திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.1


இந்த தலைப்பில் பதிவிட பல நாட்களுக்கு முன்பே நினைத்திருந்தேன். அதற்குள் வேறு தலைப்புகளில் தகவல்களை எழுத ஆரம்பித்துவிட்டபடியால் இதைப்பற்றி எழுதுவதை தள்ளிபோட்டுக் கொண்டிருந்தேன்.



முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் கொஞ்சம் வரலாறு என்ற தலைப்பில் 06-08-2015 அன்று வெளியிட்ட பதிவின் பின்னூட்டத்தில், அவர் எழுதிய தகவல் தொடர்பாக நானும் பதிவு எழுத இருப்பதாக சொன்னதும், அவரும் ‘எழுதுங்கள்’ என ஊக்கமூட்டியதால் இந்த பதிவை எழுத ஆரம்பித்துள்ளேன்.

எல்லோரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் என சொல்லும்போது நான் ஏன் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என சொல்கிறேன் என்றால் அந்த போராட்டம் இந்தி மொழியை எதிர்த்து அல்ல. இந்தி திணிப்பை எதிர்த்துத்தான் என்பதால் தான். அதனால் தான் தலைப்பை இந்தி திணிப்பு போராட்டம் என வைத்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை நான் எந்த மொழியையும் வெறுத்ததில்லை. நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தையார் எனக்கு இந்தி கற்றுக்கொடுத்தார்கள். பின்னர் பெண்ணாடத்தில் எட்டாம் வகுப்பு (அப்போது மூன்றாம் படிவம்) படிக்கும்போது (1956-57) தென்னிந்திய இந்தி பிரச்சார சபை நடத்திய ‘பிராத்மிக்’ என்ற அடிப்படைத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன்.

ஆனால் அப்போது எனக்குத் தெரியாது பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும்போது (1965 ஆம் ஆண்டில்) இந்தி திணிப்பை எதிர்த்து நடக்க இருக்கும் போராட்டத்தில் நானும் கலந்து கொள்வேனென்று! இது குறித்து எனது நினைவோட்டம் 19 இல் கூட எழுதியிருந்தேன்.

இந்த போராட்டம் பற்றி எழுது முன்பு, .இந்தி படிக்க தவறியதால் நமக்கு வேலை வாய்ப்பு பறிபோனதாக சிலர் சொல்வதைப்பற்றி எனது கருத்தை சொல்லலாமென எண்ணுகிறேன். இது சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் எனது ஆணித்தரமான கருத்தை சொல்ல எனக்கு உரிமை உண்டு என எண்ணுகிறேன்.

1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இந்தி படிக்கமுடியாமல் போய்விட்டதாக பலர் நினைக்கிறார்கள். உண்மையில் காங்கிரஸ் ஆண்டபோது கூட இந்தி ஒரு கட்டாய பாடமாக இருந்ததில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை இந்திக்கான வகுப்புகளில் ஆசிரியர்கள் வந்தாலும் பாடம் நடத்த மாட்டார்கள்.( நான் சொல்வது 1967 ஆம் ஆண்டிற்கு முன்பு )

மாணவர்கள் இந்தி கட்டாய பாடமாக இல்லாததால்,இந்தி பாடத்தைக் கற்க ஈடுபாடு காட்ட மாட்டார்கள். அதனால் இந்தி ஆசிரியர் மாணவர்கள் பாடம் நடத்த மாட்டார்கள்.இந்தி எழுத்துக்களை கரும்பலகையில் எழுதிவிட்டு 'ஏதாவது படிங்கடா’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் மாலை வேளைகளில் வகுப்பு முடிந்ததும் இந்தி ஆசிரியரிடம் தனிப் பயிற்சி பெற்று தென்னிந்திய இந்தி பிரச்சார சபை நடத்தும் தேர்வை எழுதுவதுண்டு

இப்படியே ஆண்டு முடிந்துவிடும். கால், அரை மற்றும் இறுதித்தேர்வுகளில் இந்தி எழுதத் தெரிந்தவர்கள் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே திருப்பி எழுதிக்கொடுத்து வருவது வழக்கம். சிலர் வெறும் தேர்வு எண்ணை மட்டும் எழுதிவிட்டு வெறும் தாளை கொடுத்து வந்துவிடுவார்கள்.

