வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 5

மதிய உணவு முடிந்து,அரங்கத்துக்கு திரும்பு முன்,
பல்கலைக்கழகத்தை சுற்றிப்பார்க்க நண்பர்கள்
ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அதனால் சாப்பிட்டவுடன்.பேருந்தில் பயணம்
செய்தபடியே பல்கலைக்கழக வளாகத்தை
சுற்றிப்பார்த்தோம்.

நண்பர் திரு நாச்சியப்பன் கூடவே வந்து ஒவ்வொரு
இடத்தையும் பற்றி சொல்லி,எங்களுக்கு
நினைவூட்டியபோது ஒரு Conducted Tour ல்
செல்வது போன்ற பிரமை ஏற்பட்டது.

முதலில் ‘பட்டமளிப்பு விழா’ நடக்கும்,ஸ்ரீனிவாச
சாஸ்த்ரி ஹால் வழியாக சென்றபோது,அந்த
இடத்துக்கு பல முறை பல விழாக்களுக்கு சென்று
பிரபலங்களின் பேச்சைக்கேட்டதும்,அங்கே
இறுதியாண்டு தேர்வை எழுதியதும்,அங்கே
பட்டம் பெற்றதும் மனதில் நிழலாடின.

அந்த கட்டிடத்தின் மேற்கு பக்கமாக எங்களது
ஊர்தி சென்றபோது எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
காரணம்,அங்கு நாங்கள் படிக்கும்போது இருந்த
விசாலமான விளையாடும் இடமும்,அந்த
இடத்துக்கு அழகு சேர்த்த சாலை ஒர மரங்களும்
காணாமல் போய் இருந்தன.

அவைகளுக்கு பதில் அங்கே காங்க்ரீட் கட்டிடங்கள்
முளைத்திருந்தன. பல்கலைக்கழகத்திற்கு
பெருமை சேர்த்த Pavilion அருகே இருந்த பரந்த
மைதானம் விரிவாக்கம் என்ற செயலால்
சுருக்கப்பட்டு இருப்பதையும்,ஒரு அழகான இடம்
அலங்கோலமாக்கப் பட்டு இருப்பதையும் பார்த்து
மனம் வெதும்பினேன்.

பின் அருகே புதிதாய் முளைத்திருந்த
மருத்துவக்கல்லூரியையும்,அதன் அருகே
அமைந்திருந்த பல கட்டிடங்களையும்
பார்த்தோம்.

மருத்துவக்கல்லூரி வந்ததால், ஸ்ரீனிவாச
சாஸ்த்ரி ஹாலுக்கு வடபுறம்,காலி நிலமே
இல்லை.எங்கும் கட்டிடங்கள்தான்.

அங்கு இருந்த Boating Canal காணாமல்
போயிருந்தது. அப்போது நண்பர் நாச்சியப்பனிடம்,
பல்கலைக்கழகத்திற்கே பெருமை சேர்த்த
Boating Canal எங்கே என்றபோது,அந்த
இடத்தில்தான் மருத்துவக்கல்லூரி
அமைந்திருப்பதாக அவர் சொன்னபோது,
எங்களுக்கு சொல்லமுடியாத வருத்தம்.

வெளி நாட்டு பல்கலைக்கழகங்கள் போல்,
நாங்கள் படித்த பல்கலைக்கழகத்திலும் அந்த
கால்வாய் இருந்ததையும், அப்போதைய
மாணவர்கள் அதில் படகு ஒட்டி பயிற்சி
பெற்றதையும் சொன்னால், இன்றைய
மாணவர்கள் நிச்சயம் நம்பமாட்டார்கள்.

அந்த கால்வாய் ஓரமாய் இருந்த கட்டிடங்களில்
எங்களது இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு
பாடங்கள் நடத்தப்பட்டதும், இறுதித்தேர்வு சமயம்,
அந்த கால்வாய் அருகே இருந்த மரங்களின்
கீழே அமர்ந்து நாங்கள் படித்ததும் எல்லாமே
ஒரு கனவுபோல் ஆகிவிட்டதை உணர்ந்தோம்.

கனத்த மனதோடு வந்தபோது, இன்னும்
பல (ஏ)மாற்றங்களை கண்டோம்.

