வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மறுபிறவி உண்டா? 7

ஒரு குலுக்கலோடு எங்களது கார் ஒரு பக்கத்திற்கு
ஒதுக்கித் தள்ளப்பட்டது போன்ற உணர்வு.என்ன
நடக்கிறது என நினைப்பதற்குள் எங்களது கார்
சாலையைவிட்டு இறங்கி அருகே இருந்த வீட்டின்
சுற்றுச்சுவரை தொட்டுக்கொண்டு,‘கிறீச்’ என்ற
ஓசையோடு நின்றது.

காருக்குள் இருந்த நாங்கள் முன்னும் பின்னும்
தள்ளப்பட்டு, ஒருவழியாக முன்பு அமர்ந்து இருந்த
நிலைக்கே வந்த போதுதான் நாங்கள் அந்த
அதிர்ச்சியிலிருந்து மீண்டோம்.

ஓட்டுனர் முரளியிடம் எப்படி நமது கார் நேருக்கு
நேர் மோதாமல் தப்பித்தது என்று கேட்டவுடன்,
அவர்,‘சார் அந்த கார் நமக்கு நேராக வருவதைப்
பார்த்ததும் விபத்தை தடுக்க என்னால் முடிந்த
அளவு ‘ஸ்டியரிங்கை’ உடனே இடப்பக்கம்
ஒடித்துவிட்டேன். நல்ல வேளையாக சாலைக்கு
அருகில் பள்ளம் ஏதும் இல்லாததால், கார்
கவிழவில்லை.அதனால் நாம் தப்பிவிட்டோம்.
மேலும் நமது அதிர்ஷ்டம் வீட்டு சுவர் மேலும்
நமது கார் மோதவில்லை. எல்லாம் கடவுள்
செயல்.’என்றார்.

நானும் நண்பர் திரு தனஞ்சயனும் அவருக்கு
நன்றி சொல்லி கீழே இறங்க முயற்சித்தபோது,
கார், சுவர் அருகே இருந்ததால் எங்களால் கதவைத்
திறக்க இயலவில்லை

திரு முரளி வண்டியை விட்டு கீழே இறங்க
முயற்சித்தபோது,அவரால் கதவையே
திறக்கமுடியவில்லை.அப்போதுதான் கவனித்தோம்
காரின் முன்பக்க கதவும் பின் இருக்கை கதவும்,
எதிரே வந்த மாருதி கார் பக்கவாட்டில் அதிவேகமாக
உராய்ந்து இடித்ததன் காரணமாக திறக்கமுடியாத
அளவுக்கு காரின் Body Frame இல் அவை இரண்டும்
ஒட்டிக்கொண்டு விட்டன என்பதை.

பின்பு திரு முரளி காரை சிறிது முன்னோக்கி
பக்கவாட்டில் நகர்த்தி நிறுத்தி இடப்பக்கம்
வழியாக இறங்கினார். நாங்களும் இறங்கி
எங்களை நோக்கி வந்த மாருதி கார் என்னவாயிற்று
என இறங்கிப் பார்க்கையில் அந்த காரை
ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு,வலது
முழங்கையில் இரத்தம் வழிய,வெளிறிய முகத்தோடு
எங்களை நோக்கி வந்துகொண்டு இருந்தார்.

அதற்குள் அந்த சரக்குந்தும்,அரசுப்பேருந்தும்
நிற்காமல் போயே போய் விட்டன.அந்த இடம்
ஊருக்கு வெளியே இருந்ததால் எங்களைத்தவிர
வேறு யாரும் இல்லை.சத்தம் கேட்டு நாங்கள்
காரை நிறுத்தி இருந்த இடத்துக்கு அருகே உள்ள
வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தார்.