நான் பிராத்மிக் தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் எனக்கு இந்தி எழுதப் படிக்க தெரிந்திருந்தாலும் பாடம் நடத்தப்படாததால் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரியாததால் நானும் கேட்கப்பட்ட கேள்விகளையே பதிலாக எழுதிக்கொடுத்திருக்கிறேன்.

விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் ஏதோ இந்த மட்டிலாவது இந்தியில் எழுதுகிறார்களே என்று கேள்விகளை தப்பும் தவறுமாக எழுதியவர்களுக்கு சில மதிப்பெண்கள் தருவது உண்டு.

(அப்போதெல்லாம் 9 ஆம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்களை ஒரு புத்தகத்தில் பதிந்து தருவார்கள். இப்போது போல் ஒற்றைத்தாளில் அல்ல)

இந்திப்பாடங்கள் நடத்தப்படாததால் நிச்சயம் தேர்வை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறமுடியாது.அப்படியே கேள்விகளைத்திருப்பி எழுதினாலும் ஒற்றைப்பட இலக்கத்தில்தான் மதிப்பெண் கிடைக்கும்.

எங்களது S.S.L.C புத்தகத்தில், இந்தி பாடத்திற்குபெறப்போகும் ஒற்றைப்பட இலக்க மதிப்பெண்ணை பதிய விரும்பாததால்,நானும் என் வகுப்புத் தோழர்களும் இந்தி தேர்வைப் புறக்கணிக்க முடிவு செய்தோம். தேர்வை எழுதாவிட்டால் Absent என எழுதுவார்கள். ஒற்றை இலக்க மதிப்பெண்ணை விட அதுவே தேவலாம் என எண்ணியதால் அவ்வாறு செய்தோம். .

காங்கிரஸ் அரசு இருந்தபோது இந்தி படிப்பை கட்டாய படிப்பாக செய்யாததால் விருப்பப்பட்டோரைத் தவிர மற்ற பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கவில்லை. இந்தி திணிப்பு போராட்டத்தை சரியாக கையாளாத காங்கிரஸ் அரசின் செயலால் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று வந்த தி.மு.க அரசு அப்படி கட்டாயமில்லாத அந்த பாடத்தை பள்ளியிலிருந்து எடுத்துவிட்டது. அவ்வளவே. ஆனால் முன் போல் இந்தியை தனியே படிக்க தடை ஏதும் இல்லாததால் விருப்பப்பட்டோர் படித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

தொடரும்


40 கருத்துகள்:

  1. புத்தகத்தில் பதிந்து தருவது உட்பட பல தகவல்கள் அறிய முடிந்தது ஐயா... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. நான் கேள்விகளை எழுதி இந்தியில் பள்ளி இறுதி வகுப்பில் வாங்கிய மதிப்பெண் 26!எல்லாக் கேள்விகளையும் சரியாக எழுதி விட்டேன் போல!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! எனக்குத் தெரியும் நிச்சயம் பாடம் நடத்தபடாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதியிருப்பீர்கள். அதனால் தான் 26 மதிப்பெண்கள் பெற்றிருப்பீர்கள். யாரும் வெறும் கேள்விகளை திருப்பி எழுதியதற்கு இவ்வளவு மதிப்பெண்கள் தரமாட்டார்கள்.

      நீக்கு
    2. நான் பல நாட்களாக அந்த கால பட திட்டம் எப்படி இருந்திருக்கும் என அறிய பலரிடம் முயற்சி செய்தேன் அது
      நடக்கவில்லை,உங்களிடம் நான் அந்த தகவல்களை பெற முடியும் என நினைக்கிறேன்..உங்களிடம் தொலைபேசியில் பேச ஆசை...விருப்பமிருந்தால் tamilv125@gmail.com

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி திருமதி தமிழ்ச்செல்வி நாடார் அவர்களே! நீங்கள் விரும்பும் தகவல்களை என்னால் முடிந்த அளவு தர முயற்சிப்பேன். மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