சர்.சி.பி.இராமசாமி அய்யர் நூலகம் அருகே
வந்த போது, எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
அந்த நூலகத்திற்கு எதிரே நாங்கள் படிக்கும்போது
அமைக்கப்பட்டிருந்த பூங்கா,இன்று அழகிய
பூச்செடிகளோடும் மரங்களோடும் உருமாறியிருந்தது,.

இங்குதான் நாங்கள் இறுதியாண்டு படிக்கும்போது
தோட்டக்கலை பாடத்திற்கான புல்வெளி (Lawn)
அமைக்கும் பயிற்சியை எடுத்துக்கொண்டது
நினைவுக்கு வந்தது.

நாங்கள் படிக்கும்போது தங்கியிருந்த Eastern Hostelன்
நுழைவு வாயில்,ஒரு பெரிய பூதாகரமான
கட்டிடத்தால் மறைக்கப்பட்டிருந்தது. விடுதியை
ஒட்டி Hostel Day அன்று நடைபெறும் Carnival க்காக
Stall கள் போடப்படும் இடமும் காணப்படவில்லை.

நாங்கள் பண்டகசாலைக்கோ அல்லது எங்களது
பண்ணைக்கோ செல்லும் Eastern Hostel ன்
கிழக்கு வாயிலும் மூடப்பட்டு இருந்தது.

மீனாட்சி கல்லூரி கட்டிடம்,மற்றும் நிலவியல்
(Geology)துறை அருகே இருந்த காலிமனைகளும்
கட்டிடங்களாக மாறியிருந்தன.

ஆனால் அஞ்சல் அலுவலகம் உள்ள கட்டிடம்
மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அன்று
இருந்தது போல் இருந்தது.

எங்களது வேளாண் புலம் அமைந்திருந்த
இடத்தில், நாங்கள் படிக்கும்போது ஒரு கட்டிடம்
மட்டும் தான் இருந்தது. எதிரே சற்று தள்ளி
மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிக்கொண்டு
இருந்தார்கள்.

இன்றோ நிறைய கட்டிடங்கள் எழும்பியிருந்தன.
அருகிலே Helipad தளமும் இருந்ததை கண்டோம்.

‘எங்கெங்கு காணிலும் சக்தியடா’ என்றார்
புரட்சிக்கவி. இங்கோ எங்கெங்கு காணிலும்
கட்டிடங்களடா என பாடலாம் போல.

மாறிவரும் சூழ்நிலைக்கு புதிய கட்டிடங்கள்
தேவைதான். ஆனால் அவை இயற்கை அழகை
சிதைக்காமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
என நினைத்துக்கொண்டேன்.

திரும்ப அரங்கத்திற்கு, வந்து காலையில் விட்ட
அறிமுகத்தை தொடர்ந்தோம்.அது முடிந்தபோது
மாலை மணி 5 இருக்கும்.மாலை 6.30 மணிக்கு
பேராசிரியர்களை பாராட்டும் நிகழ்ச்சி என்பதால்
அதற்கு முன்பாக நண்பர்கள் அனைவரும்
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.பிறகு
குடும்பத்தோடும் புகைப்படம்
எடுத்துக்கொண்டோம். அவைகள் கீழே.











பிறகு பேராசிரியர்கள் வரும் வரை நண்பர்கள்
விரும்பினால்,பாட்டு பாடியோ நகைச்சுவை
துணுக்குகள் சொல்லியோ,அல்லது வேறு
சுவாரஸ்யமான செய்திகளை சொல்லியோ
நேரத்தை செலவிடலாம் என நண்பர்
நாச்சியப்பன் சொன்னார்.


தொடரும்

6 கருத்துகள்:

  1. நீங்கள் எழுதியிருப்பதும் ஒரு conducted tour மாதிரியே இருக்கிறது.அருமை.

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. கே யெஸ் கோபாலக்ரிஷ்னன் படம் பார்ப்பது போல் இனிமையாக இருந்தது / வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. இப்படியான பல ஏமாற்றங்கள் காலந்தோறும் எல்லோருக்கும் கால மாற்றத்தால் உருவாகிறது தான் மிகுந்த ஏமாற்றம் தருபவை தான். நான் கூட இப்படி அனுபவித்துள்ளேன். ஒரு பெரு மூச்சுத் தான் வரும்...நன்கு எழுதப்பட்டுள்ளது இந்த அனுபவம் பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், தங்களது மேலான கருத்துக்கும் நன்றி
    திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு