முதல் பதிவின் சந்தோசம்- தொடர் பதிவில், நான் பதிவு எழுத காரணமாக, தூண்டுகோலாக, ஏன் கிரியா ஊக்கியாக இருந்த மதிப்பிற்குரிய நண்பர்
திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு நன்றியை
தெரிவித்திருந்தேன்.
'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி?' என்று, அன்று கட்டுரை
எழுதிய அவர், மேலே குறிப்பிட்டுள்ள பதிவைப் படித்துவிட்டு 'தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து
நடத்துவது எப்படி? என்னும் தலைப்பில் ஒரு பதிவிடவேண்டும் என்று எனக்கு வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்.
வலைப்பதிவை எவரும் தொடங்கிவிடலாம் ஆனால் அதை தொடர்ந்து
நடத்துவது கடினம் என்பதை உணர்த்தவே அந்த தலைப்பில் எழுதச் சொல்லியிருக்கிறார் என
நினைக்கிறேன். எனவே அது பற்றி பதிவிடவேண்டும்
என்ற அவரின் வேண்டுகோளை
தட்டமுடியுமா என்ன?
வலைப்பதிவை ஆரம்பிப்பது தற்போது சுலபமே. ஏனெனில் எப்படி
ஆரம்பிப்பது
என்பது பற்றிய தொடர்கள் நிறைய வலைப்பக்கங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.ஆனால்
நமது வலைப்பதில் நாம் எழுதுவதை படித்து, அதை
விமர்சிக்க வாசகர்கள் வேண்டுமல்லவா?
நமது வலைப்பதிவில் நாம் வெளியிடுகின்ற படைப்புகள் சுவாரஸ்யமாக
இல்லாவிட்டால், அது படிப்பவர்களை ஈர்க்க வாய்ப்பில்லை.நமது வலைப்பதிவுக்கு வருகையாளர்கள்
இல்லையென்றால், பதிவில் எழுதி நமது நேரத்தை வீணடிப்பது ஆளில்லா
தேநீர் கடையில் தேநீர் ஆற்றுவதைப் போலத்தான்!
ஆனால் நான் பதிவை ஆரம்பித்து எழுத விரும்பியது எனது ஆத்ம திருப்திக்கு
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை. பணியில் சுறுசுறுப்பாக இருந்தது போல,எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற சுய
நலம் காரணமாக
எழுத நினைத்தேன். மற்றபடி
புகழ்பெற அல்லது பாராட்டு பெற அல்ல.
மேலும் பதிவுலகில்
நமது எண்ணங்களை மற்றும் அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வோமே என்ற எண்ணமும் இன்னொரு
காரணம்.
ஆனாலும் எல்லோரையும்போல எனது வலைப்பதிவிற்கும் நிறைய
வருகையாளர்கள்
வரவேண்டும் என ஆசைப்பட்டது உண்மைதான்.
அப்போதுதானே எனது கருத்துக்கள்/படைப்புக்கள் மற்றவர்களைப்
போய் சேரமுடியும்.
நான் பதிவில்
எழுத ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன என்பதையும், விளையாட்டு போல
இதுவரை நான் 295 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்பதையும் நினைத்துப்
பார்க்கும்போது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதும், மாநில மற்றும் மைய
அரசுகளின் பணியில் இருந்தபோதும் இருந்த என் நண்பர்களின் வட்டம், இந்த பதிவைத் தொடங்கியதும் இன்னும் விரிவடைந்துள்ளது என்பதை அறியும்போது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனது
வலைப்பதிவில், எனது பள்ளிப்பருவம் முதல் பணி மூப்பு வரை நான் பெற்ற அனுபவங்களை எழுதிக்கொண்டு
இருக்கிறேன். அப்படி எழுதும்போது அது சுயபுராணத்தை சொல்வதுபோல் இருக்கக்கூடாது என்பதால்
இடையிடையே பணியில் ஏற்பட்ட நிகழ்வுகள், அவைகளை நான்
எதிர்கொண்ட விதம், எனக்குப்பிடித்த கவிதைகள், நான் வரைந்த ஓவியங்கள், அறிவியல்
செய்திகள் மற்றும் என்னை பாதித்த நிகழ்கால
நிகழ்வுகள்,
என பல்வேறு
தலைப்பில் படிப்பவர்களுக்கு
அலுப்பு தட்டாத வகையில்
எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதாவது அப்படி எழுதுவதாக
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்!
