருப்பின் ஒத்துக்கொள்வது, இல்லாவிடில் I agree to disagree with you என்ற கொள்கையை கடைப்பிடிப்பது என இருக்கிறேன். 

என்னை இந்த பதிவை எழுதத்தூண்டிய மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

முதல் பதிவின் சந்தோசம்- தொடர் பதிவு






வலையுலகில் முதல் பதிவு வெளியிட்டபோது ஏற்பட்ட சந்தோச தருணங்களையோ அல்லது முதல் ஊக்கமளித்த கருத்துரையையோ அல்லது என்னுடைய பதிவில் எது இதுபோல தொடரவேண்டும் என்று எண்ணவைத்ததோ அது பற்றியோ எழுதவேண்டும் என்று நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னைப் பணித்திருக்கிறார்.  

அவரது வேண்டுகோளுக்கிணங்கி எழுதிய எனது தொடர் பதிவு இதோ.  

பணி நிறைவு பெற்று 2004 ஆகஸ்ட் திங்களில் சென்னைக்கு வந்து தங்கிய பிறகு இணையத்தில் உலாவர நேரம் கிடைத்ததால், அநேக பதிவர்களின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது எனக்கு G mail இல் கணக்கு இல்லாததாலும். தமிழ் எழுத்துரு (Fonts) மூலம் தட்டச்சு செய்யத் தெரியாததாலும். அந்த பதிவுகளுக்கு பின்னூட்டமாக எனது கருத்துக்களை,ஆங்கிலத்திலேயே தந்ததால், முகவரி இல்லாத அனானி (Anonymous)யாகவே கருதப்பட்டேன்.

எனது முதல் பின்னூட்டத்தை வலைப்பதிவில் பார்த்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பெயரில்லா பின்னூட்டம் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

பின்பு தமிழ்மணத்தில் வந்த  வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது
ஒரு பதிவைத்தொடங்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததும் மார்ச் 2008 இல் பிளாகரில் ‘Ninaiththu Parkkiren' என்று தான் வலைப்பதிவை தொடங்கினேன்.

ஆனாலும் ஓராண்டு காலம் எப்படி தமிழில் எழுதுவது, அதை எப்படி பதிவேற்றுவது எனத் தெரியாததால் யாராவது வழி காட்டுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தேன்.  

பின்பு அதிரை வலைப்பதிவில் மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களின் சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? என்ற தொடரைப் படித்ததும், தைரியமாக வலைப்பதிவின் பெயரை  ‘நினைத்துப்பார்க்கிறேன்’  என்று மாற்றி 2009 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 30 ஆம் நாள் சோதனைப்பதிவு-முன்னூட்டம் என்ற எனது முதல் பதிவை வெளியிட்டேன்.

மூன்று பதிவிட்டபின் தான் தமிழ் மணத்தில் இணைக்கமுடியும் என்பதால் உடனே எனது வலைப்பதிவை இணக்கவில்லை. அதனால் எனது வலைப்பதிவை பல பேர், ஏன் யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எனது வலைப்பதில் பதிவிட்டபின், திரு மஸ்தூக்கா அவர்களுக்கு அவரது தொடரைப் படித்து நான் வலைப்பதிவு தொடங்கியது குறித்து நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தேன். அதில் எனது வலைப்பதிவின் முகவரியையும் கொடுத்திருந்தேன்.

எனது பதிவைப் படித்து, எனது வலைப்பதிவின் தலைப்பை வைத்தே அவர் எழுதிய அந்த முதல் பின்னூட்டம் என்னுள் ஒரு உற்சாகத்தையும் அளவற்ற மகிழ்ச்சியையும் தந்தது என்பது உண்மை. அவரது முதல் பாராட்டுதான் என்னை மேன்மேலும் எழுத முடியும் என்ற ஊக்கத்தையும் கொடுத்தது என்பதால், அதை  இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.அவருக்கு திரும்பவும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு மஸ்தூக்கா அவர்களின் பின்னூட்டம் இதோ.
//நானும் 2 ஆண்டுகள் முன்பு வரை வலைப்பதிவு குறித்து ஒன்றும் அறியாமல் இருந்ததை 'நினைத்துப் பார்க்கிறேன்'.
எனது கட்டுரை தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு கூட கிரியா ஊக்கியாக அமைந்ததை 'நினைத்துப்பார்க்கிறேன்'
முதல் பதிவிலேயே நன்றியுடன் எம்மை நன்றி கூர்ந்துள்ள தங்கள் பெருந்தன்மையை 'நினைத்துப்பார்க்கிறேன்'
தங்கள் வலைப்பதிவு மென்மேலும் வளர்ந்து இணைய உலகில் தாங்கள் அடையப்போகும் புகழை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தாங்கள் நினைத்துப்பார்க்கும் தங்கள் மலரும் நினைவுகள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையப்போகும் அற்புதத்தை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தங்கள் பதிவும் பதிவுக்கு தாங்கள் சூட்டியிருக்கும் தலைப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
அன்புடன்
மஸ்தூக்கா// 

