திங்கள், 23 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 10



அதுவரை சாப்பாட்டைப் பற்றியே நினைக்காமல் இயற்கை அழகை 
இரசித்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்த நாங்கள். 
காஃபி போர்டின் அரங்கத்தை அடைந்தவுடன்தான் வயிறென்ற ஒன்று 
இருப்பதும், சாப்பிடவேண்டும் என்பதும் நினைவுக்கு வந்தன.

காலையில் எங்களுக்கு தேநீர் தந்த நிறுவனமான Ruchi  
உணவகத்திடமே  மதிய உணவையும் தயார் செய்து அந்த அரங்கத்திற்கு 
கொண்டு வர நண்பர் பழனியப்பனும் வெங்கடராமணனும் ஏற்பாடு
செய்திருந்தார்கள். 

குறித்த நேரத்தில் மதிய உணவை அங்கு கொண்டு வருவதற்காக 
எங்கள் வகுப்பு நண்பர் D.கோவிந்தராஜன் எங்களோடு சுற்றுலாத் 
தலங்களைப் பார்க்க வராமல் அந்த உணவகத்திலேயே தங்கி அவர்கள் 
உணவைத் தயார்செய்து மதியம் நாங்கள் அந்த அரங்கத்திற்கு வருமுன்பே 
அது வந்து சேருமாறு பார்த்துக்கொண்டார். 

அரங்கம் சிறியதாக இருந்ததால் அனைவரும் உட்கார்ந்து 
சாப்பிடமுடியாது என்பதால் எடுத்தூண் (Buffet) முறையில் 
சாப்பிடுவதற்காக உணவு வகைகள் அங்கிருந்த மேசைகள் மேல் 
வைக்கப்பட்டிருந்தன. வெஜிட்டபிள் பிரியாணியுடன் மதிய விருந்து 
தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.

அசைவம் உண்போருக்கும் அசைவ உணவும் இருந்தது.அனைவரும் 
தட்டுகளில் அவரவர் விரும்பியதை எடுத்துக்கொண்டு கூடிப்பேசியபடி  
நின்றுகொண்டே இரசித்து உணவை சாப்பிட்டு முடித்தோம்.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவே மணி 3 ஆகிவிட்டது. மாலை   
திரும்பவும்  4.30 மணிக்கு அதே அரங்கத்திற்கு திரும்பவும் 
வரவேண்டும் என்பதால் எங்கள் பயண திட்டத்தின் படி எல்லா 
இடங்களையும் பார்க்க முடியாது எனத் தெரிந்துவிட்டது. அதனால் 
ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யவும் அண்ணா பூங்காவிற்கு 
செல்ல மட்டுமே முடிவு செய்தோம்.

நாங்கள் பார்க்க நினைத்த Pagoda Point சென்று வர நேரமில்லை. 
ஏற்காடு ஏரியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர்  தொலைவில் 
இருக்கும் இந்த இடத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். இதை 
பக்கோடா முனை என்று சொல்வார்கள். பக்கோடாவிற்கும் இதற்கும் 
சம்பந்தம் இல்லையென்றாலும் தமிழில் Pagodaவை 
சொல்லும்போது அது பக்கோடா ஆகிவிட்டது!

இதை அங்குள்ள மலைவாழ் மக்கள் கருங்கற்களை வைத்து பிரமிட் 
போல் கட்டியதாக சொல்கிறார்கள். இது ஏதோ ஒரு நிகழ்வுக்காக 
கட்டியிருக்கவேண்டும். இங்கிருந்து பார்த்தால் வடக்கே தர்மபுரி 
மாவட்டத்தில் உள்ள ஹரூருக்கு(Harur) செல்லும் பாதையும் 
கிழக்கே ஆத்தூர் செல்லும் சாலையையும் பார்க்கலாம். வானம் மேக 
மூட்டமில்லாமலிருந்தால் அயோதத்தியா பட்டணத்தையும் 
பார்க்கலாம்.

இப்போது அதன் அருகே ஒரு இராமர் கோவிலும் 
கட்டியிருக்கிறார்களாம். இந்த இடத்தை எங்களால் பார்க்கமுடியாமல் 
போனது நேரமின்மையால் தான்.

Pagoda Point இன் படம் கீழே (கூகிளார்க்கு நன்றி.)




அடுத்து நாங்கள் பார்க்கத் தவறியது ஏற்காடு ஏரியிலிருந்து 
3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த  கிளியூர் நீர்வீழ்ச்சி! தமிழில் 
சரியாக சொல்லவேண்டுமென்றால் இதை கிளியூர் அருவி என்றே 
சொல்லவேண்டும். 