      நீக்கு
  3. பயனுள்ள நிகழ்வுகளாக இருக்கிறதே நண்பரே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  4. இந்தி எதிர்ப்பு. இல்லை இல்லை. இந்தி திணிப்பு எதிர்ப்பு. – சரியாகவே சொன்னீர்கள். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது நான் பள்ளி மாணவன். அன்றைய போராட்டங்களைப் பற்றிய செய்திகளை தினத்தந்தியில் பக்கம் பக்கமாக படித்தது நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து எழுதவும். எப்போதும் போல உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  5. இந்தி எதிர்ப்பு மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மிக நுண்ணியதே. எழுத்தில் வேண்டுமானால் இந்த வேறுபாட்டைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் நடைமுறையில் எல்லோரும் இதை இந்தி எதிர்ப்பு என்றுதான் கருதினார்கள். அதனால்தான் இளைய சமுதாயம் இந்தி கற்பதில் ஈடுபாடு காட்டவில்லை.

    டில்லியில் பல ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டபோது என் இந்தி அறியாமையால் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! இந்தி எதிர்ப்பு என்ற சொல்லுக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற சொல்லுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. முன்னது இந்தி என்ற மொழியையே எதிர்ப்பது. பின்னதோ அந்த மொழியை மற்றவர்கள் மேல் திணிப்பதை எதிர்ப்பது. ஆரம்பத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தவர்கள் பின்னால் இந்தியையே எதிர்த்ததன் காரணம் மைய அரசின் வீம்பு பிடிவாதத்தால் தான். 1965 ஆம் ஆண்டு மட்டும் இந்தியை பொது மொழியாக ஆக்க முடிவு செய்யாதிருந்தால் அந்த எதிர்ப்பு போராட்டமே நடந்திருக்காது.


      // டில்லியில் பல ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டபோது என் இந்தி அறியாமையால் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.//

      இந்தியா முழுதும் இருந்து வந்திருக்கும் அறிவியலார்கள் கூட்டத்தில் ஆங்கிலத்தில் தானே பேசவேண்டும். ஒரு ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வுகள் பற்றி எப்படி இந்தியில் பேசலாம்? எனக்கு இது போல் அனுபவம் ஏற்பட்டபோது ஆட்சேபித்து ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறேன்.

      நீக்கு
  6. என் தந்தையின் எஸ்.எஸ்.எல்.சி புக்கில் இந்த மார்க்குகளை பார்த்து இருக்கிறேன்! என் அப்பாவும் இந்தி பாடம் நடத்த மாட்டார்கள்! கேள்விகளை எழுதி விட்டு வந்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார். தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  7. என்னதான் இந்தி படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் சரளமாக பேச இயலாது. இந்தி பேசுபவரோடு பழகினால் அல்லது ஹிந்தி பேசும் பகுதிகளில் வசித்தால் ஒழிய சாத்தியமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என் முரளிதரன் அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் பேசினாலோழிய பேச்சுமொழியை கற்றுக்கொள்ள முடியாது.

      நீக்கு
  8. நாங்கள் பள்ளியில் ஹிந்தி படித்த போது கற்றது இன்னும் நினைவில் இருக்கிறது”மானே ஹம்கோ ஜன்ம தியா ஹை. . உசி கா தூத் பீகர் ஹம் படே ஹுவே ஹை. “ இப்போதும் தட்டுத்தடுமாறி ஹிந்தி படிப்பேன். ஆனால் மொழியில் ஆர்வம் இல்லை. எதையும் திணிப்பதில் உடன்பாடு கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.N. பாலசுப்ரமணியம் அவர்களே! மொழியை திணிக்கக்கூடாது எனப்து தான் என் கருத்தும்.

      நீக்கு
  9. இன்றைய காலக் கட்டத்தில் வளரும் தலைமுறையினருக்கு தேவைவானதொரு விளக்கப் பதிவு அய்யா!
    மலரும் நினைவுகள் மனதில்!
    போஸ்ட் ஆபிஸ் மற்றும் ரயில்வே ஸ்டேஷ்ன்களில் தார் பூசி மாட்டிக் கொண்டு போலீஸ் காவலில் வைக்கப் பட்டவர்களில் எனது உறவினர்களும் அடக்கம் அய்யா!
    என்னை பொறுத்த வரையில் இது மகள், மருமகள் உறவாகத் தான் பார்க்கிறார்கள் பலர்!
    நம் மொழி மீது உணர்வும், காதலும் இருந்தாலே போதும்!
    இந்த காதல் அழிவதில்லை!
    வேஷம் வேலக்கு ஆகாது!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!
      // நம் மொழி மீது உணர்வும், காதலும் இருந்தாலே போதும்!
      இந்த காதல் அழிவதில்லை!
      வேஷம் வேலக்கு ஆகாது!//

      சரியாய் சொன்னீர்கள்.