நான் மாருதி கார் ஒட்டிவந்தவரைப் பார்த்து‘என்ன
சார் இப்படி உங்கள் முன்னால் இரண்டு வாகனங்கள்
செல்லும்போது,எதிரே ஏதேனும் வண்டி வருகிறதா
எனப் பார்க்காமல் படு வேகமாக வந்து இப்படி
செய்துவிட்டீர்களே? நல்ல வேளை நாம்
அனைவரும் தப்பித்தோம்.உங்களால் எங்களது
காருக்கு அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்?’ என்றேன்.

அவரால் சரியாகப்பேசமுடியவில்லை.அதற்கு காரணம்
அந்த விபத்து தந்த அதிர்ச்சி அல்ல.அவர் உட்கொண்டு
இருந்த,‘உற்சாக பானம்’தான்.அதனால் தான் நிதானம்
இல்லாமல் காரை ஒட்டிவந்திருக்கிறார்.

அவரால் சரியாகப்பேசமுடியவில்லை என்றதும்,
நான் ஒட்டுனர் முரளியிடம் தமிழில்,‘இங்கு அருகில்
ஏதேனும் காவல் நிலையம் உள்ளதா? என்றேன்.
(முரளிக்கு தமிழ் தெரியும்)

உடனே அந்த காருக்கு சொந்தக்காரர்,என்னிடம்,
‘சார்.போலீஸிடம் எல்லாம் போகவேண்டாம். இது
என்னுடைய தவறுதான். இந்த சேதமடைந்த
கதவுகளை சரி செய்ய ஆகும் செலவை, நான் தந்து
விடுகிறேன். நான் நாளை மறுநாள் Gulf
செல்லவேண்டும். போலீசுக்கு போனால் என்னால்
ஊருக்கு போகமுடியாது. நான் போகாவிட்டால்
எனது வேலை போய்விடும்.’என்று தமிழில்
சொன்னார். அவருக்கு தமிழ் தெரியும் போலும்.

நான்‘உங்கள் கைக்கு என்னவாயிற்று?’என்றபோது,
அவர் ‘ஒன்றுமில்லை சார். எனது வலது கையை
கார் கதவுக்கு வெளியே வைத்து காரை
ஒட்டிவந்தேன். அதிர்ஷ்டவசமாக முழங்கை
அருகே ஒரு பெரிய சிராய்ப்பு அவ்வளவுதான்.’
என்றார்.

அப்போது அங்கு நின்றுகொண்டு இருந்த அந்த
வீட்டுக்காரர்,அவரை தனியே அழைத்து ஏதோ
சொன்னார். ஆனால் அவர் தலையை ஆட்டிவிட்டு
வந்துவிட்டார்.அநேகமாக அவர் பணம் ஏதும்
தரவேண்டாம் என சொல்லியிருப்பார் போலும்.

நான் திரு தனஞ்சயனைவிட்டு அவரிடம் பேச
சொன்னேன்.அவர் செவ்வாய் தான் வெளி நாடு
செல்வதால்,மறுநாள் அதாவது திங்கள் அன்று
கண்ணூர் வருவதாகவும், பணிமனையில்
காரைக் காட்டி கதவுகளை மாற்ற ஆகும் செலவை
அறிந்து அந்த தொகையை கொடுப்பதாகவும்
சொன்னார். அவரது சொல்லை ஏற்று நாங்கள்
எங்கள் காருக்கு திரும்பினோம்.

காரின் வலப்பக்கம் உள்ளம் இரு கதவுகளும்
சேதமடைந்து விட்டதால் ஒரு பெரிய துண்டைக்
கொண்டு அவைகளை நடுவில் உள்ள Frame இல்
கட்டிவிட்டு, முரளி காரை எடுத்தார். வண்டியை
மெதுவாகத்தான் ஓட்டினார்.போகும் வழியில்
உள்ள வடகரை, மாஹே, தலைச்சேரி போன்ற
ஊர்களில் எல்லாம் எங்களை வினோதமாக
பார்த்தார்கள்.ஒருவழியாக காலை 11 மணி
சுமாருக்கு கண்ணூர் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காரை டி‌வி‌எஸ் பணிமனைக்கு அனுப்பி,
புதிய கதவுகள் மாற்ற எவ்வளவு ஆகும் கேட்டு
வைத்திருந்தோம்.அந்த 'மாருதி' காரின் உரிமையாளர்
சொன்னதுபோல் திங்கள் அன்று எங்கள்
தலைமையகத்திற்கு வந்து பணிமனை சொன்ன
பணத்தை கொடுத்து சென்றார்.