ஆனால் நாம் எல்லோரும் Water Falls என்பதை நேரடியாக மொழிபெயர்த்து 
நீர்வீழ்ச்சி என்று தவறாக சொல்வதால்,அரசின் தகவல் பலகையில் கூட 
அது கிளியூர் நீர்வீழ்ச்சி என்றே எழுதப்பட்டிருக்கிறது. 



ஏற்காடு செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய அருவி. ஏற்காடு 
ஏரியிலிருந்தும் சேர்வராயன் மலையின் மற்ற பகுதியிலிருந்தும் வரும் 
உபரி நீர் கிளியூர் பள்ளத்தாக்கில் 300 அடி உயரத்திலிருந்து விழுவதால் 
ஏற்படும் அருவி இது.  

இங்கு  குறைந்தது இரண்டு  நாட்களாவது தங்கினால்தான்   
இவைகளையெல்லாம் பார்க்க முடியும். நாங்கள் பார்க்காததை   
நீங்களாவது பாருங்களேன் கூகிளார் உதவியால்.





அண்ணா பூங்காவும் ஏற்காடு ஏரியும் அருகே இருந்ததால் நாங்கள் 
அனைவரும் நடந்தே அருகில் உள்ள அண்ணா பூங்காவை 
அடைந்தோம். எங்களில் சிலர் மட்டும் ஏரியில் படகு சவாரி செய்துவிட்டு   
பின் பூங்காவிற்கு வருவதாக  சொல்லிச் சென்றனர். நானும் 
என் துணைவியாரும் முன்பே படகு சவாரி செய்திருந்ததால் பூங்காவிற்கு சென்றுவிட்டு பின்பு வெளியே வரும்போது ஏற்காடு ஏரியை படம் 
எடுக்கலாம் என எண்ணி நேரே மற்ற நண்பர்களோடு பூங்காவினுள் 
நுழைந்தோம். 


தொடரும்

வியாழன், 19 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 9



Lady’s Seat க்கு அருகில் இருந்த Gent’s Seat மற்றும் Children’s Seat பார்க்கலாம் 
என எண்ணியபோது அவையும் Lady’s Seat  போன்ற இடங்கள் தான் என்பதால் நேரமின்மை காரணத்தால் அவைகளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு அருகில் 
இருந்த அரசினர் ரோஜா தோட்டத்திற்கு சென்றோம்.



இந்த தோட்டம் அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ளது. நாங்கள் 
சென்ற சமயம் ரோஜாக்கள் இல்லாத ரோஜாச் செடிகளைத் தான் பார்த்தோம். 
இந்த தோட்டத்தில் உள்ள பச்சை வண்ண ரோஜாவைப் பார்க்கலாம் என்ற 
எண்ணமும் நிறைவேறவில்லை. பச்சை வண்ண  ரோஜாவின் படம் 
உங்களுக்காக கூகிளார் உதவியுடன் கீழே







அதனால் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லாததால் தோட்டத்தை ஒரு சுற்று 
சுற்றிவிட்டு வெளியே வந்தோம். அதற்குள் நண்பகல் ஆகிவிட்டபடியால் 
மதிய உணவை முடித்துவிட்டு மற்ற இடங்களை பார்க்கலாம் என நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் சொன்னதால் எங்கள் பேருந்து நின்றிருந்த இடத்திற்கு திரும்பினோம்.

எங்களது மதிய உணவு அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் 
உள்ள அறிஞர் அண்ணா பூங்கா மற்றும் ஏற்காடு ஏரிஅருகே இருந்த 
காபி போர்டின் (Coffee Board) செயல்முறை விளக்க பண்ணை 
(Demonstration Farm) யில் உள்ள முதுநிலை தொடர்பு அலுவலரின் 
(Senior Liaison Officer) அலுவலக கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

இந்த இடத்தில் நிச்சயம் எங்கள் வகுப்புத் தோழர் 
திரு R. பாலசுப்ரமணியத்திற்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவரது முயற்சியால் தான் எங்களுக்கு அந்த செயல் விளக்கப் பண்ணையில் 
மதிய உணவு அருந்தவும், இரவு வரை எங்களது கூட்டம் நடத்தவும் முடிந்தது.