      நீக்கு
  11. While i do agree that no language should be forced upon masses, notwithstanding the humorous way in which neglect of HINDI has been described, it appears students were rather encouraged to neglect HINDI by the very people whose job it was to teach the language and this does not appear to be in order..A particular political party capitalized on the perceived anger of the masses against imposition of the language in a very clever way and students participated in agitations decrying the imposition of the language which ultimately enabled the party to capture power in Madras state. It has taken a considerable amount of time for people to realize that there is no harm in learning languages other than one's mother tongue especially HINDI . The runaway success of some the HINDI movies in TN ( Aradhana/Bobby/Yaadon ki bharat ) would bear ample testimony to this. In fact I have seen people lamenting the fact that they had been misled . Be that as it may, the blog is very interesting and informative ( especially the conduct of teachers and how marks could be secured by merely writing the questions on the answer sheets !). Hope subsequent installments would carry more interesting information.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! உண்மையில் நாங்கள் படிக்கும்போது ஆசிரியர்கள் இந்தி படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை.அது கட்டாய பாடமாக இல்லாததால் யாரும் அதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.அதனால் ஆசிரியர்களும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. விருப்பம் உள்ள மாணவர்கள் சிலர் தனியே பயிற்சி பெற்று இந்தி தேர்வு எழுதினார்கள். அப்போது பொதுத்தமிழ் கட்டாய பாடமாக இருந்தது. விருப்பப்பாடமாக சிறப்புத் தமிழ் அல்லது வடமொழியை படிக்கலாம். அதோடு சிறப்பு பாடமாக இந்தியும் இருந்திருந்தால் விருப்பப்பட்டோர் பள்ளியிலேயே அதை படித்திருக்கமுடியும்.

      இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அப்போதைய அரசு சரியாக கையாளாததின் காரணத்தால் தான் மாணவர்கள் போராட்டம் தீவிரமாகி உயிர்ப்பலி ஏற்படக் காரணமாக இருந்தது. அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கோபம் அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க.விற்கு தேர்தலில் வெற்றிபெற சாதகமாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

      இந்தி படிக்காதவர்கள் வட இந்தியா சென்றதும் மூன்றே மாதங்களில் இந்தியை சரளமாக பேச கற்றுக்கொண்டதால் இந்தி படிக்காதது யாருக்கும் பாதிப்பு தரவில்லை என எண்ணுகிறேன். ஆனால் தாய்மொழி தவிர வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. என்பதே என் கருத்தும். பல மொழிகள் தெரிந்திருந்தால் நமக்கு இலாபமே. நான் இந்தி கன்னடம் மட்டும் மலையாள மொழிகளை கற்றுக்கொண்டது யாரும் வற்புறுத்தி அல்ல. இன்னும் சொல்லப்போனால் 50 வயதில் மலையாள மொழியை எழுத படிக்க பேச கற்றுக்கொண்டேன் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

      இந்திப் படங்கள் தமிழ் நாட்டில் வெற்றிகரமாக ஓடியது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். 1950 களிலேயே ‘நாகின்’. ‘ஜனக் ஜனக் பாயல பாஜே’, ‘தோ ஆங்கே பாரா ஹாத்’ போன்ற படங்களும் 1960 களில் ‘தில் தேகே தேக்கோ’ போன்ற படங்களும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதற்கு காரணம் அந்த படங்களில் இருந்த பாடல்களால் தான். இசைக்கு மொழி பேதம் இல்லையே.

      .இந்த பதிவுத் தொடரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்வுகள் பற்றி எழுத இருக்கிறேன். தொடருங்கள்.

      நீக்கு
    2. Thanks for the detailed reply. I do agree that Tamilians are capable of learning Hindu within 3 months of landing in Delhi as observed by Mr.Morarji Desai in Parliament when the agitation was at its peak. I am sure subsequent blogs would throw more light for the benefit of younger generations

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! இந்த பதிவுத் தொடரில் அந்த போராட்டத்தின் போது நடந்த நிகழ்வுகளை பதிவிட இருக்கிறேன். தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  12. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு.... அதே தான். ஆனால் ஹிந்தி எதிர்ப்பு என மொத்தமாக ஒரு மொழியை விலக்கி வைத்து பலர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். நமது மாநிலத்தினைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலத்த்வருமே ஹிந்தியை மூன்றாவது மொழியாக பயின்றதால் வடக்கே வரும்போது கஷ்டப்பட்டதில்லை. ஆனால் நம் மாநிலத்தவர்கள் இங்கே வரும்போது [வேலைக்கோ/சுற்றுலாவுக்கோ} எத்தனை கஷ்டப்படுகிறார்கள்...

    சுவாரசியமான பதிவு. மேலும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! திரு வாசுதேவன் அவர்களின் பின்னூட்டதிற்கு தந்த பதில் தங்களின் பின்னூட்டத்திற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன். இந்தி படிக்காமல் வட இந்தியா செல்லும் தமிழர்களுக்கு முதல் மூன்று மாதங்கள் கடினமாய் இருக்கும். பின்பு பழக்கத்தில் தானே இந்தி பேச வந்துவிடும். இது நான் நேரில் கண்டது.

      நீக்கு
    2. வெங்கட் நாகராஜ் அவர்கள் கருத்து உண்மையல்ல! ஆந்திரப்பள்ளிகளில் ஹிந்தியில் 20 மதிப்பெண்கள் கட்டயம் பெறவேண்டும். ஹிந்தித் தேர்வின்பொது அந்த 20 மதிப்பெண்களுக்குத் தேவையான பதில்களை ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டுவிடுவார். இதே லட்சனத்தில்தான் மற்ற மநிலங்களிலும்! மற்ற மானிலங்களிலிருந்து வருவோரும் நாம் படும் அளவுக்குச்சிரமப்படுகிறார்கள் என்பதே உண்மை!

      நீக்கு
    3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு இமயவரம்பன் அவர்களே!

      நீக்கு
  13. ;நானும் அறியாத பல செய்திகள்! அறிந்தேன் !தலைப்பு பற்றிய தங்கள் விளக்கம் சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தலைப்பு பற்றிய எனது விளக்கம் சரியே என சொன்னமைக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  14. கல்லூரியில் படிக்கும் பொழுது தபாலில் இரண்டு வருடங்கள் ஹிந்தி படித்தேன். ஹிந்தி அகாடமியிலிருந்து இலவசமாக தபாலில் கற்றுக்கொடுத்தார்கள். இன்றும் இந்த சலுகை இருக்கக் கூடும். மத்திய அரசாங்கம் ஹிந்தியைத் தவிர இதர மொழிகளை மாற்றாந்தாய் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. ஹிந்தி எதிர்ப்பு இல்லாதிருந்திருந்தால், ஏனைய மொழிகள் இன்னும் அழிந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இன்றைக்கும் அஞ்சல் வழி கல்வி மூலம் மைய அரசு சொல்லித் தருகிறது என எண்ணுகிறேன். பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் தாய் மொழி இந்தியாக இருப்பதால், மய்ய அரசு அரசியல் அழுத்தம் காரணமாக இந்திக்கே முதல் இடம் தருகிறது. நீங்கள் சொல்வது சரியே. இந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் இல்லாதிருந்தால் மற்ற மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போக செய்திருப்பார்கள்.

      நீக்கு
  15. அன்புடையீர்,

    தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

    http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

    அன்புடன்,
    எஸ்.பி.செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
  16. வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி அய்யா! வரலாறு முக்கியம் என்பதை உணர்ந்தேன்!
    தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் அவர்களே!

      நீக்கு
  18. 9 ஆம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்களை ஒரு புத்தகத்தில் பதிந்து தருவார்கள்---இதைப்பார்த்துதான் என்னை வேறு பள்ளியில் சேர்க்கவில்லை.வரலாறு முக்கியம் அய்யா......

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வலிபோக்கன் அவர்களே! உங்கள் பின்னூட்டதில் உள்ள நகைச்சுவையை இரசித்தேன்

      நீக்கு