பின் பதிவு எழுதத் துவங்கிய புதிதில் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் திரு சென்னைபித்தன் அவர்கள் திரு க.வாசுதேவன்  அவர்கள் 
மற்றும் சிட்னி வாழ் பொறியாளர் திரு N.பக்கிரிசாமி அவர்கள் ஆகியோரது பின்னூட்டங்களும், எனது அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் பின்னூட்டம் இடாவிட்டாலும் அவ்வப்போது எனது பதிவைப் படித்து மின்னஞ்சல்  மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் கொடுத்த ஊக்கமும் எனக்கு உரமாக இருந்தது உண்மை. 


இந்த ஆண்டு மார்ச் 4 ஆம் நாள் முதல் மார்ச் 10 ஆம் நாள் வரை என்னை வலைச்சரம் ஆசிரியாக இருக்கப் பணித்த திரு சீனா அவர்களுக்கு நான் அவசியம் நன்றி சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால் அவர் தந்த அந்த பணியை செம்மையாய் செய்ய நான் அதிகம் உழைக்கவேண்டியிருந்தது.

அவர் அந்த பணியைத் தந்திராதிருந்தால் எனக்கு பல புதிய அறிய தகவல்கள் கிட்டியிருக்காது.மேலும் பல பதிவர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருக்காது. 

அனேகம் பேர் எனது பணியை பாராட்டியிருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே தர இயலாது என்பதால் இருவர் தந்த கருத்துக்களை மட்டும் இங்கே தருகிறேன். 

சிரித்துவாழவேண்டும் என்று விடைபெறும் நாளான  ஏழாம் நாள் வலைச்சரத்தில் நான் தந்த பதிவுக்கு திருமதி சசிகலா அவர்கள் தந்த பின்னூட்டம் எனது வலைச்சர ஆசிரியர் பணிக்குத் தந்த பாராட்டு சான்றிதழாகவே எண்ணுகிறேன்.  அது கீழே. 

//தகுந்த பாடலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த தங்கள் ஒரு வார ஆசிரியர் பணி சிறப்பு மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்தாலும் மகிழ்வோம். நன்றிங்க.//

"இந்த ஏழு நாட்களில் மக்கள் அறியவேண்டிய அரிய செய்திகளை எடுத்துச் சொன்னதற்கு தமிழ் உலகம் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்லவேண்டும்.’’ என்று சுப்பு தாத்தா என்கிற திரு சூர்யசிவா அவர்கள் என் மேல் உள்ள அன்பால் மிகைப்படுத்தி சொல்லியிருந்தாலும், அவரது பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப் படுத்தியது நிஜம்.

என்னுடைய பதிவில் எது இதுபோல தொடரவேண்டும் என்று நினைக்க வைத்ததென்றால்  40 பதிவுகளாக  எழுதிய Boss கள்பல விதம் என்ற தொடர்தான். அதுதான் என்னை பல பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பேன். 

கடைசியாக இந்த தொடர் பதிவை எழுதச் சொன்ன நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! அவர் சொன்னது போல் இந்த தொடரைத் தொடர ஆறு அன்பர்களை அழைக்க நினைத்தேன்.

ஆனால் இளைஞர்களுக்காக ஒரு வலைப் பதிவை நடத்தும் இளைஞர் திரு குட்டன், ஆறு பேரென்ன நூறு பேருக்கு சமம் என்பதால் அவரையே இந்த தொடர் பதிவை தொடர அழைக்கிறேன்!