வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 3

அரங்கத்தை அடைந்தபோது எங்களுக்கு ஒரு
ஆச்சர்யம் காத்திருந்தது. அரங்கத்திற்கு வெளியே
‘A Meet of Classmates after 45 Years’ என்ற
பதாகையையும், நாங்கள் 1966 ஆம் ஆண்டு
பிரிவு உபசார விழாவின் போது எடுத்துக்கொண்ட
புகைப்படத்தை பெரிதாக்கியும், வைத்திருந்தார்கள்.

அந்த புகைப்படம் கீழே.
புகைப்படத்தின் அருகே சென்றதும், ஒவ்வொருவரும்
தாங்கள் அதில் எங்கே இருக்கிறோம் எனத்தேடியது
வேடிக்கையாக இருந்தது. பெரும்பான்மையோருக்கு
புகைப்படத்தில் அவர்களையே அடையாளம்
தெரியாததால், ‘நான் எங்கப்பா இருக்கிறேன்?’
என கேட்டுக்கொண்டே ‘காணாமல்’ போன
தங்களை தேடிக்கொண்டிருந்தார்கள்!
நான் அவர்களில் சிலருக்கு உதவினேன்.

பின் உள்ளே சென்றதும் நண்பர் முனைவர்
கோவிந்தசாமி அவர்கள் வருகை தந்தவர்களின்
பெயரை பதிவு செய்துகொண்டு, எழுத ஒரு சிறிய
நோட்டு புத்தகம், Ball Point பேனா,வந்திருந்தவர்களின்
முகவரி,வழங்கப்பட இருக்கின்ற உணவு பற்றிய
Menu அட்டை, அன்றைய மற்றும் மறுநாள்
நிகழ்ச்சிகளின் நிரல் ஆகியவைகளை கொண்ட
ஒரு அழகிய பையை தந்தார்.

உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, வகுப்புத்
தோழர்களில் இயற்கை எய்திய நண்பர்கள்
14 பேர்கள் தவிர, மீதி உள்ள 56 பேர்களில்,
வெளி நாட்டில் இருப்பதாலும், உடல் நலக்குறைவு
மற்றும் வீட்டில் உள்ள முக்கிய பணிகள்
காரணமாகவும் வராத 20 பேர்கள் போக,
36 நண்பர்கள்(பெரும்பாலோர் குடும்பத்தோடு)
வந்திருந்தனர் என்று.

எல்லோரும் பதிவு செய்துவிட்டு அரங்கத்தில்
அமர்ந்ததும்,தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி
தொடங்கியது.

அதற்கு பிறகு இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த
நண்பர்களில் ஒருவரான நாச்சியப்பன் எழுந்து
இயற்கை எய்திய வகுப்பு தோழர்களின்
பெயரைப்படித்து,அவர்களுக்கு அஞ்சலி
செலுத்துவோம் எனக்கூறியதும் எல்லோரும்
எழுந்து நின்று மௌன அஞ்சலி
செலுத்தினோம்.

பின் நண்பர் நாச்சியப்பன்,'மேடையில் யாரும்
அமரப்போவதில்லை.எனவே ஒவ்வொருவராக
அகர வரிசைப்படி மேடைக்கு குடும்பத்தோடு
வந்து, குடும்ப உறுப்பினர்களை
அறிமுகப்படுத்துங்கள்.பின் உங்களைப்பற்றியும்,
நீங்கள் படித்து முடித்து சென்ற பிறகு என்ன
பொறுப்பில் இருந்தீர்கள் என்பதையும் மற்றும்
உங்கள் குடும்பத்தைப்பற்றியும் சொல்லுங்கள்.’
என்று சொன்னார்.

அப்போது அவர் சொன்ன இன்னொரு செய்தியும்
எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் வியப்பையும்
தந்தது.எங்களோடு முதலாம் ஆண்டு படித்து விட்டு,
இரண்டாம் ஆண்டில் மருத்துவம் படிக்க இடம்
கிடைத்ததும்,வேளாண் பட்டப் படிப்பை தொடராமல்
விட்டு சென்று சென்னை மருத்துவக்கல்லூரியில்
மருத்துவம் படித்து மருத்துவராகி, வடலூரில்
மருத்துவ சேவை செய்து வரும்
டாக்டர் வா.இராமலிங்கம் அவர்களும்
அங்கு வந்திருக்கிறார் என்பதே அந்த செய்தி.