உண்மையிலேயே போற்றத்தக்க மனிதர் அவர்.
காரணம் அவர் அன்று வராமல் வெளிநாடு
சென்று இருந்தால் எங்களால் ஒன்றும் செய்து
இருக்கமுடியாது.

அதற்குள் நான் விபத்தில் சிக்கிய விபரம் அறிந்த
NMGB நண்பர்கள் வந்து விசாரித்துவிட்டு என்னிடம்
‘ஏன் சார் மாற்றாலாகிப் போகும்போது காரில்
சென்றீர்கள். இரயிலில் சென்று இருக்கலாமே?’
என்றனர்.

நான் சொன்னேன் ‘இப்படித்தான் 2001 இல்
இரயிலில் சென்றேன்.விபத்து நடக்கவில்லையா?
அதுபோல் நடக்கவேண்டும் என்று இருந்தால்
எப்படியும் நடக்கும்.’ என்றேன்.

நான் இந்த பதிவுகளின் ஆரம்பத்தில் சொன்னதுபோல்
மறுபிறவி என்பது இறந்து,பின் பிறக்க
வேண்டுமென்பதில்லை.இருக்கும்போதே மரணத்தின்
வாயிலைத் தொட்டு திரும்பி வருவது கூட
மறுபிறப்புத்தான்.

எனக்கு ஏற்பட்ட இந்த ஐந்து நிகழ்வுகளில்
முதல் நிகழ்வு நடந்தபோது நான் அறியா சிறுவன்.
இரண்டாவது நிகழ்வு நடந்தபோது விளயாட்டுத்தனம்
உள்ள கல்லூரி மாணவன். எனவே அவைகள்
எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் மற்ற மூன்று நிகழ்வுகளும் என்னுள்
பாதிப்பை ஏற்படுத்தியது நிஜம்.

தத்துவ ரீதியாக சொன்னால் நாம் இவ்வுலகில்
வாழ்வது நம் கையில் இல்லை.நாம் எவ்வளவு
நாட்கள் வாழப்போகிறோம் என்பதும் நமக்கு
தெரியாது. நாம் வாழ்வது கடவுளின் கொடை
என்றோ இயற்கையின் நியதி என்றோ அவரவர்
விருப்பம்போல் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் என்னைப் பொருத்தவரையில்,இந்த நிகழ்வுகள்
எனக்கு ஒன்றை உணர்த்தின.நான் இன்னும்
செய்யவேண்டிய பணிகளை முடிக்காத
காரணத்தால்தான் இந்த விபத்துகளில் இருந்து
தப்பியிருக்கிறேன் என்று.

இந்த பதிவை எழுத ஆரம்பித்தபோது
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய ஒரு திரைப்பட
பாடலோடு முடிக்க எண்ணியிருந்தேன். அதையே
திரு சென்னை பித்தன் அவர்களும் தனது கருத்தாக
சொல்லியிருந்ததால் அதையே எழுத இருந்தேன்.

ஆனால் சிட்னி(ஆஸ்திரேலியா) வாழ் பொறியாளர்
திரு N.பக்கிரிசாமி அவர்களின் கருத்தைப்
பார்த்தபிறகு எனது கருத்தை மாற்றிக்கொண்டு
கவிஞர் வாலி அவர்களின் வேறொரு பாடலை
மேற்கோள் காட்டி முடிக்கிறேன்.

‘எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்கையில் தோல்வி இல்லை.’


16 கருத்துகள்:

  1. முன்னோர்கள் செய்த புண்ணியமும், உங்கள் நற்செயல்களின் பயனும் உங்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    எல்லாம் கடவுள் கிருபை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும்,வாழ்த்துக்கும்,நன்றி
    திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. தெளிந்த நீரோடை போன்ற ஆர்பட்டமில்லா நடை ...பல முறை மறுபிறவி எடுத்ததை முடிக்காத பல செயல்களை முடிக்க கிடைத்த வாய்ப்புகளாக எடுத்துகொண்டது மனபக்குவத்தை காட்டுகிறது . பதிவின் முடிவில் சில முறை சாவின் சன்னிதானத்திற்கு சென்று திரும்பிய மக்கள் திலகம் அவர்கள் நடித்த படப்பாடல் ஒன்றினை பயன்படுத்திய யுக்தி பொருத்தமான ஒன்று.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. இப்படி சில விபத்துகள் நடக்கத்தான் செய்கிறது இருப்பினும் இதற்க்கு உண்மையான காரணங்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும் உள பூர்வ பாராட்டுகள் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. Sir, in my view, nothing is coincidental or a mere accident. All the happenings have reasons. And mostly we are not able to deduce the secret. I believe in just living and utilising every moment. Thanks for mentioning my name and sharing the experience.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி மாலதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!
    நான் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.தொடர்ந்து எனது இடுகைகளைப் படித்து கருத்துகள் இட்டமைக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  11. //ஆனால் என்னைப் பொருத்தவரையில்,இந்த நிகழ்வுகள்
    எனக்கு ஒன்றை உணர்த்தின.நான் இன்னும்
    செய்யவேண்டிய பணிகளை முடிக்காத
    காரணத்தால்தான் இந்த விபத்துகளில் இருந்து
    தப்பியிருக்கிறேன் என்று.
    //

    மிக்க நன்று. ஆனால் விபத்தில் இருந்து தப்பியவர்கள் தாங்கள் புண்ணியம் செய்தவர்கள் என்பதாகக் கூறும் போது அருவெறுப்பாக இருக்கும் ஏனெனில் அதில் சிக்கிக்கொள்பவர்களை பாவி என்று சொல்லாமல் சொல்வது போல் அச்சொல் இருக்கும்.

    சுனாமி சோகங்களின் போது சிலர் தங்களை மட்டும் கடவுள் காப்பாற்றியதாக புலம்பியது போது அவற்றை ஏற்க மனம் வர்வில்லை, செத்துப் போன 5000 பேர்களை கடவுள் கண்டு கொள்ளமல் போகும் அளவுக்கு அவர்கள் பாவிகளோ என்று எண்ண வைத்துவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கோவி.கண்ணன் அவர்களே! நீங்கள் சொல்வது சரி. பிழைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்களும் அல்ல.இறந்தவர்கள் பாவம் செய்தவர்களும் அல்ல. உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. "மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
    மறுபிறவி http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சிவம் ஜோதி அவர்களே! உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. படிக்க ஆவலைத் தந்த, இந்த சுவாரஸ்யம் மிக்க ( தவறு; அனுபவம் நிறைந்த) இந்த தொடரை படித்து முடித்து விட்டேன். படித்து முடித்ததும்,

    // தத்துவ ரீதியாக சொன்னால் நாம் இவ்வுலகில்
    வாழ்வது நம் கையில் இல்லை.நாம் எவ்வளவு
    நாட்கள் வாழப்போகிறோம் என்பதும் நமக்கு
    தெரியாது. நாம் வாழ்வது கடவுளின் கொடை
    என்றோ இயற்கையின் நியதி என்றோ அவரவர்
    விருப்பம்போல் எடுத்துக்கொள்ளலாம். //

    என்ற தங்களது எண்ண அலைகள் மனதில் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! அனுபவங்கள் தான் நமக்கு பாடத்தை கற்பிக்கின்றன என்பது உண்மை. அதனால் அவைகளை நான் ‘நினைத்துப் பார்க்கிறேன்’.

    பதிலளிநீக்கு