காபி போர்டின் செயல்முறை விளக்க பண்ணையில் கூட்டம் நடத்தவும், 
மதிய மற்றும் இரவு உணவை அருந்தவும் தேவையான அனுமதியைப் பெற 
அவர் தஞ்சையிலிருந்து  சேலத்திற்கும் ஏற்காட்டிற்கும் பலமுறை வந்ததாக
நண்பர்கள்  பழனியப்பனும் வெங்கடரமணனும் சொன்னார்கள். அவரது 
பங்களிப்பு மட்டும் இல்லாதிருந்தால், அரங்கம் உள்ள ஏதேனும் ஒரு தங்கும் விடுதியில் தான் எங்களது கூட்டத்தை நடத்தியிருக்க கூடும்.

அரசினர் ரோஜா தோட்டத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் 15 மணித்துளிகள் 
பயணித்து மதியம் 1.30 மணிக்கு அறிஞர் அண்ணா பூங்கா அருகே மஞ்சகுட்டை சாலையில் உள்ள காபி போர்டின் பண்ணையை அடைந்தோம்.

பண்ணையின் வாயிலில் இருந்து நாங்கள் கூட்டம் நடத்த இருந்த அரங்கம் 
வரை இரு மருங்கிலும் இருந்த காஃபி செடிகளின் அழகை இரசித்துக்கொண்டே நடந்தோம். எனக்கு என்னவோ கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே 
இந்த மலைப் பயிர்களான காஃபி, தேயிலை போன்றவைகள் மேல் ஒரு ஈர்ப்பு.

படித்து முடித்ததும் ஏதேனும் ஒரு காஃபி அல்லது தேயிலை தோட்டத்தில் 
மேலாளராக சேரவேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை. ஆனால் 
குளிருக்கு பயந்துகொண்டு நான் அதற்கு முயற்சிக்கவில்லை.

இருப்பினும் விட்ட குறை தோட்ட குறை என்பார்களே அது போல 
வங்கியில் சேர்ந்த பிறகு வங்கியில் கடன் பெற்ற அல்லது கடனுக்கு 
விண்ணப்பித்த மலைத்தோட்ட பண்ணைகளுக்கு பல முறை ஆய்வுக்கு சென்றிருக்கிறேன். தலைமை அலுவலகத்தில் இருந்தபோது காஃபி தோட்ட 
கடன்கள் வழங்கும் துறையிலும் பணியாற்றியிருக்கிறேன். எனவே இந்த மலைப்பயிர்கள் பற்றிய விரிவான பதிவை பின்னர் எழுதலாமேன
இருக்கிறேன்.

எங்களுக்கு இடம் கொடுத்து உதவிய காஃபி போர்டு பற்றி சொல்லிவிட்டு 
மேலே செல்லலாமென நினைக்கிறேன். 1942 ஆம் ஆண்டு இந்திய 
பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டு, இந்தியா அரசின் வணிகம் மற்றும் 
தொழில் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 
(Autonomous Body) இயங்கி வரும் காஃபி போர்டு, காஃபி பயிர்களை பற்றிய ஆராய்ச்சி,அவைகளின் தரத்தை மேம்படுத்துதல், காஃபியை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலப் படுத்தி சந்தை படுத்துதல் போன்றவைகளில் 
ஈடுபட்டு, காஃபி தொழிலுக்கு ஒரு நண்பனாய் வழிகாட்டியாய் இருந்து 
வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.


காஃபி போர்டினுடைய 50 க்கும் மேற்பட்ட விரிவாக்க செயல் விளக்க 
பண்ணைகளில் ஒன்று தான் ஏற்காட்டில் உள்ள பண்ணை. அந்த பண்ணையில் 
நான் எடுத்த சில புகைப் படங்கள் கீழே.







அங்குள்ள செடிகளில் கொத்துக்கொத்தாய் காய்த்திருந்த காஃபி காய்கள் 
‘எங்களைப் பறித்துக்கொள்’ என்று சொல்வது போல் இருந்ததை எனது 
காமிரா மூலம் நான்  ‘பறித்து’க்கொண்டவைகள்  கீழே





 



அங்குள்ள நெடிதுயர்ந்த மரமொன்றை பற்றிப்படர்ந்திருந்த மிளகுக் 
கொடியையும் எனது ஒளிப்படக்கருவி படம் பிடிக்க தவறவில்லை.








போகும் வழியில் Fabaceae தாவர குடும்பத்தைச்சேர்ந்த Calliandra 
haematocephala என்ற தாவரத்தையும் பார்த்தோம். இதனுடைய 
பூங்கொத்து (Inflorescence) நாம் முகத்திற்கு பவுடர் பூச உபயோகிக்கும் 
மிகச்‌ சிறிய மெத்தை போன்று இருப்பதால் இதை Powder Puff Plant என 
அழைப்பதுண்டு.

