விழுப்புரத்திலிருந்து திருச்சி
செல்லும் ‘பாசஞ்சர்’ இரயில் மதியம் சுமார் 1.00 மணி வாக்கில் விருத்தாசலம் டவுன் இரயில் நிலையம் வந்தபோது, அதில் ஏறி அமர்ந்து எனது கல்லூரி வாழ்க்கைக்கான முதல் பயணத்தை
தொடங்கினேன்.
கல்லூரியில் சேர அனுமதி சீட்டு
பெறப் போகிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் எப்படி திருச்சியில் அண்ணனின் வீட்டைக்
கண்டுபிடித்து சேரப்போகிறோமோ என்ற பயமும் இருந்தது.
இடையில் இலால்குடி இரயில்
நிலையத்தில் வண்டி நின்றபோது, அந்த ஊரில் தமிழாசிரியராக பணிபுரிந்து கொண்டு இருந்த என் அத்தான் திரு கோ.
நடேசன் அவர்கள் காபி கொண்டு
வந்து கொடுத்தார்கள். அதோடு திருச்சிக்கு நான் முதன் முதலாக செல்வதால், அப்போது திருச்சியில் ஆவண வரைவாளர் (Draftsman) படிப்பை படித்துக்கொண்டு இருந்த என் அண்ணனின் மைத்துனரும்,
என் மாமா மகனுமான திரு சீனிவாசன்
அவர்கள் என்னை அழைத்துப்போக இரயில் சந்திப்புக்கு வருவார் என்ற நல்ல
செய்தியையும் சொன்னபோது எனது கவலையும் பயமும் உடனே பறந்தோடிவிட்டன.
மாலை 6 மணி அளவில்
திருச்சி சந்திப்பை அடைந்தபோது, என் மாமா மகன் என்னை வரவேற்றார். என்னிடம் ஒரே ஒரு பை மட்டும் இருந்ததால்
அவரது சைக்கிளிலேயே அண்ணன் வீட்டிற்கு சென்றேன்.
வே.நடனசபாபதி
என் அண்ணன் வீடு, திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்
அருகே இருந்த மின் வாரிய துணை மின் நிலைய வளாகத்தில் இருந்தது. அவர் மின்
வாரியத்தில் அப்போது உதவிப் பொறியாளராக இருந்ததால், அவரது
பொறுப்பில் இருந்த அந்த மின் வாரிய துணை மின் நிலைய வளாகத்திலேயே அவருக்கு வீடு (Quarters) ஒதுக்கப்பட்டு இருந்தது.
திருச்சி சந்திப்பிலிருந்து
மிளகுப்பாறை வழியாக என் அண்ணனின்
Quarters ஐ அடைந்தோம்.போகும் வழியில் இரு பக்கமும் வேலிகாத்தான் முட்செடிகள்தான்.
வழியில் எந்தவித மனித நடமாட்டமும் இல்லை. ஆனால் சமீபத்தில் திருச்சி சென்றபோது, அந்த வழியாக போனபோது, அந்த இடமே மாறிப்போய் அருகருகே நெருக்கமாக வீடுகள் எழும்பியிருந்ததைப்
பார்த்து ஆச்சரியப்பட்டேன்.)
மறுநாள் காலை புனித வளவனார்
கல்லூரிக்கு (St.Joseph’s college) என்னை அழைத்து செல்ல அண்ணன் ஒருவரை
ஏற்பாடு செய்திருந்தார். அண்ணன் அன்று வெளியூர் செல்ல இருந்ததால், எங்கள் இருவரையும் அவரது ஜீப்பில் ஏற்றி சென்று திருச்சி சந்திப்பு அருகே
விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
அங்கிருந்து கல்லூரி இருந்த Main Guard Gate செல்ல அந்த நண்பருடன்
TST என சுருக்கமாக அழைக்கப்பட்ட Trichy Srirangam
Transport இன் நகரப்
பேருந்தில் (Town Bus) பயணித்தோம். எனக்கு அதுதான் முதல் Town Bus பயணம். (இந்த TST யை மாணவர்கள் அப்போது தள்ளு சார் தள்ளு என்று
செல்லமாக சொல்வதுண்டு.)
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,
கல்லூரியை நோக்கி நடந்தோம்.கல்லூரி அருகே நெடிதுயர்ந்து நின்ற மாதா கோவிலை
பிரமிப்போடு பார்த்துக்கொண்டே, அந்த நண்பருடன் புனித வளவனார் பள்ளி வாயில் வழியாக உள்ளே
நுழைந்தேன்.
மாத கோவிலை அடுத்து வடபுறத்தில்
Fathers’ Lodge எனப்படும் அருட் தந்தைகள் வசிப்பிடமும், அதன் அருகே பள்ளியும், அதற்கு வடக்கே கல்லூரியும் இருப்பது அங்கு சென்றவர்களுக்கு தெரியும். அப்போது
பள்ளிக்கு முன் ஒரு வாசலும், கல்லூரியில் இருந்த புகழ்பெற்ற Lawley Hall அருகே ஒரு வாசலும், கடைசியில்
கல்லூரி மைதானம் அருகே ஒரு வாசலும் இருந்தன.
புதிய Admission பெற வந்திருந்த மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் Fathers’ Lodge அருகே குழுமியிருந்ததால், அந்த இடமே திருவிழாக்கோலம் களை கட்டியிருந்தது.
கல்லூரியிலிருந்து அஞ்சலட்டை
கிடைக்கப் பெற்றவர்கள் வரிசையில் நின்று தாங்கள் அனுப்பிய விண்ணப்பத்தைப் பெற்று
அதில் S.S.L.C யில் பெற்ற மதிப்பெண்களை
குறிக்குமாறு கல்லூரி ஊழியர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
நானும் வரிசையில் நின்று நான் முன்பு அனுப்பியிருந்த விண்ணப்பத்தை பெற்று
அதில் என்னுடைய மதிப்பெண்களை பதிந்து அந்த ஊழியரிடம் காண்பித்தேன். அவர் என்னிடம் ‘அருகில் உள்ள அறையில் கல்லூரித் தலைவர் (Principal) உள்ளார். நீங்கள் வரிசையில் நின்று உள்ளே அவர் அழைக்கும்போது நீங்கள்
மட்டும் சென்று உங்கள் விண்ணப்பத்தையும் S.S.L.C புத்தகத்தையும் காண்பியுங்கள். உங்களுடன் வந்தவர்கள் வெளியே காத்திருக்கலாம்.’ என்றார்.
நானும் வரிசையில் நின்று என் முறை
வரும் வரை பதட்டத்தோடு காத்திருந்தேன். எனக்கு முன்பு இருந்தவர் உள்ளே சென்று முக மலர்ச்சியோடு
வருவதை பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘Yes. Come in.’ என்ற கம்பீரக் குரல் கேட்டு உள்ளே தயக்கத்தோடு நுழைந்தேன்.
நினைவுகள்
தொடரும்