வியாழன், 29 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 6

பேராசிரியர்கள் வரும் வரை நேரத்தை செலவிட,
நண்பர்கள் தங்கள் எண்ணங்கள் அல்லது
திறமைகளை வெளிப்படுத்தலாம் என, நண்பர்
நாச்சியப்பன் அழைத்தும்,தயக்கத்தாலோ அல்லது
யார் ஆரம்பிப்பது என்பதாலோ,யாரும் எழுந்து
சென்று பங்கேற்கவில்லை.

எங்களில் சிலர் திரு நாச்சியப்பனையே பாட்டுப்பாடி
தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.
(அந்த காலத்தில் எங்கள் வகுப்பின் ஆஸ்தான
பாடகரே திரு நாச்சியப்பன் தான்.பல்கலைக்கழகத்தில்
நடக்கும் விழாக்களில் திரு நாச்சியப்பன்
பாடியிருக்கிறார்.பின்னால் அவர் ஆசிரியப்பணியில்
சேர்ந்து, பிறகு துறைத்தலைவரான பின்னும்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற
எல்லா கலை நிகழ்ச்சிக்களிலும் அவர்தான்
ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறார்.)

அவரும் எந்த தயக்கமும் இன்றி ‘நிச்சய தாம்பூலம்’
என்ற திரைப்படத்தில் வரும் ‘மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வினில் திருநாள்’ என்ற
பாடலைப்பாடியதும் ஒரே கைத்தட்டல்தான்.

பின் நண்பர்கள் சிலர் துணுக்கு செய்திகள் சொன்னாலும்,
நண்பர் முருகானந்தம் சொன்ன நகைச்சுவை
துணுக்குகளுக்குத்தான் அதிக வரவேற்பு.

நண்பர் திரு முத்துக்குமாரன் மன வளக்கலை
பற்றி சொல்ல ஆரம்பித்தார்.அப்போது,
பேராசிரியர்கள் அரங்கத்திற்குள் நுழைந்ததால்,
அவரது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

எங்களுக்கு இறுதி ஆண்டு வேளாண் வேதியல் பாடம்
நடத்திய பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள்,
மூன்றாம் ஆண்டு வேளாண் தாவர இயல் பாடம்
நடத்திய பேராசிரியர் நாராயண பிரசாத் அவர்கள்,
முதலாம் ஆண்டு வேதியல் பாடம் நடத்திய
பேராசிரியர் கலியபெருமாள் அவர்கள்,முதலாம்
ஆண்டு தாவர இயல் பாடம் நடத்திய பேராசிரியர்
ஈஸ்வரன் அவர்கள், மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல்
செய்முறை பயிற்சி கொடுத்த பேராசிரியர்
நாராயணசாமி அவர்கள், மற்றும் தற்சமயம்
வேளாண் புலத்தின் முதல்வர் (Dean) ஆக உள்ள
முனைவர் ஜெ.வசந்தகுமார் அவர்கள் ஆகிய
பேராசிரியர்கள் உள்ளே நுழைந்ததும் உடனே
நாங்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை
செய்தோம். சிலர் (என்னையும் சேர்த்து)அருகில்
சென்று வணங்கியும் வந்தோம்.

எங்களுக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள்,
துணைப்பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் என
35 பேர் இருந்தாலும்,இயற்கை எய்திவர்கள் போக
இருப்பவர்களில் சிதம்பரத்தில் உள்ளவர்களை
மட்டும் அழைத்து மரியாதை செய்யலாம் என
நண்பர்கள் நினைத்து, அவர்களை மட்டும்
அழைத்திருந்தார்கள்.(காரணம் எங்களது
ஆசியர்களில் அநேகம் பேர் எழுபத்தி ஐந்து
வயதை தாண்டிவயர்கள் என்பதாலும்,
தமிழ் நாட்டில் பல இடங்களில் வசிப்பதால்
அவர்களால் கலந்துக்கொள்ள இயலாது
என்பதாலும் தான்.)

அப்படியும் இரு பேராசிரியர்கள் ஊரில்
இல்லாததால் கலந்துகொள்ள இயல்வில்லை.

எல்லோரும் அமர்ந்த பின்,நண்பர் நாச்சியப்பன்
காலையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துடன்
நிகழ்ச்சிகளை தொடங்கிவிட்டதால்,அதனுடைய
தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியையும் தொடரலாம்
எனக்கூறி, நண்பர் Dr. அந்தோணி ராஜை
வரவேற்புரை நிகழ்த்த அழைத்தார்.

அதற்கு முன்பு இயற்கை எய்திய பேராசிரியர்களுக்கு
மரியாதை செலுத்தும் வகையில்,எல்லோரும்
எழுந்து நின்று மௌன அஞ்சலி செய்தோம்.
நண்பர் அந்தோணி ராஜ் அவருக்கே உரித்த
பாணியில் பழைய நினைவுகளை முன் கொண்டு
வந்து நிறுத்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

அவர் பேசும்போது,‘எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டில்
இருவர் பொடிபோடுவார்கள். ஒருவர் மறைந்த
திரு அண்ணாதுரை அவர்கள் இன்னொருவர்
நமது பேராசிரியர் கலியபெருமாள் அவர்கள்.
ஆனால் அவர்கள் பொடி போடுவது யாருக்கும்
தெரியாது.’ என்றபோது எழுந்த சிரிப்பலையில்
பேராசிரியர் கலியபெருமாள் அவர்களும்
கலந்துகொண்டார்.

நண்பர் அந்தோணி ராஜ் வரவேற்புரை
நிகழ்த்தியபோது எடுத்த புகைப்படம் கீழே.

அதன் பிறகு ஒவ்வோர் பேராசிரியருக்கும் எங்கள்
நண்பர்களில் ஒருவர் துண்டு போர்த்தி மரியாதை
செய்யவும்,இன்னொருவர் நினைவுப்பரிசு
கொடுக்கவும் நண்பர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த வேளாண் புல
முதல்வர் ஜெ.வசந்தகுமார் அவர்களுக்கு எங்கள்
வகுப்பு நண்பர் Dr. சந்திரகாந்தன் துண்டு
போர்த்தியபோது, நண்பர் நாச்சியப்பன் சொன்னார்.
‘மாணவரை ஆசிரியர் கௌரவிக்கிறார்' என்று.
பிறகுதான் தெரிந்தது முனைவர் ஜெ.வசந்தகுமார்
அவர்கள், எங்கள் வகுப்புத்தோழர் Dr. சந்திரகாந்தன்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விரிவாக்க
பேராசிரியராக இருந்தபோது அவருடைய
மாணவராக இருந்தார் என்று.

அதன் பிறகு நண்பர் நாச்சியப்பன் ‘நாங்கள் அன்புடன்
நடனம் என அழைக்கும் எனது அறைத்தோழரான
நடனசபாபதியை ‘மலரும் நினைவுகள்’ என்ற
தலைப்பில் பேச அழைக்கிறேன் என்று
என்னைப்பேச அழைத்தார்.

முன்பே நண்பர் நாச்சியப்பன் நான்காண்டு
காலம் பாடம் நடத்திய ஆசிரியர்களைப்பற்றி
நான் பேசவேண்டும் என சொல்லியிருந்ததால்,
என்ன பேசவேண்டும் என்பதை மனதளவில்
தயார் செய்து வைத்து இருந்தேன்.என்னைக்
கூப்பிட்டவுடன் பேச மேடைக்கு சென்றேன்.


தொடரும்

4 கருத்துகள்:

 1. //என்னைக்
  கூப்பிட்டவுடன் பேச மேடைக்கு சென்றேன்//
  கலக்கியிருப்பீங்களே! எழுதுங்கள்,காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி
  திரு சென்னை பித்தன் அவர்களே!. பேசியவைகள் அனைத்தையும், எழுத முடியாதென்றாலும் முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. மலரும் நினைவுகள் மலருவதை காண காத்திருக்கிறேன் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! மலர்ந்த நினைவுகளை அறிய தயை செய்து பொறுத்திருக்கவும்.

  பதிலளிநீக்கு