நண்பர்கள் நாச்சியப்பனும் கோவிந்தசாமியும்
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள் எனக்
கேள்விப்பட்டதும், தானும் அந்த சந்திப்பில்
கலந்துகொண்டு, தன்னோடு முதலாம் ஆண்டு
படித்த பழைய நண்பர்களை கண்டு அளவளாவ
டாக்டர் வா.இராமலிங்கமும் விரும்பினார்
என்பதை அறிந்து எங்கள் எல்லோருக்கும்
அளவில்லா சந்தோஷம்.

அவர் மேடை ஏறி தன்னைப்பற்றி சொல்லிவிட்டு
இறங்கியதும்,நண்பர் நாச்சியப்பன்,
‘Dr.இராமலிங்கம், வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும்,
ஊரன் அடிகள் எழுதிய ‘புரட்சித்துறைவி வள்ளலார்’
என்ற நூலையும், உயர் இரத்த அழுத்தத்தை
கட்டுப்பாட்டில் வைப்பது பற்றிய சிறு குறிப்பு
ஒன்றையும், அரை கிலோ குண்டு
வறு கடலையையும் தந்திருக்கிறார்.’ என்று
சொன்னபோது அனைவரும் கைத்தட்டல்
மூலம் டாக்டர்.இராமலிங்கத்திற்கு
நன்றி தெரிவித்தோம்.

(இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிடவேண்டும்.
எங்கள் பல்கலைக்கழகத்தில், வேளாண் பட்டப்படிப்பு
வரக் காரணமாக இருந்த காட்டுமன்னார் கோவில்
தொகுதியின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,
வேளாண் பெருந்தகையுமான, திரு வாகீசம் பிள்ளை
அவர்களின் மகன் தான் டாக்டர்.இராமலிங்கம்
என்பதே அது.)

பின் அறிமுகப்படலம் ஆரம்பமாயிற்று.


தொடரும்

8 கருத்துகள்:

 1. Having missed to attend my batch silver jubilee, seeing your good old photos stirred a nostalgic feeling in me. Wish you all have grand “Golden Jubilee”.
  Also I have noticed from your friends’ name, every generation has its own set of preferred names in our culture. Don’t ask me about my name, I am a true “Peyaran” to my Grandpa.

  பதிலளிநீக்கு
 2. எப்போதுமே க்ரூப் ஃஃபோட்டோக் களைப் பார்த்தால் நம்மைத்தான் முதலில் தேடுவொம்,சரிதான்!
  நல்ல பகிர்வு!
  த.ம.2

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் உணர்வுபூர்வமான கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் வாழ்த்தியதுபோல் 2016 ஆம் ஆண்டு கோவை மாநகரில் எங்களது பொன் விழா சந்திப்பை நடத்த இருக்கிறோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

  தற்கால திரைப்படங்களின் தாக்கத்தால், பிள்ளைகளுக்கு பெயரிடும் முறை மாறி வருகிறது எண்ணுகிறேன்.ஆனாலும் கூட,என் மகனுக்கு என் தந்தையின் பெயரை சூட்டி உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.
  நீங்கள் சொல்வது உண்மைதான். புகைப்படத்தில் நம்மைத் தேடுவது மட்டுமல்ல, புது பேனா கிடைத்தால் முதலில் நம் பெயரை எழுதுவோம் அல்லது கையெழுத்தை போட்டு பார்ப்போமாம்.
  இதுதான் மனித இயல்பு என்று படித்ததாக ஞாபகம்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு.
  படிக்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. Meeting college mates after ages is not doubt a thrilling experience that too in a function organised in a methodical manner. I have had occasion to meet one or two of my college mates some time back and we used to talk excitedly about our olden/golden days. I can understand the excitement felt by you upon meeting most of your mates. Flow in the narration was good. Vasudevan

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே!
  விவரிக்க முடியாத உணர்வுகளை முடிந்தவரை விளக்கியுள்ளேன்.தாங்கள் அதை புரிந்துகொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு