திங்கள், 8 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 41நான் பணியாற்றிய ஊரில் இருந்த வங்கியாளர்கள் மன்றத்தில் (Bankers Club) அந்த ஆண்டு நடந்த மன்ற ஆட்சிக் குழு தேர்தலில் செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிட விரும்பாததால், புதிதாக மாற்றலாகி வந்த ஒருவரை பொறுப்பாளர்களாக நியமிக்கலாம் என முடிவெடுத்து அப்போதுதான் மாற்றலாகி அந்த ஊருக்கு வந்திருந்த என்னை, நான் போட்டியிடாதபோதும் செயலாளராக ஆக்கிவிட்டார்கள்.

நான் அந்த பொறுப்பை ஏற்றவுடன் கவனித்தேன் மன்றத்தின் நிதி நிலை மோசமாக இருந்ததை. வங்கியாளர் மன்றத்தின் நிதி நிலையை பெருக்கவும் அதை சுறுசுறுப்பாக இயங்கவும்  சில யோசனைகளை மன்ற குழு முன் வைத்தேன்.

அதுவரை அந்த ஊரில் இருந்த வங்கி கிளை மேலாளர்களில் பலர் மன்றத்தில்  உறுப்பினராக சேராமல் இருந்தார்கள். முதலில் அனைவரையும் உறுப்பினராக்குவது, மன்ற உறுப்பினராக கிளை மேலாளரை மட்டும் சேர்க்காமல் அந்த வங்கியின் கிளைக்கே உறுப்பினர் தகுதி நிலை (Membership Status) தருவது, அதன் மூலம் மன்றத்தின் கூட்டங்களில் கிளை மேலாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற வங்கி அலுவலர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பது, யார் வந்தாலும் வராவிட்டாலும் ஓவ்வொரு மாதமும் 15 ஆம் நாள் மன்றக் கூட்டத்தை பொருளாளர் பதவி வகிக்கும் கிளையில் நடத்துவது போன்ற எனது கருத்தை மன்ற  ஆட்சிக்குழு ஏற்றுக்கொண்டது. அதன்படி எல்லோரையும் உறுப்பினராக சேர்த்து மாதாமாதம் ஒழுங்காக கூட்டத்தை நடத்தி வந்தோம்.

அந்த கூட்டங்களில் பெயரளவுக்கு வெறுமனே கூடி காபி டிஃபன் சாப்பிட்டு திரும்பாமல், வங்கியாளர்களுக்கு இருந்த பொது பிரச்சினைகள் (அரசியல்வாதிகள் லோன் மேளா என்ற பெயரில் வங்கி மேலாளர்களை அவர்கள் விரும்பும் கட்சிக்காரர்களுக்கு கடன் கொடுக்க கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்வது போன்றவை அப்போது இருந்த பிரச்சினைகள்.) பற்றி விரிவாக பேசி அனைவரின் கருத்தையும் கேட்டு, எப்படி அந்த பிரச்சினையை எதிர்கொள்வது என்பது பற்றி என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தோம்.

வங்கியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தில் அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் குறித்து முடிவெடுக்க ஆரம்பித்ததால் கூட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கை கூடியது என்பது உண்மை.

ஒரு கூட்டத்தில் நான் சொன்னேன். வங்கி வணிகத்தை பெருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நம்மில் பலர் மற்றவர்களுக்கு தெரியாமல் வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுக்க முயற்சிப்பது ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமாக ஆகிவிட்டது.

நாம் அனைவரும் தேவையில்லாமல் போட்டி போடுவதால், ஒருவரே பல வங்கிகளில் அதே சொத்தின் மேல் கடன் வாங்கி கட்டாமல் நமக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். எனவே இனி நாம் ஒவ்வொரு கூட்டதிலும் நம் வங்கிக்கு புதிதாய் வந்துள்ள வாடிக்கையாளர் பற்றி சொல்வோம். அதன் மூலம் நம்முடைய வாடிக்கையாளர் யார் என எல்லோருக்கும் தெரிய வாய்ப்புண்டு. அதன் மூலம் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் வேறொரு வங்கியில் கடன் பெறுவதை தடுக்க முடியும். என்றேன்.