நான் எடுத்த அந்த பூவின் படத்தை  கீழே காணலாம்.





இந்த பூக்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமல்லாமல் சிவப்பு, இளஞ்சிவப்பு ஊதா வண்ணங்களிலும் இருக்கும்.

மற்ற வண்ண பூக்கள் கூகிளிலிருந்து கீழே















வழி நெடுக இயற்கை அழகை இரசித்துக்கொண்டே அங்கிருந்த அரங்கத்தை  அடைந்தோம்.அங்கே எங்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகை இதோ.




அதுவரை கண்களுக்கு விருந்து படைத்து வந்த  நாங்கள், வயிற்றுக்கு 
விருந்து படைக்கவேண்டிய நேரம் வந்ததை அறிந்து உடனே சாப்பிடத் தொடங்கினோம்.


தொடரும்



சனி, 14 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 8

ராஜராஜேஸ்வரி கோவில் உள்ள இடத்திலிருந்து சுமார் 5 அல்லது 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Lady's Seat இருக்கும் இடத்தை நோக்கி காலை 11.50 மணிக்கு புறப்பட்டோம்.

ஏற்காடு ஏரியை சுற்றி செல்லும் சாலை வழியே சென்று அந்த இடத்தை அடைந்தபோது நேரம் மணி பகல் 12.30.அந்த இடத்தின் சிறப்பே அங்குள்ள ஒரு செங்குத்தான பகுதியில் (Cliff) இருக்கும் ஒரு சிறிய பாறைதான். இந்த பாறையில் தினம் மாலை வேளையில் ஒரு ஆங்கிலேய பெண்மணி அங்கு அமர்ந்து இயற்கையை இரசிப்பாராம். அதனால் இதற்கு Lady's Seat எனப் பெயர் வந்தது என்கிறார்கள்.

Lady's Seat உள்ள அந்த பாறை அருகே யாரையும் செல்ல அனுமதிப்பதில்லை. அதற்கு முன்பு கட்டப்பட்டுள்ள உயரமான கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி (Telescope) மூலம் கட்டணம் செலுத்திவிட்டு, காப்பித் தோட்டங்கள் மற்றும் காடுகள் ஊடே வளைந்து வளைந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளையும், தொலைவில் உள்ள சேலம் நகரையும், பார்த்து இரசிக்கலாம்.

இரவு வேளைகளில் அங்கிருந்து பார்த்தால் மின்னோளியில் ஒளிரும் சேலம் நகரம் ஆயிரம் நட்சத்திரங்கள் வானில் ஜொலிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துமாம்.

நான் சேலம் சிண்டிகேட் வங்கியின் கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றியபோது இங்கு பலமுறை வந்திருக்கிறேன்.முதன் முதல் இந்த இடத்திற்கு வந்தபோது, அங்கிருந்த ஊழியர் தொலை நோக்கி மூலம் சேலம் நகரையும், மேட்டூர் நீர் தேக்கத்தையும் பார்க்கலாம் என்றார். அவர் சொன்னதைக் கேட்டு தொலை நோக்கி மூலம் நான் பார்த்தபோது எனக்குத் தெரிந்தவை வெறும் கட்டிடங்கள் மட்டும் தான்! காரணம் வானம் மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் தான் அவைகளைப் பார்க்க இயலும்.

ஒரு தடவை சேலம் வந்த எங்கள் மண்டலத்தின் துணைப் பொது மேலாளரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன். அவர் பார்ப்பதற்கு கறார் மனிதர் போல் தோன்றினாலும் வேடிக்கையாக பேசக்கூடியவர்.

அவரை இந்த தொலை நோக்கி உள்ள கட்டிடத்திற்கு அழைத்து வந்து ‘சார்.இந்த தொலை நோக்கி மூலம் சேலம் நகரைப் பார்க்க முடியும்.’ என்றேன். ‘அப்படியா?’ என்று சொல்லிவிட்டு அவர் பார்த்தார்.

அவர் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நான் ‘சார். சேலம் நகர் தெரிகிறதா?’ என்றபோது, அவர் உடனே ‘சபாபதி! சேலமும் தெரிகிறது. அங்கு செவ்வாய்பேட்டையில் உள்ள நமது வங்கியின் கிளையும் தெரிகிறது.அதில் நம் வங்கி ஊழியர் சங்கத்தினர் என்னை ‘வரவேற்று’ வைத்திருக்கும் தட்டிகளும் தெரிகின்றன.’ என்று. ஒன்றும் தெரியவில்லை என்பதை அப்படி வேடிக்கையாக சொன்னார்.

(அவர் வந்த சமயம் வங்கி ஊழியர்கள் சங்கம் அவர்களது கோரிக்கைகளை எழுதி தட்டிகளில் ஒட்டி கிளையில் வைத்திருந்தார்கள்.)

Lady's Seat இருக்கும் இடத்திற்கு நாங்கள் சென்றபோது வழியில் இருந்த கடைக்காரர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு பழங்கள் வாங்கி செல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.அவர்களிடம் ஏதாவது வாங்காமல் நம்மை மேலே செல்ல விடமாட்டார்கள் போல என நினைத்துக்கொண்டு நாங்களும் அங்கு அவர்கள் விற்ற கொய்யா பழங்களை (பழங்கள் என நினைத்து) வாங்கிக்கொண்டு நடந்தோம்.

அவைகளை சுவை(!)க்கும் போதுதான் தெரிந்தது அவைகள் பழமும் அல்ல செங்காயும் அல்ல என்று. ஒரே துவர்ப்பு. காசைக் கொடுத்து தேளைக் கொட்டிக்கொண்டாற்போல், காசைக் கொடுத்து வாயில் கசப்பு சுவையை ஏற்றிக் கொண்டது தான் மிச்சம்.

நாங்கள் சென்றபோது நிறைய சுற்றுலா பயணிகள் அங்கு இருந்தனர். அவர்கள் தொலை நோக்கி மூலம் பார்த்து முடித்த பின்னர் எங்கள் குழுவினர் உள்ள 50 பேரும் பார்க்க நேரம் ஆகும் என்பதால் நாங்கள் மேலே ஏறி சென்று பார்க்கவில்லை.

அதற்கு அருகே ஒரு வட்டவடிவில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் இருந்தும் வெறும் கண்களால் இயற்கை அழகை இரசித்தோம்.

தொலைநோக்கி அமைந்துள்ள கட்டிடமும் அதற்கு அருகே உள்ள கட்டிடமும் கூகிளார் உதவியுடன் கீழே






அதற்கு அருகே பாதுகாப்பிற்காக வேலி போல் அமைக்கப்பட்டிருந்த வலை அருகே நின்று நண்பர்கள் சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.





அந்த இடத்தில் இருந்து நான் எடுத்த புகைப்படம் கீழே





இந்த இடத்தைப் பற்றி திரைப்பட இரசிகர்களுக்கான சுவாரஸ்யமான தகவல் ஒன்று. நான் முன்பே எழுதியிருந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பான, 1950 ஆம் ஆண்டு Ellis R.Dungan என்ற அமெரிக்க இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த, புகழ் பெற்ற மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சி இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டதாம்.

ராஜ குருவின் மகன் பார்த்திபன் (S.A.நடராஜன்) அரசகுமாரியை தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக, தனது மனைவியான மந்திரிமகளான அமுதவல்லியை (மாதுரி தேவி) இந்த மலையுச்சிக்கு தந்திரமாக அழைத்து வந்து கொல்லப் போவதாக சொன்னதும் அவள் புத்திசாலித்தனமாக அவனை மூன்று முறை வணங்குவதுபோல் நடித்து கீழே தள்ளி கொன்றுவிடுவார்.

இந்த உச்சக்கட்ட காட்சிக்கு முன்னர் வரும் ‘வாராய் நீ வாராய்’ என்று திருச்சி லோகநாதன் அவர்களும் திருமதி ஜிக்கி அவர்களும் பாடிய பாடல் பிரசித்திபெற்ற ஒன்று. அந்த காட்சியின் காணொளி உங்களுக்காக கீழே தந்திருக்கிறேன்.







இந்த படம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் வரும் நிகழ்வு ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்திற்கு திரைக்கதை உரையாடல் எழுதியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்த படத்திற்கு கதாநாயகனாக நடிக்க தனது நண்பரான திரு எம்.ஜி‌.ஆர் அவர்களை கலைஞர் மாடர்ன் தியேட்டேர்ஸ் சுந்தரம் அவர்களிடம் சிபாரிசு செய்ததாகக் கேள்வி.


Lady's Seat ஐ பார்த்து விட்டு அருகில் இருந்த அரசினர் ரோஜா தோட்டத்திற்கு சென்றோம்.



தொடரும்