புதன், 29 டிசம்பர், 2010

நினைவோட்டம் 34

அடுத்து என் நினைவுக்கு வருபவர் எங்கள் தலைமை
ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள். மிகவும்
கண்டிப்புக்கு பெயர் போனவர்.

மாணவர்கள் நன் முறையில் படித்து வெளிவர வேண்டும்
என்ற எண்ணம் கொண்டவர்.படிப்பைத்தவிர வேறு
எதிலும் கவனம் சிதறக்கூடாது என்பது அவரது கருத்து.

பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவத்தலைவனை (School Pupil Leader)தேர்ந்தெடுப்பது வழக்கம்.

அப்போதெல்லாம் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள்
பிப்ரவரி மாதமே தேர்வு முடிந்து சென்று விடுவதால்
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே ஒருவரை,
ஆசிரியர்களே தேர்ந்தெடுத்து வருட ஆரம்பத்தில்
காலையில் நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியின் போது
அறிவிக்கப்படுவது வழக்கம்.

இது சில மாணவர்களுக்கு பிடிக்கவில்லை.'தேர்தல்
நடத்தாமலே ஆசிரியர்கள் விருப்பத்துக்கு SPL ஐ
தேர்ந்தெடுக்கிறார்களே. இதை நாம் எதிர்க்கவேண்டும்’
என முடிவெடுத்தனர்.

அந்த ஆண்டு ஆரம்பத்தில் வழிபாட்டு நிகழ்ச்சியின் போது
தலைமை ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் SPL
தேர்ந்தெடுப்பது சொன்னதும், கூட்டத்திலிருந்து எனது
வகுப்பு மாணவர் ஒருவர்(பெயரை எழுதாமல்
விடுகிறேன்)‘சார்.இந்த ஆண்டு மாணவர்களிடையே
மனுக்களை பெற்று,தேர்தல் நடத்திதான் SPL ஐ
தேர்ந்தெடுக்கவேண்டும்.நீங்களாக தேர்வு
செய்யக்கூடாது’. என சொன்னதும் தலைமை ஆசிரியர்
கோபத்துடன்‘யார் அது? வெளியே வா.’ என்றார்.

அந்த மாணவன் தைரியத்தோடு வெளியே வந்ததும்
அருகில் அழைத்து ‘பளீர்’ என அவரது கன்னத்தில்
அறை விட்டார்.அதைப்பார்த்ததும் நாங்கள் அனைவரும்
சப்த நாடியும் ஒடுங்கி நின்றோம்.

காரணம் அந்த மாணவன் தான் பள்ளியிலேயே
உயரமான வாட்டசாட்டமான மாணவர். அவரையே
தலைமை ஆசிரியர் அடித்துவிட்டார் என்றதும்
எங்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது.

பிறகு அவர் ‘வேண்டுமானால் நான் சொல்லும்
இருவரில் ஒருவரை தேர்ந்தெடுங்கள்’ எனக்கூறி
இரண்டு மாணவர்கள் பெயரைக்கூறினார்.

நாங்கள் கைதூக்கி எங்களது வாக்கை பதிவு(!)
செய்து ஒருவரை தேர்ந்தெடுத்தோம்.

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இந்த கால
கட்டத்தில் இவ்வாறு மாணவர்களை அடிக்க முடியுமா?
அப்படி அடித்தால்தான் பெற்றோர்களும் மாணவர்களும்
சும்மா இருப்பார்களா என்று.

ஆனால் அப்போது இருந்த கண்டிப்பு ஓரளவுக்கு
தேவை என்றே கருதுகிறேன். மாணவர்களுக்கு
இளம் வயதிலேயே பள்ளியில் தேர்தல் நடத்தினால்
அவர்களுக்குள்ளே பிரிவும் வெறுப்பும் வரும்
என்பதினால்தான் அவர் அவ்வாறு செய்தார்
என நினைக்கிறேன்.

ஆனால் இன்றோ பொதுத்தேர்தலையும் தோற்கடிக்கும்
அளவுக்கு பள்ளிகளில் தேர்தல் நடக்கின்றன. மாணவர்கள்
இளம் வயதிலேயே அரசியல் கற்று(!) தங்கள்
வாழ்க்கையை பாழாக்கிக்கொள்கிறார்கள் என்பது
எனது தனிப்பட்ட கருத்து.

படிக்கும் மாணவர்களுக்கு ஓரளவு கட்டுப்பாடு தேவை.
அது தற்சமயம் இல்லை என்பது வருத்தத்துக்கு
உரியதே.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

  1. //படிக்கும் மாணவர்களுக்கு ஓரளவு கட்டுபாடு தேவை. //
    சந்தேகமில்லாமல்!அளவு மீறாத கட்டுப்பாடு நிச்சயம் தேவை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பான ஆசிரியர்கள் தேவை தான் . ஆயினும் அவர்கள் மாறி வரும் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு மாணவர்களை அணுக வேண்டும் . சில செய்திகளை படிக்கும் பொது ஆசிரியர்கள் மிகவும் கடுமையாக மாறிவருவது புலப்படுகிறது . தண்டனைகளை மிகவும் கொடூரமாக கொடுப்பது காரணம் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு உந்தப்பட்டு உள்ளார்கள். தண்டனையும் வேண்டும் அதே சமயம் அது அத்து மீறிபோகாமல் இருக்க வேண்டும் . மாணவர்கள் படிக்கும் போது அரசியல் பற்றி தெரிந்து கொள்ளுவது தவறில்லை அனால் அவர்கள் அச்சமயம் அதில் பங்கு பெறுவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது . அவர்களை பகடை காய்களாக அரசியல்வாதிகள் பயன் படுத்துவதை மாணவர்கள் புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு தங்கள் முழு கவனத்தையும் சிதற விடாமல் கல்வி கற்பதில் செலுத்தவேண்டும் . வாசுதேவ

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், என்னுடைய கருத்தை ஆமொதித்தற்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    நீங்கள் சொல்வது உண்மை. ஒரு சில ஆசிரியர்கள் அவ்வாறு நடக்க காரணம் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது கண்டிக்கபடாமல் இருந்ததுதான் என்பது எனது ஆதங்கம். மேலும் முன்பு போல் மாணவர்கள் நலனிலும் எதிர்காலத்திலும் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் இல்லை என்பதும் உண்மை. அரசியல்வாதிகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு மாணவர்களுக்கு அனுபவமும் பக்குவமும் இல்லை. எனவே அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் தான் சரியான வழி காட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் பதிவை படித்ததும் எனது இளமைக்காலபசுமையான நினைவுகள் நிழலாடியது வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி 'திருபுவனம்' அவர்களே'

    பதிலளிநீக்கு