ஆனால் எனது கருத்தை சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை.இருப்பினும் நான் மட்டும் எங்கள் கிளையின் புதிய வாடிக்கையாளர் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அதுவே எனக்கு அந்த காகிதப்பை தயாரிக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் பின்னால் உதவியது.

காகிதப்பை தயாரிக்கும் அந்த அச்சகத்திற்கு ஆய்வுக்கு சென்ற அன்று மாலையே  வங்கியாளர்கள் மன்றம் (Bankers Club) கூட்டம் இருந்ததால், எனது வழக்கப்படி அந்த கூட்டத்தில் புதிதாய் கடன் கேட்டு எங்கள் கிளைக்கு வந்த அந்த இரு சகோதரர்கள் பற்றியும் அவர்கள் அச்சகம் சென்று வந்ததும் பற்றியும் கூறினேன்.

உடனே ஒரு மேலாளர் அந்த வாடிக்கையார்களின் பெயரையும் அந்த அச்சகத்தின் பெயரையும் கேட்டார். நான் சொன்னதும், அய்யய்யோ. சபாபதி. அவர்கள் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள். எங்கள் வங்கியில் அவர்களது தொழிற்படு மூலதனத்திற்காக (Working Capital) அவர்களது இருப்பின் மேல் மிகைப்பற்று (Overdraft) பெற்றிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக அவர்கள் நிதி நிலை சரியில்லை. வட்டியையும் கட்டவில்லை.

அவர்களது மிகைப்பற்றையும் புதுப்பிக்கவில்லை. அதனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். நீங்கள் ஏதும் கடன் தந்து விடவில்லையே.’ என்றார்.

இல்லை.இன்று மதியம்தான் அவர்களது அச்சகத்தை பார்வையிட்டு வந்திருக்கிறேன்.என்றேன். 

அதற்கு அவர் அப்படியென்றால் அங்கே சுவற்றில் இரண்டு மூன்று இடங்களில் Hypothecated to என்று எங்கள் வங்கியின் பெயர் கொண்ட பலகை இருந்திருக்குமே. நீங்கள் அதை பார்க்கவில்லையா?’ என்றார்.

அப்படி ஏதும் பலகைகள் இல்லையே.  என்று சொன்னபோது திடீரென மதியம் அந்த வாடிக்கையாளர்கள் நடந்து கொண்ட விதம் நினைவுக்கு வந்தது.

திடீரென ஆய்வுக்கு நாங்கள் அந்த அச்சகத்திற்கு சென்றதை எதிர்பார்க்காத அவர்கள், எங்களை கண்டதும் திகைத்து பின் எங்களுக்கு காபி தந்து காக்க வைத்திருக்கிறார்கள்.  அந்த நேரத்தில் அந்த வங்கியின் பெயர் இருந்த பலகைகளை எடுத்துவிட்டு எங்களுக்காக அச்சு இயந்திரங்களை சுத்தம் செய்வதுபோல் செய்து எங்களை ஏமாற்ற நினைத்திருக்கிறார்கள். நான் என் உள்ளுணர்வுப்படி அவர்களின் நடவடிக்கைகளை சந்தேகப்பட்டது சரிதான் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

அன்று மதியம் நடந்ததை அந்த கூட்டத்தில் விரிவாக சொன்னதும் எல்லோரும் ஒரே குரலில் இன்று நடந்ததை பார்க்கும்போது, செயலாளர் சொன்னது சரிதான்.  இனி நாம் நம்முடைய வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளாவிட்டால் ஏமாற்றப்படுவது நாமாகத்தான் இருப்போம். என்றார்கள்.

அந்த கூட்டம் முடிந்ததும் அச்சகத்திற்கு கடன் கொடுத்திருந்த வங்கி மேலாளரிடம்,’கவலை வேண்டாம். நான் அவர்களுக்கு கடன் தரமாட்டேன். என சொல்லி வந்தேன்.

