திங்கள், 7 மார்ச், 2011

நினைவோட்டம் 41

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர் திரு துரைராஜ்.
விருத்தாசலம் பள்ளியில் படித்த மூன்று ஆண்டுகளிலும்
என்னோடு தோழமையாக பழகியவர்.

ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்ட அவர்
பின் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஈடுபாடு கொண்டு
அண்ணாவின் தீவிர விசுவாசியாக இருந்தார்.

நான் முன்பே எழுதியிருந்தபடி அவர் கவிதை
எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். கரிகாலன்
என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதுவார்.

கவிதைகளை கணித நோட்டுகளில் எழுதி ஆசிரியர்
திரு ராஜகோபாலன் அவர்களிடம் அறிவுரையும்
பெற்றவர். கவிஞர் கண்ணதாசனின் தென்றல்
இதழ் நடத்திய, ‘வெண்பா’ போட்டியில் பலமுறை
கலந்துகொண்டிருக்கிறார்.

1960-ல் தி.மு.க வில் இருந்து திரு சம்பத் அவர்களும்
திரு கண்ணதாசன் அவர்களும் பிரிந்து தமிழ் தேசியக்
கட்சி ஆரம்பித்தபோது,நண்பர் திரு துரைராஜ்(கரிகாலன்),
கண்ணதாசன் மேல் கொண்ட அபிமானத்தால்
தமிழ் தேசியக் கட்சி ஆதரவாளராக மாறினார்.

அவருக்கு படிக்கும்போதே நூல்கள் வாசிக்கும்
பழக்கம் இருந்ததால், படிப்பை முடித்தபின்
அவர் விரும்பி நூலகராக பணியில் சேர்ந்ததாக
அறிந்தேன்.

பல ஆண்டுகளுக்குப்பின் அவருடன் தொடர்பு
கிடைத்தபோது எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
கரிகாலனாக இருந்த அவர் அப்போது
முருகடிமை துரைராஜ் ஆக மாறியிருந்தார்!

பள்ளியில் படித்தபோது கடவுள் மறுப்பாளராக
இருந்த அவர், எவ்வாறு முருகனுக்கு அடிமையானார்
என கேட்டபோது ஒரு தடவை ஆற்றில் குளிக்கும்போது
தனக்கு ஒரு வியப்பான அனுபவம் ஏற்பட்டதாகவும்,
அப்போது முருகனுடைய அருள் கிட்டியதால்,
அது வரை நாத்திகராக இருந்த தான் ஆத்திகராக
மாறி, தனது பெயரை முருகடிமை துரைராஜ்
என மாற்றிக்கொண்டதாக சொன்னார்.

அதோடல்லாமல் முருகன் அருளால் சோதிடக்கலையில்
தேர்ச்சி பெற்று,‘Om Saravana Astrological Research Centre'
என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை திருவல்லிக்கேணியில்
நிறுவி சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு சேவை
செய்து வருவதாகவும்,அவரது வாடிக்கையாளர்கள் பலர்,
கடல் கடந்தும் இருப்பதால் வருடத்தில் இரண்டு மாதம்
வெளி நாடு சென்று சேவை செய்து வருவதாகவும்,
மங்கையர் மலர் போன்ற இதழ்களில் வாசகர்களுக்காக
நட்சத்திர பலனும் எழுதுவதாக சொன்னபோது,
1957- 1960 களில் என்னுடன் படித்த கரிகாலனாக இருந்த
துரைராஜ் எப்படி மாறியிருக்கிறார் என நினைத்து வியந்தேன்.

நண்பர் முருகடிமை துரைராஜ் சோதிடம் பற்றி பல
நூல்கள் எழுதி இருப்பதாக அறிகிறேன்.மேலும்
தற்சமயம் மாதம் ஒருமுறை வெளிவரும்
ஒரு சோதிட இதழும் நடத்திவருகிறார்.

காலம் ஒரு கிரியா ஊக்கி என நினைக்கிறேன்.
மனிதருக்குள் தான் எத்துணை மாற்றத்தை உண்டாக்குகிறது!!
நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

 1. காலம் மாற்றுகிறது.
  நல்ல பதிவு ஐயா. நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே! எனது பதிவை தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 3. முருகடிமை துரைராஜ் உங்கள் வகுப்புத் தோழரா?அநேகமாக நாத்திகர்கள் பலரும் ஒரு கால கட்டத்தில் ஆத்திகராக மாறி விடுகிறார்கள்!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  நீங்கள் கூறுவது உண்மை.
  அநேக நாத்திகர்கள் பிற்காலத்தில் ஆத்திகர்கள் ஆகியது வரலாறு. நண்பர் முருகடிமை துரைராஜ் அவர்களும் அவ்வாறே!

  பதிலளிநீக்கு
 5. முருகடிமை துரைராஜ் அவர்களின் மனமாற்றம் பற்றிய விவரங்கள் நன்றாக இருந்தன . அவர் மிகவும் விரும்பி பின்பற்றிய கண்ணதாசன் அவர்களும் முதலில் நாத்திகனாக இருந்து பிற்காலத்தில் ஆத்திகனாக மாறியது அனைவரும் அறிந்ததே . நிற்க திரு துரைராஜ் அவர்களின் முழு விலாசத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  திரு வாசு அவர்களே!
  திரு முருகடிமை துரைராஜ் அவர்களின் முகவரி இதோ.
  Om Saravana Astrological Research Centre,
  125. Bells road, Triplicane, Chennai 60005
  தொலை பேசி எண்: 28589593

  பதிலளிநீக்கு