ஒன்றை மட்டும் எழுதும்போது நினைவில் கொள்வேன். நான் எழுதுவது
பதிவுலகில் பிறரை புண்படுத்த அல்ல என்பதுதான் அது.
நான் பதிவில் எழுதுவதை முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்கிறேன்.
நினைவில் உள்ளவைகளை சிறு சிறு குறிப்புகளாக வெவ்வேறு தலைப்புகளில்
எனது கணினியில் சேமித்து
வைக்கொள்கிறேன்.பதிவு எழுதவேண்டுமே
என்பதற்காக நான் அவசர அவசரமாக எதையும் எழுதுவதில்லை.
உதாரணமாக வங்கி வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி
எழுது
முன் நான் பணி புரிந்த ஊர்களின் பெயர்களையும், அங்கு ஏற்பட்ட அனுபவத்தை
ஒரு வரியில் எழுதி வைத்துவிடுவேன். பின்பு எழுதும்போது
அந்த குறிப்பைப் பார்த்து விரிவாக
எழுதுவது வழக்கம்.
மேலும் ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதினால் படிப்பவர்களுக்கு
அலுப்பு தட்டும் என்பதால் இடையிடையே வேறு தலைப்புகளில் எனது அனுபவங்களை
எழுதுகிறேன்.
மேலும் மற்ற பதிவர்கள் பாணியில் எழுதாமல் எனது பாணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
‘வலைப்பதிவைத்
தொடர்ந்து நடத்த நான் எந்த யுக்தியையும்
கையாள்வதில்லை.ஆனால் எனது பதிவில் எழுத ஒரு சில
கட்டுப்பாடுகளை
எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். அவைகள் கீழே.
- எனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு பதிவிடுவது.
- எனது பதிவில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் இருப்பது.
- எனது பதிவில் தனி நபர் துதி பாடலை தவிர்ப்பது.
- கருத்து சுதந்திரம் உள்ளது என்று சொல்லி, பிறரது மனதை புண்படுத்தாமல் இருப்பது.
- அரசியல், நமது வாழ்வின் ஒரு அங்கம் என்றாலும், அதை கூடியவரையில் பதிவில் கலக்காமல் இருப்பது.
- மதத்தையோ, சாதியையோ இனத்தையோ மொழியையோ கொச்சைப் படுத்தி பதிவிடுவதில்லை.(அதை இதுவரை பின்பற்றியும் வருகிறேன்.)
- எனது பதிவில் தவறு இருந்து யாரேனும் சுட்டிக் காட்டினால், அந்த தவறை ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்வது.
- கூடியவரையில் ஆங்கிலம் கலக்காமல் பதிவிடுவது. நமது பேச்சு வழக்கில் கலந்துவிட்ட ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொற்களை உபயோகப்படுத்துவது.
- பதிவில் பின்னூட்டம் இடும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.
- எனக்கு உதவியவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல்வது.
- வாரம் ஒருமுறையாவது பதிவிட்டு களத்தில் இருப்பது.
தொடங்கிய வலைப்பதிவைத் தொடர்ந்து
நடத்த,
மேலே குறிப்பிட்ட வழிமுறைகளால் தான் முடியும் என நான் இங்கு சொல்ல வரவில்லை. இது
எனக்காக
நான் ஏற்படுத்திக்கொண்டு, பின்பற்றிவரும் விதிமுறைகள்.
இதனால்தான்
என்னால் தொடர்ந்து வலைப்பதிவில் இருக்க முடிக்கிறது
என எண்ணுகிறேன்.
இதுவரை எனது பதிவில் நான் எழுதிய கருத்துக்கு எதிர்மறை கருத்தை
யாரும் தந்ததில்லை. அப்படியே இனி தந்தாலும், அது சரியாக இருப்பின் ஒத்துக்கொள்வது, இல்லாவிடில் I agree to disagree with you என்ற கொள்கையை கடைப்பிடிப்பது என இருக்கிறேன்.
என்னை இந்த பதிவை எழுதத்தூண்டிய மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல்
சலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!