மறு நாள் காலை எதிர்பார்த்ததுபோல் அந்த சகோதரர்கள் இருவரும் வங்கிக்கு வந்தனர். சார். எங்கள் தணிக்கையாளர் (Auditor)  ஊரில் இல்லை. அவர் வந்ததும் நீங்கள் கேட்ட சான்றிதழை தந்துவிடுகிறோம். அதற்குள் நீங்கள் கடன் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அதை நிறைவு செய்து தந்துவிடுவோம். என்றார்கள்.

நான்.அதற்கு முன் நீங்கள் ஒன்று செய்யவேண்டுமே.என்றேன். சொல்லுங்கள். சார். என்ன  செய்யவேண்டும்?’ என்று அவர்கள் கேட்டபோது, நீங்கள் இங்குள்ள வங்கிகளில் உங்களுக்கு கடன் ஏதும் இல்லை என்ற சான்றிதழை (No Dues Certificate) எல்லா வங்கிகளிடமிருந்தும் பெற்று தரவேண்டும். என்றேன்.

அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.  அதற்கு அவர்கள்,’சார்.இங்கு 21 வங்கிகளின் கிளைகள் உள்ளன. எல்லா கிளைகளுக்கும் சென்று சான்றிதழ் வாங்கி வருவது கடினம் சார். என்றார்கள்.

நானும் விடாப்படியாக, சரி அப்படி என்றால் 5  பெரிய வங்கிகளிடமாவது சான்றிதழ் வாங்கி வாருங்கள். என சொல்லிவிட்டு, 5  வங்கிகளின் பெயரை சொல்லும்போது அவர்கள் கடன் பெற்றிருந்த வங்கியின் பெயரையும் சொன்னேன்.

அந்த வங்கியின் பெயரை சொல்லும்போது அவர்கள் முகம் மாறுவதை கவனித்தேன். உடனே அவர்கள், சார். எங்கள் பேரில் நம்பிக்கை இல்லையா? நாங்கள் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை.அப்படி இருக்கும்போது ஒவ்வொரு வங்கிக்கும் சென்று No Dues Certificate வாங்கி வருவதென்பது  எங்களுக்கு Delicate ஆக இருக்கிறது. என்றனர்.

நீங்கள் எங்கும் கடன் வாங்கவில்லை என்றால் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது சரி. நீங்கள் வேறு எங்கும் கடனே வாங்கவில்லையா?’ என்றேன்.

அவர்கள் உடனே இல்லை. சார். என்றதும், அந்த வங்கியின் பெயரை சொல்லி “அங்கு கூட வாங்க வில்லையா?’ என்றேன். அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல் இருந்தனர்.

நான் சொன்னேன். நீங்கள் அந்த வங்கியில் மேல் மிகைப்பற்று வாங்கியிருக்கிறீர்கள் என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டி கட்டவில்லை என எனக்குத் தெரியும். நீங்கள் நேர்மையாய் வணிகம் செய்பவராய் இருந்தால் முதன் முதல் இங்கு கடன் கேட்டு வந்தபோதே அந்த வங்கியில் உள்ள கடன் பற்றி சொல்லி, அந்த வங்கியை விட்டு ஏன் எங்கள் வங்கிக்கு வர விரும்புகிறீர்கள் என்பதை  சொல்லியிருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் அதை மறைத்து எந்த வங்கியிலுமே கடன் பெறவில்லை என சொல்லியதிலிருந்தே உங்களது நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. எனவே உங்களுக்கு கடன் தர நான் தயாராக இல்லை. ஒன்று மட்டும் இளைஞர்களான உங்களுக்கு சொல்வேன். தயைவு செய்து நேர்மையாய் இருங்கள். உண்மையில் நீங்கள் கஷ்டப்பட்டால், உங்கள் வங்கியே மேற்கொண்டு உங்களுக்கு உதவி செய்யும். எனவே நீங்கள் அந்த வங்கிக்கே செல்வது நல்லது. போய் வாருங்கள். என்றேன்.

ஒன்றுமே பேசாமல் இருவரும் எழுந்து சென்றுவிட்டனர். ஆனால் எனக்கோ எங்கள் வங்கிக்கு வர இருந்த ஒரு வாராக் கடன் கணக்கை தவிர்த்த மகிழ்ச்சி.
   

தொடரும்

22 கருத்துகள்:

 1. வங்கிக்கு வர இருந்த ஒரு வாராக் கடன் கணக்கை தவிர்த்த மகிழ்ச்சி.

  சாமர்த்தியமான தங்கள் நடவடிக்கைகள் வியப்பளிக்கின்றன ...பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 2. Transparency and a centralized system for cross-checking information/intel- are damn essential... That's what I have learnt from this incident... But it must have been such a thrill for you when you found out that you had escaped from giving a bad loan! Really good one...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே! வங்கிகளுக்குள் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் பரிமாற்றமோ அல்லது அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருக்கும் நிறுவனமோ இல்லாததால் வங்கி மேலாளர்கள் தாங்களே வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து சரிபார்த்து கடன் தர வேண்டிய நிலை அப்போது. இப்போது அந்த நிலை இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.

   நீக்கு
 3. "நேர்மையுடன் இருங்கள்" என்று சொல்லியும் அவர்கள் தொடரவில்லை என்றால், அவர்களைப் பற்றி புரிகிறது...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. நான்கூட அச்சகத்தில் அவர்கள் எதுவும் கள்ளநோட்டு அடித்திருப்பார்களோ என்று மனதில் ஒரு எண்ணம் வைத்திருந்தேன். இப்படி பலப்பல வங்கிகளில் கடன் வாங்குவதை தொழிலாகக் கொள்ள எண்ணியிருந்தார்களோ என்னவோ... அவர்களிடம் உங்கள் விலைமதிப்பற்ற அறிவுரை செல்லுபடியாகியிருந்தால் சந்தோஷம்! உங்கள் உள்ளுணர்வு உங்களையும் உங்கள் வங்கியையும் காப்பாற்றியது அறிந்து அதைவிட சந்தோஷம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

   நீக்கு
 6. //நீங்கள் இங்குள்ள வங்கிகளில் உங்களுக்கு கடன் ஏதும் இல்லை என்ற சான்றிதழை (No Dues Certificate) எல்லா வங்கிகளிடமிருந்தும் பெற்று தரவேண்டும்//

  When there is no centralized information, at least this has to be a standard procedure, when someone or some organisation applying for loan. If not, I suspect the banks have hidden motives against such procedures. Anyway now the bank did not get into a bad loan.

  Packirisamy N

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஒருவரே பல வங்கிகளில் கடன் பெறுவதைத் தவிர்க்க அப்போது No Dues Certificate மற்ற வங்கிகளிடமிருந்து பெற்று வரவேண்டும் என்பது அப்போது எழுதப்படாத விதி. சிலர் அதை தீவிரமாக கடைப் பிடித்தனர் என்பது உண்மை.

   நீக்கு
 7. நல்ல அனுபவம் நேர்மை என்றும் உயர்வுடைத்து.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 8. நல்ல வேளை, தப்பிச்சிங்க.

  உங்கள் அனுபவங்கள் அனைவருக்கும் உதவியாகவே இருக்கும்.

  உங்கள் பகிர்வுகளுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வரதராஜுலு.பூ அவர்களே!

   நீக்கு
 9. மிகவும் அருமை ஸார். Bankers Club பற்றிய தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை. அதை யாரும் சரியாக உபயோகப் படுத்துவது இல்லை. தங்களின் சரியான அணுகுமுறையால் மிக அருமையாக திருபத்திக்கே அல்வா கொடுத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

   நீக்கு
 10. இந்தப் பதிவை எப்படி கவனிக்காமல் விட்டேன்!உங்கள் நடவடிக்கைகள் உங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற வங்கிகளுக்கும் நனமி தருவதாக அமைந்தது!great

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன்அவர்களே!

   நீக்கு
 11. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
  இனிய புத்தாண்டு (thamil 2013) நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! உங்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு